Skip to Content

09.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                      பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                                        (சென்ற இதழின் தொடர்ச்சி....)

தம்பி - மனிதன் சிறியவன், விஷயங்கள் சிறியன. அப்படி இருக்கும்பொழுது பெரும் பணம், அளவுகடந்து, தொடர்ந்து வரும் என்பது புரியவில்லை. அத்துடன் ஏன் அப்படி வரவேண்டும், எதற்காக, எப்படி எனப் புரியவில்லை.

அண்ணன் - இது சமூகத்தைப் பற்றிய உண்மையில்லை. பிரம்மத்தை பற்றிய தத்துவம். சமூகத்தில் வெளிப்படும் அளவில்தான் நாம் அதைப் புரிந்துகொள்ள முடியும்.

தம்பி - பணம் தவிர வேறு விஷயத்தில் இத்தத்துவம் வெளிப்பட்டுள்ளதா?

அண்ணன் - எல்லா விஷயங்களுக்கும் இது உண்மை. பேச்சு, மொழி என்ற இடத்தில் மட்டும் தெளிவாக இதைக் காணலாம்.உலகில் செயல்கள், அசைவுகள் நிகழ்கின்றன. நாம் பொருள்களைக் காண்கிறோம். மரம், செடி, கொடி, வீடு, ஆகியவற்றைக் காண்கிறோம். மனிதன் சிலவற்றை உற்பத்தி செய்கிறான். இயற்கை சிலவற்றை உற்பத்தி செய்கின்றது. அவை உற்பத்தியாகும் சட்டம் இது.
 . முதலில் ஓரளவு உற்பத்தியாகும்.

. பிறகு, ஒரு கட்டத்தைத் தாண்டிய பிறகு அபரிமிதமாக உற்பத்தியாகும்.

. அவை மனிதனின் உபயோகத்திற்கு என நாம் நினைப்பது சிறுபிள்ளைத்தனம்.

. அப்படி உற்பத்தியாகும் பொருள்களில் சிலவற்றை மனிதன் பயன்படுத்துவதால் அவன் தன் கண்ணோட்டத்தில் அவற்றைக் கருதுகிறான்.

. நதியும், மலையும், தாவரங்களையும் இயற்கை மனிதனுடைய உபயோகத்திற்காக உற்பத்தி செய்யவில்லை. அவை சிருஷ்டியின் பகுதிகள்.

. ஒரு கட்டத்தைத் தாண்டியபின், உற்பத்தி அனந்தமாவது இயற்கை நியதி.

. நாம் மொழியில் இதைக் காணலாம்.

. இன்று பணத்தில் அத்தன்மை வெளிப்படுகிறது என நான் கூறுகிறேன்.

தம்பி - பிரம்மம் முழுமையானது, தன்னை முழுமையாகவே கொடுக்கவல்லது என்பதன்றோ இத்தத்துவம்?

அண்ணன் - இந்த விஷயத்தில் சமூகமும், பிரம்மமும் ஒன்றே. காற்று அபரிமிதமாக உள்ளது. மனிதன் சுவாசிக்க சிறிதளவு - ஒரு துளி - பயன்படுத்திக்கொள்கிறான். அதுபோல் மொழி உலகில் அபரிமிதமாக உள்ளது. இன்று மனிதன் ஓயாமல் பேசலாம், எழுதலாம், முடிவில்லாமல் உற்பத்தி செய்யலாம். தேவைப்படும் அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறோம். அதுபோல் எதிர்காலத்தில் பணம் அபரிமிதமாக உற்பத்தி செய்யப்படும். தனி மனிதன் எந்த அளவு பணம் வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தானே உற்பத்தி செய்துகொள்ளலாம். பிரம்மம் தன்னை முழுமையாகக் கொடுக்கிறது. நாம் நிலைக்குரியவாறு பகுதியாகப் பெறுகிறோம். சமூகம் முழு பணத்தைப் பெற்றுள்ளது.அதனால் பிரம்மம்போல் தன் முழு பணத்தையுமேதான் ஒருவருக்குக் கொடுக்க முடியும். பகுதியாகத் தர சமூகத்தால் முடியாது. மனிதன் தன்னை பகுதிக்கு உட்படுத்திக்கொண்டால், அவனால் பகுதியை மட்டுமே பெற முடியும். விடுதலை பெற்ற மனிதன் சமூகத்தின் அத்தனைச் செல்வத்திற்கும் உரியவன். சமூகம் கொடுக்கத் தயாராக இருக்கிறது, கொடுக்கிறது. நாம் பெறத் தயாராகவேண்டும். காற்றையும், பேசும் மொழியையும் அப்படிக் கொடுத்துவிட்டது. இனி பணத்தை அப்படித் தரும் என்பதே தத்துவ விளக்கம்.

தம்பி - இத்தத்துவம் பணத்தைக் கடந்து மற்றவற்றிற்கும் பயன்படுமன்றோ?

அண்ணன் - அறிவு, உணர்வு, சந்தோஷம், புதுக் கருத்துகள், புது விளையாட்டுகள், என எந்த விஷயமும் எதிர்காலத்தில் அபரிமிதமாக உற்பத்தியாகும். இதை practical concept of infinity ஜடத்தில் அனந்தம் எனலாம்.

தம்பி - ஷேக்ஸ்பியரைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் எழுதும்பொழுது, இலக்கியம் பேரிலக்கியமாவதை எழுதுகிறார். அங்கு இதைக் குறிப்பிடுகிறார். இயற்கை நோக்கத்தைத் துறந்தபின் சிருஷ்டியின் நிலை உயர்வதாக எழுதுகிறார். We touch here the bottom.....Nature's creativity becomes purposeless.

அண்ணன் - ஒரு காரணத்திற்காக உற்பத்தி செய்யும்வரை அளவோடு உற்பத்தி செய்கிறோம். காரணமேயில்லாமல் உற்பத்தி செய்வது அனந்தம். அப்பொழுது அனந்தமாக உற்பத்தி ஆகும் என இலக்கியத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பணத்தை நம் உபயோகத்திற்காக உற்பத்தி செய்யும்வரை பற்றாக்குறையிருக்கும். எந்தக் காரணமும் இல்லாமல் உற்பத்தி செய்தால், செய்வது அனந்தமானால், அளவு அனந்தமாகும். சமூகம்,பிரம்மத்தை, பணத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டால், இனி பணம் அபரிமிதமாக உற்பத்தியாகும். அதன்பின் பிரம்மத்தைப்போல் சமூகத்தால் பணத்தை அளவுகடந்தே மனிதனுக்குத் தரமுடியும். அளவு, லிமிட், என்பவை பணத்திற்கு அதன்பிறகு இல்லை.

தம்பி - பிரம்மம் சக்தியாகி, ரூபமாகிறது. நாம் ரூபத்தைக் காண்கிறோம். ரூபத்தைக் கடந்து சக்தியைப் பார்த்தால் அளவு விரிவடைகிறது. சக்தியைக் கடந்து பிரம்மத்தைக் கண்டால், அது அனந்தமாகிறது.

அண்ணன் - அதுவே தத்துவம். நாம் பணத்தை ரூபாய், நோட்டு என்ற ரூபங்களில் காண்கிறோம். பணத்தை உற்பத்தி செய்த சக்தி இந்த ரூபங்களுக்குப் பின்னால் உள்ளது.அது பிரம்மாண்டமானது, பிரவாகமாக எழும். அந்த சக்தி உலகம் முன்னேறும்பொழுது அளவுகடந்து முன்னேறியுள்ளது. அதற்குப் பல காரணங்களுண்டு.அறிவு, விஞ்ஞானம், டெக்னாலஜி, ஆகியவை காரணம். முக்கியமாக இன்று கம்ப்யூட்டர் காரணம்.

தம்பி - கம்ப்யூட்டர் பணத்தை விரைவாக அனுப்புகிறது.

அண்ணன் - வேகம் பணத்தை விரிவுபடுத்தும்.

தம்பி - அது வியாபாரிக்குத் தெரியும்.


 

தொடரும்.....

* * * *


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உயர்ந்த நிலையைத் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவருவது படைப்பு, சிருஷ்டி.


 

* * * *


 


 



book | by Dr. Radut