Skip to Content

10. இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

"அன்னை இலக்கியம்''

                                 இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

                                                          (சென்ற இதழின் தொடர்ச்சி....)                                 இல. சுந்தரி

என்றுமில்லாத ஆனந்தம் அன்று அகத்தே கரைபுரண்டது. தான் எழுதிய அந்தத் தாளை அன்னை பெற்றது, புருவம் மேலேற அதை அன்னை பார்வையிட்டது, ஒரு புன்னகையை வீசி தன்னை வீழ்த்தியது, எல்லாமே மீண்டும், மீண்டும் நினைவில் எழுந்து மகிழ்வூட்டியவண்ணமிருந்தது. அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் பிரகாசம் தெரியச் செய்தது.

"உமாப் பெண்ணே! என்ன ஒரே பிரகாசம் முகத்தில்? அம்மாவின் கடிதத்தைப் பார்த்துவிட்டாயா, என்ன?'' என்றார் மாமா.

"கடிதமா? நானெதுவும் பார்க்கவில்லையே'' என்றாள் உமா.

"உன் அம்மா நீ எப்போது சென்னை வரப்போகிறாய்? என்று கேட்டு எழுதியிருக்கிறாள்'' என்று தன் சகோதரியின் கடிதத்தை உமாவிடம் கொடுத்தார். உண்மையான அம்மாவைக்

கண்டுபிடித்துவிட்ட உமாவுக்கு இந்தத் தற்காக அம்மாவின் கடிதம் ஆர்வமூட்டவில்லை.

"போங்கள் மாமா. நான் பிரெஞ்சு கற்றுக்கொண்ட பிறகுதான் ஊருக்குப் போவேன்'' என்று சிணுங்கினாள்.

"உன்னை யார் ஊருக்குப் போகச் சொன்னது, கடிதம் வந்தது என்றுதானே சொன்னேன்'' என்றார் மாமா.

அப்பாடி, இத்துடன் தப்பித்தோம் என்று எண்ணினாள்.

அன்று மீண்டும் ப்ரீத்தி வகுப்பிற்கு வரவில்லை. என்ன ஆயிற்று இந்தப் ப்ரீத்திக்கு? அடிக்கடி கட்டி வருவதும், காய்ச்சல் வருவதும் என்று எண்ணத் தொடங்கினாள். போய்ப் பார்க்கலாம் என்றால் வகுப்பு நேரத்தில் மாமா தன்னை வெளியே பார்க்க நேர்ந்தால் அன்றுடன் பாண்டிச்சேரி வாசம் முடிந்துவிடும் என்ற அச்சம் வேறு. எத்தனை இனிய செய்திகள் அன்னையைப் பற்றி அறிய முடிகிறது. இந்தச் சூழலைவிட்டுப் பிரிய அவளுக்கு விருப்பமில்லை.

"அன்னையே! எனக்கும் உம்மருகே வர ஆவல்தான். ஆனால் இந்தப் பெரியவர்கள், கட்டுப்பாடு இவையெல்லாம் என்னைச் சூழ்ந்துகொண்டு உம்மை நெருங்கவிடாமல் செய்கிறதே. நீர்தாம் பராசக்தி என்றால் புராணங்களில் வருவதுபோல ஏதேனும் மாயம் செய்து என் வீட்டாரை மாற்றிவிட முடியாதா? நீர் ஏன் அப்படிச் செய்வதில்லை "என்று எண்ணியவண்ணமிருந்தாள்.

இன்று எப்படியும் வகுப்பிற்குப் போவோம். நாளைய நிலைமைக்கேற்ப ப்ரீத்தியைக் காணச் செல்வோம் என்று சமாதானம் செய்துகொண்டு வகுப்பிற்குச் சென்றாள். மறுநாள் ப்ரீத்தி வகுப்பிற்கு வந்தாள். அவள் முகத்தில் உடம்பின் இம்சை தெரிந்தது. ஏதோ அவளுக்கு உடல்நலக்குறை என்று தோன்றியது. ஒன்றும் பேசுமுன் ஆசிரியர் வந்துவிட்டார். எல்லோரும் வகுப்பில் ஆசிரியர் கூறிய பாடத்தைக் குறிப்பெழுதிக்கொண்டனர். ப்ரீத்தியின் பென்சில் கீழே விழுந்துவிட்டது. குனிந்து எடுப்பதற்கு அவள் சிறிது முயற்சி செய்தவுடனேயே "' என்று லேசான வேதனைக் குரலுடன் குனிய முடியாமல் நிமிர்ந்துவிட்டாள்.

உமா குனிந்து பென்சிலை எடுத்துக் கொடுத்தாள். "ரொம்ப தாங்ஸ் உமா'' என்றாள் மெல்லிய குரலில்.

"தாங்ஸ் இருக்கட்டும். உடம்புக்கு என்ன? குனிந்தவுடன் "' என்று குரல் கொடுத்தாயே. வலித்ததா?'' என்றாள் மிக மெல்லிய குரலில்.

"ஆம்' என்பதுபோல் தலையசைத்து, "வகுப்பு முடியட்டும், பிறகு சொல்கிறேன்' என்று கண்ணால் ஜாடை செய்தாள்.

வகுப்பு முடிந்து மாணவிகள் வரிசையாய் வெளியேறி தத்தம் தோழிகளுடன் சேர்ந்து வீட்டிற்குச் செல்லத் தொடங்கினர்.

"மீண்டும் என்ன ப்ரீத்தி ஆயிற்று உனக்கு? ஏன் வகுப்பிற்கு வரவில்லை?'' என்றாள் உமா.

"தலையில் கட்டி வந்துவிட்டது உமா. குனியவே முடியவில்லை.

குனிந்தால் வலி. அதுதான் இரண்டு நாட்களாய் வாராதிருந்து விட்டேன்'' என்றாள் ப்ரீத்தி.

"உன் டாக்டரிடம் இதைச் சொல்லவில்லையா?'' என்று குறும்பாய்க் கேட்டாள் உமா. அவள் "டாக்டர்' என்று அன்னையைக் குறிப்பிடுவது புரிந்து புன்முறுவல் செய்தாள் ப்ரீத்தி.

"சிரித்து மழுப்பாதே ப்ரீத்தி. அன்னையிடம் கட்டியைப் பற்றிச் சொன்னாயா? இல்லையா?'' என்றாள் உமா.

"மீண்டும், மீண்டும் கட்டி என்றால் சொல்லவே என்னவோ போலிருக்கிறது. இம்முறை சொல்லாமல் பொறுத்துக்கொண்டு இருக்கிறேன்'' என்றாள் ப்ரீத்தி.

"நீ சொல்லாவிட்டால் என்ன? அவர் கண்டுபிடித்துப் பாராட்டாமல் விடமாட்டார், பாரேன்'' என்று (அவளைக் கடிந்துகொள்ளப் போகிறார் என்பதைப் பாராட்டு என்று) நகைச்சுவையாய்க் கூறினாள் உமா. "என்ன செய்வது உமா? இந்த ஜடம் விழித்துக்கொள்ளும்வரை பாராட்டித்தானே ஆகவேண்டும்'' என ப்ரீத்தியும் நகைச்சுவையாய்க் கூற இருவரும் சிரித்தனர்.

இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, வகுப்பில் உமாவின் கர்சிப் நழுவி கீழே விழ, உடனே ப்ரீத்தி குனிந்து அதை எடுத்துக்கொடுத்துவிட்டாள்.

"! பதிலுக்குப் பதிலா?'' என்று முன்பு தான் பென்சில் எடுத்துக் கொடுத்ததற்குப் பதிலாக இன்று அவள் கர்சிப் எடுத்துக் கொடுத்ததாகக் கேலியாய்க் கூறினாள்.

"அன்று குனிய முடியவில்லை. இன்று குனிய முடிந்தது. அதுதான் காரணம்'' என்றாள் ப்ரீத்தி.

"! உன் விருந்தினர் (தலையிலிருந்த கட்டி) கதி என்ன ஆயிற்று ப்ரீத்தி? அவர்களைச் சிறிதும் மதிக்காமல் குனிந்து விட்டாயே'' என்று விளையாட்டாய் அவள் தலைக்கட்டியை விசாரித்தாள்.

"அதையேன் கேட்கிறாய்? நீ கூறியதுபோல்தான் ஆயிற்று. நேற்று அன்னையிடம் ஆசீர்வாதப் பூக்கள் வாங்கச் சென்றிருந்தேன் அல்லவா? குனியாமல் வாங்கிக்கொண்டு திரும்பியதை அன்னை கண்டுபிடித்துவிட்டார். தலையை அழுத்திப் பிடித்தார். அவ்வளவுதான், வலிபொறுக்காமல் கத்திவிட்டேன். "கூடாது, கூடாது. இப்படி ஆகவே கூடாது '' என்று கர்ஜித்தார். யாரை அன்னை திட்டுகிறார் என்று பார்க்க எல்லோரும் வந்துவிட்டார்கள்''.

"பாராட்டுக் கூட்டமே நிகழ்ந்துவிட்டது என்று சொல்'' என்று கிண்டல் செய்தாள் உமா.

"அதையேன் கேட்கிறாய்? அந்தப் பாராட்டில் என் தலையில் வந்த கட்டியும், அது கொண்டுவந்த வயும் காணாமற் போய்விட்டது. நான் நிம்மதியாக வீடு திரும்பினேன்'' என்றாள் ப்ரீத்தி.

உமா மெய்மறந்த நிலையில் இருந்தாள்.

"என்ன உமா? நீ கேட்டாய் என்றுதானே ஒன்றுவிடாமல் சொல்கிறேன். நீ கவனிக்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டு இருக்கிறாய்'' என்றாள் ப்ரீத்தி.

"இல்லை ப்ரீத்தி. கவனிக்காமலும் இல்லை. எங்கோ பார்க்கவும் இல்லை. கவனமாக அன்னையின் பாராட்டுதல்களை எனக்குள் பார்த்து இரசித்துக்கொண்டிருக்கிறேன்'' என்கிறாள் உமா.

"உமா! இன்று மாலை, அன்னை என்னிடம் ஒன்று சொல்லப் போவதாய் கூறியிருக்கிறார்'' என்றாள் ப்ரீத்தி.

உடனே உமா ப்ரீத்தியின் கைகளைப் பிடித்துக்கொள்கிறாள். "ப்ரீத்தி! நீ மிகவும் அதிர்ஷ்டசாலிதெரியுமா? எனக்கும் அங்கு வந்துவிட ஆசைதான். என்னை ஏதோவொரு பயம் தடுக்கிறது. வீட்டினரை எதிர்த்து வெளியே வந்து பழக்கமில்லை. அவர்களோ

அனுமதிக்கும் நிலையில் இல்லை'' என்று மிகுந்த சோகத்துடன் கூறினாள்.

"கவலைப்படாதே உமா. உனக்கு அன்னைமீது இருக்கும் அன்பு வலுப்பட்டால் இடர்கள் யாவும் தாமே கழன்றுவிடும்''.

"ஆமாம் ப்ரீத்தி! ஒவ்வொரு நாளும், அன்னையுடன் உன் அனுபவங்களை நீ கொண்டுவருவதைக் கேட்டுக் கேட்டு நான் அன்னைமயமாகி வருகிறேன். அதுவே என் ஆர்வமும். எனக்குச் சராசரி வாழ்வு சாத்தியமில்லைபோல் உணர்கிறேன். மனித

உணர்ச்சிகளையே நான் இழந்துகொண்டிருப்பதாய் அறிகிறேன். அதனால் மற்றவரிடையே என்னிலை என்னவாகும் என்று அச்சமாகக்கூட இருக்கிறது ப்ரீத்தி. நான் முன்போல இல்லை என்று மாமிகூட வேதனைப்படுவதாய்த் தெரிகிறது''.

"அட! இதுவா உன் கவலை. உண்மையில் நீ அன்னையை நெருங்கப் பூரணத் தகுதி உள்ளவள் என்று சந்தோஷப்படு. இப்படித் தன் மனம் எவர்மீதும் ஈடுபாடின்றி இருப்பதாய் ஓர் அன்பர்

அன்னையிடம் தெரிவித்தபோது அவர் என்ன மறுமொழி கூறினார் தெரியுமா? "என்வரையில் இதை நான் விலையில்லா அரியபொருளாகவே மதிக்கின்றேன் '' என்றார்''.

"உண்மையாகவா ப்ரீத்தி? என்னுள் ஏதோ ரசவாதம் நடைபெற்றவண்ணமுள்ளது'' என்றாள் உமா.

"எல்லாம் நல்லதற்காகவே இருக்கும். கவலையை விடு'' என்றாள் ப்ரீத்தி.

(நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். உங்கள் எல்லோரையும் பகவானிடம் அழைத்துச் செல்லவே என்னுள்ளத்தில் உங்களை ஏற்றிருக்கிறேன். நீங்கள் பகவானிடமிருந்து விலகிச் சென்றால் என்னுள்ளம் புண்படும் என்பதை உணர்வீர்களானால் அதுவொன்றே போதும் - ஸ்ரீ அன்னை)

அன்று இரவு அன்னை ப்ரீத்தியை வரச்சொல், சொல்லிஅனுப்பினார். இன்று இரண்டு முறை தரிசனம், ஆசீர்வாதப் பூக்கள் பெறுதல், யாவும் நிகழ்ந்தன. மீண்டும் ஒரு தரிசனம். அது

அன்னையே அழைத்துத் தருவது. மிகுந்த ஆர்வத்துடன் உடனே புறப்பட்டுச் சென்று அன்னையின் அறை வாயிலில் போய் தயாராய் நின்றுகொண்டாள் ப்ரீத்தி.

"எஸ், கமின் '' என்கிறார் அன்னை.

மிகுந்த பரவசத்துடன் உள்ளே சென்றாள் ப்ரீத்தி. அன்னை அவளைப் புன்சிரிப்புடன் பார்த்தார். அந்தச் சிரிப்பின் தெய்வீகம் அவரை ஏற்றவர்க்கு வரப்பிரசாதம். மயங்கி நின்றாள் ப்ரீத்தி.

அன்னை தம் கையில் ஏதோவொரு தாள் வைத்திருக்கிறார். அது என்னவாக இருக்கக்கூடும் என்று யூகிக்க முடியாமல் திணறினாள்.

"ப்ரீத்தி! இந்தா, இதை உன் தோழியிடம் கொடுத்துவிடு '' என்று தம் கையில் வைத்திருந்த, அந்த அட்டைபோல் சற்று தடித்த தாளைக் கொடுக்கிறார்.

அன்னையின் சமீபம், அவர் புன்னகை, அவரால் தான் அழைக்கப்பட்டது, போன்ற மயக்கங்களிலிருந்து விடுபடாத நிலையில், "சரியம்மா!'' என்று மிகுந்த பணிவுடன் கூறுகிறாள். அதற்குள் அவருக்கு அடுத்த செய்தி ஒன்று வரவே ப்ரீத்திக்கு தலையசைத்து அனுமதி அளித்தார். ப்ரீத்தி தன்னிருப்பிடம் திரும்பினாள்.

என்ன கொடுத்திருப்பார்? புத்தகம்போல் இரண்டாக மடிக்கப்பட்ட அட்டையது. அதில் ஏதோ எழுதப்பட்ட செய்தி. செய்தியைச் சுற்றி பார்டர் கட்டப்பட்டிருக்கிறது. பூக்கள் வரையப்பட்டுள்ளது. ஒன்றும் புரியவில்லை. ஆகா, எந்தத் தோழியிடம் என்று பெயர் கேட்டுக்கொள்ளாதது எத்தனை முட்டாள்தனம். தன்னுடன் அச்சகத்தில் வேலை செய்யும் தோழியிருக்கிறாள், புத்தகப் பிரிவில் பணி செய்யும் தோழியிருக்கிறாள், தியானத்திற்கு, தரிசனத்திற்கு உடன்வரும் தோழியிருக்கிறாள், பிரெஞ்சுக் கிளாஸ் போனதில் அங்கும் ஒரு தோழியிருக்கிறாள். இதில் யாரிடம் இதைத் தருவது? இந்த அறியாமை நிறைந்த என் செயலை, உடனே தோழியின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாத என் மடமையை அன்னை மன்னிப்பாரா? என்று வருந்தினாள். புத்தகம் ஒன்றினுள் அந்தச் செய்தி அட்டையைப் பத்திரப்படுத்திவிட்டு பணிகளில் ஈடுபட்டவள் அதை மறந்தேபோனாள்.

பிரெஞ்சு வகுப்பில் நுழைந்தவுடன், மாணவிகளின் கலகலப்பான பேச்சொலிஆசிரியர் வரவில்லை என்பதை உணர்த்தவே நிம்மதியாய்ப் போய் இடத்திலமர்ந்தாள்.

தொடரும்.....

****

சொசைட்டியின் வெளியீடுகள்

ஆங்கில நூல்கள் 

1

Mental Peace of the Industrialist

ரூ. 30

2

Sri Aravindam

ரூ. 40

3

Luck

ரூ. 50

4

A Discussion on the Life Divine

ரூ.100

5

Life & Teachings of Sri.Aurobindo and The Mother

ரூ.120

6

Spirituality and Prosperity - I

ரூ.150

7

Spirituality and Prosperity - II

ரூ.200

மற்ற வெளியீடுகள்

1

தொழிலின் ஜீவன்

N. கண்ணன்

ரூ. 30

2

தேடிவரும் யோகம்

பிரித்திவ்

ரூ. 50

3

திருவருளே தீராத செல்வம்

N. அசோகன்

ரூ. 75

4

திருவடி தரிசனம்

N. அசோகன்

ரூ. 75

5

அருளோவியம்

N. அசோகன்

ரூ. 80

6

பக்தியும் சேவையும்

N. அசோகன்

ரூ.100

7

சத் பிரம்மம்

விசாலம்

ரூ. 20

8

சத் புருஷன்

விஜயா & விசாலம்*

ரூ. 20


 

 

*சென்னையில் மட்டுமே கிடைக்கும்.

தபாலில் பெற புத்தக விலையுடன் பதிவுத் தபால் கட்டணம் ரூ.20/- சேர்த்து M.O.. செய்யவும்.


 


 



book | by Dr. Radut