Skip to Content

08.சரணாகதி சமாதியைக் கடந்தது

"அன்பர் உரை''

சரணாகதி சமாதியைக் கடந்தது

                                                (டிசம்பர் 2002 இதழின் தொடர்ச்சி....)

(ஆகஸ்ட் 15, 2002 அன்று இராணிப்பேட்டை தியான மையத்தில் திருமதி வசந்தா லஷ்மிநாராயணன் நிகழ்த்திய உரை)

குறைகளைச் சமர்ப்பணம் செய்வது :

       குறை என்பது குணக்குறை. வழக்கம் மாறினாலும் குணம் மாறாது. குணம் மாறுவது என்பது சுபாவமாகும். அப்படியே மாறினாலும் நிரந்தரமாக மாறாது. கோபக்காரர் தம் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றால் இதன் முக்கியத்துவம் புரியும். குறை என்பது சுபாவத்தை வெளிப்படுத்துவது. கர்மம் சுபாவக் குணத்தின் மூலம் தன்னை நிலைநாட்டுவது. குறைகளை விலக்குவது என்பது சுபாவத்தை மாற்றுவதாகும். கர்மத்தை அழிப்பதாகும். சுபாவத்தின் வலிமையை அறிந்த கீதை அதன் பெருமையைக் கூறுகிறது. அவரவருக்கு ஏற்பட்ட சுபாவம் அவரவர்களுக்குப் பொருத்தமானது, உயர்ந்தது என்று கூறுகிறது.பிறருடைய உயர்ந்த சுபாவத்தைப் பின்பற்றுவதைவிட நம் தாழ்ந்த சுபாவத்தைப் பின்பற்றுவது பலன் தருவது என்று கீதை கூறுகிறது. ஸ்ரீ அரவிந்தம் சுபாவத்தை மாற்றவேண்டும் என்று சொல்வதில்லை. அழிக்கவேண்டும் என்று கூறுகிறது. சுபாவத்தின் வலிமையை அறிந்த ஸ்ரீ அரவிந்தம் சுபாவத்தை மாற்றும் முயற்சியையும் அதை ஒட்டியே செய்யவேண்டுமே தவிர அதை எதிர்த்துச் செய்ய முடியாது என்கிறது. இதன் பின்னுள்ள ஆன்மீகத் தத்துவத்தை சற்றுக் கருதுவோம். அவசரமானவன் பொறுமையைக் கைக்கொண்டால் அதைச் சாதிக்க அவசரப்படுவான். அது அவசரத்தின் வலிமை. வாய் ஓயாமல் பேசுபவர் பேச்சை நிறுத்த முடிவு செய்தால் ஏன் பேசக்கூடாது என்று ஆயிரம் பேரிடம் விளக்கம் கூறுவார். அப்படியானால் இதைச் சாதிப்பது எப்படி? மனிதனுக்குள்ள உயர்ந்த கருவி மனம்.மனத்தில், அதிகபட்ச உயர்வான அம்சம் அறிவு. நாம் பொறுமையைக் கைக்கொள்ளவேண்டுமானால்,

  • நம் மனம் பொறுமையின் அவசியத்தை உணரவேண்டும்.
  • அந்த முடிவைச் சமர்ப்பணம் செய்யவேண்டும்.
  • பொறுமையின் காரணங்களை அறியவேண்டும்.
  • அவசரம் உள்ளிருந்து உணர்ச்சியில் எழுவதைக் காணவேண்டும்.
  • உடலில் அதன் ஆரம்பத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.

       இந்த முடிவைச் சமர்ப்பணம் செய்த பிறகு அடுத்த முறை அவசரம் எழும்போது அதன் முனை மழுங்கி இருப்பது தெரியும். கவனித்துப் பார்த்தால் அவசரம் ஆசையால் வருகின்றது என்று புரியும். மேலும் கவனித்துப் பார்த்தால் அனுபவம் இல்லாததால் வருகின்றது என்று தெரியும். உதாரணமாக வீட்டில் phone வைக்கவேண்டும் என்று முடிவு செய்தால் அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த வேலை நம் இஷ்டப்படியோ, நம் அவசரத்திற்கோ நடக்காது, டிப்பார்ட்மெண்ட் அதன் போக்குப்படியே நடக்கும், phone கிடைக்கப் பத்து நாட்களாகும்,சில மாதங்களுமாகும் என்று அறிவர். அனுபவமில்லாதவர் அவசரப்படுவர். அவசரம் காரியத்தை ஒத்திப்போடும். Phone வைக்கும் வேலையை மறந்து பொறுமையை ஏற்கும் வேலையாக மாற்றினால், அதற்குத் துணையாக அவசரத்தைச் சரணம் செய்தால் சரணாகதியும், சமர்ப்பணமும் பலித்தால் வழக்கமான அவசரம் சில நிமிடம் தலை எடுக்காது. அவசரம் தலை எடுக்காத அந்த இரண்டு நிமிடத்தில் எவராலும் நம்பமுடியாதபடி phone வீட்டிற்கு வரும். Phone கிடைத்ததில் திருப்தி ஏற்பட்டால் மீண்டும் அவசரம் வரும். Phone-ஐப் புறக்கணித்து சரணாகதியைப் பின்பற்றினால் அடியோடு அவசரம் அழிந்தது போன்று அமைதி ஏற்படும். மற்றவர்களுக்கு அது ஆச்சரியம் கொடுக்கும். ஆனால் அமைதி உண்மையானாலும், அவசரம் அழிந்தது உண்மையானாலும், phone வந்தது உண்மையானாலும், அவசரம் திரைமறைவில் இருக்கும். இந்த அவசரத்திற்குரிய காரணங்களை யோசனை செய்து பார்த்தால் இது phone-க்காக வரும் அவசரமில்லை. நம் சுபாவத்திலுள்ள அவசரம் என்று புரியும். வெளியே புறப்படுவது, சாப்பிடுவது போன்ற எளிய காரியங்களிலும் நமக்கு அவசரம் இருப்பது தெரியும். இது தெரிவது பெரிய விஷயம். மனம் ஏற்றுக்கொள்வது அதைவிட முக்கியம். எனக்கு எல்லா விஷயங்களிலும் அவசரம் இருக்கின்றது. இது மாறி பொறுமையாகவேண்டும் என்ற முடிவு எடுக்கவேண்டும். அந்த முடிவைச் சமர்ப்பணம் செய்யவேண்டும். முடிவு சமர்ப்பணமானால், phone-க்கான அவசரம் அடங்கியதுபோல் எல்லா விஷயங்களிலும் அவசரம் அடங்கி அமைதி எழும். இதனாலும் அவசரம் அழிந்தது என்று அர்த்தமாகாது. அடுத்த கட்டத்தில் போய் ஒளிந்துகொண்டிருக்கும். இதற்கு மேற்கொண்டு முன்னேற்றம் வேண்டுமானால் அவசரத்தின் ஆன்மீக அர்த்தத்தை அறிந்துகொள்ளவேண்டும். அவசரம் என்பது பொறுமைக்கு எதிரானது, பொறுமை சமத்துவத்தின் மனித ரூபம். எனவே அவசரம் சமத்துவமாகத் திருவுருமாற்ற வேண்டியது. சமத்துவம் என்பது அனந்தத்தின் ஜீவியம் (infinite). அவசரம் எழுவதற்குக் காரணம் நாம் சிறியதாக (finite) இருப்பது என்று புரியும். நாம் பிரான்ச் ஆபீஸ் மேனேஜராக இருந்தால் phone வைக்க அவசரப்பட்டால் நம் சிறிய நிலை நமக்கு அவசரம் கொடுக்கிறது என்று புரிந்துகொள்ளவேண்டும். ஹெட் ஆபீஸ் மேனேஜர் நம் நிலையில் என்ன செய்வார் என்று யோசனை செய்யவேண்டும்.அதை விசாரித்தால் ஹெட் ஆபீஸ் மேனேஜர் விபரம் தெரிந்தவர். சென்ற முறை அவர் ஆபீஸிற்கு phone வைக்கும்போது எல்லோரும் அவசரப்பட்டதாகவும் அவர்களுக்குப் பெரிய மேனேஜர் நமக்கு ஒரு phone வேண்டும், phone டிபார்ட்மெண்டில் வெயிட்டிங் லிஸ்டில் 400 பேர் இருக்கின்றார்கள் என்று அவர் கூறியதாகவும் கேள்விப்பட்டோம். அந்த விபரம் அறிந்ததும் அவசரம் அடங்கிவிடும். விபரம் தெரியாததாலும், அனுபவம் இல்லாததாலும், உடல் நிதானம் இல்லாததாலும், மனம் எந்த விஷயத்தையும் ஊடாடி கவனிப்பதில்லை என்பதாலும், மேலும் பல காரணங்களாலும் அவசரம் ஏற்படுகிறது என்று தெரியும். அறிவும்,அனுபவமும் அவசரத்திற்கு எதிரி. முனை மழுங்கிய அவசரத்தை முக்கால்வாசி ஆக்கிவிடும். இந்த முயற்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் சரணாகதி முடிவான பலனை முதலிலேயே தரும். சரணாகதியை மேற்கொள்ளும்போது பலன், சரணாகதி பலிப்பது. மற்றவை எல்லாம் பலனில்லை, மற்றவற்றை மனம் கருதக்கூடாது. சமர்ப்பணம் பலிப்பவர்களுக்குச் சமர்ப்பணத்தால் குறைகளை விலக்க முடியும்.

       குறைகளின் பெயர் நீண்ட பட்டியல். பெருமை, பொறாமை, பயம், பேராசை, குறுக்கே பேசுவது என ஆயிரம் உண்டு. நாம் வீண் பெருமையை ஆராய்வோம். வீண் பெருமை தன் குறை என்று அறிந்து சமர்ப்பணத்தால் விலக்க ஒருவன் முயன்றால் கீழ்க்கண்டவை அவர் முன் படிப்படியாகத் தோன்றும்.

  • நம்மையறியாமல் பெருமையை நம்முள் நாடுபவை நம்மை மீறி எழுவதைக் காணலாம். இதை மனம் கண்டு அதை ஏற்காமல் அதிலிருந்து விலகிச் சமர்ப்பணம் செய்தால் அதுவும் விலகும்.
  • நாம் சும்மா இருக்கும்பொழுது நம் மனம் அடங்கி இருக்கும்பொழுது நாம் எதிலிருந்து விலகி இருக்கிறோமோ அதைச் செய்யும்படி பிறர் தூண்டுவர். இதுவரை நாம் செய்த காரியங்களை அழிக்கும் வழி, அவர் தூண்டுவதற்கு இரையாகி நாம் முன்போல் நடப்போம். அதைச் சமர்ப்பணம் செய்வது சிரமம். அதுவும் சமர்ப்பணம் ஆனபிறகு,
  • எண்ணத்தின் பின்னிலிருந்து உணர்ச்சி உந்தும். இதைச் சமர்ப்பணம் செய்ய எண்ணத்திற்குண்டான மூன்று கட்டங்களை மீண்டும் பின்பற்றவேண்டும். அவற்றில் வெற்றி கண்டால்,
  • அதேபோல் உணர்ச்சியின் அடியில் உடல் தானே இயங்குவது தெரியும். அதுபோல் இயங்கும்போது நாம் "என்ன நடந்தது என்று தெரியவில்லை, போனேன், நண்பரைக் கூப்பிடக் கூடாது என்று முடிவு செய்த பிறகு என்னை அறியாமல் நான் phone-இல் அவரைக் கூப்பிட்டுப் பேசிக்கொண்டிருக்கும்போது என்னை மீறி நான் செயல்படுவது எனக்கு நினைவு வந்தது'' என்று கூறுகிறோம்.
  • எண்ணமும், உணர்வும், உடல் அசைவுகளும் அடங்கியபின் சூட்சுமப் பகுதிகளில் அதே எண்ணம் எழும்.
  • அதேபோல் உணர்விலும், உடலிலும் சூட்சுமத்தில் உந்தல்கள் எழும்.

       ஓர் எண்ணத்திற்குப் பின்னால் நம்முள் (inner life) இத்தனைக் கட்டங்களில் எழுவனவற்றை காண்பது முதல் அவசியம். சமர்ப்பணத்தால் ஒவ்வொன்றாகக் களைவது அடுத்தது. சிரமப்பட்டு அகத்தில் வென்றதை அர்த்தமற்ற புறச்செயல் அழிப்பது மனித சுபாவம். நாம் யாரை phone-இல் கூப்பிடவேண்டாம் என்று இருக்கிறோமோ அவரிடம் நம் வீட்டில் மற்றொருவர் phone-இல் பேசுவார். நம்மைப் பேச அழைப்பார். நாம் சம்மதித்தால் இத்தனைக் கட்டுப்பாடும் வீண்போகும். சமர்ப்பணத்தில் நமக்கொரு பங்குண்டு என்றால் அது இதுதான். இதையும் அன்னை செய்யவேண்டும் என்று கூறுபவர் உண்டு. அது நம்மவருக்கே உரிய குதர்க்கவாதத்தின் உச்சகட்டம். அதைச் சொல்லும் உரிமை நமக்கில்லை. பெரிய மஹான்கள் அப்படிப் பேசி இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் செய்த சரணாகதியை (ஜீவனைச் சரணம் செய்து இருப்பார்கள்) நாம் செய்த பிறகு பேசலாம். அவரை அப்படிப் பேசும் உரிமை நமக்கு இல்லை. அப்படிப் பேசும்போது அப்பேச்சு இதுவரை செய்த முயற்சியை வீணடிக்கும்.

தொடரும்....


 ****


 


 

Comments

 Also, please indent all the

 

Also, please indent all the bullet marked sentences.

 

motnir

 08.சரணாகதி சமாதியைக்

 

08.சரணாகதி சமாதியைக் கடந்தது
 
குறைகளைச் சமர்ப்பணம் செய்வது
 
Para  3  -   Line  4    -   phoneவைக்கவேண்டும்   -    phone வைக்கவேண்டும்
Para  3  -   Line  9    -   Phoneவைக்கும்                 -   Phone வைக்கும் 
Para  3  -   Line 12   -    phoneவீட்டிற்கு                 -   phone வீட்டிற்கு
Para  3  -   Line  16  -    phoneவந்தது                     -   phone வந்தது
Para  3  -   Line 31   -    phoneவைக்க                     -  phone வைக்க
Para  3  -   Line 36   -    phoneவேண்டும்                -  phone வேண்டும்
Para  3  -   Line 37   -    phoneடிபார்ட்மெண்டில்    -   phone டிபார்ட்மெண்டில்
Para  3  -   Line 37   -   லி ஸ்டில்                          -   லிஸ்டில் 
Para  3  -   Line 43   -   முதலேயே                        -   முதலிலேயே
 
 
motnir



book | by Dr. Radut