Skip to Content

07.அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்

 (சென்ற இதழின் தொடர்ச்சி....)

       பழம் என்பது பொருள். அதை வாங்கி விற்பவன் பழம் எத்தனை நாளைக்கு வரும், விற்க எத்தனை நாளாகும், எவ்வளவு அழுகிப் போகும் என்பதை அறிந்து கொள்முதல் செய்யவேண்டும். அப்பொழுதுதான் இலாபம் வரும். வேலையில் சூட்சுமம் உண்டு.ஹோட்டல் சர்வரிலிருந்து ஹைகோர்ட் வக்கீல்வரை வாடிக்கைக்காரரை அறியமுடியாதவருக்குத் தொழில் பலிக்காது.

       எந்த வேலையிலும் நல்லது, கெட்டதுண்டு. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் சூட்சுமம் மிஞ்சி நிற்கும். மனை விற்குமிடங்கள், ரொக்க லாவாதேவி, புரோக்கர் வேலை செய்யுமிடங்களில் சூட்சுமம் மிச்சமாக இருக்கும். அங்கெல்லாம் திருட்டுத்தனம் அதிகமாகப் பலிக்கும். குற்றவாளிகட்கு சூட்சுமம் அதிகம். வேலையின் எல்லா அம்சங்களும் தெரியும் நேரம் பகுதியின் சூட்சுமம் விளங்கும்.

       மார்க்கட் என்பது பெரியது. பண்டமாற்று அதன் பகுதி. மார்க்கட் புரிந்தால் பண்டமாற்று புரியும். உபரியான சக்தியைச் சேகரம் செய்வது நம் திறமையை வளர்ப்பது. பணம் என்பதில்லாவிட்டால் மனிதன் தனக்கு வேண்டியதை மட்டும் உற்பத்தி செய்வான். உபரியை உற்பத்தி செய்யமாட்டான். பணமாக உபரியை மாற்றலாம் என்பதால் உபரியை உற்பத்தி செய்கிறான். பணம் சம்பாதிக்கும் ஆசையால், அதிகபட்சம் வேலை செய்கிறான். நாணயம் வந்தபிறகு உள்ளூர் சரக்கை வெளியூரில் விற்க முடிந்தது. நோட்டு வந்தபிறகு வெளி மாநிலத்தில் விற்க முடிந்தது. பணம் இவை மூலம் மனிதனுடைய ஆட்சியை விரிவு செய்கிறது.

       வெகு தூரத்தில் பொருள்களை விற்றால் பாங்க்மூலம் பணம் வசூலாகும். ரயில்வேமூலம் சரக்கு போகும். பணம் வசூல் செய்ய கோர்ட்டிற்குப் போக வேண்டிவரும். சுங்க வரி கட்டுகிறோம். பாங்க், ரயில்வே, கோர்ட், சர்க்கார் ஆகிய ஸ்தாபனங்கள்மூலம் பணம் செயல்படுகிறது.

நேரடியாகப் பணம் செலாவணியாவதற்குப் பதிலாக ஒரு ஸ்தாபனத்தின்மூலம் பணம் செயல்பட்டால், பணத்திற்கு சக்தி வளரும்.

      பாங்க்மூலம் சரக்கு விற்கப்பட்டால், பணத்தை ஏமாற்றமுடியாது, வசூலிக்கப்படும். ஏமாற்ற முடியாது எனில் பணத்திற்கு பலம் வந்துவிடும். எத்தனை ஸ்தாபனங்கள் மூலமாக பணம் செயல்பட்டால் அத்தனை மடங்கு பணத்திற்கு பலமும், மரியாதையும் வரும். அத்துடன் அதன் சூட்சுமப் பலமும் வளரும். ஊரில் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் அவர் யாரிடம் கடன் வாங்கியிருக்கின்றாரோ, அவருக்குக் கட்டுப்படுவார். அதாவது பணத்திற்குக் கட்டுப்படுவார். பணம் உற்பத்தியானது, வளர்ந்தது, வளர்ந்து முடிந்தது, அதன் சூட்சும சக்தி ஆகியவற்றிற்குச் சட்டங்களுண்டு. இவை இத்துறையிலுள்ளவர் அறிவர். இந்தச் சட்டங்களும், அதன் சூட்சுமங்களையும் அறிந்தால்,

  1. பணத்தைப் பெருக்கலாம்.
  2. பெருகிய பணத்தால் வரும் ஆபத்திலிருந்து தப்பலாம்.

       பௌதீகம், ரசாயனம் ஆகிய சட்டங்களுடன் பணத்தின் சட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது பயன் தரும். கணிதம் இச்சட்டங்களைச் சூத்திரமாக்கும், தத்துவம் சுருக்கும், கவி காவியநயத்துடன் கூறுவார், யோகி சாதிப்பார்.

        பணம் பெருகவேண்டும். பெருகியபின் அதனால் தொந்தரவு வரக்கூடாது. நாம் சம்பாதித்த பணத்தால் நமக்குத் தொந்தரவு வரக்கூடாது. நம் பணத்திலிருந்து நமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பவை அனைவரும் தெரிந்தவை என்றாலும் விளக்கம் அவசியம்.

       கோடிக்கணக்காக லாட்டரியில் சம்பாதித்த பலரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அத்தனை பேரும் பணத்தை இழந்தவர்கள். இழந்ததால் தாம் முன்னிருந்த நிலையைவிட மனத்தால் தாழ்ந்தவர்கள். அடுத்த முறை பரிசு கிடைத்தால் ஏற்கமாட்டோம் என்றும் கூறினார்கள். எது உண்மையோ, இல்லையோ அவர்கள் பெற்ற பெரும் பணம் அவர்கட்கு சந்தோஷம் தரவில்லை.

       பணத்தால் எப்படித் தொந்தரவு வரும் என்பது இத்தலைமுறையில் சம்பாதித்தவர்கள் அறிவார்கள். பரம்பரை பணக்காரனுக்குண்டான நிதானம், அனுபவமில்லாமல் அந்த அனுபவம் பெற பணத்தை இழந்து, நிம்மதியையும் இழப்பவர் அதிகம். சில கோடி சம்பாதிப்பவர்கட்கு இப்பிரச்சினை அதிகமாக இல்லை. பல ஆயிரம் மடங்கு சொத்து சேரும்பொழுது அதை நிர்வாகம் செய்ய முடியாமலும், அவற்றால் ஏற்படும் மனத்தாங்கலும், டென்ஷனும் பெரிய தலைவலி. பெரும்பாலும் பணத்தை இழந்துவிடுவார்கள். அடுத்த தலைமுறை கட்டுப்படாது. இவை அனைவருக்கும் உள்ள பிரச்சினைகள். நான் இதை மட்டும் குறிப்பிடவில்லை. பெருந்தொகை, அதற்குரிய இடத்தில் சேர்க்கும். பெருந்தொகைக்குப் பெரிய சக்தியுண்டு. இது அறிவுக்குக் கட்டுப்படாது, வலிமைக்குக் கட்டுப்படும். அதற்கும் சூட்சுமம் வேண்டும். இல்லையேல் இப்பணத்தின் சக்தி பெற்றவரை அழிக்கும். இது பணம், பதவி இரண்டுக்கும் உள்ள தன்மை. நமக்கு நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிரச்சினையில்லை என்றாலும், இதைக் குறிப்பிடவேண்டியது அவசியம் என்பதால் குறிப்பிடுகிறேன்.

இந்தப் பாதுகாப்புப் பெற சூட்சும ஞானம் வேண்டும் என்பதே

நமக்கு இங்கு முக்கியம்.

      இந்த அம்சத்தை ஒருவர் விவரமாக அறியவேண்டுமானால், சமூக முன்னேற்றம், சமூகப் பரிணாமம் என்ற நோக்கில் பணத்தை அறிய முன்வரவேண்டும்.

பணத்தை யோகக் கண்ணோட்டத்தில் ஆராய்ச்சி செய்தால், அதுவே முடிவானது.

       சமையல் கற்பவனைக் கருதுவோம். (recipe) எப்படிச் சமையல் செய்வது என இவனுக்குக் கற்பிக்கலாம். தேர்ந்த சமையல்காரனுக்கு (master cook) பதம்பார்க்க ருசி பார்க்க தேவையில்லை. கொதிக்கும் பாத்திரத்தைப் பார்த்தவுடன் அவனுக்குப் பதம் தெரியும். சாம்பாரில் என்ன போடவேண்டும் என எழுதித் தரலாம். அதனால் பதம், ருசியைக் கற்றுக்கொள்ள முடியாது. தலைமைச் சமையல்காரனுக்கு அந்த ஞானம் சூட்சுமமாக வருகிறது. வாயால் சொல்லும் தேவையில்லை.

       ஒர்க்ஷாப்பில் பல ஆண்டு வேலை செய்து வேலையைக் கற்றுக்கொள்வதை, பயிற்சியால் குறைந்த நாளில் கற்றுத் தரலாம். படிப்பிருந்தால் பயிற்சிக் காலத்தையும் சுருக்கலாம். வேலைக்குரிய சூழல் சூட்சும ஞானம் பெறும் திறனைத் தரும். பணிவு, கீழ்ப்படிதல், அடக்கம் ஆகியவை அந்தரங்கமானவை. குருவின் சூட்சும ஞானம்,பணிவால் சிஷ்யனுக்கு சூட்சுமமாக வரும். அடக்கம் அந்தரங்கக் காதலானால் அடிமனம் திறந்து அனைத்தையும் அரை நிமிஷத்தில் குருவிடமிருந்து பெறும்.

       லட்சியம், தீட்சண்யம், பணிவு, பக்தி, சேவை, ஆர்வம், நன்றி   சூழலிலிருந்தாலும், குருவிடமிருந்தாலும், சிஷ்யனிடமிருந்தாலும் சூட்சுமமாகக் கற்க உதவும். குருகுலம் ஏற்பட்டது அக்காரணத்தால்தான். கல்லூரியின் சூழல் கற்பதைச் சிறப்பாக்கும். அமெரிக்காவில் வசிப்பது பல்கலைக்கழக வாசத்திற்குச் சமம். M.B.B.S.முடித்தபின் டாக்டர் ஓர் ஆண்டு ஆஸ்பத்திரியில் பயிற்சி பெறுகிறார்.

       பணத்திற்கும் சூட்சுமம் உண்டு. சூட்சுமச் சூழலில் பணம் காலடி எடுத்துவைத்தால் அது தானே பெருக ஆரம்பிக்கும். 1990 முதல் உலகில் அதைக் காண்கிறோம். தானே பெருக முதிர்ச்சியும் பக்குவமும் தேவை (saturation and maturity). மொழியின் வளர்ச்சி இதை நமக்கு அறிவுறுத்தும். குழந்தை மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு (from the physical environment) கற்றுக்கொள்கிறது என்றாலும் அதன் சூழலில் சூட்சுமச் சூழலும் கலந்துள்ளது.  (Pronunciation, tone accent, intonation) உச்சரிப்பு, குரல், சொல்நயம், அதன் சுருதி ஆகியவற்றைப் புத்தகத்திலிருந்து கற்கமுடியாது. கேட்டுக் கற்பவை அவை. பிறமொழி பயிலும்பொழுது இவற்றைப் பெறமுடியாது. வடநாட்டிற்குப் போன தமிழன் இந்தி கற்பதற்கும், நம்மூரில் இந்தி கற்பதற்கும் வித்தியாசம் உண்டு. வடநாட்டில் அனைவரும் இந்தி பேசுவதால் சூழல் கனத்துள்ளது. எளிதில் வரும். தாய்மொழியின் சூட்சுமத்தை அறிபவர் அதன்மூலம் பிறமொழியின் சூட்சுமத்தை எட்டினால் எளிதில் கற்கலாம். அது அனைவராலும் முடியாது.

  • Conception, perception, sensation என்பவை எண்ணம், உணர்ச்சி, உடல் அறியும் நிலைகள்.
  • இந்த ஆராய்ச்சிக்கு எண்ணமே ஜடமானது.
  • சூட்சும ஞானம் மூலம் எண்ணம் உணர்ச்சியாகிறது, conception, perception ஆகிறது.
  • அதுவே உடல் அறியும் (sensation) பாதை.
  • சூட்சும ஞானம் ஜடமான அறிவை சூட்சுமமான அறிவாக்கும்.
  • அறிவு சூட்சுமமானால் ஆயிரம் மடங்கு லிக்கும்

எத்தனை வருஷம் பேனாவைப் பயன்படுத்தினாலும் பேனா செய்யும் திறன் வாராது. அது ஜடமான செயல், பயன்படுத்தும் திறமை. நெடுநாளாகப் பணத்தை நாம் பயன்படுத்துகிறோம், பயன்படுத்தினால் நமக்கு பயன்படுத்தத் தெரியும். அதனால் பணத்தை உற்பத்தி செய்ய முடியாது. பேனாவால் எழுதுவது பயன்படுத்துவது, பேனாவைச் செய்ய டெக்னாலஜி தெரியவேண்டும், கம்பனி வேண்டும், மெஷின் வேண்டும், முதல் வேண்டும், இவற்றுடன் சூட்சும ஞானமும் வேண்டும். பணத்தை உற்பத்தி செய்ய பணத்தின் வரலாறு தெரியவேண்டும். பணம் உற்பத்தியாகும் வேலை ஒன்று வேண்டும், பணத்தின் தத்துவம் தெரியவேண்டும், இவற்றுடன் பணத்தின் சூட்சுமம் தெரியவேண்டும். பணம் ஓர் அமைப்பு. ஸ்தாபனம் (organisation). உற்பத்தி, விநியோகம், உபயோகம் ஆகியவற்றைச் சேர்ப்பது பணம். நெல் நிலத்தில் உற்பத்தியாகிறது. மார்க்கட்டில் விற்கிறது. நாம் வாங்கிப் பயன்படுத்துகிறோம். இவற்றை எல்லாம் இணைப்பது பணம். விவசாயி பணத்திற்கு நெல்லை விற்கிறான். நாம் பணம் கொடுத்து நெல் வாங்குகிறோம். அவனுக்கு ஒரு விலை,நமக்கு வேறு விலை. விலைகள் மாறும், விவசாயி தன் விலையை ஏற்கவேண்டும், நாம் வியாபாரி விலையை ஏற்கவேண்டும். இவையெல்லாம் பணத்தால் நடக்கின்றன. இந்த அமைப்பு (organisation) சூட்சுமமானது. அமைப்பு மனத்திற்குரியது, அமைப்பு சூட்சுமமானது.

       பணத்தின் அத்தனை அம்சங்களையும் அறிந்து, அதன் சூட்சுமத்தையும் அறிந்தால், பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.

       நாணயத்தை உற்பத்தி செய்தவன் என்ன நினைத்திருப்பான் என்று நாம் கருதினால், நாணயம் நோட்டானபொழுதும் அதே நினைவு எழுந்தது. கம்ப்யூட்டரால் பணம் வேகமாக சென்றபொழுதும் அதே நிலை. இவர்கள் சமூகத்திற்குச் செய்த சேவை பெரியது. பல சமயங்களில் இவை வியாபார நோக்கால் நடந்தது என்றாலும், அடிப்படையில் இவை சமூகத்தின் நல்லெண்ணத்தை மனிதனுக்களித்த செயல்கள். எந்தப் புதிய வசதி மனிதனுக்கு வருவதும், சமூகத்தின் நல்லெண்ணமாகும். நல்லெண்ணம் ஒரே நோக்கமாகும். நோக்கம் சூட்சுமமாகும். ஆன்மா முழுவதும் சூட்சுமம். அதன் அம்சங்களான சத்தியம், நல்லது, சந்தோஷம் போன்றவையும் சூட்சுமமானவையே. நம் நல்லெண்ணமும் சூட்சுமமானது. அதனால் நம் நல்லெண்ணம் உயர்ந்து சமூகத்தின் நல்லெண்ணத்தைத் தொடமுடியும்.

       பணத்தைப் பற்றி எல்லா விவரங்களையும் முழுமையாகச் சொல்லாவிட்டாலும், மேற்சொன்னவை எல்லா முக்கிய விஷயங்களையும் சுருக்கமாகக் கூறுகிறது. மனிதன் இப்பலனை எப்படிப் பெறுவான் என்பது நமக்கு முக்கியம். அவன் பெறவேண்டியவை organisaton நிர்வாக அமைப்புத் திறமை, சூட்சும ஞானம், நல்லெண்ணம், நல்நோக்கம், பண்புகளைத் தீவிரமாக அறிதல், காரியத்தைச் சாதிக்கும் பண்புகள். இவற்றைப் பெற்றவன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். எவ்வளவு நாளாகும் என்பது கேள்வியில்லை. ஒரு சோதனை செய்ய மனம் தயாராகவேண்டும். பணம் உற்பத்தியாக மனத்திலுள்ள தடைகளை அகற்றி, முடிவு செய்வது முக்கியம்.

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

பரம்பரைச் சுபாவத்தையும், மனசாட்சியையும் மீறத் தயங்குவதை அன்னை ஏற்று,அவற்றை மீறாமல் அனுபவிக்கும் சந்தர்ப்பத்தையும் அன்னை அளிக்கிறார்.

தயக்கத்தையும் ஏற்கும் தயாபரி.


 


 


 

Comments

07.அபரிமிதமான செல்வம்  Please

07.அபரிமிதமான செல்வம்
 
Please make a new paragraph from the line
   மார்க்கட் என்பது பெரியது.
to the line
   பணம் இவை மூலம் மனிதனுடைய ஆட்சியை விரிவு செய்கிறது.
Para 17   -  Line  1  -  ஒர்க்ஷாப்பில்   - ஒர்க்க்ஷாப்பில் 
 
Para 18   -  Line 12  -  புத்தகத்திலி ருந்து   -   புத்தகத்திலிருந்து
Para 19   -  Line  1   - sensationஎன்பவை      -   sensation என்பவை
Para 19   -  Line  3   - perceptionஆகிறது       -   perception ஆகிறது

 

motnir



book | by Dr. Radut