Skip to Content

06.அன்பரும் - நண்பரும்

அன்பரும் - நண்பரும்

நண்பர் - வாழ்வில் கர்மம், தலைவிதி என்று ஏற்பவற்றை அன்னையிடம் வந்தபின் அனுபவிக்கத் தேவையில்லை. அவை விலகுவதை அன்னை தன் சட்டங்கள்மூலம் - அதன் தாத்பரியத்தை - விளக்குகிறார். அவற்றை நாம் நம் அனுபவப்படி புரிந்துகொள்கிறோம். அதுவும் பலன் தரும். பழமொழியாகவும் அவை வழங்குகின்றன. வேண்டாதவர் கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் என்பது வாக்கு. கைபட்டது விஷயமில்லை, நான் வேண்டாதவள் என்பதே விஷயம் என நாம் புரிந்துகொள்கிறோம். அதே விளக்கம் அன்னை எழுதுவது புரிந்தால் முழுப் பலன் கிடைக்கும்.
 

"நம்மைக் குறைகூறும் முதலாளி நம் வேலையைச் சுட்டிக்காட்டினாலும், அவருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்பதே விஷயம்''

என்பதை அன்னை,

"நாம் செய்தவையெல்லாம் சரியானாலும், நம் மனம் தாழ்ந்ததானால் - low conscsiousness, தாழ்ந்த ஜீவியமானால் - காரியம் கூடி வாராது"

என்கிறார்.

பலன் திறமைக்கோ, செயலுக்கோ இல்லை, பலன் "நாம் யார்'' என்பதற்கு என்பது சட்டம்.

அன்பர் - எங்கள் ஆபீசில் 10 பேர் வேலை செய்கிறோம். என்னைத் தவிர எவருக்கும் 50% வேலை தெரியாது. 25% வேலை செய்யமாட்டார்கள். நான் சிறப்பாக வேலை செய்கிறேன் என்பதை மற்ற 9 பேரும் வாயாரப் புகழ்கிறார்கள். என் முதலாளி என்னால்தான் ஆபீசுக்குக் கெட்ட பெயர். நான் வேறு இடத்திற்கு மாற்றல் கேட்டுப் போகவேண்டும் என்கிறார். ஆத்திரம் பீறிட்டுக்கொண்டு வருகிறது, அடக்கவே முடியவில்லை.

நண்பர் - பிரச்சினை, முதலாளியின் குத்தலான பேச்சு என்றால் அதைக் கொஞ்ச நாளில் தீர்த்துக்கொள்ளலாம், அது முடியும்.

அன்பர் - அது போதும், வேறெதுவும் தேவையில்லை.

நண்பர் - நீங்கள் வெகுதிறமைசாலி என்பதை ஆபீஸிலுள்ளவர் அனைவரும் அறிவார்கள், அதை வெளிப்படையாகக் கூறுகின்றனர். உங்களுக்கு முதலாளி பாராட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், எதிர்பார்த்தால் எதிராக நடக்கும், எதிர்பார்க்காவிட்டால் பிரச்சினை எழாது.

அன்பர் - வந்த புதிதில் முதலாளி பாராட்டினார்.

நண்பர் - அப்பொழுது உங்கள் மனத்தில் எதிர்பார்ப்பு இல்லை.

அன்பர் - எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

நண்பர் - தவறு என்று கூறமுடியாது. எதிராக நடப்பது வாழ்க்கையின் குணம். அதையும் தவறு என்று கூறமுடியாதே.

அன்பர் - சரி, இப்பொழுது பிரச்சினை தீர்ந்தால் போதும். எது சரி, எது தப்பு, என்ற விசாரணை தேவையில்லை. நான் என் மனதை மாற்றிக்கொள்கிறேன்.

அன்பர் பெரும்பாடுபட்டு மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டார். அது முதலில் சாத்தியமாக இல்லை. வேலையில் கவனத்தை முழுவதும் திருப்பினால் மனம் குறையை நாடாது என முயன்றார். அந்த நேரம் இன்ஸ்பெக்ஷன் வந்தது. முதலாளி, குறை எல்லாம் நினைக்க நேரமில்லை. இன்ஸ்பெக்ஷன் முடிந்தது, வந்த ஆபீசர் கடைசி நாளன்று மீட்டிங் போட்டுப் பேசினார். மேல் ஆபீசில் "சிறந்த பிரான்ச் ஆபீஸ்'' என்று தேர்ந்தெடுத்து பரிசு தருவது என்று முடிவு செய்திருந்தது உள்ளூரில் எவருக்கும் தெரியாது. இந்த ஆபீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் தெரியாது. மீட்டிங்கில் அவை வெளியிடப்படவேண்டும். மேலதிகாரி ஆபீஸைப் பாராட்டிப் பேசி பரிசு உண்டு என்று முடித்தார். Boss முதலாளியாக இருக்கிறார். ஆபீஸ் என்றாலும் தோரணை முதலாளிக்குரியது. முதலாளி பேசும்பொழுது அனைவரையும் பாராட்டிப் பேசினார், அன்பரை விசேஷமாகப் பாராட்டினார். கடந்த ஆண்டுகளில் அன்பரின் சேவையை குறிப்பாக எடுத்துரைத்துப் பாராட்டினார். அன்பரால் ஆபீஸ் பரிசு பெற்றது என்றார். அதனால் முதலாளி அன்பருக்கு ஒரு பரிசு கொடுத்தார்.

அன்பர் - மனம் மாறினால் எதுவும் நடக்கும்,

                 எதிர்பாராவிட்டால் எல்லாம் நடக்கும்.

                 எதிர்பார்த்தால் எதிராக நடக்கும்

என்பவற்றை இந்தக் கொஞ்ச நாளில் பூரணமாகப் பார்த்துவிட்டேன். என்னுடைய முதலாளி பேசியவற்றை எவரும் நம்பவில்லை, என்னாலும் இன்னும் நம்பமுடியவில்லை. இவையெல்லாம் நடப்பது நம் அனுபவத்திலில்லை, எல்லாம் அன்னையின் அருள் என்பது தெளிவு. இதையும் கண்ணால் கண்டபின் எதையும் நம்பமுடியும் என்பது எனது இன்றைய மனநிலை.

நண்பர் - சற்று யோசனை செய்தால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைக் காணாத அன்பருண்டா? உங்கள் வாழ்வில் இதுவரை இதுபோன்ற விஷயங்கள் நிகழவில்லை? நாம் கவனிப்பதில்லை, யோசனை செய்வதில்லை, விபரமாகப் புரிந்துகொள்வதில்லை.

அன்பர் - அன்று நாம் பேசும்பொழுது பிரச்சினை தீர்ந்தால் போதும் என்றேன். இன்று நீங்கள் மேலும் கூறியவற்றையும் அறிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் விரும்புகிறேன்.

நண்பர் - வாழ்க்கை நம் திறமைக்கு ஆரம்பத்தில் பலன் தருகிறது. நாம் வளர்ந்தபின் திறமைக்குப் பலன் வருவது குறைகிறது, பிறகு எதிரான பலன் வருகிறது.

அன்பர் - ஆமாம், அது ஏன்?

நண்பர் - மாணவன் படித்தால் போற்றுவார்கள். பட்டம் பெற்றபின் வேலைக்குப் போகாமல் படித்துக் கொண்டிருந்தால் திட்டுவார்கள். நாளானபின் மனிதன் வளரவேண்டும். வளர மறுத்தால் ஆரம்பத்தில் எதற்காகப் பாராட்டினார்களோ, அதற்கு இப்பொழுது திட்டு வரும்.

அன்பர் - அது புரிகிறது. எனக்கு எப்படி இந்தச் சட்டம் இப்பொழுது பொருந்தும்?

நண்பர் - ஆபீசில் ஆரம்பத்தில் உங்கள் திறமைக்குப் பாராட்டு வந்தது. பிறகு அதிக வாய்ப்பு வந்தும், அதற்குரிய அளவு மனம் வளரவில்லை. அதனால் குறை கண்டார்கள்.

அன்பர் - இப்பொழுது என் நிலை என்ன?

நண்பர் - ஆபீசில் நிலை மாறியதைக் கண்டபின், அதற்குரியதுபோல் மனம் மாறவேண்டும், மாறினால் பதவி உயரும்.

அன்பர் - எங்கள் ஆபீஸ் சட்டப்படி எனக்குப் பதவி உயர்வு வர இன்னும் 5½ ஆண்டுகள் சர்வீஸ் தேவை.

நண்பர் - அன்பருக்கு ஆபீஸ் சட்டம் செல்லாது. அன்னை சட்டம் பலிக்கும்.

அன்பர் - இன்று என் (முதலாளி) ஆபீஸரே என்னைப் பாராட்டிப் பரிசு கொடுத்தபின் நான் செய்யக்கூடியது என்ன?

நண்பர் - அடுத்த பதவிக்குரிய திறமையைப் பெற்றால், அது கிடைக்கும்.

அன்பர் - எனக்கு அந்தத் திறமையிருப்பதாக அனைவரும் சொல்கிறார்கள்.

நண்பர் - அப்படியானால், அந்த அந்தஸ்திற்குரிய மனப்பக்குவம் தேவை.

அன்பர் - புரியவில்லை.

நண்பர் - அதைச் செய்யும் வழிகள் பல. எளியது அடக்கம். உங்களுக்குக் கீழேயிருப்பவர்களை மேலேயிருப்பவர் போல் மனதால் நடத்த மனம் சம்மதித்தால் பிரமோஷன் வரும்.

அன்பர் - சட்டம் இடம் கொடுக்காதே.

நண்பர் - சட்டம் எப்பொழுதும் குறுக்கே நின்றதில்லை.

       அன்பர் நண்பர் கூறியதை ஏற்றார். மனம் மாற முயன்றார். எதிரான பலன் வந்தது. தன் குறைகளை அறிந்து விலக்கினார், நிலைமை மாறியது. முதலாளி என அனைவரும் அழைக்கும் அதிகாரி மூன்று மாத லீவில் போனார். இதுவரை ஆபீசில் இல்லாத வழக்கப்படி அன்பருக்கு தற்காலிகமாக (incharge) அப்பதவியை லீவு முடியும்வரை வகிக்கச் சொன்னார்கள். லீவு முடிந்தபின் பழைய வேலைக்கு அன்பர் வந்தார். அவர் மனம் நாளுக்கு நாள் அடங்கியது. மேலும் சில மாதங்கள் கழித்து புது ஆபீஸ் திறந்தனர். அன்பருக்கு தற்காலிக பிரமோஷன் வந்தது! புது ஆபீசிற்கு இவரை ஆபீசராக நியமித்தனர். அன்பர் வாழ்வு மெருகு பெற்றது. மற்றொரு முறை நண்பரைத் தேடி வரும்பொழுது அவர் பேசிய பிரச்சினை குடும்பத்தைப் பற்றியது.

அன்பர் - சில மாதங்களாக நான் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் நூல்களைப் பயில்கிறேன். மனம் தெளிவு அதிகமாகிறது. தூக்கம் தியானம் போலிருக்கிறது. பொதுவாக நான் 5½ மணிக்கு எழுந்திருப்பேன். அப்பொழுதும் சற்று களைப்பாக இருக்கும். ஒரு ½ மணி கழித்துத்தான் தெளிவு வரும். இப்பொழுதெல்லாம் 5 மணிக்கே எழுந்துவிடுகிறேன். விழிப்பு வரும்பொழுதே உடலும் மனமும் தெம்பாகத் தெளிவாக இருக்கின்றன. பொதுவாக பிரமோஷன் வந்த புதிதில் வேலை பிடிபடுவது சிரமம். வேலை பிடிபடும்வரை ஆபீஸ் பிடிபடாது. அந்தச் சிரமம் எனக்கில்லை. அனுபவப்பட்ட ஆபீசர் போல வேலை நடக்கிறது. சீனியர் ஆபீசரைப்போல என்னைக் கீழே வேலை செய்பவர்கள் கருதுகின்றனர். ஆனால் படிப்பு - ஸ்ரீ அரவிந்தர் நூல்களைப் படிப்பது - பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை என்பது விந்தையாக இருக்கின்றது.

நண்பர் - புறத்திலுள்ள பிரச்சினைகள் நூல்கள் பயில்வதால் மறையும். அகத்திற்குரியவை மனம் மாறும்வரை இடம் கொடுக்கா.

அன்பர் - அப்படி எதுவும் பெரியதான பிரச்சினையில்லை.

       அத்துடன் அன்பர் போனவர் கொஞ்சநாள்வரை மீண்டும் வரவில்லை. நண்பருக்கு விஷயம் விவரமாகத் தெரியாவிட்டாலும், இப்பொழுது அன்பருக்கு மனைவி, மக்களிடம் பிரச்சினை என்று தெரிகிறது. ஆபீஸ் விஷயத்தில் மனம் மாறுவதுபோல் வீட்டு விஷயத்தில் மனம் எளிதில் மாறாது. அன்பருக்கு அங்குப் புரிந்ததைப்போல் இங்கு முதலில் புரியாது. அதனால் அப்பேச்சு எழவில்லை. இந்த அன்பர் போன மறுநாள் வேறு ஓர் அன்பர் கொண்டுவந்த பிரச்சினை ஒருவாறு நண்பருக்கு முதல் அன்பர் வீட்டு நிலையை விளக்கியது. இந்த அன்பர் மகன் கெட்டிக்காரப் பையன். படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. விசாரித்தபொழுது இவர் சிறுவனாக இருந்தபொழுது படிப்பில் கவனம் செலுத்தவில்லை எனத் தெரிந்தது. பழைய நாட்களைச் சமர்ப்பணம் செய்தால் மகன் மாறுவான் என்பதை அன்பர் ஏற்றுக்கொண்டார். இவருக்கும் சமீபத்தில் எதிர்பாராத பிரமோஷன். அது வந்த அன்று வீட்டில் மனைவியுடன் ஆரம்பித்த சண்டை வளர்ந்து முற்றிவருகிறது.

நண்பர் - பிரமோஷன் வந்தபிறகு மனம் ஆபீசில் அடங்கியதால், மனம் வீட்டில் அதைச் சரிக்கட்டும். மனைவியை அதிகமாக அதிகாரம் செய்யத் தோன்றும், அது உண்மையா?

       அன்பர் சற்று நேரம் திகைத்து, யோசனை செய்து அதுவே சரி என ஏற்றுக்கொண்டு மனம் மாறி வீட்டிற்குப் போய் மனைவியுடன் திரும்ப வந்து கடந்த மாதங்களில் நடந்த அத்தனையும் விவரமாக - சந்தோஷமாக - கூறிச் சிரித்தனர். மகன் விஷயத்தில் தாயாரும் தான் படித்த நாட்களில் உள்ள அனுபவத்தைக் கூறி ஏற்றுக்கொண்டார். சில நாட்களில் வீட்டு நிலைமை நல்லபடியாக முழுவதும் மாறிவிட்டது.

  • மனம் ஏற்படுத்தும் பிரச்சினைகளை மனம் மாறாமல் தீர்க்கமுடியாது.
  • நூல்கள் பயின்றால் எல்லா நன்மைகளும் எழும். மனம் உற்பத்தி செய்த பிரச்சினை அசையாது.

       சுமார் 1½ வருஷம் முதல் அன்பர் வரவில்லை. வேறு எங்காவது நண்பரைச் சந்தித்தாலும் தன் ஆபீசில் உள்ள புது நிலைகள் எப்படி அன்னையின் அருள் செயல்படுவதைக் காட்டுகிறது என்று ஆர்வமாகப் பேசுவார். 1½ ஆண்டிற்குப்பின் நண்பரை அன்பர் சந்திக்க ஆரம்பித்தார். அன்னை நூல்களைப் பற்றிப் பேசுவார். கலகலப்பாக இருக்க முயன்றாலும் அன்பர் மனத்திலுள்ள பிரச்சினையை அவர் மறைப்பது நண்பர் அறிந்தது. ஏதோ மனப் போராட்டத்திலிருக்கிறார் என்பதை நண்பர் அறிவார். எவரும் அன்பரைப் பார்த்து அவர் மனம் கவலைப்படுகிறது என்று எளிதில் புரிந்துகொள்ள முடியாது. முடிவாக ஒரு நாள் அன்பர் மனம் திறந்து பேசினார். எல்லாப் பிரச்சினைகளையும் கூறினார். அவை,

  1. மனைவியுடன் எந்த வாக்குவாதமுமில்லை என்றாலும் பழைய சுமுகமில்லை. மனத்துள் இடைவெளி வந்துவிட்டது. மனம் அதனால் பாரமாயிற்று.
  2. மகன் தவறாது முதல் மார்க் வாங்குகிறான். முதல் மார்க் போட்ட ஆசிரியர் அதை அடித்துவிட்டு இரண்டாம் மார்க் போட்டார், இது இரண்டாம் முறையும் நடந்துவிட்டது.
  3. குடியிருக்கும் வீட்டில் நல்ல முறையில் பழகிய வீட்டுக்காரர், எதற்கெடுத்தாலும் குறை கூற ஆரம்பித்து இப்பொழுது வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார்.
  4. ஆபீஸில் மரியாதை, சந்தோஷம், வசதி, நல்ல செய்தி வளர்கிறது. வீடு எதிர்மாறாக இருப்பது புரியவில்லை.

       திறமையிருப்பது அரிது, நமக்குப் பொறுப்பு பல இடங்களில் உள்ளது. திறமை பலன் தர மற்ற இடங்களை நாம் புறக்கணிப்போம். அது நமக்குத் தெரிவதில்லை. புறக்கணிப்பதால் எழும் குறை, குறையாகத் தெரியுமே தவிர காரணம் புரியாது. இந்த அன்பருக்கு எதிர்பாராது வந்த பிரமோஷன், நல்ல பெயர், எல்லாம் இவர் கவனத்தை முழுவதும் ஆபீசுக்குக் கொண்டுபோய்விட்டது. வீடு, மனைவி, மகன், புறக்கணிக்கப்பட்டார்கள். அது மனைவியிடம் மனத்தால் இடைவெளியாகவும், மகனிடம் படிப்பில் பிரச்சினையாகவும் தெரிகிறது. இது வாழ்க்கைச் சட்டம். அன்பர் மனம் நினைப்பது வேறு,

ஆபீஸில் உயர்வு வரும்பொழுது மனைவி, மக்கள் உயர வேண்டுமல்லவா? அவர்களுக்கு நல்லெண்ணமிருந்தால் பாராட்ட வேண்டாமா? அவர்கட்குக் குறையிருந்தால், என்மீது நல்ல எண்ணமில்லை எனப் பொருள். அப்படித் தெரியவில்லையே, என்ன என்று புரியவில்லை.

ஓரிடத்தில் உயர்வு வந்தால், அடுத்த இடம் குறையும் என்பது சட்டமானால், அதில் என்ன பலன், எந்த இடத்தில் உயர்வு வேண்டும் என்பதை நாம் முடிவு செய்துகொள்ள வேண்டுமா? மேலும் நாம் பிறர் விஷயத்திலும், நம் அனுபவத்திலும் கீழ்க்கண்ட நிகழ்ச்சியைப் பார்க்கிறோம், அதை எப்படிப் புரிந்துகொள்வது?

ஒரு நல்லது நடந்தால், பல நல்லவை தொடர்ந்து நடப்பதை நாம் காண்கிறோம்.

சட்டங்கள் பல, அவற்றைக் கீழ்க்கண்டவாறு எழுதலாம்.

  • அருள் செயல்படுவதை நாம் இருப்பதைப்போல் - மனம் மலர்ந்து நன்றியால் விரியாமல் - பெற்றுக்கொண்டால், ஓரிடத்து உயர்வு, அடுத்த இடத்தில் குறைவாகும்.
  • அருள் அதிர்ஷ்டமாக வந்தால், மனம் ஜீவனில் மலர்ந்து நன்றியால் விரிந்தால் ஒரு நல்லது அடுத்த அடுத்த நல்லவைகளைக் கொண்டுவரும்.
  • நல்லது நடந்தவுடன் அடுத்தவர்க்கும் அது வரவேண்டும் என நினைத்தால் அது இருவகையானப் பலன் தரும்.

               உயர்வாக நினைத்தால் வருவது பெருகும்.

            அகங்காரமாக, பெருமையாக நினைத்தால் வந்ததும்   போகும்.

  • வருவதைப் பாராமுகமாகப் பெற்றால் அல்லது ஒன்று நல்லதாக நடக்கும்பொழுது உள்ள கடமைகளை விட்டுவிட சோம்பேறியாக நினைத்தால் வருவது ஓரிருமுறை வந்து அத்துடன் நிற்கும்.

பெறுவதும், வருவதும், பெற்றது நீடிப்பதும், குறைவதும், பெறும் மனப்பான்மையை மட்டும் பொருத்தது. அன்பர் சற்றுக் கூச்சப்பட்டவர். அவர் சொந்த விஷயங்களைப் பற்றிப் பேசியது அதிகம். அவருக்குப் பொதுவான பதில் கூறுவது முறை. பொதுவான பதில் மனத்தைத் தொடாது. பிரச்சினையைத் தீர்க்காது. அன்பர் மனம் தயாராக இல்லாத இடத்தில் நண்பர் செயல்பட்டுப் பிரச்சினையைத் தீர்க்க முயல்வது அகந்தையின் செயல் எனப்படும். இப்படிப்பட்ட நேரங்களில் Silent will மௌனம் பலன் தரும். எனவே நண்பர் இரு முடிவுகட்கு வந்தார்.

  1. அன்பருக்குத் தேவையான பதிலைப் பொதுவாகக் கூறி அதை அன்னை எழுதியுள்ள இடங்களில் அன்னை வாயால் கேட்கச் சொல்வது,
  2. குறிப்பாக அவர் செய்யவேண்டியவற்றை தம் மனதில் தயார்செய்து பேசாமலிருப்பது (Silent will).

       அன்பர் பெற்றது அருள் என்றாலும், ஒருவகையில் பேரருளாகும். 5½ ஆண்டில் வரவேண்டிய பிரமோஷன் முன்கூட்டி வந்ததும், அங்குள்ள வழக்கமான பிரச்சினைகள் இல்லாமலிருப்பதும் அன்னையின் முத்திரை, பேரருள் எனலாம். பேரருளை நன்றியால் ஏற்பது முறை. அன்பர் திருப்தியாக ஏற்றுக்கொண்டார்.

  • யோக பாஷையில் அன்பர் செய்யவேண்டியது திருப்தியை நன்றியாக மனத்தில் மாற்றுவது.
  • நான் அன்றாடம் பேசும் மொழியில் அதை வேறு வகையாகக் கூறலாம். "எனக்குப் பலித்து விட்டது" என்று ஏற்பதற்குப் பதிலாக "அன்னை பலிக்கும் அளவுக்கு எனக்கு நம்பிக்கையிருக்கிறது'' என்று மாற்றி நினைக்கலாம். அதைவிட "என் நிலையைப் புறக்கணித்து அருள் செயல்பட்டிருக்கிறது" என்று புரிந்து கொள்ளலாம்.
  • வீட்டில் தமக்கு வந்த உயர்வை மனைவியும், மகனும் பாராட்டவேண்டும் என்பதற்குப் பதிலாக, "எனக்கு வந்த பிரமோஷன் என் மனைவிக்கும், மகனுக்கும் வரவேண்டும்'' எனக் கருதலாம், "நான் பெறும் சந்தோஷம் என் மனைவி பெறவேண்டும்" எனலாம், "இந்த சந்தர்ப்பம் - பிரமோஷன் - என் மகனுக்கு எந்தப் பலனை, எப்படிக் கொடுக்க முடியும்?'' என்ற எண்ணங்கள் சுயநலம் பரநலமாக மனதில் மாறுவது.

       நண்பர் அன்பர் கூறியதைக் கேட்டுக்கொண்டு, அதற்குரிய பொதுப் பதிலைக்கூறியபொழுது, நண்பரின் மனைவியும் அன்பரின் மனைவியும் சேர்ந்து உள்ளே வந்து அன்பருடன் பேசுவதற்காகக் காத்துக்கொண்டிருந்தனர். அதை அறிந்த அன்பர் எழுந்து அவர்களைப் பார்க்கப் போனார். "நம் பையன் விஷயம் எப்படியோ பிரின்சிபாலிடம் சென்று அவர் ஆசிரியரைக் கூப்பிட்டு மார்க்கைப் மாற்றி இவனுக்கு முதல் மார்க் போட உத்திரவிட்டார்'' என்று அன்பரின் மனைவி கூறியதுடன் இத்தனையும் நடந்த வகையையும் எடுத்துக் கூறினார். சில பெண்கள் சேர்ந்து பிரச்சினைகளைப் பேசியபொழுது அவர்கள் படித்துக்கொண்டிருந்த புத்தகம் "பிரச்சினையை நாம் மட்டும் பொறுப்பு என்று பார்த்தால் தீரும்'' என்று கூறியதை ஆழ்ந்து விவாதித்ததைக் கூறினார். அன்பரின் மனைவி புத்தகம் கூறிய சொல்லை வேதவாக்காக - அன்னை வாக்காக - எடுத்துக்கொண்டு அடுத்து வரும் தியானத்தில் கலந்துகொண்டதை அவர் கூறாவிட்டாலும், அன்பர் புரிந்துகொண்டு நண்பரிடம் வந்து "நான் எப்படி என் பிரச்சினைகளைக் கூறத் தயங்கினேனோ, அதுபோல் என் மனைவி தாம் என்ன செய்தார் என்பதைக் கூறத் தயங்குகிறார்'' என்று விவரித்தார்.

  • பிரச்சினை தீர்வது பிரச்சினையில்லை.
  • நமக்கு அதில் என்ன பங்கு என்பதே பிரச்சினை.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

முக்கியம் என்பது மனிதனுக்கு மட்டும் உண்டு. பொருளிலும் இல்லை. செயலும் இல்லை.

மனிதனே முக்கியம், மற்ற எதுவுமில்லை.


 


 


 


 


 

Comments

06.அன்பரும் -

06.அன்பரும் - நண்பரும்
 
Para  1   -  Make a paragraph for the line starting with "நம்மைக் குறைகூறும்
Para  1   -  Move the words என்பதை அன்னை,  to a new line after the above paragraph
Para  1   -  Make a paragraph for the line starting with  "நாம் செய்தவையெல்லாம்
Para  1   -  Move   the word   என்கிறார்.  , to a new line after the above paragraph
Para 12  -  Line 9   -    இர்ள்ள்        -    Boss
Para 16  -  Line 3   -   அனுபவத்தில்லை   -   அனுபவத்திலில்லை
Para 27  -  Line 1   -   Please highlight the  line   அன்பருக்கு ஆபீஸ் சட்டம் செல்லாது. அன்னை சட்டம் பலிக்கும்.
Para 33  -  Line 2   - உங்களுக்குக்கீழேயிருப்பவர்களை  -   உங்களுக்குக் கீழேயிருப்பவர்களை
Para 37  -  Line 2   - போலி ருக்கிறது                                -   போலிருக்கிறது
Para 38  -  Line 1   -  Please high light the line    புறத்திலுள்ள பிரச்சினைகள் நூல்கள் பயில்வதால் மறையும். அகத்திற்குரியவை மனம் மாறும்வரை இடம் கொடுக்கா
Para 44  - Line 1   -   Please highlight the line     மனம் உற்பத்தி செய்த பிரச்சினை அசையாது
Para 45  - Line 1   -   1½வருஷம்   -   1½ வருஷம்
Para 45 -  Line 6   -   போராட்டத்திலி ருக்கிôர்   -   போராட்டத்திலிருக்கிறார்
Para 61  - Line 3   -   இல்லாமலி ருப்பதும்      -      இல்லாமலிருப்பதும்
Para 63  - Line 2   -   பலி க்கும்                          -     பலிக்கும்
 
 
motnir



book | by Dr. Radut