Skip to Content

08.ஞாபகம்

ஞாபகம்

தம்பி கல்லூரியில் சேர வேண்டும். தான் பட்டம் பெற்று, 5, 6 வருஷங்களாயின. கல்லூரியில் எவரையும் படிக்கும்பொழுதே நெருக்கமாகத் தெரியாது. சிபார்சில்லாமல் இடம் கிடைக்காது. எப்படியிருந்தாலும் தம்பியுடன் பல்கலைக்கழகம் போய் யாரையாவது கேட்கலாம் என்ற எண்ணத்துடன் சுந்தரராமன் தம்பியுடன் பல்கலைக்கழகம் வந்து அன்று தான் படிக்கும்பொழுது வார்டனாக இருந்தவர் செல்வாக்குள்ள பேராசிரியர் எனக் கேள்விப்பட்டு, அவரிடம் போய் தான் பழைய மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்ற நினைவுடன் தயங்கித் தயங்கிப் போனான். அவரறையில் கூட்டம். கூட்டத்திற்குள் நுழைந்தான். இவனைக் கண்டு பேராசிரியர், “என்னப்பா சுந்தரராமா, தம்பி அட்மிஷனுக்கு ந்திருக்கிறாயா?” என்று கேட்டது இவனுக்கு அதிர்ச்சி. இவன் தயக்கத்தைக் கண்டவர், “நீ அந்த East Block 108ஆம் ரூமில் தானே இருந்தாய்” என்று கேட்டார். இவனுக்கே ரூம் நம்பர் நினைவில்லை. நினைவுபடுத்திப் பார்த்து சரி எனக் கண்டார். இப்பேராசிரியர் photographic memory புகைப்படம் போன்று நினைவுள்ளவர் எனக் கேள்விப்பட்டிருக்கிறான். இப்பொழுதுதான் அதை சொந்த அனுபவத்தில் காண்கிறான். Memory is the man. ஞாபக சக்தியுள்ளவன் அறிவுள்ளவன் என உலகம் கருதும்.

The Life Divineஇல் ஞாபகம் என்ற தலைப்பில் இரு அத்தியாயங்கள் உள்ளன. அங்கு மனம் செயல்படும் வகையை விளக்குகிறார். கோபத்தை உதாரணமாகத் தருகிறார். கோபம் வரும் பொழுது நாம் நிதானித்து யோசனை செய்தால் நாம் கோபத்திலிருந்து பிரிகிறோம். பிரிவது மேலும் தொடர்ந்தால் அகந்தையும், அதன்பின் புருஷனும், முடிவாக சைத்தியப் புருஷனும் தெரிவான் என்கிறார். நாம் செய்வனவெல்லாம் நமக்கு - செய்யும் உறுப்புகட்கு - நினைவிருக்காது, நினைவுள்ள இடம் சைத்தியப் புருஷன். அவனைக் காணும் முறை மேற்சொன்னது. அதை 4 பாகங்களாகப் பிரிக்கின்றார்.

 1. கோபம் என்பதை நிகழ்ச்சி எனவும்,
 2. மனம் நிதானமாக சிந்திப்பதை, மனத்தின் செயல் எனவும்,
 3. அகந்தை தெரிவதை அகம் எனவும்,
 4. புருஷன் தெரிவதை அகத்தின் உண்மை எனவும் கூறுகிறார்.

நிஷ்டையால் புருஷனும், சமர்ப்பணத்தால் சைத்திய புருஷனும் தெரிவார்கள் என்கிறார்.

- மனித நினைவுக்கு உறைவிடம் மனம் இல்லை, சைத்தியப்  புருஷன்.

- சைத்தியப் புருஷனுக்கு பூர்வ ஜென்ம ஞானம் உண்டு.

சிலருக்கு ஞாபக சக்தி அதிகம். பலருக்குக் குறைவு. ஞாபக சக்தியில்லாதவர்கட்கும் சில விஷயங்களில் ஞாபகம் உண்டு. நல்ல ஞாபகம் உள்ளவர்க்கும் முக்கியமான விஷயங்கள் மறந்து போகின்றன. வற்றுக்குச் சட்டம் உண்டு, பல சட்டங்களும் உண்டு, உதாரணங்களும் உண்டு.

1. ஞாபக சக்தி உள்ளவர்க்கும், இல்லாதவர்க்கும் முக்கியமான விஷயங்கள் நினைவிருக்கும். முக்கியம் எனில் அவை முக்கியமான விஷயங்களில்லை. அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக முக்கியம் எனக் கருதிவிட்டால், அது நினைவில் நிற்கும். 1958இல் பழைய மாணவன் 1948இல் தான் படித்த பேராசிரியரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான். அவருக்கு மாணவனை நினைவில்லை. கல்லூரியில் அனைவரும் அறியும்படியான மாணவன். அவருக்கு நினைவில்லை. அவன் வேலை செய்யும் இடத்தைப் பற்றி விசாரித்தார். அங்கு தமக்குத் தெரிந்த மாணவர்களிருக்கிறார்களா எனக் கேட்டார். இருக்கிறார்கள், உங்களுக்கு நினைவிருக்காது. வீரராகவன் என்ற மாணவன் என்னுடன் வேலை செய்கிறான் என்றான். எனக்குத் தெரியுமே. குடுமி வைத்திருப்பானே, நாமம் போட்டிருப்பானே என்றார். வீரராகவன் 1948இல் இவர் வகுப்பில் படித்தானே தவிர இவரிடம் ஒரு முறையும் பேசியதில்லை. எப்படி இவருக்கு நினைவிருக்கிறது என்று மாணவன் ஆச்சரியப்பட்டான். பேராசிரியர் குடுமி வைத்துள்ளவர். 1948இல் வகுப்பில் 500 பேரில் குடுமியுள்ளவர் 3 பேர்தான். நாமம் போட்டுக் கொண்டு கல்லூரிக்கு வர வெட்கப்படும் நாட்கள். குடுமியும், நாமமும் ஆசிரியருக்கு வீரராகவனை நினைவிலிருத்தியது.

2. தொழிலில் சேர்ந்த முதல் ஆண்டு நிகழ்ச்சிகள் எவருக்கும் நினைவிருக்கும். அவை சிறிய  விஷயமானாலும், சேர்ந்த புதிது என்பதால் நினைவிருக்கும். அதற்கு நினைவு என்று பெயரில்லை. தனக்கு முக்கியம் எனப் பெயர்.

3. உடல் ஆரோக்கியம், வியாதி சம்பந்தமான விவரங்கள் நாம் மறந்தாலும், அவை நம்மை மறப்பதில்லை. 1944இல் யானைக்கால் வியாதிக்கு மருந்தில்லை. உள்ள மருந்து இனி வியாதி பரவாமல் தடுக்கும். வீக்கத்தைக் குறைக்காது என்பது நிலை. 1950க்கு மேல் இதற்கு மருந்து வந்துவிட்டது.

கல்லூரி மாணவனுக்கு கால் வீங்கியது. அவன் தன் ஊருக்குப் போய் டாக்டரிடம் காண்பித்தான். அவர், “இதற்குள்ள மருந்து பலன் தாராது. கல்கத்தாவில் ஒரு ஆயுர்வேத மருந்து இன்ஜெக்ஷனாக விற்கிறது. Rosby எனப் பெயர். அதை வாங்கி வா பயன்படும்” என்றார். மருந்தில் முதல் இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டு மீதியைக் கல்லூரி டாக்டரிடம் போட்டுக் கொள்வதாகப் போனான். கல்லூரி டாக்டர் சிரித்தார். இருந்தாலும் கொடுத்த மருந்தைப் போட்டார். மருந்து முடிந்தபின் கால் குணமானது, டாக்டருக்கு ஆச்சரியம். மருந்தின் விலாசம் கேட்டு வாங்கிக் கொண்டார். நான்கு வருஷத்திற்குப் பின் இவனுடைய நண்பனுக்குக் கால் வீங்கியது. நண்பன் அதே விலாசத்தைக் கேட்டான். சொந்த ஊருக்கு எழுதி டாக்டரிடமிருந்து விலாசம் பெறுவது வழி. “வருஷம் நான்காகிவிட்டது. கல்கத்தா விலாசம் நினைவில்லை. P.O.Box நம்பர் நினைவுள்ளதுபோல் தோன்றுகிறது. எழுதிப் பார்ப்போம்” என அவன் நம்பரைப் பேப்பரில் எழுதினான். அதே விலாசத்திற்கு மருந்து ஆர்டர் செய்தார்கள். மருந்து வந்துவிட்டது. உடல் சம்பந்தப்பட்டது என்பதால் நாம் நம்பரை மறந்தாலும் (கை-உடல்) கைக்கு நம்பர் நினைவிருக்கிறது.

4. நமக்கு முக்கியமான நாட்களில் நடந்த சிறிய விஷயங்களும் நினைவிருக்கும். திருமண நாள், பெண் பார்க்கப் போனது, முதல் நாள் வேலையில் சேர்ந்தது, பெரிய மனிதரைப் பார்க்கப் போனது போன்ற நேரங்களுடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நினைவிருக்கும். அது நினைவு இல்லை.

5. கல்லூரியை விட்டுப் போன 3 ஆண்டுகட்குப் பின் ஒருவர் தாம் சேர்ந்த கம்பனியில் ஒரு பரீட்சை எழுத வந்தது. அதற்கு கல்லூரி சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும். அரசியல் போராட்டத்தில் சுதந்திரத்திற்காகத் தியாகம் செய்தவர் என்பதால் இவர் சர்ட்டிபிகேட் வாங்கவில்லை. கம்பனியில் முதல் ஆண்டு பரீட்சை university exam எழுதிய சர்ட்டிபிகேட் கேட்கிறார்கள், இதற்கு யூனிவர்சிட்டி பரீட்சை ரிஜிஸ்டர் நெம்பர் கேட்கிறது. இவரிடம் இல்லை. தம் நண்பனுக்கு எழுதி ஒரு வேளை என் நம்பர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனக் கேட்டார். நண்பருக்குத் தம் நெம்பரும், அவர் நம்பரும் கண்முன் தோன்றின. “1601 உங்கள் நெம்பர்” எனப் பதில் எழுதினார்.

6. பல்கலைக்கழகப் பேராசிரியரை பழைய மாணவன் வீட்டில் போய்ச் சந்தித்தபொழுது அச்சமயம் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பழைய நண்பன் மாணவனைக் காண வந்தான். “நான் 4 ஆண்டுகளாக I classஇல் பாஸ் செய்தது உங்களுக்குத் தெரியும், இந்த ஆண்டு டைபாயிட் வந்ததால் பரீட்சை சரியாக எழுத முடியவில்லை. அநேகமாய் பாஸாகாது. இந்தப் பேராசிரியரை எனக்குப் பாஸ் போடச் சொல்” என்று கேட்டான். “நான் அது போன்ற காரியத்தில் தலையிட மாட்டேன்” எனப் பதில் சொல்லிவிட்டு உள்ளே போனவுடன் பேராசிரியர் விஷயமறிந்து வெளியே வந்து போன மாணவனைக் கூப்பிட்டு உன் நெம்பர் என்ன எனக் கேட்டு சுவரில் 1428 என எழுதினார். “இம்மாணவன் முதல் மாணவன். இவன் பெயிலாகக் கூடாது” என்று அவனுக்குப் பாஸ் போட்டார். 1950இல் நடந்தது. 1990இல் நம்பர் பேசும்பொழுது நினைவிருக்கிறது எனில் சம்பந்தப்பட்ட விஷயம் முக்கியம்.

7. தமிழ் எழுத்தாளர் ஒருவர் காமராஜ் முதன் மந்திரியாக இருக்கும்பொழுது பார்க்கப் போனார். எழுத்தாளர் கடலூர் என அறிந்தவுடன், காமராஜர் “கடலூரில் புருஷோத்தமன் என்று ஒருவர் என்னுடன் 1942இல் ஜெயிலிலிருந்தார். உங்களுக்குத் தெரியுமா?” என்றார். அவர் எழுத்தாளருடைய மாமன். 1942இல் ஜெயிலில் கண்டவர் 1963இல் நினைவில் காமராஜருக்கிருந்தது. காமராஜ் உள்ளூர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிவிட்டுச் சாப்பிட காங்கிரஸ் தலைவர் வீட்டிற்கு வந்தார். அதே வீட்டுக்கு அவர் 15 வருஷம் முன் வந்துள்ளார். தலைவரை நோக்கி, “உன் மகன் சுபாஷைக் கூப்பிடு” என்றார். 15 வயதுப் பையன் வந்து எதிரில் நின்றான், “ஏண்டா நீதானே என் இலையிருந்த முட்டையை தவழ்ந்து வந்து எடுத்தது” என்று கேட்டார்.

8. பழைய நண்பர்கள் ரோட்டில் சந்தித்தனர். 1939இல் ஒன்றாகப் பள்ளியில் படித்தது, 1956இல் ரோட்டில் சந்திக்கின்றார்கள். ஒருவர் கிராமத்துப் பள்ளியில் படித்துவிட்டு ஆங்கிலமே தெரியாமல் நகரத்துப் பள்ளியில் சேர்ந்தவர். நகரத்துப் பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலத்தில் தெளிவாக இருப்பதால் இவருக்கு இங்கு பாஸ் செய்ய முடியுமா என பதைபதைப்பு. கால் ஆண்டுப் பரீட்சையில் 64 மார்க் வாங்கியது பெரிய அதிர்ஷ்டம். அதே பரீட்சையில் இன்று ரோட்டில் சந்தித்தவர் 82 மார்க்கு வாங்கியது அவருக்கு நினைவு வந்தது. தம் நிலை பிறரை நினைவு கூறுகிறது.

9. 1968இல் மதர் சர்வீஸ் சொஸைட்டி பதிவு செய்யப்பட்டது. அதன் Articles and Memorandum Registrarக்குப் போகும் முன் அன்னையின் ஆசீர்வாதத்திற்குப் போக வேண்டும். அது ஆகஸ்ட் மாதம். அன்னைக்கு உடல் நலம் சரியில்லை. எவரையும் பார்க்காத நேரம். அதனால் ரிஜிஸ்ட்ரேஷனை ஒத்திப் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது சம்பக்லால் “என்னிடம் பேப்பரைக் கொடுங்கள். நான் முடிந்தால் blessingsவாங்கித் தருகிறேன். Blessings என அன்னை எழுதுவார். நேரம் சரியில்லாததால் எழுத அதிக இடம் கொடுத்து டைப் செய்யுங்கள்” என்றார். அரைப் பக்கம் இடம் வைத்து டைப் செய்து அனுப்பினோம். அன்னை பெரிய எழுத்தில் blessings என எழுதினார். 1975இல் ஆஸ்ரமம் டிரஸ்டி அதைப் பார்த்தார். இது அன்னைக்கு உடல் நலமில்லாத நேரமாயிற்றே. நானே பார்க்காத நேரமாயிற்றே, எப்படி blessings பெற்றீர்கள் என்றார். வருஷத்தில் அன்னை 8, 10 முறை யாரையும் பார்ப்பதில்லை. ஒரு வாரம், ஒரு மாதம், சில நாள் என இடைவெளியுண்டு. டிரஸ்டிக்கு அன்னை விஷயம் என்பதால் தேதி முதற் கொண்டு நினைவிருந்தது.

10. Pride and Prejudice கதையில் பிங்லி எலிசபெத்தை லாம்டனில் சந்தித்துப் பேசும்பொழுது “நாம் கடைசியாக நவம்பர் 26இல் 8 மாதம் முன் டான்ஸ் ஆடினோம்” என்றான். ஜேனுடன் டான்ஸ் ஆடிய நாள் பிங்லிக்கு 8 மாதமில்லை, 8 வருஷமானாலும் மறக்காது.

11. கடின உழைப்புள்ள நேரம் உடன் தெம்பு அழிந்தபின் சூட்சும உடல் விழித்துக் கொள்ளும். அப்பொழுது சூட்சும நினைவு எழும். பரீட்சைக்குப் படிப்பவர்கட்கு இந்த அனுபவம் உண்டு.

 • ஒருவருக்குப் பரீட்சை ஹால் புத்தகம் எதிரில் வந்து பக்கங்கள் புரண்டு எழுத வேண்டிய பதில் தெரிந்தது.
 • மற்றொருவருக்கு நாளை வரப்போகும் 10 கேள்விகளும் - IAS பரீட்சையில் - கண்முன் தோன்றின.

12. அன்னைக்குத் தேவையானவை அனைவருக்கும் பளிச்சென நினைவு வரும். 1973 நவம்பர் 18ஆந்தேதி காலையில் அன்னையின் உடலை தியான மண்டபத்தில் கட்டிலில் வைக்க வேண்டும். அடியில் போட கம்பளம் வேண்டும். மாடியிலிருந்து கீழே வந்த டிரஸ்டிக்கு திடீரென பல ஆண்டுகட்கு முன் வந்த கம்பளம் நினைவு வந்தது. அப்பொழுது வைத்த இடம் நினைவுக்கு வந்தது. உடனே போய் எடுத்து வந்தார். கட்டிலுக்கடியில் போட்டனர்.

அக்கம்பளம் ஓர் அங்குலம் குறையாமலும், மிகையாகாமலும் அவ்விடத்தில் பரவியது.

 • நினைவுள்ளவருக்கும் மனக் கசப்பிருந்தால் சம்பந்தப் பட்டவர்கள், சம்பந்தப்பட்ட விஷயங்கள் நினைவு வாராது.

ஒருவர் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டார். ஆபீசுக்குப் போனார். அவருடன் 4 வருஷமாக வேலை செய்யும் நண்பர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அவரைப் பார்த்துப் பேச நினைத்தார். அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை. வெகுநேரம் முயன்றார். பலனில்லை. 10 நிமிஷமான பின் ரங்கநாதன் என நினைவு வந்தது. அவர் மனைவி பெயரில் ஆரம்பித்த பெயர் என்பதால் மனைவியுடன் போட்ட கசப்பான சண்டை நண்பர் பெயரை மறக்கச் செய்தது.

 • பெண்களுக்கு நெடுநாள் முன் விருந்தாளி வந்தபொழுது செய்த சமையல் நினைவிருக்கும்.
 • ஹோட்டல் சர்வர்கள் சிலருக்குப் பல நாள் முன் நாம் சாப்பிட்ட பண்டம் நினைவிருப்பதுண்டு. கொடுத்த பில்லும் நினைவு வரும்.
 • டாக்டர்களுக்கு பேஷண்ட் மறந்துவிடும், அவருக்கு வந்த வியாதி நினைவிருக்கும்.
 • வக்கீலுக்கு கட்சிக்காரன் நினைவிருக்காது, கேஸ் நினைவு வரும்.
 • இலாக்கா டைரக்டரானவரை அவருடன் ஒரே அறையிலிருந்தவர், இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டனர், பார்க்கப் போனார். கல்லூரி நண்பர் என மட்டும் நினைவு வந்தது. P.C. அலெக்ஸாண்டர் கவர்னரானபின், அவர் வேலை செய்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பார்க்கப் போனபொழுது அலெக்ஸாண்டரிருந்த நாட்களில் இருந்த முக்கியமானவர் எவரையும் அவருக்கு நினைவில்லை எனக் கண்டார். அந்த நாளில் பிரபல பேச்சாளராக இருந்த ஜுனியர் ஆசிரியரை மட்டும் நினைவு வைத்திருந்தார் அலெக்ஸாண்டர்.
 • பெரிய மனிதர்களும் அவர்கள் சிறிய வாழ்வில் மூழ்கிவிடுவார்கள். அப்படிப்பட்டவர்கட்கு அச்சிறிய வாழ்வுக்குப் புறம்பானவர் எவரையும், எந்த விஷயத்தையும் நினைவில் வைத்திருக்க முடியாது.
 • பெரிய மனிதன் கூறிய சிறிய விஷயமும் பெரியவர் கூறியதால் நினைவிருக்கும்.
 • சிறிய மனிதன் கூறிய பெரிய விஷயம் நினைவிருக்கும்; சொல்லியவர் நினைவிருக்காது.

ஞாபக சக்தியில்லை என்பவர்கள் ஓரளவு அதைப் பெறலாம். முயன்றால் பெரிய அளவு பெறலாம். திறமான ஞாபகசக்தி வேண்டுமென்றாலும் பெறலாம்.

1. கண்ணாடி எடுத்துவர மறந்துவிட்டேன், ஆபீஸ் சாவியை வீட்டிலே வைத்துவிட்டேன், ஊருக்குப் போனபின் டெலிபோன் நம்பரை எடுத்துப் போக மறந்துவிட்டேன் என்பவர்கள் செய்யக் கூடியது ஒன்றுண்டு. அது checklist.

எந்த வேலையானாலும், அதை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டியதை நினைவுபடுத்தி, பலரையும் கேட்டு ஒரு list தயார் செய்து, அந்த list இல்லாமல் வேலை செய்வதில்லை என்று முடிவு செய்தால், இது போன்ற எந்தத் தவறும் வாராது. இது நடைமுறைக்குரிய முறை a physical method.

2. பொதுவாக மறதியிருக்கிறது என்றால், அவருக்கும் சில விஷயங்கள் நினைவில் இருப்பதைக் காணலாம். அதனால் நினைவிருக்க வேண்டிய விஷயத்தை, நினைவுள்ள விஷயத்துடன் இணைத்துவிட்டால் மறக்காது. அதற்கு ஒரு முயற்சி வேண்டும். நிலத்துப் பட்டா நம்பர் பல சமயம் தேவைப்படுகிறது. மறந்துவிடுகிறது எனில் அந்த நம்பரை எதனுடன் இணைத்துப் பார்க்கலாம் என்று கண்டால், புரியும். உதாரணமாக 144, 26, 100, 365, 3366 என்ற நம்பர்கள் தடை உத்தரவு, ஆங்கில எழுத்தின் எண்ணிக்கை, முழு நம்பர், வருஷத்தின் நாட்கள், இரண்டு மூன்றும், இரண்டு ஆறும் அதன் இரட்டிப்பு என பல நம்பர்களை மற்றதுடன் இணைத்து நினைவுபடுத்த முடியும். ஒருவர் அட்ரெஸ் எல்லாம் நினைவிருக்கிறது, நம்பர் மட்டும் மறந்து போகிறது. எப்பொழுதோ கடிதம் எழுதுகிறோம் நினைவில்லை என்றால் அவர் வீட்டு நம்பர் நமக்குரிய நம்பர்களுடன் எதனோடாவது தொடர்பு உள்ளதா எனக் காண முடியும். நம் வீட்டு நம்பர் 14 ஆனால் அவர் வீட்டு நம்பர் 145 ஆனால் 14 மறக்காது, மூன்றாம் நம்பர் 1+4 என்று பார்த்தால் நினைவில் இருத்த முடியும். போன் நெம்பர்கள் 6 அல்லது 9 இலக்கம் இப்படிச் செய்ய முடியாது. நாம் மறக்க முடியாத போன் நம்பர்களுடன் ஒரு தொடர்பு கண்டு நினைவிலிருத்தலாம். பலருக்கு நம்பர் மறக்கும். மறக்க முடியாத நம்பர்களுடன், விஷயங்களுடன் இணைந்து வரும் நெம்பர்களை அப்படி நினைவுபடுத்தலாம்.

2. நாட்கள், கிழமைகள், தேதிகளை அதுபோல் நினைவில் பெரிய அளவுக்கு இருத்த முடியும்.

 • நாம் Aug. 15 தரிசனத்திற்கு முதலில் வந்தால் அது சுதந்திர தினம் என்பதால் நினைவில் இருத்தலாம்.
 • அதிகப் பழக்கமில்லாத பெரிய ஆபீசர் பிறந்த நாள் Oct. 3ஆம் தேதி. இது மறந்துவிடுவதால் சில பிரச்சினைகள் வருகின்றன என்றால், அதை, காந்தி பிறந்த மறுநாள் என்று கண்டு கொண்டால் மறக்காது.
 • ஒரே ஆபீசில் வேலை செய்தாலும் ஒருவர் பெயர் மறந்துவிடுவது அவரைப் பார்க்கும்தொறும் சங்கடமாகிறது என்றால் அவர் பெயர் சீனிவாசன் என்பதை நம் உறவில் உள்ள ஒரு சீனுவாசனுடன் இணைத்து இவருக்கு என் பெரியப்பாவின் கடைசி மகன் பெயர் என நினைவு வைத்துக் கொண்டால் மறக்காது.
 • Encyclopaediaவில் spelling aeயா அல்லது eaவா என்று அடிக்கடி சந்தேகம் வந்தால் அது alphabetical orderலிருக்கிறது என்றால் நினைவிருக்கும்.
 • முக்கியமாக நினைவிருக்க வேண்டிய பலவற்றை மற்ற முக்கியமான விஷயங்களுடன் தொடர்பு செய்தால் நினைவுக்குப் பலனிருக்கும்.

3. சிரசாசனத்திற்கும் ஞாபகத்திற்கும் நேரடியான தொடர்பில்லை என்றாலும், சிரசாசனம் செய்ய முனைந்தால் ஞாபகம் வளரும்.

100க்கு 100 ஞாபகம் வேண்டுமென்று பிரியப்பட்டால் மறதி எழும்தோறும் ஒருமுறை தவறாமல் அன்னையை நினைத்தால், ஞாபக சக்தி வளர வேண்டும் என்று கேட்காமலேயே tenacious memory வலுவான ஞாபக சக்தி வந்துவிடும்.

****

 

 

Comments

08.ஞாபகம் Para 1    -  Line

08.ஞாபகம்
 
Para 1    -  Line 13   -    memoryபுகைப்படம்             -      memory புகைப்படம்
 book | by Dr. Radut