Skip to Content

04.சிறு குறிப்புகள்

"சிறு குறிப்புகள்"

திவாலான’ பட முதலாளி

படம் எடுக்கும் தொழில் எதுவும் நிலையில்லை. படம் எடுப்பவர், விநியோகம் செய்பவர் எனப் பல நிலைகளில் பணம் படைத்தவர் வந்து கலந்து கொள்வதுண்டு.

நேற்றிருந்த கோடீஸ்வரன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து படஉலகு.

செட்டியார் பட வினியோகம் செய்பவர். படம் எடுக்கவும் ஆசையுண்டு. பட உலகம் படபடப்பைத் தருவது. செட்டியாருக்கு படஉலகம் ஆட்டம் கொடுத்துவிட்டது. மனம் திவால் என்ற கருத்தை பணமாகவும், சட்டமாகவும், சமூகமாகவும் கருத ஆரம்பித்தபொழுது ஒரு பெரிய சொத்து இவரிடம் விலைக்கு வந்தது. விலை கூறுபவர்கட்கு செட்டியார் நிலைமை தெரியாது. செட்டியாரிடம் பணம் இல்லை. பெரிய சொத்து பாதி விலைக்கு வருவதை விட மனமில்லை. இதன் மூலம் தம் நிலைமை தெளியாதா என்ற நினைப்பு ஒரு பக்கம்.

தம் நிலைமையைக் காட்டிக் கொள்ளாமல் சொத்தை விலை பேசி முடித்துவிட்டார். விற்பவர்கள் நெருக்கடியிலிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. எனவே சுத்தமாக பாதி விலையைக் கூசாமல் கேட்டார். பேரம் படிந்துவிட்டது. கிரயம் எழுத வேண்டும். ஒரு பெரிய செட்டியார் உறவினர், நண்பர். அவரைக் கலந்தார். தாமும், அவருமாகச் சொத்தை வாங்குவதாகத் திட்டம். சொத்தின் விலையில் சுமார் பாதிக்கு மேல் சொத்தின் மீதுள்ள பல்வேறு கடன்கள். அக்கடன் தொல்லையால் சொத்து விலைக்கு வருகிறது. செட்டியாருடைய திட்டம் வேறு. சொத்து பெரிய சொத்து. நிர்வாகம் சிரமமானது. விற்பவர் திறமைசாலி. எனவே செட்டியார் கிரயப் பத்திரத்தில் விற்பவர் ஓராண்டு சொத்துக்கு மேனேஜராக இருக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கும்படிக் கேட்டார். வேறு வழியில்லாமல் விற்பவர் ஒத்துக் கொண்டார். பெரிய செட்டியாரிடம் பாதிப் பணம் வாங்கி கடன்களை அடைத்துவிட்டால், மீதிப் பாதியைப் பெறுபவர் செட்டியாருக்கு மேனேஜராகிவிட்டதால் ஓராண்டுக்குப் பிறகு கொடுக்கலாம் என்பது செட்டியார் திட்டம். கிரயம் முடிந்துவிட்டது. சொத்து கைக்கு வந்துவிட்டது. விற்றவர் அன்னை அன்பர். அவருக்குக் கடன் பாரம் கழிந்தது பெரிய நிம்மதி.

படத்தொழில் நிலைமை மாறியது. திவால் கொடுக்கலாமா, வேண்டாமா என்ற சந்தேகம் நீங்கி, அவசியம் என்ற நிலை வந்ததால்,முடிவைச் செட்டியார் கூறிவிட்டார். படத்தொழிலில் ஏற்றம், இறக்கம் உண்டு. அங்கே வாங்கிய கடன்கள் வேறு. இந்தச் சொத்து செட்டியாரின் கணிப்பில் வேறு. “மானேஜர் பணத்தை எப்படியும் கொடுத்துவிட வேண்டும். திவால் பட்டியலில் அது வரக்கூடாது” என்பது செட்டியார் மனம். மீண்டும் நிலைமை சாதகமாக மாறியது. வக்கீலிடம் போய் மஞ்சள் கடிதாசை ஒத்திப் போடச் சொன்னார். தப்பித்தோம் என நினைத்தார். மீண்டும் மீண்டும் மஞ்சள் கடிதாசி நிர்ப்பந்தம் இருமுறை எழுந்தது. கிராமத்துப் பாஷையில் மஞ்சள் கடிதாசி என்றால் திவால் எனப்பெயர்.செட்டியாருக்கு மஞ்சள் என்ற சொல்லே பயம் தரக் கூடியதாயிற்று.

தம்மிடம் பெரிய சொத்தை விற்று, மானேஜராக இருப்பவர் அவ்வளவு பெரிய தொகைக்கு பிராமிசரி நோட்டோ, ரசீதோ கேட்கவில்லை. வருஷம் ஒன்றாயிற்று, தாம் திவாலானாலும் மானேஜருக்கு முழுப் பணமும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் செட்டியார் மனதில் ஆழ வேரூன்றியது. மானேஜர் வேறு ஊரில் சொத்து வாங்குவதாகக் கேள்வி. அதற்கும் மானேஜர் செட்டியாரைப் பணம் கேட்கவில்லை. செட்டியாரே மானேஜரை அது பற்றி விசாரித்தார். மானேஜர் சொத்து வாங்கும் விபரம், ஊர், யார் மூலம் வாங்குகிறார் என்றெல்லாம் பேசுகிறாரே தவிர பணம், விலையைப் பற்றிப் பேசுவதில்லை. செட்டியாரே நேரடியாகப் போய் விபரம் தெரிந்து கொள்ள முடிவு செய்தார். அவர் குறிப்பிட்ட நாள் தரிசன நாள். அவர் சந்திக்க வேண்டியவர் தரிசனத்திற்குப் போகிறார். எனவே செட்டியாரும் தரிசனத்திற்கு வந்து மானேஜரின் நண்பரை சந்திப்பதாக முடிவு செய்தார். தரிசனம் முடிந்தது. செட்டியாரும் அன்னையை தரிசித்தார். கூட்டம் கலைந்த பின் செட்டியாரும் மற்றவரும் சந்தித்தனர். "சொத்து கிரயப் பத்திரம் எழுதியாயிற்று. ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இன்னும் 20 நாள் கெடுவுள்ளது" என்று செட்டியார் கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியடைந்தார்.

தான் மானேஜருக்கு 1 வருஷம் கழித்துப் பணம் தரலாம் என்றிருந்தார். வாங்குவது பெரிய சொத்து. தொகை பெரியது. இது 35 ஆண்டுகட்கு முன் நடந்ததால் அன்றைய ஆயிரம் இன்றைய லட்சமாகும். செட்டியாருக்கு அவசரப்பட வேண்டிய நிர்ப்பந்தமில்லை. அவசரம் மானேஜருக்கு. அவர் பொறுமையாக இருக்கிறார்! 20 நாளில் அவ்வளவு பெரிய தொகை புரட்டுவது சாத்தியமில்லை. வக்கீலைக் கலந்தனர். சட்டப்படி கெடு 20 நாளில்லை, 50 நாள் என்று தெரிந்தது. இந்த விஷயத்திற்கு அந்த கெடு சரி வாராது.

செட்டியார் தம்மூர் திரும்பினார். தாமே மனச்சாட்சிப்படி நடக்க வேண்டும் என்பதால் இப்பெரிய கவலை. வெளிநாட்டிலிருந்த நேரம் ஒரு சிறிய பாங்கில் பெரிய client ஆக இருந்ததால் அந்த பாங்க் சேர்மனை அப்பொழுது அறிமுகப்படுத்தினார்கள். அறிமுகம் இனிய முகமாகத் தொடர்கிறது. அவரிடம் போய் நெருக்கடியைக் கூறலாம் எனில் பாங்கு பணம் தரும் எந்தத் துறையிலும் செட்டியாரில்லை. ஒரு வழியிருக்கிறது. அதைக் கேட்கலாம் என்று செட்டியார் போனார். சேர்மன், "இந்தச் சொத்துக்கு பணம் கொடுக்கக் கூடாது என ரிஸர்வ் பேங்க் ஆர்டர் இருக்கிறது" என்றார். சற்று நேரம் கழித்து சேர்மன், இவ்வளவு பெரிய தொகையை இவ்வளவு குறுகிய காலத்தில் எல்லா விஷயங்களும் சரியாக இருந்தாலும் பாங்கிலிருந்து பெற முடியாது. Procedureக்கே நேரம் போதாது. எல்லாத் தடைகளையும் மீறி உங்கள் தொகையை நான் சாங்ஷன் செய்கிறேன். ஆபீசில் உங்கள் செல்வாக்கு மூலம் இக்குறுகிய காலத்தில் பணம் பெற முயலுங்கள் என்று கூறினார். அந்தப் பணத்தைச் செட்டியார் பெற்றது ஓர் அதிசயம். 47ஆம் நாள் கிடைத்து காரியம் தடையின்றி மானேஜருக்கு நிறைவேறியது.

மானேஜர் செட்டியாரை அன்னை தரிசனம் செய்யும்படிக் கேட்டுக் கொண்டார். மனைவியுடன் வருவதாகச் செட்டியார் ஏற்றுக் கொண்டு, 'என்ன காணிக்கைத் தருவது' என்றார். ‘கணிசமாக இருந்தால் நல்லது’ என்றார் மானேஜர். மானேஜருடைய ஒரு மாத சம்பளத்திற்கு ஈடான தொகையை செட்டியார் காணிக்கையாகச் செலுத்தி தரிசனம் செய்தார்.

செட்டியார் நிலை மாறியது. தொடர்ந்து மாறியது. ஒரு சொத்து எதிர்பாராத பெரிய விலைக்குப் போயிற்று. வக்கீலிடம் இப்பொழுதெல்லாம் போவதில்லை. அன்பருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் மூலம் அன்னை செயல்பட்டு செட்டியாரைக் காப்பாற்றினார். பல லட்சம் கடனில் தவித்த செட்டியார் சில கோடி சொத்துக்கு உரியவரானார்.

மஞ்சள் கடிதாசி மறந்து போய்விட்டது.

**** 

ஸ்ரீ அரவிந்த சுடர்

முக்கியமான நேரங்களில் எதையும் சற்று விட்டுக் கொடுக்காமலிருந்தால், அடிப்படையான திறமைகள் எதிரான பலன் தரும்.

நேரம் கருதி விட்டு கொடுத்தால் நல்ல பயன் தரும்.

*****  

Comments

04.சிறு குறிப்புகள் Para 

04.சிறு குறிப்புகள்
 
Para  5              -  Line  5           -  பட்டியல்          -     பட்டியலில்



book | by Dr. Radut