Skip to Content

15. ஒரு மூட்டை புழுங்கலரிசி

 ஒரு மூட்டை புழுங்கலரிசி

       கணவனிடம் மனைவி எவ்வளவு நாள் இந்த ரேஷன் அரிசியை சாப்பிடுவது, ஒரு மூட்டையாகப் புழுங்கலரிசி வாங்கிப் போடக் கூடாதா? என்று சாப்பிடும்பொழுது மனம் கசந்து கூறினாள். போஸ்டாபீஸ் தனக்குத் தரும் சம்பளமும், மனைவியின் வருமானமும் சேர்ந்து அவ்வசதியைத் தாராது என்றுணர்ந்த கணவன், உன் தாய் வீட்டிலிருந்து வந்தால்தான் அது நடக்கும் என்று கூறியபொழுது, தனக்குத் தாயாக வரித்த அன்னையிடம் நிலைமையை மானசீகமாகக் கூறினாள். கூறிய பக்தருக்கு அன்னையின் ஆற்றலைப் பற்றி இது போன்ற விஷயங்களில் தெரியும். அன்னையிடம் கூறிய நேரம் மனம் புழுங்கலரிசி, கணவனின் கருத்து, தாய் வீடு ஆகியவற்றிலிருந்து அன்னையிடம் நகர்ந்து வந்ததை பக்தர் அறியவில்லை. மனம் இதமாக இருந்தது. அது அன்னையின் ஸ்பர்சம். கொஞ்சநாள் கழித்து ஆபீசிலிருந்து மனைவி வீட்டிற்கு வந்தபொழுது கணவன், “இன்று காலை பக்கத்து வீட்டாருக்கு வழக்கம் போல் வரும் புழுங்கலரிசி தேவையில்லை என்பதால் அரிசி வியாபாரி என்னிடம் தாம் கொண்டு வந்த புழுங்கலரிசி மூட்டையை எடுத்துக் கொள்ளச் சொன்னார். பணமில்லை என்பதால் ஏற்க முடியவில்லை. பிறகு தரலாம் என வற்புறுத்தித் தந்தார்” என்ற சேதியைக் கூறினார் 

 - அன்றிலிருந்து ரேஷன் அரிசி போய் அதே வியாபாரி புழுங்கலரிசியை மூட்டையாகத் தருகிறார்

-  நியாயமான தேவைகள், தேடி வரும் வாய்ப்புகளை மனம் மலர்ந்து ஏற்றால் சட்டம் புழுங்கலரிசிக்கும், புவியை ஆள்வதற்கும் ஒன்றேயாகும்.

       மனம் மலர மனம் பிரச்சினையிலிருந்து விலகி அன்னையை அன்பினால் அகமகிழ்ந்து ஏற்க வேண்டும்.

****



book | by Dr. Radut