Skip to Content

13. பிரார்த்தனை பலிக்க வேண்டும்

 பிரார்த்தனை பலிக்க வேண்டும்

அண்ணன் - பொது வாழ்விலுள்ள அன்பர்கள் சாதாரண அன்பர்களைவிட அதிக அருளைப் பெறுவர். ஏனெனில் அவர்கள் வேலை சேவையாகிறது. பிறருக்கு அவர் செய்யும் சேவைக்கு அருள் வந்தபடியிருக்கும் என்பது முதல் விஷயம். பிரார்த்தனை பலிக்கிறது, தவறாது பலிக்கிறது என்பதற்கு மேல் செய்யும் வேலையின் விவரம் தெரிந்தால் அருள் அதிகமாகப் பலிக்கும் என்பதைக் காண்கிறோம். அன்பர்கள் எங்கிருந்தாலும் மற்றவர்களைவிடச் சிறப்பாக வேலை செய்வார்கள். அதனால் செய்யும் வேலையின் விவரத்தை நன்கு அறிவார்கள். தெளிவுள்ள இடத்தில் அருள் எளிதாகச் செயல்படுவதால் பலன் அதிகமாக இருக்கிறது. Grace acts better through greater clarity.

தம்பி - பணத்தை அன்பர்கள் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்ற கருத்தை நாட்டு நடைமுறையில் சொல்லமுடியுமா?

அண்ணன் - ஒரு கம்பனியில் திறமையாக வேலை செய்பவர் வெளியே போய் சொந்தமாகக் கம்பனி ஆரம்பிப்பது வழக்கம். அதுபோன்று செயல்படும் அன்பர்களை நான் கவனித்ததில் சொல்லக் கூடியது அன்பர் முயற்சியால் கம்பனி எவ்வளவு சம்பாதித்ததோ அதை அன்பரால் சம்பாதிக்க முடியும். எல்லாத் தொழில்களிலும் இது பொருந்தாது.

தம்பி - நான் ஒரு சிறிய கம்பனியில் மேனேஜராக இருக்கிறேன். 5 வருஷத்தில் கம்பனி 8 கோடி சம்பாதித்தது. என் முயற்சியால் இதில் 3 கோடி வந்திருக்கும் என்றால் நான் இன்றைய 25,000ரூ சம்பளத்தை விட்டு தொழில் நடத்தினால் அந்த 3 கோடியைச் சம்பாதிக்கலாம் என்று வைத்துக் கொள்ளலாமா?

அண்ணன் - முறையாகச் செய்தால் அந்த 3 கோடி குறைந்தபட்சம். ஆர்வம் அதிகமானால் அதற்கேற்ப பல மடங்கு உயரும் (multiples of it). தவறாது அன்பர்கள் விஷயத்தில் இதைக் காணலாம்.

தம்பி - 450ரூபாய் சம்பளம் பெற்ற மானேஜர் கம்பனிக்கு 1 கோடிக்கு மேல் சம்பாதித்துக் கொடுத்தார். வெளியே வந்த முதல் வருஷமே அந்த 1 கோடியைச் சம்பாதித்து விட்டாரே. எந்த ஆபீசானாலும், அங்கு அன்பர்கள் இருந்தால் பொதுவாக அன்பரே முதன்மையாக இருப்பது நான் பார்த்த விஷயம்.

அண்ணன் - அன்பர் எனில் சிறப்புண்டு, சிறப்பு முத்திரையுண்டு. நீ சொல்வது அதுபோன்ற ஓர் அம்சம். எல்லாத் தொழில்களிலும் பணத்தைப் பொருத்திப் பார்ப்பது கடினம். வியாபாரத்தில் எளிமையாகத் தெரியும். ஒன்று சொல்லலாம்.

அன்பருடைய குறிப்பிட்ட திறமையால் ஸ்தாபனம் பெற்ற பலன் குறைந்தபட்சம் அன்பருக்குண்டு”.

அதுவரைக்கும் அறுதியிட்டுக் கூறலாம். வாழ்வுக்கும் இந்தச் சட்டம் பொது என்றாலும் நாம் கேள்விப்படுவது அதன்று. இந்த முதலாளிக்கு 50 லட்சம் சம்பாதித்துக் கொடுத்தேன். நான் பெற்றனவெல்லாம் இந்த 1500 ரூபாய் சம்பளத்தை 1800 ஆக்கினார். அவரை விட்டு வேறிடம் போனேன். அந்த முதலாளிக்கு கோடிக் கணக்காய் சம்பாதித்தேன். வாயாரப் பாராட்டினார். அத்தோடு சரி. நான் வேறெதையும் காணவில்லை என்று நாம் கேள்விப்படுவது அன்பர்கள் வாழ்வில் இல்லவேயில்லை.

தம்பி - நாட்டில் பணப்புழக்கம் அதிகப்படுத்த முடியும் என்பது போல் நம் தொழில், குடும்பத்தில் பணவரவை 5 மடங்கு, 10 மடங்கு அதிகப்படுத்த முடியாதா?

அண்ணன் - நம் நாடு நெடுநாளாகச் சில விஷயங்களைப் பாராட்டி வருகிறது. ஒரு குடும்பம் நசித்துவிட்டால் அவர்கள் வீட்டு வேலைக்கு போக வேண்டும். அதைத் தவிர்க்க நாம் கண்டு பிடித்த முறை இட்லிசுட்டு விற்பது. இந்தத் தொழில் நசித்துப் போன குடும்பங்களின் மரியாதையை வெகுவாகக் காப்பாற்றியுள்ளது. அதுபோல் பணவிஷயத்தில் நாம் கண்டது சீட்டு கட்டுவது. இது இன்று பெருவாரியாகப் பெருகிவிட்டது. குடும்பச் செலவுக்கு மிகவும் உதவும் முறை இது. ஆனால் பலர் சேர்ந்தால்தான் சீட்டு கட்ட முடியும். அதுபோல் புது முறைகளைக் கண்டுபிடித்தால் ஒரே குடும்பமோ, ஒரே கம்பனியோ பின்பற்றிப் பயன் பெற முடியாது. பலர் சேர்ந்தால் பயன்பட முடியும். கம்பனி மானேஜ்மெண்ட் முறைகளால் பணவரவை 5 அல்லது 10 மடங்கு உயர்த்த முடியும். எந்தக் குடும்பமும் “வருமானம்” என்ற கட்டுரையால் அதுபோல் பலன் பெறமுடியும். புதியதாக ஒன்று ஏற்படுத்த முடியும் என்றாலும் அது தேவையில்லை. Complementary currency என்ற முறையுண்டு. “மாற்றுப் பண நடமாட்டம்” என்று கூறலாம். அது 10 அல்லது 20% பணத்தை வளர்க்கப் பயன்படும். உலகில் 2400 இடங்களில் அது புழக்கத்தில் இருக்கிறது. அதுபோன்ற புதிய முறைகளில் 5 or 6 ஒரு காலனி, நகர் ஏற்றுக் கொண்டால் பணம் இருமடங்காகும். சுத்தம் 100% உயர்ந்தாலே இருமடங்காகும்.

தம்பி - ஏற்கனவே சுத்தம் போன்ற 12 தலைப்புகளில் உள்ள விஷயங்களைப் பின்பற்றி வருமானத்தை குறைந்த பட்சம் 2 அல்லது 3 மடங்கு உயர்த்தியவர்கள் இதையும் பின்பற்றினால் மேலும் 2, 3 மடங்கு உயருமல்லவா?

அண்ணன் - அவர்கள் ஒரு 100அல்லது 200 குடும்பம் ஓரிடத்திலிருந்தால் இதைப் பின்பற்ற முடியும். கம்பனியைவிட, குடும்பத்தில் 10 மடங்கு பணம் பெருக நாம் முன் சொன்ன முறைகளே போதும். ஒரு வீடு என்றால் கணவன், மனைவி, இரு பிள்ளைகள், சில சமயங்களில் பெரியவர்கள் ஓரிருவர் என 5 முதல் 7 வரை இருப்பார்கள். நாம் கூறிய முறைகளை வீட்டில் ஒருவர் அல்லது இருவர் பின்பற்றினால் வருமானம் 2 மடங்காகும். இரகஸ்யம், பெரியவர்களும், குழந்தைகளும் இதே முறையை வழுவாமல் பின்பற்றினால் 10 மடங்கு பணம் பெருகும். அனைவரும் ஒரு முறையைப் பின்பற்றினால் பலன் அபரிமிதமாக இருக்கும். இதற்கு சம்மதப்பட முன்வரும் குடும்பங்கள் இருக்காது. நுட்பமான இடமே அதுதான். முறையன்று. குழந்தைகளைப் பயிற்றுவிக்க முன்வர மாட்டார்கள். பெரியவர்களிடம் போனால் சண்டைதான் வரும். அதனால் அதைத் தவிர்க்க வேண்டும்.

தம்பி - ‘யோக வாழ்க்கை’ என்ற நூல் 979 நம்பரிட்ட இந்தச் செய்தி நாட்டுக்குரியது. அதை ஓர் அன்பர் ‘அது என்ன இரகஸ்யம்’ என ஆசிரியரை எழுதிக் கேட்டிருந்தார். அந்த விபரங்களை நவம்பர் 14ஆந் தேதி நேரு நினைவு சொற்பொழிவில் பேச்சாளர் பேசியிருந்தார். நாட்டில் கங்கா-காவேரித் திட்டம் அமுலுக்கு வந்தால் உணவு உற்பத்தி பெருகும், ஏராளமான வேலை உற்பத்தியாகும், மின்சாரத் தட்டுப்பாடு இருக்காது. இதற்கு 60,000 கோடி ரூபாய் வேண்டும். இந்த 60,000 கோடியை நாமே உள்நாட்டில் உற்பத்தி செய்யலாம். ஏன் பணமில்லை என்று கூற வேண்டும். ஏன் கடன் வாங்க வேண்டும் என ஒரு கருத்து பேசப்பட்டது.

அண்ணன் - தவணை முறையில் நாம் ஏற்கனவே இதைப் பின்பற்றுகிறோம். கங்கையும் காவேரியும் இணைந்தால் ஏராளமான நிலம் புதியதாகப் பயிராகும். இன்று தரிசாக 5000ரூபாய்க்கு விலை போகும் நிலம் அன்று 50,000 அல்லது 1 லட்சம் விலை போகும். நமக்குத் தேவையான அத்தனை பணமும், இத்திட்டம் நிறைவேறிய பின் அந்நிலங்களின் மதிப்பாக எழும்.

தம்பி - இன்று எப்படி அப்பணம் பயன்படும்?

அண்ணன் - எல்லா நாடுகளும் அறிந்த முறை அது. எதிர்காலத்தில் வரப்போகும் நிலத்தின் அதிக மதிப்பை இன்று பணமாகப் பெறும் முறையைச் சர்க்கார் அறியும். சர்க்கார் முன்வந்தால் நடக்கும்.

தம்பி - அதேபோல் குடும்பங்களின் எதிர்கால வருமானத்தை இப்பொழுது பயன்படுத்தும் முறையுண்டா?

அண்ணன் - உண்டு. அது நடைபெற ஓர் ஊர் அல்லது ஒரு நகர் (சுமார் 1000 குடும்பங்கள்) அல்லது ஒரு பெரிய கம்பனி அம்முறையை ஏற்றால் ஒரு குடும்பத்தில் இருவர் வருமானம் இன்று 10,000ரூபாய் ஆனால் வரும் 10 வருஷத்தில் அதில் பாதி வருமானம் 6 இலட்சமாகும். அப்பணம் இன்று அவர்கட்கு, செலவுக்குக் கிடைக்க வழி செய்யும் அம்முறை.

தம்பி - ஒரு நகர் என்றால் குடும்பங்கள் வரும் போகும். கம்பனியானால் வேலை செய்பவர்கள் கம்பனியை விட்டுப் போவார்கள். அவையெல்லாம் சரி செய்ய முடியாது.

அண்ணன் - எதற்கும் வழியுண்டு. சுலபமன்று. வருமானத்தை இரு மடங்காக மாற்ற மனத்திட்பம் போதும். இருமடங்காக்கிய குடும்பம் 10 மடங்காக்க முயன்றால் நடக்கும். 10,000ரூபாய் சம்பாதிக்கும் குடும்பத்தில் 6 லட்சம் ரொக்கம் வருவது பெரியது. அது வந்தால் அதன் மூலம் சம்பாதிக்கவும் வழியுண்டு.

தம்பி - எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு அவசியம்.

அண்ணன் - கட்டுப்பாடிருந்தால், தானே பணம் பெருகும். பெருக்கினால் அதிகம் பெருகும். ஓரளவு தானே மேல்நாடுகளில் இது போன்ற பல முறைகள் வருகின்றன. இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் அவை இங்கும் வந்துவிடும்.

தம்பி - பணம் தட்டுபாடில்லை என்றால் நாடு சுபிக்ஷமாகிவிடும். இதே முறைகளைத் தவறாகவும் பயன்படுத்தலாம்.

அண்ணன் - எதையும் தவறாகப் பயன்படுத்தலாம். அதனால்தான் கட்டுப்பாடு வேண்டும் என்றேன். பத்தோ, இருபதோ வருஷம் கழித்து அனைவருக்கும் வரும் முறைகளை அன்பர்கள் இன்று அருளால் பெறமுடியும் என்பதையே நான் பல வகைகளில் திருப்பித் திருப்பித் தருகிறேன்.

தம்பி - நாடு சுபிக்ஷமடைவது அவசியம். அதில்லாமல் பஞ்சம், பட்டினியுள்ளவரை ஆன்மீகம், அன்னை காதில் விழாது.

அண்ணன் - சுபீக்ஷமடைவதற்கே ஆன்மீகத்தைப் பின்பற்றலாம் என்பது என் கொள்கை.

தம்பி - அன்னையிடம் வந்த பிறகு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேசுவது அழகாக இல்லை என்று பலரும் நினைக்கிறார்கள்.

அண்ணன் - பரம்பரையாகப் பணம் என்றால் தவறு என்று நாம் வளர்ந்துள்ளோம். அந்த நாளில் டாக்டர், வக்கீல், ஆசிரியர், தட்டான், தச்சன், என எவரும் பணம் கேட்கமாட்டார்கள். கொடுத்ததை வாங்கிக் கொள்வார்கள்.

தம்பி - அது போலிருந்தால் பணமே வாராதே.

அண்ணன் - ஆனால் சிலர் முதலில் பணம் வாங்கிக் கொண்டு தான் வேலை செய்வார்கள். தொழிலில் அதிகப் பணம் கேட்பவருக்குத்தான் நல்ல பேர் உண்டு. பணம் கேட்க கூச்சப்படுபவருக்குப் பணமும் வாராது. பேரும் இருக்காது.

தம்பி - அது உண்மை.

அண்ணன் - மனிதன் பணத்திற்கு மட்டும்தான் அசைவான். பணம் மட்டும் வேண்டாம் எனப் பேசுவான்.

தம்பி - இப்பொழுது எல்லாம் மாறிவிட்டன. பணம் முக்கியமாகிவிட்டது.

அண்ணன் - இரண்டும் வருகிறது. பணம் என்பது அருள். அருளாக நினைத்துப் பணத்தைப் பாராட்டினால், பணமும், அருளும் வரும். மனதால் பணத்தை நாடி, வாயால் வேண்டாம் என்றால் பணமும் வாராது. அருளும் வாராது. மனத்தின் உண்மையைப் பாராட்டுவது சரி. காணிக்கை எனில் அளவில்லை என்று யாருக்குத் தெரியாது. 5000ரூபாய் பணம் வேண்டுமென 10ரூபாய் காணிக்கை அனுப்பினால் கிடைக்கிறது. 5 இலட்சம் வேண்டுமானால் அதே 10ரூபாய் காணிக்கை அனுப்பினால் பலிக்கிறது. அனுபவத்தில் காணிக்கைக்கு அளவில்லை. மனமே முக்கியம். காணிக்கை அவசியம் என அறியாதவரில்லை. ஆனால் மனம் பெரிய காணிக்கையைக் கொடுக்க ஏன் விரும்புகிறது? நமக்குப் பணம் முக்கியம் என்பதால், அப்படி நினைக்கிறது. அந்த உண்மைக்கு அன்னையிடம் பலன் உண்டு.

தம்பி - காவேரி நீருக்காக தமிழ்நாடும், கர்னாடகாவும் தகராறு செய்கிறார்கள்.

அண்ணன் - காவேரிப் பிரச்சினையில் உனக்கே சொந்த அனுபவம் உண்டு. அன்னை சட்டம் அதனுள் இருக்கிறது.

தம்பி - பல வருஷங்கட்கு முன் பம்பாயிலிருந்து ஓர் அன்பர், ஏன் காவேரி தண்ணீருக்காகத் தகராறு? காவேரி ஜீவநதியில்லையா? அவளே அன்னையில்லையா? பிரார்த்தனை செய்தால், பொங்கி வரமாட்டாளா? என நினைத்துப் பிரார்த்தித்தார். அந்த ஆண்டு காவேரியில் வெள்ளம். தகராறுக்கு வேலையில்லை. காவேரி விஷயத்தில் இரண்டு, மூன்று பேர் இதைச் செய்து பார்த்திருக்கிறார்கள். சட்டம் என்ன?

அண்ணன் - விஷயம், காவேரியானாலும், காஷ்மீரானாலும் நேரடியாக ஒருவர் உணர்ச்சியைத் தொடுமானால் அவர் பிரார்த்தனை அந்த நேரம் பலிக்கும். தவறாமல் பலிக்கும். நிரந்தரத் தீர்வுக்கு நியாயமான ஏற்பாடு வேண்டும்.

தம்பி - ஏன் நாட்டுப் பிரச்சினைகளை இதுபோல் தீர்க்கக் கூடாது?

அண்ணன் - பிரச்சினைக்கு உரியவர் அன்னையை நம்பினால் அது முடியும். வெளியிலிருப்பவர் செய்வது அந்த ஒரு நேரம் பலிக்கும்.

தம்பி - பிரச்சினைக்குரியவர் என்றால்?

அண்ணன் - பிரச்சினையால் பாதிக்கப்படுபவர் அல்லது அதைத் தீர்க்கும் பொறுப்புடையவர். சம்பந்தமில்லாதவர் பிரார்த்தனை எடுபடாது. அன்பர்கள் அனைவரும் பார்த்தவை பல உண்டு. அதை மீறிய விஷயங்களும் உண்டு. பதிலோ, விளக்கமோ சுலபம், ஏற்பவர் குறைவு. அனைவருடைய அனுபவம்,

 • அன்னையை அறிந்ததிலிருந்து பிரச்சினைகள் குறைந்து மறைந்தன.
 • சச்சரவு, கவலை நீங்கி சந்தோஷமும், நிம்மதியும் வந்தன.
 • பலிக்காத பிரார்த்தனை என்பதில்லை.
 • வாழ்வில் அன்பர் நிலை - அந்தஸ்து - உயர்ந்தபடி இருக்கிறது 
 • அதை மீறியவை,
 • சில பிரச்சினைகள் தீர்வதில்லை.
 • இதுவரையில்லாத பெரிய தொந்தரவுகள் வருகின்றன.
 • முதலில் இருந்ததைப் போலில்லை. ஓரளவுக்குப் போய் அப்படியே நின்றுவிடுகின்றன

விளக்கம் :

 • நம் குறையை வலியுறுத்துவதால் பிரச்சினை தீருவதில்லை.
 • அன்னைக்கு நெருக்கமானவர் என நம்பிக்கை இல்லாதவர், துரோகம் செய்தவரைப் பாராட்டினால் ஆபத்து வருகிறது. அவரை விட முடியவில்லை.
 • முதலிலிருந்த ஆர்வமும், பக்தியும் இப்பொழுதில்லை.

தம்பி - தெரியாதவர்க்குச் சொல்லலாம். வம்பை விலை கொடுத்து வாங்கிச் சட்டம் பேசுபவர்களை விலக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு விளக்கம் சொன்னால், நமக்குத் தொந்தரவு வரும்.

அண்ணன் - இன்று நம் நாட்டில் வசதி அதிகமாக இருக்கிறது.

தம்பி - புள்ளி விவரம் சொல்லவில்லை.

அண்ணன் - அது விவரமில்லாத புள்ளி. அதனால் சொல்ல முடியாது. அதை World Bank மாற்றியது உனக்குத் தெரியாதா? 384 டாலரிலிருந்து $1200க்கு இந்தியா வந்துவிட்டது.

தம்பி - இதுமட்டும் சரி என எப்படி ஏற்பது?

அண்ணன் - நம் நாடு வசதியாகிறது என்பதை உன்னால் ஏற்க முடியுமா?

தம்பி - கடைத் தெருவைப் பார்த்தாலே தெரியுதே. மாமா சொல்வார் அவர் நாளில் சர்க்கார் ஆபீசர் வீட்டில், வக்கீல் வீட்டில் ஒரு மேஜைதான் இருக்கும். சிலர் வீட்டில் அதுவுமிருக்காது. இப்போது குமாஸ்தா வீட்டில் சோபா இருக்கிறது.

அண்ணன் - Standard of living வாழ்க்கைத் தரம் உயர்ந்ததை மறுக்க முடியாது. இந்தியப் பொருளாதாரப் பேராசிரியர் ஒருவரிடம் இது எப்படி நடந்தது என்று கேட்டபொழுது அவரிடம் பதில்லை.

தம்பி - இந்த விஷயம் உலகில் எந்த economist பொருளாதார நிபுணரும் சொல்லவில்லையே! பலர் பல காரணங்களைச் சொல்கிறார்கள். ஒருவர் கூறுவதை அடுத்தவர் மறுக்கிறார்.

அண்ணன் - அன்று (1950இல்) ஒரு வேளை சாப்பாடு கிடைத்தால் போதும் என்ற நினைவு. இன்று முதல் காரியமாக சினிமா பார்க்கணும், ஹோட்டலுக்குப் போக வேண்டும், T.V. இல்லாமல் முடியாது என்பது மனநிலை. அதனால் கூலி ஏறுகிறது. தரம் உயர்கிறது.

தம்பி - எங்கிருந்து அந்த உபரிப் பணம் வந்தது?

அண்ணன் - இல்லாமல் முடியாது என்றால் அதிகமாக உழைக்கத் தயாராகிறான். பணம் வருகிறது.

தம்பி - இது கீதை வாசகமாயிற்றே “நீ எதாக மாற நினைக்கிறாயோ, அதாக மாறலாம்” என்று கூறுகிறதே, அதுவா.

அண்ணன் - கீதைப் பிரசங்கம் செய்பவர்களும் இதை விட்டு விடுவார்கள். அன்று வெறுஞ்சொல். இன்று நடைமுறை. நான் உலகத்தைப் பற்றிப் பேசவில்லை. அன்பர்களைப் பற்றிச் சொல்கிறேன். பொதுவாக அன்பர்கள் வாழ்வில் பாராமுகமாக இருக்கிறார்கள். அன்னையின் சக்தியை அறிவதில்லை. 2 மடங்கு வேண்டும் என்ற ஆர்வமிருக்கும், அதற்கான முயற்சியிருந்தால் கிடைக்கும் எனத் தெரியாது என்பதே உண்மை.

தம்பி - பணம் வேணும் என்று முயன்றால் வருமா?

அண்ணன் - அப்படிச் செய்தாலும், முயற்சிக்குப் பலன் உண்டு. ஏன் சரியாகச் செய்யக் கூடாது? என் குடும்பம் உயர்வடைய வேண்டும். குழந்தைகள் பெரிய படிப்பு படிக்க வேண்டும். வசதி இருக்க வேண்டும். அதற்காக உபரி வருமானம் வேண்டும். அது அருள். அதைப் பெற நான் எந்த முயற்சியையும் எடுக்க வேண்டும் என்பது சரியான மனநிலை.

தம்பி - அன்பராக இருப்பதால் என் நிலை 10 மடங்கு உயர்வதால், அருள் பலரையும் போய்ச் சேரும் என்பது நல்லதல்லவா?

அண்ணன் - நல்ல மனப்பான்மையுடன் செய்தால் அது உயர்ந்தது தான். உலகம் முன்னுக்கு வந்தது முயற்சியால்தான். அதை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். ஓர் அன்பர் பெறுவது உலகம் பெறுவதாகும். உடல் நலம், படிப்பு, பண்பு, குணம், நிம்மதி, உயர்வு எல்லாவற்றிற்கும் அடிப்படை பணம். அதைப் பெற முயல்வது சரி, அவசியம். பணத்தாசையில்லை இது. மனம் பணத்தை ஆசையாக நாடுவது சரியில்லை. அவசியமாக நாடுவது சரி, ரொம்பவும் சரி. அருளாக நாடுவது புனிதச் செயல், யோகம், சொல்லப் போனால் அதுவே யோக வாழ்க்கை.

தம்பி - இது தவறு என்று சொல்கிறார்களே!

அண்ணன் - உனக்கு இது தவறா!

இல்லை என்றால், போய் அதைச் செய். தவறு என்பவர் பல வகைப்பட்டவர்கள். நாம் அவ்வகையை சேரக் கூடாது.

 1. விவரம் தெரியாத நல்ல மனிதர்.
 2. மரபை மூட நம்பிக்கையாகப் பின்பற்றுபவர்.
 3. சம்பாதிக்கத் திறமையில்லாதவர்.
 4. மனம் நிறைய ஆசையும், வாய் நிறைய பொய்யும் சொல்பவர். இவர்கள் பட்டியல் நாம் சேரக்கூடாது. பணம் இறைவனுக்குரியது என்று அன்னை கூறிய பின் ஏன் பேச வேண்டும்?

அன்பர்களைப் பொருத்தவரை இரண்டு முக்கிய விஷயம்.

 1. உலகம் மாறிவிட்டது. முயற்சி பலிக்கும்.
 2. எதையும் பூர்த்தி செய்ய அன்னை காத்திருக்கிறார். இவை இரண்டையும் புறக்கணிப்பவர் வாய்ப்பை இழப்பவர். அவரிடம் வாதாட வேண்டாம்.

தம்பி - இவ்வளவையும் கேட்டுக் கொண்டு என் பக்கத்து வீட்டுக்காரர், பணத்தை மனத்தால் உற்பத்தி செய்ய முடியும் என்பது என்ன என்றார்.

அண்ணன் - மந்திரத்தில் பெருந்தொகை எதிர்ப்பார்ப்பார்.

தம்பி - தம் அபிப்பிராயத்தை வேறு வகையாகச் சொல்கிறார்.

அண்ணன் - ஏன் அவரிடம் நீ இதைப் பற்றிப் பேசுகிறாய்? அப்படியெல்லாம் வாராது என்று சொல்வதுதானே?

தம்பி - நான் வேறொருவரிடம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு இதைக் கேட்டார்.

அண்ணன் - “அவருக்கு வரும். உங்களுக்கு வாராது” என்று சொல்லேன்.

தம்பி - முகத்தை முறித்துச் சொல்லாமல், நல்ல பதில் சொல்ல விரும்புகிறேன்.

அண்ணன் - அவரைக் கடையில் போய் உட்காரச் சொல்லு. தம் கடைக்கே போவதில்லை அவர்.

தம்பி - அப்படியெல்லாம் கடுமைப்படுத்தாமல், நல்ல பதில் சொல்ல ஆசைப்படுகிறேன்.

அண்ணன் - இது தவறான ஆசை என விட்டு விடு. அவர் கேட்கமாட்டார்.

தம்பி - அவர் மாற வழியில்லையா?

அண்ணன் - அவர் சோம்பேறி, விதண்டாவாதக்காரர். வீட்டிலிருந்து அவரை விரட்டினால் புத்தி வரும். மரியாதையாக நடத்தினால் சட்டம் பேசுவார்.

தம்பி - அவருக்குரிய இதமான வழியில்லையா?

அண்ணன் - அவரை நினைக்குந்தொறும் உன் நினைவு தவறு எனப் புரிந்தால் பலன் வரும்.

தம்பி - அப்படி ஒரு வாரம் செய்தேன்.தொடர்ந்து கடைக்குப் போனார்.

அண்ணன் - அந்த வாரம் இந்த இடக்குப் பேச்சுப் பேசினாரா?

தம்பி - இல்லை. தத்துவம் என்ன சொல்கிறது?

தொடரும்...

****  

Comments

13.பிரார்த்தனை பலிக்க

13.பிரார்த்தனை பலிக்க வேண்டும்
 
உரையாடல் 45 (அண்ணன்)  - Bankமாற்றியது  - Bank மாற்றியது
உரையாடல் 49 (அண்ணன்)  -  livingவாழ்க்கைத் -  living வாழ்க்கைத்book | by Dr. Radut