Skip to Content

10.எது நியாயம்

 “அன்னை இலக்கியம்” 

                                                                                  எது நியாயம் 

                                                                                       (Dec 2001, இதழின் தொடர்ச்சி                             இல. சுந்தரி

        உலக முழுமையையும் சத்தியத்தால் ஆட்கொள்ளப்போகும் அந்தத் தெய்வம், அவனால் சத்யம் என்றழைக்கப்படும் அந்தத் தெய்வம் புன்னகை பூத்தது. வறுமையும், ஏழ்மையும் ஓடிவிட்டன. குசேலர் கொண்டுவந்த அவலை ஒரு பிடி கண்ணன் உண்ட பிறகே குசேலர் குறை தீர்ந்தது. ஏதும் கொண்டு வாராமலேயே குமரன் செல்வக் குமரன் ஆனான். செல்வமென்றால் ஆன்மீகச் செல்வம்.

       “நீ எப்போதும் இங்கு வரலாம். நீ சேவை எனச் செய்யும் எதனையும் நான் ஏற்கிறேன்” என்றார். சாதகரை அழைத்து குமரன் எப்போது வந்தாலும் இங்கு உணவளித்து அவனைக் கவனிக்க வேண்டும் என்றார். உடைமைகளையெல்லாம் விட்டுக் கொடுத்து இங்கேயே இருக்கும் நம்மை விட இவன் எவ்விதத்தில் உயர்ந்தவன் என்று கூடச் சிலர் கருதினர். அதன் பிறகு குமரன் சிந்தித்துச் செயல்படவில்லை. ஏதோவோர் அரிய சக்தியால் ஆட்கொள்ளப் பட்டான். அன்னையின் பெருமையை அவன் ஆழ்மனம் உணர்ந்து எப்போதோ விழித்துவிட்டது. தான் செய்யும் எச்செயலையும் அன்னைக்கு அர்ப்பணமாகவே செய்தான்.

       சிறிய அளவில் சோப்பு செய்யும் செயலைச் சொந்தமாகத் தன் குடும்பத்தினர் உதவியுடன் தொடங்கினான். பக்தியும், விசுவாசமும் சோப்பாக உருவெடுத்ததால் இதை வாங்க ஒரு பெரிய கூட்டமே உருவானது. தன் தேவைக்குச் செலவு செய்தது போக அன்னைக்குக் காணிக்கையாக மீதமுள்ளதைக் கொடுத்துவிடுவான்.

       இந்நிலையில் இதன் பெருமையறிந்து பெரிய அளவில் வெளிநாட்டு ‘ஆர்டர்’ கிடைத்தது.

       அன்னையிடம் வந்த வாய்ப்புப் பற்றிக் கூறினான். “எந்த அளவில் தொழில் விரிந்தாலும், பேராசையும், சோம்பலும் தவிர்த்துச் செயல்படு” என்றார் அன்னை.

       அதையே மந்திரமொழியாகக் கொண்டு ஒரு தனி இடம் வாங்கி வேலைக்கு நல்ல அன்னை பக்தர்களை நியமித்து அவர்களுக்குரிய கூலியை நியாயமான முறையில் நிறைவு செய்தான். அப்போதும் அப்பொருளில் பற்றுக் கொள்ளாது குடும்பத்தின் தேவை போக மீதமுள்ள பணத்தை அன்னையின் பணிகளுக்கே செலவிட்டான். இவனைச் சிலர் வாழத் தெரியாதவன் என்றனர்.

       தொழில் பெருமளவு வளர்ந்து குடும்பமும் செழிப்படைந்தது. அன்னை அளித்தவை என்ற பணிவுடனேயே அவற்றைப் பயன்படுத்தினான். திருவுள்ளப்படி நடக்கட்டும், என் விருப்பம் தேவையில்லை என்ற பிரார்த்தனை மனதில் எழுந்தது.

       “கண்ணம்மா! நான் என்னை முழுமையாக அன்னைக்கு அர்ப்பணிக்க ஆசைப்படுகிறேன். உன்னைத் தாயாக்கி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையானேன். பிள்ளைகளுக்குப் பெருமை தரும் பெற்றோராய் இருக்க வேண்டுமெனக் கூறுவாய். இப்போதும் உன்னுதவியை நாடுகிறேன். அவர்களை அன்னை அன்பர்களாகவே காண வேண்டும். என் வீடு, என் குழந்தை என்ற சிறு சிறு வட்டங்களைத் தாண்ட வேண்டிய நிலையில் உள்ளேன். இதற்கும் உன் உதவியை நாடுகிறேன். இந்த மண்ணில் மனைவி என்பவள் மரியாதைக்குரியவள், வணக்கத்திற்குரியவள். மரத்திற்கு நீரைப் பெற்றுத் தந்து அதை உயிர் வாழவும், வளரவும் செய்யும் வேர் பூமிக்கடியில் பிறர் கண்ணுக்குப் புலப்படாமலிருக்கிறது. வேர் தனது வேலையை விளம்பரப்படுத்துவதில்லை. இத்தகைய பணிகளையே பெண்கள் புரிந்துள்ளனர் என்று படித்திருக்கிறேன். உன்னால் உணர்ந்தும் இருக்கிறேன் என்றான். இனிதான் நீ பெரிதும் பொறுமை கொள்ள வேண்டியதிருக்கும். உன் கணவன் தன் சுயநலத்திற்காக உன்னை விட்டுவிட்டான் என்று உலகம் கூறும். அவன் பொருட்டு வாழ்ந்த உன்னைப் புறக்கணித்துத் தன் போக்கில் போகிறான் என்று பேசும்” என்றான்.

       “என் உலகம் அதுவன்று. நீங்களே என் உலகம். நீங்கள் சொல்வதும், செய்வதுமே நான் ரசிக்கும் வாழ்வு. நீங்கள் மேல்நோக்கிப் போகும் போதெல்லாம் நான் படியாகவே இருப்பேன்” என்றாள்.

       நன்றியால் நெகிழ்ந்து அவள் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டான்.

       இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு நாமும் அவரை ஏகவசனத்தை விட்டு அவர் என்றே குறிப்பிடுவோம். குமரன் என்ற இளைஞனின் சாதாரண வாழ்வைக் குறித்தவரை குமரன் எனவும், அவன் எனவும் குறிப்பிட்டோம். இனி மகானாக வளரத் தொடங்கிய பின் அவர் என்பதே பொருத்தமுடையதன்றோ?

       முதலில் அவர் தம் அனுபவம் குறித்து நூல் எழுதினார். அன்னையின் கோட்பாடுகள் எவை என்பதைக் கண்டும், தாமே மேற்கொண்டும் அதன் பலன்களை மற்றவர் பெறுமாறு செய்தார். ஓயாது தம்முள்ளத்தில், உணர்வில், உடலசைவுகளில் அன்னையை ஏற்றார். தெய்வீகத்தால் சூழப்பட்டார். இதன் பயன் இவரைச் சூழ்ந்துள்ளவர்கள் இவரைத் தம்மிலும் மேம்பட்டவராகக் கருதினர். அவர் கூறாமலேயே அவர் எண்ணங்களைப் பிரதிபலித்தனர். அவருடைய விருப்பத்திற்கே தாம் நடக்க வேண்டும் என எண்ணினர். சொல்வது நல்லது என அவர் கூறியவற்றை ஏற்றனர். அவரிடம் கருத்துக் கேட்டால் சரியாக இருக்குமென அவரைப் பலரும் நாடினர். அவர் விருப்பு வெறுப்பு இன்றி அன்னையின் கொள்கைப்படியே நடந்து கொள்வதால் நடுவு நிலைமை இயல்பாகிவிட்டது. சுற்றமும், பகையும் என்ற இருவேறு நிலைகளைக் கடந்தார். அன்னையே எல்லாவற்றின் சாரமும் என்றானதால் அன்னையைத் தேடிப் போகும் நிலையும் நின்றது. அன்னையென்ற அற்புத சக்தியை உடலில், உணர்வில், ஜீவனில் ஏற்றதால் ‘தான்’ ‘அது’வாகும் நிலை வந்துவிட்டது.

       இவர் வீடு என்பது அன்பர்களின் பொது இடமாயிற்று. சிறு குடும்பத் தலைவியாயிருந்த கண்ணம்மா அன்பர் கூட்டம் என்ற பெருங்குடும்பத் தலைவியானாள். இவருடைய எல்லா முன்னேற்றங்களுக்கும் உறுதுணையாய் நின்று அன்னையின்பத்தை அகிலமுழுவதும் பரப்ப, தன் இன்ப துன்பங்களைப் பொருட்படுத்தாது இரவு, பகல் பாராது சாதாரணப் பெண்ணாய் நின்ற கண்ணம்மா என்னும் பெண்ணரசி, அன்னை அன்பர்களின் நன்றிக்குரிய பெண்ணரசி என்பதைக் கூறவும் வேண்டுமோ.

****

முற்றும்

 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம்மை நல்லவர் என அடுத்தவர்க்கு நிரூபிக்க நாம் முயலுகிறோம். அடுத்தவர் மனத்தால் சிந்திப்பவர் என நினைப்பதால் அதைச் செய்கிறோம். அது சரியன்று. பிரச்சினைகள் உணர்வாலானவை. மனத்தால் அவற்றைத் தீர்க்க முடியாது.

உணர்வாலான பிரச்சினையை அறிவால் தீர்க்க முடியாது.book | by Dr. Radut