Skip to Content

அன்பர் கடிதம்

அன்னையின் பொற்பாதங்களை நானும், என் இப்போதைய கணவரும் நமஸ்கரித்து ஸ்ரீ அன்னையை ஏற்ற பிறகு என் வாழ்க்கையில் எவ்வளவு நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும், அன்னை நம் கூடவே எப்போதும் இருக்கிறார்கள் என்பதையும் ஸ்ரீ அன்னைஅவர்களுக்குக் கட்டுரையாகச் சமர்ப்பணம் செய்கிறோம்.

எனக்குத் தமிழ் எழுத வாராது.என்னுடைய இப்போதைய கணவர் உதவியால் நான் என் அனுபவத்தை எழுதுகிறேன்.

நான் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தெய்வ பக்தியும், ஒழுக்கமும் நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். நான் சிறு வயதிலிருந்தே முருகனை இஷ்ட தெய்வமாகத் தொழுகிறேன்.இப்போது நான் ஸ்ரீ அன்னையை லஷ்மி, மஹாசரஸ்வதியாக பூஜித்து வருகிறேன் என் முதல் கல்யாணம் பெற்றோர்களால் நிர்ணயிக்கப்பட்டு பம்பாயில் மே 94இல் நடந்தது. என் கணவர் குடும்பத்தினர்கள் கல்கத்தாவைச் சேர்ந்தவர்கள்.என் கணவர் ஹாங்காங்கில் வேலை செய்து கொண்டிருந்தார்.என் கல்யாணத்திற்குப் பிறகுதான் என் கணவர் ஒழுக்கம் கெட்டவர் என்பதை உணர்ந்தேன்.ஓர் ஒழுக்கம் நிறைந்த பக்தியுள்ள பெண்தான் கெட்டுப்போன தன் மகனைத் திருத்துவாள் என்ற நம்பிக்கையுடன்தான் இந்தக் கல்யாணத்தை என் மாமனார், மாமியார் எங்களை ஏமாற்றி நடத்தினார்கள்.ஹாங்காங்கில் என் வாழ்க்கை நரகமாக இருந்தது.

நான் மனதாலும், உடலாலும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தேன்.என் உயிருக்கே அஞ்சி, கடவுளை மட்டும் நம்பியே மூன்று மாதம் கழித்தேன்.ஹாங்காங்கில் உள்ள சில நல்ல மனிதர்களின் உதவியினால் நான் உயிர் தப்பி 18 செப்டம்பர்94-இல் பம்பாய் வந்து சேர்ந்தேன். 

நாங்கள் 26 அக்டோபர் 94-இல் கல்கத்தா சென்று என் கணவர் வீட்டிலிருந்து என் சாமான்களை பெறப் போயிருந்தோம். என்னுடன் என் அப்பா, என் அக்காவின் கணவர், என் அப்பாவின் cousin brother இருந்தனர்.அவர்கள் (என் in-laws) எங்களை அவமரியாதையுடன் பேசித் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.எனக்கு வாழ்க்கையே இருட்டறையாகிவிட்டது.அங்கு நாங்கள் என் cousin brother வீட்டில்தான் தங்கியிருந்தோம்.அவர்கள் அன்னை பக்தர்கள். என் கஷ்டத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அன்னையும், பகவான் ஸ்ரீ அரவிந்தருடன் இணைந்த போட்டோ ஒன்றை கொடுத்து எனக்காக அன்னைக்குக் காணிக்கையனுப்பி, மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டி முகவரி கொடுத்து அன்னையிடம் பிரார்த்திக்கும்படியும் அன்னை நிச்சயமாக அருள் புரிவாள் என்றும் ஆசீர்வாதம் பண்ணி வழியனுப்பினார்கள்.

நான் பம்பாய் திரும்பி வந்ததும் AGS ஆபீஸில் மறுபடியும் வேலைக்குச் செல்லத் தொடங்கினேன்.அன்னையின் டாலர் எப்போதும் என் கையில் வைத்திருந்தேன்.கல்யாணமாகி திரும்பி வந்த பெண்ணின் பெற்றோர்கள் எவ்வளவு மனம் தளர்ந்திருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை.இருந்தும் அவர்களும், என் வயதான பாட்டியும், என் அக்கா, என் அக்காவின் கணவர், என் தம்பி ஆகியோர் என்னுடன் உறுதுணையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் எல்லோரும் எனக்காக அன்னையை பூஜிக்கத் தொடங்கினார்கள்.அன்னைக்கு என் பேரில் பலமுறை காணிக்கை அனுப்பியுள்ளார்கள்.

நானும் என் மனக்குறையை வேறு யாரிடமும் சொல்லி அழாமல், அன்னையிடம் மட்டும் பகிர்ந்து கொண்டேன்.சொசைட்டிக்குப் பலமுறை லெட்டர் எழுதியிருக்கிறேன்.அவர்கள் உடனடியாகப் பதிலும் blessing packet-உம் தவறாமல் அனுப்புவார்கள்.Blessing packet-ஐ என் பக்கத்திலேயே வைத்திருப்பேன்.ராத்திரி பயத்தில் தூக்கம் வாராது.அன்னையின் blessing packet-ஐத் தலையணைக்கடியில் வைத்து அன்னையிடம் பிரார்த்திப்பேன். மெதுவாக, தூக்க மாத்திரைகளை discontinue பண்ணிவிட்டேன்.

மனநிலை சரியில்லாததால், என் வேலையில் concentration level மிகவும் குறைவாக இருந்தது.ஆனால், அன்னையின் அருளால், என் சிநேகிதிகளும், அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களும் எனக்கு மிகவும் உதவியாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்தனர்.

அன்னையின் வழிபாட்டில் ஒரு beauty என்னவென்றால், நமக்கு வேண்டாதவர்களை அன்னையே ஒதுக்கி வைத்து விடுவார்கள். என்னுடைய ex-principal, அவருடைய மகள், மாப்பிள்ளை ஆகியோர் அன்னையின் service centre-ஐ (என் ஆஃபீஸ் அருகிலேயே அமைந்திருந்தது) அறிமுகப்படுத்தினார்கள்.நான் தினந்தோறும் லஞ்ச் டைமில் அங்குச் சென்று தியானம் செய்தேன்."Mantras of the Mother''-உம், மற்றும் அன்னையின் பல புத்தகங்களும் வாங்கி வந்தேன்.இந்தப் புத்தகங்களையும், மலர்ந்த ஜீவியத்தில் வரும் அன்பர் கடிதத்தையும் விடாமல் தொடர்ந்து படித்து வந்தேன்.இந்தப் புத்தகங்களை அன்னையின் பல பக்தர்களுக்குப் படிக்கக் கொடுத்தேன்.

இனி ஒழுக்கமில்லாதவனுடன் சேர்ந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை என்பதாலும், ஹாங்காங் திரும்பிச் சென்றால் உயிருக்கே ஆபத்தென்ற நிலையில் நான் அன்னைக்குக் காணிக்கை செலுத்தி ஜனவரி 96இல் விவாகரத்து கேஸ் ஃபைல் செய்தேன். இதற்கிடையில், அப்பாவின் heart நிலைமை மிகவும் மோசமானது. இரண்டு வருஷமாக ஆஸ்பத்திரிக்கு அவ்வப்போது போய் விடுவார். அம்மா இந்தப் பெண்ணுக்கு விடிவு காலம் வரவேண்டுமென்று மனம் குன்றிப் போய் வாழ்க்கையில் விருப்பமில்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தாள்.இப்படிப் பலவிதமான பிரச்சனைகளுக்கிடையில், நாளை ஸ்ரீ அன்னைக்குச் சமர்ப்பணம் பண்ணி கடத்திக் கொண்டிருந்தேன்.

1996  ஜூலை 20 அன்று எனக்கு விவாகரத்து கிடைத்தது. அந்த லேடி ஜட்ஜ் முகத்தில் நான் அன்னையைக் கண்டேன். இல்லாவிடில் இவ்வளவு சீக்கிரம் exparte கேஸில் முடிவெடுத்திருக்க மாட்டார்கள், அதுவும் ஒரு party வெளிநாட்டில் உள்ளபோது.எனக்கு ஜீவனாம்ஸம் 3 லட்சம் என்று கோர்ட் நிர்ணயித்தது.ஏகப்பட்ட பண நஷ்டம், மனக்கஷ்டம் இருந்தபோதிலும், என் பெற்றோர்கள் அந்த நல்லொழுக்கமில்லாதவனின் பணமே நமக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.

ஆகஸ்ட் 8, 1996 அன்று அதாவது எனக்கு விவாகரத்து கிடைத்த சில நாட்களுக்குள், என் அம்மா கையில் வந்த ஒரு சின்னக் கட்டி டாக்டரின் கவனக்குறைவினால் பெரிதாகி காலமானார்கள்.எனக்கு ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால் நான் ஒரு கயவனிடமிருந்து விடுதலை அடைந்துவிட்டேன் என்ற திருப்தியில்தான் அம்மா உயிரை விட்டார்கள்.

என் பெற்றோர்கள் எனக்கு pillar of strength ஆக இருந்தனர். என் அம்மா திடீரென்று உயிர்விட்டது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.இருந்தாலும் மனதைத் தளர விடாமல், என் வயதான அப்பாவுக்காகவும், என் தம்பிக்காகவும் நான் ஆஃபீஸும், வீடும் மட்டும் கதியென்று என்று எண்ணி நாட்களை ஓட்டினேன்.

அன்னை பக்தர்களுக்கு விடிவு காலம் கண்டிப்பாக வருமல்லவா? கொஞ்சம் கொஞ்சமாக அன்னையின் அருள் காணத் தொடங்கியது.

Fifth pay commission அமல்படுத்தப்பட்டு, எனக்கு நல்ல சம்பள உயர்வு கிடைத்தது.

அடிக்கடி ஆஸ்பத்திரி போகும் என் அப்பாவின் உடல் நிலையில் மாற்றம் தெரிந்தது.

என் அக்கா கணவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது. நவம்பர் 17அன்று என் அக்காவுக்கு எட்டு வருஷங்களுக்குப் பிறகு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.அன்னையின் ஆசியால், என் தம்பிக்கு ஒரு பெரிய கம்பெனியில் நல்ல வேலை கிடைத்தது.

இவற்றையெல்லாம் விட ஒரு மகிழ்ச்சியான விஷயம், எனக்கு ஸ்ரீ அன்னை அருளியதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.எனக்கு பிப்ரவரி 10,2000 அன்று இப்போதைய கணவருடன் திருமணம் நடந்தது.இதில் என்ன ஆச்சரியமென்றால் என் கணவரின் பிறந்தநாளும் பிப்ரவரி 21ஆந் தேதிதான்! (அன்னையின் பிறந்த நாள்) ஒரு நல்ல கம்பெனியில் நல்ல பதவியிலிருந்தும் எளிமையான, தெய்வபக்தி, நாணயம், நேர்மை போன்ற அணிகலங்களைச் சூடும் ஒரு நல்ல மனிதர் எனக்குக் கணவராகக் கிடைத்தது அன்னையின் அநுக்கிரஹமன்றி வேறெதுவும் இல்லை. அன்னை எல்லோருக்கும் வழிகாட்டி.எவ்வளவு சோதனை வந்தாலும் அன்னையின் மீது பக்தி இருந்தால் நல்ல காலம் கண்டிப்பாக வரும். சோதனையின்போது மனதைத் தளரவிடாமல் இடைவிடாது அன்னையைப் பிரார்த்தனை செய்து வருமாறு நான் என் சகோதரிகள் மற்றும் சகோதரர்களிடம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.எல்லோரும் நலமாக வாழ நான் அன்னையிடம் பிரார்த்திக்கிறேன்.எனக்கு அன்னையை அறிமுகப்படுத்தியவர்களின் குடும்பம் மிகவும் சிறப்பாகவும், செழிப்பாகவும் வாழ நான் ஸ்ரீ அன்னை, பகவானிடம் பிரார்த்திக்கிறேன்.

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜீவியத்தை அறிந்து அதை நோக்கிப்போகும் சக்தி, அழைப்பு.

Comments

அன்பர் கடிதம்between paras

அன்பர் கடிதம்

between paras nos.4 and 5 extra space

Para No.5, line no.4 - in_laws - in - laws

Para No.7, line no.6 and 7 - extra space

Para No.11, line no.1 & 2 extra space

Para No.17, line no.2 & 3 extra space

Para No.18, line no.16 - அறிமுகப்படுத்திய வர்களின் - அறிமுகப்படுத்தியவர்களின்book | by Dr. Radut