Skip to Content

"அன்னை இலக்கியம்'' ரௌடியின் மனம்

இல. சுந்தரி

(டிசம்பர் 2000 இதழின் தொடர்ச்சி)

சொன்னாற்போல் டாணென்று 6 மணிக்குப் பாரதித் தெரு 68ஆம் நம்பர் வீட்டிற்கு முன் வந்துவிட்டான் கபாலி. அன்னை சக்தி செயல்படுவதால் நமக்கு முடியாதது அன்னைக்கு முடியும். அன்னை சக்தி செயல்பட புதிய கருவி தேவை. அது மனமாற்றம். மனமாற்றம் நேர்ந்தால் அதன் மூலம் அன்னை சக்தி செயல்பட்டு அற்புதங்களை நிகழ்த்தும்.

அந்த வீட்டின் முன்புறம் கார், ஆட்டோ, மோட்டார் பைக், சைக்கிள் என்று ஏகப்பட்ட வாகனங்கள். எளியோர், செல்வர் என்ற பாகுபாடின்றி பலர் உள்ளே சென்றனர். அங்கு தான் எப்படிச் செல்வது என்ற தயக்கம் கபாலிக்கு. இத்தனைக்கும் நீலாவின் அண்ணன் என்ற மரியாதைக்குப் பொருந்த நல்ல முறையில் வந்திருந்தான். யாரேனும் தன்னை இழிவாக நடத்தக்கூடுமோ என்று தயங்கி நின்றான்.

வாசல்புறம் இடையிடையே வந்து பார்த்தவண்ணமிருந்த நீலா இவன் வெளியே நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி பொங்க ஓடிவந்தாள். வா அண்ணே, நீ எங்க வராம போவியோன்னு பயந்தேன் என்றாள் நீலா. புதிய சூழல், இனிய வரவேற்பு. உள்ளே அழைத்துப்போனாள். இடப்புற மாடிப்படி வழியே மாடிக்குச் சென்றனர். அரசியல் கூட்டங்களும், சினிமா தியேட்டர்களும்தான் அவனுக்குத் தெரியும். நாகரிகம் தெரியாத மனிதர்களும், கெட்ட வார்த்தைகளும், பீடி, சுருட்டு நெடிகளும் பழகிப்போன அவனுக்கு இந்தச் சூழல் முற்றிலும் புதியது. ஒருவித தாழ்வுணர்வு மனதில் எழுந்தது. வா அண்ணே என்று உள்ளே பெரிய ஹாலுக்கு அழைத்துப் போனாள். இருபுறங்களிலும் வரிசை வரிசையாக இருக்கைகள், அவற்றுள் ஒன்றில் இவனை அமர வைத்துவிட்டு அந்தக் கும்பலில் ஒரு பெண்ணை அழைத்து வந்து கீதா! இவர்தான் எங்க அண்ணன் என்று அறிமுகப்படுத்தினாள். "வணக்கம்ங்க' என்று அன்புடன் கைகூப்பினாள் தோழி. பதிலுக்கு அவனும் பழக்கமில்லாத அந்தச் செயலைப் பணிவுடன் செய்தான். நீலாவுக்குப் பெருமையாக இருந்தது.

"அண்ணே நீ இங்கேயே உட்கார்ந்து எல்லாவற்றையும் கவனி. கூட்டம் முடிய 2 மணி நேரம் ஆகும். சொல்லாம போயிடாத. அம்மாகிட்ட உன்னோடு சேந்து வரேன்னு சொல்லிவிட்டு வந்திட்டேன்" என்றாள்.

பொன் விலங்கு பூட்டிவிட்டுப் போய்விட்டாள். முன்புறம் பெரிய மேடைபோன்ற அமைப்பில் பெரிய சோபாவில் இரண்டு படங்கள் தெய்வத்திற்கிணையாக வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் கண்ணுக்குச் ஜீவனோடு தெரிந்தார்கள். அவர்களுக்கு முன் வண்ண வண்ணப்பூக்களால் விதவிதமான அலங்காரங்கள் காணப்பட்டன. ஜாடிகளிலும், குவளைகளிலும் தாமரையும், அல்லியும் கொலு வீற்றிருந்தன. தென்னம் பூக்களும், எருக்கம் பூக்களும் கூட இடம் பெற்றிருந்தன. விதவிதமான பூக்களின் மணங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றின் நறுமணக் கலவை வேறு. மேலே நிமிர்ந்து பார்த்தால் மின்விசிறிகள் சுழன்றன. யாருமே பேசாமல் இருந்தது வியப்பாக இருந்தது. இங்கு என்னதான் நடக்கிறது? கல்யாண நிச்சயதாம்பூலமா? அப்படியும் தெரியவில்லை. உள்ளே வருகின்றவர் ஒவ்வொருவர் கையும் ஒரு பூவை கொண்டு வந்து மேடைமீது அலங்கரிக்கிறது. ஒவ்வொருவரும் சோபாவில் இருக்கும் படத்திலுள்ளவர்களை விழுந்து வணங்குகிறார்கள். எல்லோரிடமும் ஒரு சந்தோஷம். நட்புணர்வு காணப்படுகிறது. எந்த முகத்திலும் கோபமோ, வெறுப்போ காணப்படவில்லை. மொத்தத்தில் அமைதியும், ஆனந்தமும் அங்கே உற்பத்தியாவது போலிருந்தது.

மணி 6.30 ஆனதும் சின்னச்சின்ன ஓசைகள் கூட நின்று பெருத்த மௌனம் குடிகொண்டது.இதில் விசேஷம் என்னவென்றால் யாரும் யாரையும் கட்டுப்படுத்தவில்லை. அவரவர்களாகவே ஒழுங்கைக் கடைபிடித்தனர்.மேல்புறம் மைக் ஸ்டாண்ட் இருந்தது.வலப்புறத்தில் பேசுவதற்கேற்ப மைக் அமைத்திருந்தது.ஒரு பெண் வந்து இறைவணக்கம் பாடினாள். ஸ்ரீ அன்னை என்ற பெயரே இடம் பெற்ற பாடல் அது.மிக இனிமையாக இருந்தது.கன்னாபின்னா என்ற சொற்களும், வலிப்பு வந்தாற்போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் பாடல்களைக் கேட்டறிந்த அவனுக்கு இது புதிய பாடல்.மென்மையாக இதயத்தை மலர்த்தும் வண்ணமிருந்தது.திடீரென தான் பண்பாடு மிக்கவனாய் மாறினாற்போல் பெருமிதவுணர்வு எழுகிறது.வரும்போதிருந்த தன்னைப் பற்றிய தாழ்வுணர்வு கழன்று போனது.தானும் கண்ணியமானவனே என்று தன்னைப் பற்றிய நல்லெண்ணம் உண்டாகத் தன்னையறியாமல் மேடைமீதிருந்த திருவுருவங்களை நோக்கிக் கைகூப்பினான்.குதிரை வியாபாரியாய் சோமசுந்தரக் கடவுள் வந்தபோது பாண்டியமன்னன் தன்னையறியாமல் எழுந்து நின்றதாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது.அதுபோல்தான் கபாலி முன்னாலுள்ள திருவுருவங்களை அறியவில்லையெனினும் தொடர்புடைய ஆன்மா கண்டுகொண்டதால் தன்னையறியாமல் வணங்கினான்.முதலில் ஒருவர் ஆங்கிலத்தில் ஏதோ படித்தார். பிறகு ஒருவர் பேசினார்.பணிவு, நேர்மை, பக்தி என்றெல்லாம் பேசினார்.

எங்கெல்லாம் புதிய பாதை தென்படுகிறதோ, புது வழி உற்பத்தியாகிறதோ அங்கெல்லாம் அன்னையிருப்பதற்கு நியாயம் உண்டு.

பாரத்தை நாம் சுமப்பதற்குப் பதிலாக அன்னையிடம் கொடுத்துவிட்டால் இனி பாரம் நமக்கில்லை, அன்னை பாரத்தைச் சுமப்பதுடன் பிரச்சினையையும் தீர்ப்பார்.

கர்மத்தையே கரைக்கவல்லது அன்னையின் ஒளி.தன் குற்றத்தை உணர்ந்து திருந்த சம்மதித்தால், மனம் மாற ஒப்புக்கொண்டால், மனம் மாறியவிடத்தில் அன்னையின் சக்தி செயல்பட்டு அற்புதங்கள் நிகழ்த்தும் என்றெல்லாம் பேசினார்.கர்மத்தைக் கரைக்க ஏலாது என்று காலையில் அம்மா சொன்னபோது எதை மாற்ற வேண்டும், எதைக் கரைக்க வேண்டும்.நா மாத்துற வழியைக் காட்டுகிறேன் என்று நீலா கூறியது திடீரென நினைவில் வந்தது. தான் தன்னை மாற்றிக்கொள்ள முதன்முதலாக அவன் மனம் ஆர்வங் கொண்டது.மணி 7அடித்ததும் பேச்சு முடிந்தது. 1/2 மணி நேரம் தியானம் என்று அறிவிக்கப்பட்டது.தியானமா? அப்படியென்றால் என்ன?அதுபற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது. எல்லோரும் கட்டுப்பாடாக இருந்தது தெரிந்தது.சிலர் கண்ணை மூடித் தவம் செய்வோர்போல அமர்ந்திருந்தனர்.சிலர் மேடையிலுள்ள திருவுருவங்களையே நோக்கிய வண்ணமிருந்தனர்.இன்று தனக்கு ஏற்பட்ட அனுபவம் எத்தகையது?இது ஏன் நேர்ந்தது?நேற்றுவரை தன் செயல் என்ன, நிலை என்ன என்பதை அமைதியாக உணர முடிந்தது.வாழ்ந்தது சரியில்லை, என்று புரிந்தது.தான் மாறவேண்டும், மாறவேண்டும் என்றது மனம்.இது சூழலின் வலிமையா? இதுவரை உள்ளே கசப்பையும், வெறுப்பையும் மூடிய ஒரு கெட்ட சந்தோஷம் இருந்த இடத்தில் விடுபட்ட உணர்வும், நல்ல சந்தோஷம் ஊற்றெடுத்துச் சிறிதுசிறிதாக வளர்வது போலவுமிருந்தது. 1/2 மணி முடிந்தது.இதுவரை ஒலித்த ஓரிசை நிறுத்தப்பட்டது.இறுக்கமில்லாத ஆனந்தம் எல்லோரிடத்தும் தன்னிடத்தும் ஒரு மலர்ச்சி உண்டாவது போலுணர்ந்தான்.தன்னை நல்லெண்ணங்களால் யாரோ நிரம்பச் செய்வதுபோல் தோன்றுகிறது.

பேரமைதி கலைந்தது.சீரான மென்மையான ஒலிகள்.இளம் பெண்கள், இளம் ஆண்கள், நடுத்தர வயதினர், முதியோர் என்று வயது வித்தியாசமில்லாமல் ஒவ்வொருவரும் தம் பொறுப்பு என்ற உணர்வுடன் ஒவ்வொரு "டிரேயை'' எடுத்துக்கொண்டு வருகின்றனர். இருக்கையிலமர்ந்துள்ள ஒவ்வொருவர் முன்பும் மிகுந்த பணிவுடனும் இனிமையாகவும் டிரேயை நீட்ட (ஒன்று மலர்ப் பிரசாதம், ஒன்று இனிப்பு என்று) ஒன்றே ஒன்றை பணிவுடனும், பக்தியுடனும் இருக்கையிலுள்ளவர்கள் எடுத்துக் கொள்ள தானும் ஒன்று, ஒன்று எடுத்துக் கொண்டான். அதன்பிறகு அன்புடன் அளிக்கப்பட்ட சுவைப்பானத்தையும் பணிவுடன் ஏற்றான்.இவனும் ஒரு கப்பை தன் முறை வரும்போது எடுத்துக்கொண்டான்.தனக்குக் கூட அன்புடன், மரியாதையுடன் ஒன்றளிக்கப்படுவது இதுவே முதல்முறை. அம்மாவின் புலம்பல் கலந்த டீ.நாயரின் வெறுப்பை உள்ளடக்கி போலி மரியாதை கலந்த டீ.அவற்றை இப்போது ஏனோ மனம் எண்ணியது.கபாலி என்ற அந்த பழைய பாத்திரம் வெறுப்புக்கும், கசப்புக்கும் ஆளாகிய பாத்திரம் களிம்பு நீக்கி பாலிஷ் போட்ட புதுப் பாத்திரமாகிவிட்டதா?இதற்கு இங்கு கிடைக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் எது காரணம்?அங்கே எந்த இடத்தில் கபாலி புதிதாய்ப் பிறந்தான்?அங்கு அவன் ஆன்மா அடுத்த கட்ட ஜன்மத்தை ஏற்றது.

எல்லோரும் எழுந்து சென்று மேடைக்கு முன் விழுந்து வணங்கினர்.அனுபவமேயில்லாத செயல்.கபாலிக்கு வழியோடு போகும் சிறுவனை இழுத்து மிரட்டி வணங்கச் செய்யும் சுபாவம் அவனுக்கு.ஆனால் அந்தச் சுபாவம் இங்கு விழுந்துவிட்டது.அவனும் பணிந்தெழுந்தான்.படத்தில் வீற்றிருந்த தாய் எல்லோராலும் அன்னை என்றழைக்கப்பட்டவர் "எனக்கு நீயும் அன்புக்குரியவனே" என்பதுபோல் சிரித்தார்.இவனும் தன்னையறியாமல் சிரித்துக் கொண்டான்.ஒவ்வொருவரும் விடைபெற்றனர்.இவன் யாரிடம் விடை பெறுவான்?

இனிப்பு வழங்குவது, மலர்ப் பிரசாதம் வழங்குவது போன்ற பணிகளில் பம்பரமாய்ச் சுழன்ற நீலா, அன்னையை வணங்கிப் பிரசாதங்கள் பெற்று தோழியிடம் விடைபெற்றவள், "வா அண்ணே போகலாம்'' என்றாள்.மௌனமாக வந்தான்.நாயர் போலிமரியாதையுடன் நீட்டும் டீ கப்பும், சற்று முன் இவனும் நல்லவன், இவனும் மரியாதைக்குரியவன் என்றன்புடன் அளிக்கப்பட்ட சுவைப்பானமும் மாறிமாறி மனதில் தோன்றின.இந்த மரியாதையைத் தான் இனி நிரந்தரமாகப் பெறவேண்டும் என்றெண்ணினான். 

"தங்கச்சி இங்கு என்ன ஏது என்று சொல்லாம கூட்டி வந்தியே?'' என்றான்.

"இப்போது தெரிந்ததா என்னவென்று?" என்றாள்.

"ஏதோ ஒரு சாமியைக் கும்பிடற எடத்துக்கு வந்தோம்னு தெரியுது" என்றான்.

"ஏதோவொரு சாமியில்ல அன்னைன்னு பேரு".

"அவங்கள்ளாம் வேற மாதிரி சொன்னாங்களே?''

"மதர்ன்னு ஆங்கிலத்தில சொன்னாங்க".

"இப்பதான் புதுசா இந்த சாமியெ கண்டுபுடிச்சாங்களா".

"சாமி புதுசில்ல.கண்டுபுடிக்கத்தான் நாளாச்சு" என்றாள்.

"எனக்கொண்ணும் புரியல தங்கச்சி" என்றான்.

"ஒனக்கு ஒண்ணும் புரியாட்டி பரவாயில்ல.இப்போதைக்குப் புது சாமின்னு புரிஞ்சதே பெரிசு.கொஞ்ச கொஞ்சமா அதோட பவரை நீயே புரிஞ்சுக்குவ" என்றாள்."அங்க குடுத்த அன்னை படத்தைப் பத்திரமா சட்டைப் பையில வச்சுக்க.நம்பகிட்ட இருக்கிற கொறைய கண்டுபுடிச்சு அதை நல்லதா மாத்திட்டா போதும்.நாம கேட்டத தருவாங்க.தரலனா நமக்கு வேண்டாததைத் தரலன்னு புரிஞ்சுக்கணும்.நீ ஆசைப்பட்டது ஒங்க அக்கா மவ மல்லிகாவை கல்யாணம் கட்டறதுதானே.அது, நடக்கும்.கவலப்படாதே உனக்காக நானும் அதையே வேண்டறேன்" என்றாள்.

"அது சரி தங்கச்சி நா படிக்கல.நல்ல தொழிலும் பழகல.அது படிச்சிருக்கு.நல்ல வேலை பாக்குது.ஒரு தகுதியும் இல்லாத நா எப்படி அதைக் கட்டிக்கிடமுடியும்" என்றான்.

காலையில் "மாமன் என்ற மருவாத போறதா'' என்று ஆணவமாய்ப் பேசியவன் இப்போது தன் குறைகளை வெளிப்படையாய் ஒப்புக் கொண்டான்.இந்த மாற்றம் வியப்பளித்தது. 

"அண்ணே நீ ஒங்கொறய ஒத்துக்கறதே நல்ல குணம்தான். இப்படி ஒளிவுமறைவில்லாமல் தன்னை ஒத்துக்கறது அன்னைக்குப் புடிக்கும்.ஆனா அதை நெனச்சு வருந்தி நாம தாழ்ந்து போகக் கூடாது.நம்மால மாற முடியுங்கற நம்பிக்கையை வளத்துக்கணும். நாம அன்னையோட கொழந்தை.அவங்களுக்குப் பிரியமா நடக்க நாம முடிவு செஞ்சா தானே எல்லாம் மாறும்.உலகத்துல படிப்பால மட்டும்தான் உயர முடியுமா?பணத்தால மட்டும்தான் உயர முடியுமா? நல்ல பண்பால உயர முடியாதா?குணம்தான் பெரிசு.ஒங்கிட்ட உள்ள கொறையையெல்லாம் குணமா மாத்து.அப்புறம் பாரு.நீ எப்படி உயரப்போறேன்னு" என்று உற்சாகமாய்க் கூறி வந்தாள்.

இப்படியெல்லாம் தனக்கு எடுத்துச் சொல்ல ஒரு படிச்ச தங்கை கிடைச்சதே பெருமைதான் என்றெண்ணலானான்.

"நாளைலேர்ந்து பாரு தங்கச்சி ஒங்கண்ணன் புது கபாலியா இருப்பான்.இந்த எடத்துக்கு வந்து நல்லதெல்லாங்கேட்டு நல்லதெல்லாம் பார்த்தேன்.மனசே மாறிடிச்சு".

"அண்ணே திடீர்னு மாறரதுக்குள்ள ஒவ்வொத்தங்க ஒண்ணொண்ணு பேசி ஒன்ன கிளறுவாங்க.நீ எதுக்கும் பதறக்கூடாது.ரொம்பப் பொறுமையா நடந்துக்க.அன்னை சக்தி நமக்குத் தொணைவரத தடுக்க கோபம், எரிச்சல் எல்லாம் வரும். நாம ஏமாறாம இருந்து அதுங்கள ஜெயிக்கணும் - நாம சந்தோஷமா இருக்கும்போதுதான் அன்னையோட சக்தி நமக்குள்ள வரமுடியும்", என்றாள்.

திடீரென நீலாவே பெரிய குருவைப்போல தோண ஆரம்பிச்சது.

ஒருவனை அன்னையிடம் சேர்த்த மகிழ்ச்சி நீலாவுக்கு.

தொடரும்

************

Comments

"அன்னை இலக்கியம்'' ரௌடியின்

"அன்னை இலக்கியம்'' ரௌடியின் மனம்

Quotations are different.

Para no.5 - last 4 lines missing

para no.6 - after 2nd line extra space.

para no.6, line no.8 - வப்பு - வலிப்பு 

para no.9 - after 2nd line extra space 

para no.9, line no.18 - வமையா? - வலிமையா?

para no.10, after line no.7 - extra space

para no.12, line no.4 -  போம ரியாதையுடன் - போலி மரியாதையுடன்

after para no.12 - extra space.

after para no.16 - extra space.

para no.19, line no.1 -கபா-யா - கபாலியா

 book | by Dr. Radut