Skip to Content

அன்பர் உரை

 

நம்மிடம் சின்சிரிட்டியும், நம்பிக்கையும், பரிசுத்தமுமிருந்தால்,   அன்னையிடமிருந்து நாம் பெற்ற நல்லது நம்மை விட்டுப்போகாது, நம்மிடமிருந்து விலகிய கெட்டது மீண்டும் நம்மை நோக்கி வாராது

(28.3.99  அன்று  சென்னை-பெரம்பூர்  "ரிஷி  இல்லம்''  தியான மையத்தில்  திருமதி  ரேவதி சங்கரன்  நிகழ்த்திய  உரை)

  • அன்னை அருளால் பெறுவது நம்மை விட்டுப் போகாது.
  • சத்திய ஜீவியத்தால் குணமாகும் வியாதி மீண்டும் வாராது.
  • ஒரு பிரச்சினையைப் பிரார்த்தனையால் மட்டுமன்று, மனமாற்றத்தாலும் விலக்கினால் அது மீண்டும் வருவதில்லை.
  • பிரச்சினை  தீரும்பொழுது ஜீவியம் எழுந்தால் பிரச்சினை திருவுருமாறி  வாய்ப்பாகும்.
  • அன்னை அருள் முழு நம்பிக்கையுள்ள இடத்தில் நேரடியாகச் செயல்படும்.
  • நம்பிக்கை எதிலிருக்கிறதோ (2-ஆம்  மனத்தில் நம்பிக்கை இருக்கும்) அதன்   மூலமாக அருள் செயல்பட்டால், கிடைப்பது  அப்பொழுதுள்ள   பிரச்சினையைத் தீர்க்கும். நிலையாக இருக்காது.
  • அருள் மனம், உடல், உணர்வு, சூழல், சந்தர்ப்பம் ஆகிய எதன்  மூலமாகவும்  செயல்படும்.
  • நல்லதைப் பெறுவதற்குள்ள சட்டமும், கெட்டதை விலக்குவதற்குள்ள  சட்டமும்  ஒன்றே. 

கட்டி உடைந்தால் துடைத்துக் கட்டுப்போடும் பொழுது, அது மீண்டும்     வருவதுண்டு. கட்டியினுள்  உள்ள முளையை அகற்றிவிட்டால், அது மீண்டும்   வாராது. முளையிருந்தால் அது மீண்டும் வரும். மனப்பாடம்  செய்தால் மார்க்  வரும், பாடம் வாராது. ஒருமுறை பாடம் புரிந்தால் அது மனதை விட்டகலாது.

ஒரு முக்கியமான வேலைக்குப் போகும்பொழுது கோபம் வரக்கூடாது என   முயன்றால், அது வருவதில்லை. பிரார்த்தனை செய்தாலும் வருவதில்லை. நம்   முயற்சியும், பிரார்த்தனையும் அச்சந்தர்ப்பத்திற்குரியன. நம் குணத்தின் வேரைத் தொடுவதில்லை. கோபத்தின் வேர் உணர்வின் இயலாமை. பிரார்த்தனை அந்த ஆழத்தைத் தொட்டால் அருள் அங்குச் சென்றால் கோபமும், கோபப்படும் குணமும், கோபத்தின் சந்தர்ப்பங்களும், வேரும் அறுந்து போகும். இனி கோபம்  வாராது.

ஒரு வீட்டில் களவு  போனால் திருடனைப் போலீஸ்காரன் பிடிக்கின்றான்.  அத்துடன்  ஊரில்  திருடு  நிற்பதில்லை. திருடன்  ஒரு கூட்டத்தில் ஒருவன்.    மற்றவர்கள் திருடுவார்கள். அந்தக் கூட்டத்தையே பிடித்து ஜெயிலில் போட்டால்,  அவர்கள் விடுதலையடையும் வரை அவர்களால் திருட  முடியாது. விடுதலை பெற்றபின் திருட்டு ஆரம்பமாகும். அவர்களுக்கு வேலை கொடுத்தால், வாழ்நாள்  முழுவதும் திருடும் தொழிலை விட்டுவிடுவார்கள். திருடுவது தவறு என்று   அவர்கள் மனம் மாறினால் இனி அவர்களால் திருட முடியாது. அவர்கள் திருடாவிட்டாலும்,  மற்றவர்கள் திருடுவார்கள். உலகம் திருட்டை விட்டுவிட்டால்,  இனி திருட்டு  இருக்காது. எந்த நிலைக்குப் பின்னாலும்   வேறொரு நிலையிருப்பதைப்போல் ஜீவனிலும் பல நிலைகள் உண்டு.

அருளை நாம் கடைசி நிலையில் பெற்றால் அதன் மூலம் வருவது போகாது.    அதனால் விலகுவது திரும்ப வாராது. அதற்கு முன் நிலைகளில் அருளைப்   பெற்றால் அதன் பலன் குறைந்திருக்கும். மேல்மனம், மனம், உணர்வு, உடல்,  ஜீவன் என்ற பல நிலைகளில் ஜீவனில் அருளைப்  பெறலாம். அதிலும் ஜீவனில் ஆன்மா விழிப்படைந்த நிலையே முடிவான நிலை.

அன்னை sincerity உண்மை என எதைக் குறிப்பிடுகிறார்கள்? இதை  இருவகைகளாகச் சொல்லலாம். முதல்வகை முன்பு கூறியது. கடைசி நிலையில் அருளைப் பெறுவது sincerity எனப்படும் வகையாகச் சொன்னால்,

  • நாம் விரும்புவதை அன்னை செய்ய வேண்டும் என்பது ஆசை.
  • அன்னை விரும்பும்படி நாம் நடக்க வேண்டும்  என்பது sincerity உண்மை.

பிடிவாதம்,  உறுதி

நல்லதை வலுவாகப் பிடித்துக்கொள்வது firmness உறுதி. கெட்டதை வலுவாகப்  பற்றுதல் stubbornness பிடிவாதம்.

லஞ்சம் வாங்க மாட்டேன், காப்பியடிக்க மாட்டேன் என்பது உறுதி எனப்படும்.  சூதாட்டத்தை விடமாட்டேன், குடிப்பதை நிறுத்த மாட்டேன் என்பது பிடிவாதம்   எனலாம். நல்லது, கெட்டது போக இதில் வேறோர் அம்சமும் உண்டு.

நான்  இளைஞனாக இருக்கும்பொழுது ஷர்ட் என்றால் முழுக்கைச் சட்டை. அதன்  பின் ஸ்டைல் மாறி அனைவரும் slack shirt போடுகின்றனர். என்னைப்  போன்றவர்கள் அனைவரும்  என் ஆபீசில் ஷர்ட்டை  மாற்றிவிட்டனர். நான்   மட்டும்  மாற்றவில்லை என்றால், என்னால்  பழக்கத்தை மாற்ற முடியவில்லை.  உடல்  (physical)  ஒன்றைக் கற்றுக் கொண்டால் பிறகு மாறாது, அதனால் மாற முடியாது. அதே போல் உணர்வுக்கும் பழக்கம் உண்டு. நான்  படித்துப் பட்டம்  பெற்று பெரிய வேலையிலிருக்கிறேன். என் பால்ய நண்பன் 5 ஆம் வகுப்போடு நின்று  கடையில் வேலை செய்கிறான். இன்று நான் ஊருக்கு வந்தால் என்னுடன் எல்லா இடங்களுக்கும் வருவான். பால்ய  நட்பு. எனக்கு  விஸ்வாசம் அதிகம். நான்  டாக்டர், வக்கீல், பிரின்ஸ்பால் வீட்டிற்குப் போனால் உடன் வருவான், குறுக்கே பேசுவான். மானம் போகும். விடமுடியவில்லை என்பது உணர்வின் பழக்கம். நான் என் மதக் கோட்பாடுகளை இளம் வயதில் தீவிரமாக ஏற்றவன். அவற்றுள் ஒன்று வட்டி பெறக் கூடாது என்பது. இன்று என்னிடம் ஏராளமாகப் பணமிருக்கிறது. பாங்கில் போட்டால் வட்டியுண்டு. அதை என் அறிவு தவறில்லை எனக் கூறுகிறது. ஏற்றுக்கொண்ட மதக் கோட்பாடு மனத்தில் தடையாக இருக்கிறது. விட முடியவில்லை.

உடலின் பழக்கத்தில் விட முடியாதது பிடிவாதம். உணர்வின் பழக்கத்தில்  விட  முடியாதது பற்று. அறிவின் அபிப்பிராயத்தில் விட முடியாதது opinion, அபிப்பிராயம்.

இவற்றிற்கு அடுத்த உயர்ந்த நிலை ஆன்மா. என் வீட்டார் கேஸ் நடத்தியபொழுது கோர்ட்டில் கூண்டிலேறி ஒரு பொய் சொல்லச் சொன்னார்கள். என் ஆன்மா   மறுத்தது. நான் உண்மையைச் சொல்லிவிட்டேன்

பிடிவாதம், பற்று, அபிப்பிராயம் ஆகியவற்றைப் பிடிவாதம் என்ற    தலைப்பிலும், ஆன்மாவுக்கு உண்மையாக இருப்பதை உறுதி னவும்  நாம்  கூறலாம்.

ஆன்மாவுக்கு உண்மையாக இருப்பதை அன்னை sincerity உண்மை என்கிறார்.

நாம் ஆன்மாவுக்கு உண்மையாக  இருக்கும்பொழுது அருளால் பெறும் நல்லது  நம்மை  விட்டுப் போவதில்லை. அந்நிலையில்  நாம் விலக்கியது  திரும்ப  வருவதில்லை.

அன்னை  புதுவை  வந்த காலத்தில் மழைக்காலத்தில் புயல் தவறாமல் ஒரு  முறை அல்லது இரு முறை வரும். நாளாவட்டத்தில் அது குறைந்து வந்தது.  புயலால் பாதிக்கப்பட்ட  அன்பர்கள் அன்னை அருளால் புயலை விலக்க முயன்றனர். அது பலித்தது. ஆண்டுதோறும் புயல் அறிவிக்கப்பட்டால், அவர்கள்  தொழில் புயலால் பாதிக்கப்படுவதால் அவர்கள் அருளை அழைப்பார்கள். கடந்த 38 ஆண்டுகளில் ஒரு முறை தவிர புயல் அவர்கள்  தொழிலைப் பாதிக்கவில்லை.  ஒரு முறை பாதித்தது 1972இல், அதன்பின் 25 ஆண்டுகளாக அது வரவில்லை.  போனது  திரும்ப வரவில்லை எனில் அன்பர்கள்  அருளைச் சூழ்ந்து ஜீவனில்    பெற்றுள்ளனர், sincere  ஆக அன்னைக்கு வேலை செய்தனர் எனப்  பொருள்.

டாக்டரிடம் போய் சர்க்கரை வியாதி என்றால் தகப்பனாருக்கு இருந்ததா என்கிறார். தலைமுறை தலைமுறையாக வியாதி தொடர்கிறது. வாழ்க்கையை   ஆரம்பித்தவுடன் கடனாளியாகிவிட்டான் எனில் அவனுடைய தகப்பனார்  கடன்காரர் எனப் பெயர் வாங்கியவர். மகனும் அப்படியிருக்கிறான் என்பார்கள்.  குடும்பத்தில் சச்சரவு போய் சுமுகம் வந்தால் அதே சச்சரவு ஆபீசில் வருகிறது. அங்கிருந்து அது போனால் அது நண்பரிடையே வருகிறது. இப்படியிருந்தால்  மனம் சச்சரவை விடவில்லை எனப்  பொருள்.

தொழிலில் கஸ்டம்ஸ் டிபார்ட்மெண்ட் தொந்தரவு அடங்கியபின் இன்கம்டாக்ஸ்   தொந்தரவு வருகிறது. அது போனபின் சேல்ஸ் டாக்ஸ்காரன் வருகிறான் எனில் நம் கணக்குச் சரியில்லை எனலாம். ஓருமுறை  தொந்தரவு  வந்தவுடன் எல்லாக்  கணக்குகளையும் சரி செய்தவருக்கு அதன்பின் வருமான வரியோ, எந்த சர்க்கார் இலாக்காவோ தொந்தரவு தாராது.

Cold war முடிந்தவுடன் உலகம் பெருமூச்சு விட்டது. இராக்கிலும், ஆப்பிரிக்காவிலும், பாஸ்னியாவிலும் ஆக 28 இடங்களில் உள்நாட்டுப் போர் தொடங்கின. உலகயுத்தம் வரும் சந்தர்ப்பம் மறைந்தாலும், அடுத்த நிலையில் போர் என்பது மறையவில்லை என்றனர். ஜனநாயகம் ஒரு நாட்டுக்கு   வந்துவிட்டால் அந்நாடு அதன்பின் போரை நாடுவதில்லை. அது முடிவான தீர்வு.  அதுவும் பொருளாதார முன்னேற்றமும், ஜனநாயகத்துடன் வந்துவிட்டால் அந்நாடு போரை மறந்து விடுகிறது.

  • நமக்குப் பிரச்சினை தலைக்கு மேல் வந்துவிட்டால் பகீரதப் பிரயத்தனம்   செய்கிறோம், பல சமயங்களில் தீரும். அட்மிஷன் வாங்க பெரியபாடு எனில் அது  குடும்பத்தை விட்டுப் போகாது. திரும்பத்திரும்ப ஏதாவது ஒரு அட்மிஷனுக்குப் பாடுபட வேண்டியிருக்கும்.
  • நாம் சிபார்சால் அட்மிஷன் பெற்றாலும்,  மார்க்கால் பெற்றாலும், பணத்தால் பெற்றாலும், அப்பிரச்சினை ஏதாவது ஒரு வழியாக வந்தபடியிருக்கும்.
  • ஏதோ ஓர் அட்மிஷன் அன்னையை மட்டும் நம்பிப் பெற்றவர் வீட்டில்  அதன்பின் அட்மிஷன் பிரச்சினை இருக்காது.
  • பொறாமையால் அன்பர் மீது பொய் கேஸ் போட்டனர். ஒன்று போய் அடுத்தது வந்தபடி பல ஆண்டுகளிருந்தது. வக்கீலும், மற்றவர்களும், ஆபீஸில்   உள்ளவர்களும்  "இக்காலத்தில் நேராகப் போனால் கேஸ் நிச்சயமாகத்  தோற்கும்''  என்றனர்.  அன்பர் உறுதியாய் அன்னையை  மட்டும் நம்பி உண்மையைக் கடைப்பிடித்தார். ஒவ்வொன்றாய் எல்லாக் கேஸ்களும்  ஜெயித்தன. அதன்பின் வருஷம் 20 ஆயிற்று. அதன்  சுவடேயில்லை.
  • கணவனும் மனைவியும் சண்டை போடாத நாளில்லை என்ற வீட்டில் நிலைமை மாறி ஒரு மணி தவறாமல் சண்டை என்ற நிலை ஏற்பட்டது.

- இவர்களுள் ஒருவர் அன்பர்.

-முதலில் சண்டை போய் சுமுகத்தை நாடி பிரார்த்தனை செய்தார்.

- சண்டை குறைந்தது.

- பின், இவரால் சண்டை வருவதில்லை என்றாயிற்று.

- அதன்பின் சுமுகம் வளர்ந்தது.

- அடுத்தாற்போல் இவர் உள்ள இடத்தில் சண்டையில்லை என்ற நிலை.

- சண்டை போடுபவர்கள் இவரிடம் வந்து சண்டையைத் தீர்த்துக் கொண்டனர்.

- சண்டையை விட்டதுடன், சண்டைக்குக் காரணமான  குணத்தையும் விட அவர் முயன்றார். பாதி வெற்றி கிடைத்தது.

-குணத்தை அடியோடு அழிக்கவும், அதன் உற்பத்தி ஸ்தானமான ego அகந்தையை அழிக்கவும் முயன்றார் .

- அகந்தை அழிந்தால் sincerity ஏற்படும். சண்டைபோனால் திரும்ப வாராது.

 ****** 

ஸ்ரீ  அரவிந்த  சுடர் 

அன்னை நினைவுடன் ஒரு காரியத்தை ஆரம்பித்தால் அதே நினைவுடன் அதைப் பூர்த்தி செய்யவேண்டும்.

 

********

 

Comments

அன்பர் உரை   Para 25 - Line 2

அன்பர் உரை
 
Para 25 - Line 2 - இடங்கüல் - இடங்களில்

motnir



book | by Dr. Radut