Skip to Content

அன்பர் கடிதம்

அன்னையின் அருளைப் பெண்ணின் திருமணத்தில் பார்த்ததைத் தெரிவிக்கும் கடிதம்:

அன்னைக்கு வந்தனம்.

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஒரு நாள் ஒரு பற்று ஏற்படுகிறது. அவ்வாறே என் வாழ்விலும் அன்னையை நினைத்து வழிபடும் நேரம் வந்துவிட்டது.

நான் என் பெண்ணிற்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள தியானமையத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது. அன்று மாலை நான் என் குடும்பத்தாருடன் சென்று வணங்கினேன். என்னுடைய மனைவி ஏற்கனவே சிறிய வயதில் பாண்டிச்சேரியில் அன்னையை நேரில் பார்த்திருந்ததால் அங்குள்ளவர் அவளிடம்  மிகுந்த பிரியத்துடன் பழகினார்கள்.

பிறகு ஒரு நாள் நானும் என் பெண்ணும் ஓர் ஊருக்குப் பயணம் செய்யும்போது "அருளமுதம்'' புத்தகம் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதுவே எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனால் மேலும் அன்னையின்மேல் அதிகப் பற்று ஏற்பட்டது. உடனே தினமும் தியானத்தில் ஈடுபட்டு அன்னையிடம் என்னுடைய வேண்டுதல்களை மனதாரச் சமர்ப்பித்தேன்.

சில நாட்களில்  ஒரு ஜாதகம் எனக்கு வந்தது. அதை எடுத்துக்கொண்டு நானும் என் மனைவியும் தியானமையத்துக்குச் சென்று அன்னையிடம் வைத்து வேண்டினோம். அடுத்த நாளே நாங்கள் ஏற்கனவே பார்த்துக்கொண்டிருந்த வரன்களில் இருந்து ஒன்று (திருச்சி) ஜாதகம் சேர்ந்திருப்பதாகச் செய்திவந்தது. மேற்கொண்டு கடிதப்போக்குவரத்துகளில் அவர்கள் பெண்ணுடைய photo அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்கள். பிறகு பெண் பார்க்கும் நிகழ்ச்சி முடிந்து நிச்சயதார்த்தம், முகூர்த்தத்திற்கும் நாள் பார்க்கச்  சொன்னார்கள். இவையனைத்தும் அன்னையின் அருளினால் நடைபெற்றன.

உடனே நாங்கள் பார்த்த முகூர்த்த தேதியில் கல்யாண மண்டபம் எங்கள் colonyயிலேயே கிடைக்க அன்னையைப் பிரார்த்தித்தேன். அதன்படியே அந்த நாட்களில்  கல்யாண மண்டபம் காலியாகக் கிடைத்தது. உடனே மண்டபம் book பண்ணினோம்.

மேற்கொண்டு ஒவ்வொரு காரியத்திலும் ஜவுளி, பத்திரிகை அன்னையை வேண்டி ஆரம்பித்தோம். ஒவ்வொன்றாக எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் நன்றாக நடைபெற்றது. கல்யாணத்திற்குச் சில நாட்கள் முன்பு சரியான மழை பெய்தது. இருந்தும் அன்னையின் அருளால் சுமங்கலி  பிரார்த்தனை, சமாராதனை போன்ற சுபகாரியங்கள் நன்கு நடைபெற்றன. கல்யாணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக  மழை நின்றுவிட ஆரம்பித்து கல்யாணத்தன்று முற்றிலுமாக நின்றுவிட்டது. கல்யாணமும் மிகச்சிறப்பான முறையில் ஒவ்வொருவரும் பாராட்டும்வண்ணம் அமைந்தது. எத்தனையோ நண்பர்கள் நல்லமுறையிலும் எங்களுக்கு அன்னையின் அருளால் உதவி புரிந்தார்கள்.

தற்போது என் பெண்ணிற்குத் தனிக்குடித்தனமும் வைத்துவிட்டோம். நல்லமுறையில் வாழ அன்னையைப் பிரார்த்தித்து என்னுடைய வந்தனங்களை அன்னைக்குச் சமர்ப்பித்து இச்செய்தியைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

நம்பாதவருக்கும் செயல்பட்ட அன்னையை பற்றிக் கூறும் கடிதம்:

சமீபத்தில் என் இரண்டாவது மகன் M.Sc முடித்து Ph.Dக்குப் பல இடங்களில் அவன் விரும்பும் Nuclear Physics subject க்கு விண்ணப்பித்தான். நெல்லை மனோன்மணியம் university யிலும் போட்டிருந்தான். கல்கத்தாவில் முயற்சி செய்யச் சென்றவன் இங்குள்ள அவனுடைய professor seat கிடைக்கும், உடனே புறப்பட்டு வா என்று சொன்னதன் பேரில் உடனே வந்தான். ஆனால் seat கிடைக்கவில்லை. ஒரு மாதத்திற்கும் மேல் ஆயிற்று. தினமும் சாப்பிடாமல் இராப்பகலாக university யில் senior களுக்கு உதவி செய்து சோர்ந்து வருவான். இவனுக்கு அவன் அப்பாவும் ஒரு உதவியும் புரியவில்லை. இவன் அப்பா வந்து சொன்னால் guide seat தருவார், என்னை ignore செய்கிறார் என்று கோபப்பட்டான். அவன் அப்பா இத்தனைக்கும் professor.  ரொம்ப முற்றி வீடே ரணகளமாகிவிட்டது. எனக்கு அவனுடைய திறமைக்கு எப்படியும் கிடைக்கும் என்றதால் முதலில்  கவலைப்படவில்லை. அவன் ஒரு நாள் நான் படிப்பை, பட்டத்தை வீசிவிட்டு வேலைக்குச் செல்கிறேன் என்று ரொம்ப நொந்து அழுதான். அவன்கூடப் படித்தவனுக்கு seat கிடைத்து stipend உடன் சேர்ந்து ஒரு மாதமாகிவிட்டது. இவனுக்குக் கல்கத்தா சீட்டும் இல்லாமல், இதுவும் கிடைக்காமல் போய்விட்டதே என்று ஒரே அழுகையாக வந்தது. நான் இதுவரை என் மற்ற பிள்ளைகளுக்கு அன்னையை வேண்டி, காணிக்கை செலுத்தி அன்னை அருள் கிடைக்கப்பெற்றேன். இவனுக்கு இதுவரை செய்யவில்லை. ஏனெனில் அவன் தீவிர இந்து. நம்பமாட்டான். அதனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அன்னையை மனமுருக வேண்டி, காணிக்கை அனுப்பினேன். 3ஆம் நாள் ரசீது கிடைத்தது. காணிக்கை அனுப்பிய அன்றே அவன் அப்பா முயன்று seat க்கு ஏற்பாடு நடந்தது. 4ஆம் நாள் order நேரே வந்துவிட்டது. அவன் மறுவாரம் join செய்தான் சந்தோஷமாக. என்னே அன்னையின் அருள். நான் மெய் சிலிர்துவிட்டேன் நம்பாதவருக்கும் அவர்கள் திறமையின் மூலம் செயல்பட்டு அன்னை அருள்புரிவார் என்று நான் படித்த வாசகங்கள் நிரூபிக்கப்பட்டன கண்டு அப்படியே என் மனம் உருகிவிட்டது. தாயினும் சாலப்பரிந்த அன்னையின் திருவடிக்கு நெஞ்சாரக் கைகூப்பி நன்றி சொன்னேன்.

*******



book | by Dr. Radut