Skip to Content

10. அன்னை இலக்கியம் - பார்வைகள்

அன்னை இலக்கியம்

பார்வைகள்

(ஆகஸ்ட் 2014 இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

சென்ற அத்தியாயத்தில் ...

பூரணி ஆன்மீக லட்சியங்களும், நல்ல குணங்களும் கொண்ட இளம்பெண். அவளது தாய் செல்வத்தையும், செல்வாக்கையும் பொதுவாக பெண்கள் செல்ல விரும்பாத வழியில் சென்று ஏராளமாக சம்பாதித்தவள். தன் பிரிய மகளான பூரணியும் செல்வத்தோடும், செல்வாக்கோடும் வாழ வேண்டும் என நினைக்கிறாள். ஆனால் தாயின் வார்த்தைகளை பூரணி ஏற்க மறுக்கிறாள். தன் வாழ்வின் பொருளை அறியும் ஆன்மீக ஆர்வம் பூரணியின் இதயத்தில் காட்டுத்தீயாகப் பற்றி எரிகிறது. ஒரு மழை நாளில் அறிமுகமில்லாத வாலிபனுக்கு உதவுகிறாள். அவனோடு காரில் பயணம் செய்யும்போது தன் ஆன்மீக ஆர்வத்தைப் பற்றி அவனிடம் பேசுகிறாள்.

இனி...

******

18. துரியபுத்திரனின் பார்வை

என் பெற்றோர் எனக்கிட்ட பெயர் துரியபுத்திரன் அல்ல. நான் மறுபிறவி எடுத்ததாக உணர்ந்த தினம் என் பெயரை துரியபுத்திரனாக நானே மாற்றிக் கொண்டுவிட்டேன்.

எந்த யோக சாதனையும் மறுபிறப்பு எடுப்பதுதான். மனோமயமாகிவிட்ட சாதாரண ஜட வாழ்விலிருந்து உயர்ந்த அசாதாரணமான ஆன்மீக போதத்தில் நுழைவது மறுபிறப்பின்றி வேறென்ன? ஆன்மீக வாழ்வு அவசியம் என்று உறுதியாக நம்புகிற எவருக்கும் யோகம் அழைப்பு விடுத்து தன் கதவுகளை அகலத் திறந்து வரவேற்று மறுபிறப்பு தரும்.

யோக மாளிகையின் முகப்பறை நோக்கிய முதல் பயணத்திற்கான அழைப்பும், பாதையும் அவரவர் சுபாவத்திற்கேற்றபடி அமைகின்றன. அனைவருக்கும் பொதுவான வழி என்று எதுவுமில்லை. இயல்பான அகவளர்ச்சி மூலம் எதுவும் அறியாமலே யோகத்தை நாடலாம். மதம், தத்துவம், மனத்திற்கு பிடித்த மனிதர் தரும் அகத்தூண்டல் யோக அழைப்பாக மாறலாம். பக்கத்திலிருக்கும் யோகியோடு பழகிக் கொண்டே இருப்பதாலோ, தொலைவில் இருப்பவரைப் பற்றி நினைத்துக் கொண்டே இருப்பதாலோ, காதில் விழுந்த ஒற்றை சொல்லாலோ, பல்லாயிரம் பக்கங்களை வாசித்து யோசித்ததாலோ, மின்னலென வாழ்வு தந்த அதிர்ச்சியாலோ, மலரிதழ் விரிவது போல மெல்ல மெல்ல பெற்ற அனுபவத்தாலோ ஆன்மீக ஆர்வம் உண்டாகலாம். ஒரே ஒரு சொல், ஒரே ஒரு செயல், ஒரே ஒரு எண்ணம் கூட அழைப்பிற்குக் காரணமாக ஆகலாம். அதையே பூரணியிடம் கூறினேன்.

யோகப்பாதையில், ஆன்மீகவழியில் தான் செல்ல ஆர்வம் கொண்டிருப்பதாக பூரணி போன்ற இளம் பெண்ணொருத்தி கூறியதைக் கேட்டு திகைத்தேன். ‘அழைப்பு எந்த ரூபத்திலும் வரலாம். அதை ஏற்று ஆன்மீக வாழ்விற்காக பூரணமாக சுயார்ப்பணம் செய்பவர் மட்டுமே பாதையில் தொடர்ந்து செல்ல முடியும். அந்த சுயார்ப்பண கணம் மானுடத்தின் மகத்தான கணம். அதைச் செய்யாவிட்டால் முழு வெற்றி கிடைக்காது. பல நாட்கள் தியானம் செய்வதாலோ, பல நூறு கருத்தரங்குகளில் பங்கெடுப்பதாலோ, ஆயிரமாயிரம் பக்கங்களை அறிவுபூர்வமாகக் கற்று எழுதுவதாலோ முன்னேற்றம் வந்துவிடாது. எதை நாடுகிறோமோ அது மட்டுமே சுவாசக்காற்றாக, இதயத்துடிப்பாக மாற வேண்டும். இறைவனை நாடுபவர் இறைவனை மட்டுமே நினைத்து, இறைவனை மட்டுமே உணர்ந்து, இறைவனுக்காக மட்டுமே செயல்பட்டு, இறைவனுக்காகவே வாழ வேண்டும்’ என்றேன்.

‘அப்படி வாழ்ந்தால் இறைவனாகவே மாறி விடலாம். காதலன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த காதலி கதவோடு சேர்ந்து கதவாகவே மாறிவிட்டாளாம்’ என்று கூறி சிரித்தாள் பூரணி.

‘உடனே புரிந்து கொண்டுவிட்டீர்கள். ஆணைவிட பெண்ணுக்கு யோகம் செய்யும் பக்குவம் அதிகமாக இருக்கிறது’ என்றேன்.

‘அதனால்தான் ஆண்கள் பெண்களை யோகம் செய்யக் கூடாது என்கிறார்களோ?’ என்றாள் பூரணி. ‘சிலகாலமாகவே ஆன்மீக சிந்தனைகள் எழுந்தாலும், இன்று காலையில்தான் ஆன்மீக வழியில் மட்டுமே என் வாழ்க்கையைச் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்தத் தீர்மானம் மனதை நெகிழ வைத்தது. உங்கள் சந்திப்பு என் முடிவை ஆசீர்வதிப்பது போலிருக்கிறது.’

‘தீவிரமான தாக்கத்தால் திடீரென யோகத்தை நாடியிருந்தாலும், ஆர்வமும், தீர்மானமும், சுயார்ப்பணமும் முழுமையாக இருந்து விட்டால் ஆன்மீகப் பயணத்திற்குத் தடையெதுவும் இருக்காது. பூரணி, நீங்கள் ஏற்கனவே ஆன்மீகப் பாதையில் காலடி எடுத்து வைத்து விட்டீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது’ என்றேன்

‘எனக்கு அப்படித் தோன்றவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறேன்’ என்றாள் பூரணி.

‘ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். மனித குருவை இன்னும் சந்திக்கவில்லை என்றாலும் ஆர்வமுள்ள மனிதரை அககுரு விழிப்போடு வழி நடத்துவார்’ என்றேன்.

‘ஆனால், என் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆன்மீக ஆர்வத்திற்கு எதிரானவையாக இருக்கின்றன’ என்றாள் பூரணி.

‘தீவிரமான ஆன்மீக அனுபவம் கிடைத்துவிட்டால், அதன்பின் உங்கள் பயணத்தை எந்த சந்தர்ப்பத்தாலும் எந்த சூழ்நிலையாலும் தடை செய்ய முடியாது. கேள்விகள் எழுந்தால் தான் ஆர்வம் பிறக்கும். ஆர்வமிருந்தால்தான் பாதையைத் தீர்மானிக்க முடியும். முடிவெடுத்தபின்தான் சுயார்ப்பணம் செய்ய முடியும். சுயார்ப்பணம் செய்யும்போதுதான் ஆன்மீக அனுபவங்கள் உங்களைத் தேடிவரத் தொடங்கும். அகம் இடைவிடாமல் முயன்றால் சுபாவத்தின் தடை கூட விலகிவிடும். சூழ்நிலைத் தடைகள் நீரலையில் தோன்றும் நீர்க்குமிழிகளைப் போல மிகச் சிறியவை, தற்காலிகமானவை’ என்றேன்.

‘ஆன்மீக முயற்சியின் முதல் படியில் நிற்பவர்கள் எல்லோரும் என்னைப் போலத்தான் இருப்பார்களா?’ என்று கேட்டாள் பூரணி.

‘உங்களுக்குச் சட்டென அமைந்தது போன்ற தீவிர ஆர்வம் எல்லோருக்குமே கிடைக்கும் என்று கூற முடியாது. பெரும்பாலானோருக்கு முதல் அழைப்பிற்கும், முழு ஏற்பிற்கும் இடையே பலகாலம் கழிந்து விடும். அறிவால் ஆன்மீகத்தை ஆராய்பவர்களுக்கும், யோகியின் மீது கொண்ட பிரியத்தால் மட்டுமே ஆன்மீகத்தை ஏற்பவர்களுக்கும் சமர்ப்பணம் கூடி வர நீண்ட காலமாகும். சிலருக்கு அது கூடி வராமலே போய் விடும். பல அனுபவங்கள் கிடைத்தாலும், சமர்ப்பணத்தை பலிக்க வைக்கும் அடிப்படையான அனுபவம் கிடைக்காமல் போய்விடும். யோகத்தில் வீழ்ச்சியோ, தேக்கமோ ஏற்படலாம்’ என்றேன்.

‘நான் தோல்வி அடையவும் வாய்ப்புண்டு என்கிறீர்களா?’ என்று கேட்டாள் பூரணி.

‘யோகத்தில் தோல்வி என்பதே இல்லை. சிறிய வெற்றி, பெரிய வெற்றி, பூரண வெற்றி ஆகியவைதான் உண்டு. யோக வீழ்ச்சி சிறிய வெற்றி. ஆதாரத்தில் மிகப் பெரிய குறை இருந்தால், யோகத்தைத் தவிர பிறவற்றிலும் ஆர்வமிருந்தால், சமர்ப்பணம் முழுமையற்றதாக இருந்தால் சிறிய வெற்றி மட்டும் கிடைக்கும். எந்த யோக முயற்சியும் வீணாவதே இல்லை. அரைகுறை முயற்சியால் இன்று பலன் கிடைக்காமல் போனாலும், எதிர்காலத்தில் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்’என்றேன்.

‘நான் யோகத்தை ஏற்கலாம்தானே?’ என்று கேட்டாள் பூரணி.

‘என்ன கேள்வி இது! வாழ்வு தரும் வாய்ப்புகளில் ஆகப் பெரிய வாய்ப்பு யோகம் செய்வது. அதைவிடப் பெரிய பரிசோ, வாய்ப்போ மனிதருக்குக் கிடைக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அழைப்பு கிடைத்தவர்கள் எல்லோருமே யோகத்தை ஏற்பதில்லை. சிலர் பல அழைப்புகளுக்குப் பின் ஏற்பதுண்டு. ஏற்றவர்கள் அனைவருமே யோகத்தை முடிப்பார்கள் என்றும் சொல்ல முடியாது’ என்றேன். ‘யோகத்தில் பூரண வெற்றி பெற குறுக்கு வழியோ, ரகசியமோ தெரிந்து வைத்திருக்கிறீர்களா?’ என்று கண்களில் சிரிப்புடனும், இதழ்களில் புன்னகையோடும் கேட்டாள் பூரணி. ‘குறுக்கு வழி பூரண சுயார்ப்பணம். ரகசியம் யோகத்தை வாழ்வில் ஒரு லட்சியமாக நினைக்காமல், ஒரே லட்சியமாக நினைத்து, மொத்த வாழ்வையும் யோகமாக ஏற்பது’ என்றேன்.

‘மழையின் வேகத்தால் கார் மெல்லத்தான் நகர முடிகிறது’ என்றாள் பூரணி.

‘பூரணயோகம் நகருவதைப் போல’ என்றேன்.

‘பலவகை யோகமார்க்கங்களை, தத்துவமுறைகளைப் பற்றி வாசித்துக் கொண்டிருந்தபோது பூரண சிந்தனை பற்றியும் வாசிக்க நேர்ந்தது. சமீபத்தில் ஸ்ரீ அரபிந்தோ பற்றி சிறிது வாசித்தேன். அவருடைய யோகம்தானே பூரண யோகம்?’ என்றாள் பூரணி.

‘ஆமாம்’ என்றேன்.

‘அவர் எழுதியதை வாசித்து வரும்போது, மௌனம் என்னை எப்போதும் சூழ்ந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். பொருட்களும், மிருகங்களும், நிகழ்ச்சிகளும், மனிதர்களும் என்னிடம் மௌனமாக பேசி உறவாடுவதுபோல தோன்றிக் கொண்டே இருக்கும். அம்மா யாகமும், பூஜையும் செய்ய அடிக்கடி யோகிகளையும், சாமியார்களையும் வீட்டிற்கு வரவழைப்பார். அப்படி வந்த ஒரு யோகி ‘ஸ்ரீ அரபிந்தோ பெரிய யோகிதான். ஆனால் காலாவதியாகிவிட்ட விக்டோரியா காலத்து ஆங்கில நடையில் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார். அவர் சொன்னதெல்லாம் வேதங்களிலும், உபநிஷதங்களிலும், கீதையிலும் உள்ளதுதான். புரிகிற, எளிய நடையில் எழுதப்பட்ட ஆன்மீகப் புத்தகங்களை வாசித்தால் போதும்’ என்றார். அந்த யோகி சொன்னதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. கடினமான, செறிவான விஷயங்களைப் பற்றி எத்தனை எளிமையாக எழுதினாலும், அது கடினமான, செறிவான மொழியில்தான் இருக்கும். புரியும்வரை மீண்டும் மீண்டும் வாசிப்பதுதானே நல்ல வாசகருக்கு அழகு?’ என்றாள் பூரணி.

‘ஆமாம்’ என்றேன்.

‘என் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட யோகி ‘பூரண சிந்தனையைப் பற்றித் தெரிந்து கொள்ளத்தான் வேண்டுöமன்றால் நவீன காலத்து கென் வில்பர் போன்றவர்கள் எழுதியதைப் படி. நான் கூட இந்திய யோகத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறேன்’ என்றார். அவர் சிபாரிசு செய்தவர்கள் எழுதிய குட்டி தலையணை போலிருந்த புத்தகங்களை வாங்கி வாசித்தேன். ஒன்றில் கூட என்னால் வாழ்வனுபவத்தைக் காண முடியவில்லை. எல்லாமே வெறும் சொற்குவியல்களாக இருந்தன. அந்த மனிதகுல முன்னோடிகளைக் குறை கூறவில்லை. எனக்குப் புரியவில்லை. என் அறிவு அவ்வளவுதான். அதன்பின் ஸ்ரீ அரபிந்தோவும், விவேகானந்தரும் எனக்குப் போதும் என்று முடிவெடுத்துவிட்டேன். எப்போதாவது ராமலிங்க வள்ளலாரின் பாடல்களை வாசிப்பேன்’ என்றாள் பூரணி.

‘ஒரு மேதை மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை எழுதுவது போலத் தெரிவது தோற்றமே. எந்த சந்தர்ப்பத்தில் ஏன் அப்படி எழுதுகிறார் என்பதை ஆர்வம் தீவிரமாக உள்ள வாசகன் ஒரு கட்டத்தில் சட்டெனப் புரிந்து கொள்வான். அதன்பின் எல்லாமே எளிமையாக இருக்கும். என்ன, அதற்குப் பயிற்சியும், சிறிது கால அவகாசமும் வேண்டும்’ என்றேன்.

‘சிறுகதை ஒன்றில் படிப்பில்லாத ஏழைப்பையன் காரோட்ட கற்றுக் கொள்ள முயற்சிக்கிறான். உரிமம் வாங்கி விட்டால் வேலைக்குச் சேர்ந்து வயிறு நிரம்ப சாப்பிடலாம். அதுதான் அவன் லட்சியம். ஏழை என்பதால் பயிற்சியாளர் அலட்சியமும், அவமானமும் படுத்தி எடுபிடியாக நடத்துகிறார். காரோட்ட அடிப்படையாகத் தெரியவேண்டியது ஆக்சிலேட்டரையும், கிளட்சையும் இரண்டு கால்களாலும் எப்போது எந்த விகிதத்தில் அழுத்தம் கொடுத்து மிதிக்க வேண்டும் என்பது. அதுமட்டும் பையனுக்குப் பிடிபடுவதே இல்லை. மீண்டும் மீண்டும் சொல்லித் தரும் பயிற்சியாளர், பையனை அடிக்கவும் செய்கிறார். அப்போதும் கார் நின்று நின்று நகருகிறது. இனி வாழ்ந்து என்ன பயன் என்று விரக்தி அடைகிறான் பையன். ஒரு சமயம் காரோட்டும்போது காவலர் எதிரே வருகிறார். பஸ் வருகிறது. பக்கங்களில் லாரியும், காரும் வருகின்றன. ஆபத்து. பையனின் மனம் கணநேரம் திகைக்க, கைகள் தாமாக சரியான கியரைப் போடுகின்றன. கால்கள் தாமாகவே சரியாக ஆக்சிலேட்டரையும், கிளட்சையும் மிதிக்கின்றன. அந்த கணத்தில் சூட்சுமம் பிடிபட்டு பையன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்’ என்றாள் பூரணி.

‘வாழ்வைப் புரிந்து கொள்வது பூரண யோகத்தில் அடிப்படையான முயற்சி. அது உங்களுக்கு இயல்பாக வருகிறது. பூரணி, உங்களைச் சந்தித்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் நினைக்கிறேன். நான் பல வருடங்களாக ஸ்ரீ அரபிந்தோவின் புத்தகங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறேன். பொன்னொளிபுரம் வருபவர்கள் பணம் வேண்டும், வேலை வேண்டும், கல்யாணம் வேண்டும் என்று எளிய லௌகீக கோரிக்கைகளைப் பற்றித்தான் பேசுவார்கள். யோகத்தையும், தத்துவத்தையும் பற்றிப் பேச எனக்குக் கிடைத்த முதல் மனிதப் பிறவி நீங்கள்தான்’ என்றேன்.

சிரித்தாள் பூரணி. ‘நான் பல யோகங்களையும் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் குருவின்றி பயிற்சி செய்யக் கூடாது என்பதால் எதையும் செய்ததில்லை. தானே வழி பிறக்கும் என்று காத்திருந்தேன்’ என்றாள் பூரணி.

‘எதையும் ஏற்கும் துணிவிருந்தால், நெஞ்சில் பரமனே குருவாக இருப்பதாக நினைத்துக் கொண்டு பூரணயோகத்தை ஆரம்பிக்கலாம். ஆர்வம் உண்மையாக இருந்தால் அவர் வழி நடத்துவார்’ என்றேன்

‘பூரண யோகத்தை எனக்கு நீங்கள்தான் சொல்லித் தர வேண்டும்’ என்றாள்.

‘சொல்லித் தருவதா? சேர்ந்து கற்போம். ஒன்று சேர்ந்து பயணம் செய்வோம். ஒன்றாக அமர்ந்து விவாதம் செய்வோம். நம் மனங்கள் ஒன்றாகட்டும். தேவர்கள் பலியாகப் பெற்றதை பகிர்ந்து கொள்வார்கள். நாம் அன்றாடம் கற்றதைப் பகிர்ந்து கொள்வோம். நம்மிடையே தூய நட்பு உருவாகட்டும்’ என்றேன்.

‘வேதத்திலுள்ள சத்சங்க பாடலை உங்கள் வசதிக்கு மாற்றி விட்டீர்கள்!’ என்று கூறிச் சிரித்தாள் பூரணி.

இவள் விவரம் தெரிந்ததால் அடக்கத்துடன் இருக்கிறாள். கவனமாகப் பேச வேண்டும்.

‘பூரண யோகம்! அதை எப்படி ஆரம்பிப்பது?’ என்று கேட்டாள் பூரணி.

‘முதலில் தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன்.

‘அதைப் பின்னொரு நாள் தெரிந்து கொள்கிறேன். இப்போது நடைமுறையில் பூரண யோகத்தை எப்படிச் செய்வது என்று கூறுங்கள்’ என்றாள் பூரணி.

‘பெண்!’ என்றேன்.

புன்னகைத்தாள் பூரணி. ‘சரி, தத்துவத்தைச் சுருக்கமாக சொல்லிவிட்டு, பயிற்சி முறையை விளக்கமாகச் சொல்லுங்கள்’ என்றாள்.

‘இரண்டையுமே சுருக்கமாகத்தான் சொல்ல முடியும். வாழ்நாள் முழுவதும் கல்வியும், பயிற்சியும் தொடர்ந்திருக்க வேண்டிய யோகமிது. உலகில் பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. கல்லிலிருந்து தாவரத்திற்கும், தாவரத்திலிருந்து விலங்கிற்கும், விலங்கிலிருந்து மனிதனுக்குமாக வளர்ச்சி நடக்கிறது’ என்றேன்.

‘டார்வின் சொன்னதும் பரிணாம வளர்ச்சிதானே!’ என்றாள் பூரணி.

‘அவர் உயிரினங்களின் உடல் பரிணாமத்தை ஆராய்ந்தார். ஆழ்கடலிலிருந்த உயிரினம் படிப்படியாக மாறி குரங்காகி, பின் மனிதனாக மாறியது என்பது உடலின் பரிணாம வளர்ச்சி பற்றிய அவர் கருத்து. பூரணயோகத்தின் பரிணாமக் கொள்கை கான்ஷியஸ்னஸ் என்று அழைக்கிறோமே அந்தச் சித்தத்தின், போதத்தின் பரிணாமத்தைப் பற்றியது, ஆன்மீகப் பரிணாமத்தைப் பற்றியது’ என்றேன்.

‘கதையொன்றில் உயிரியல் விஞ்ஞானி ஒரு குரங்கிற்கு மனிதனைப் போல பேச, நடக்க, பழக பயிற்சி தருகிறான். குரங்கு அழகாக உடையணிந்து, வண்டி ஓட்டி, வீடுவீடாகச் சென்று, ஆங்கிலத்தில் பேசி கம்ப்யூட்டர் விற்கிறது. உலகமே திகைக்கிறது. ஒருநாள் பெரிய விற்பனையை முடித்துவிட்டு கிளம்பும்போது குரங்கு பெரிய மரத்தையும், அதில் பழங்களையும் பார்க்கிறது, தன்னை மறந்து மரத்தில் பாய்ந்தேறி, பழங்களைப் பறித்துக் கொண்டு, சந்தோஷமாக கிளைக்குக் கிளை தாவிச் செல்கிறது. திகைக்கும் மனிதன் அகம் மாறாத புற வெற்றி, உண்மையில் வெற்றி அல்ல என்பதை உணர்கிறான். சரி, டார்வினை மறந்துவிடுகிறேன்’ என்றாள் பூரணி.

‘பரிணாமத்தில் மனிதன் எதையும்விட உயர்ந்த நிலையில் இருப்பது போல இப்போதைக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவனது நிலை மாறிக் கொண்டிருக்கும் இடைப்பட்ட நிலை. மனமிருந்தாலும் உடலைப் பொறுத்தவரை இன்னமும் மிருகத்திற்கு அருகில்தான் இருக்கிறான். அவனது சித்தத்தை வளர வைப்பதன் மூலம் அவனே இன்னும் தெரிந்து கொள்ளாத சிறப்பான நிலைக்கு, அறியாமையும், இருளும், நோயும், சிக்கலும் இல்லாத ஆனந்தமயமான நிலைக்கு உயர்த்த முடியும் என்று பூரணயோகம் நம்புகிறது’ என்றேன்.

‘நானும் நம்புகிறேன். கதையில் வரமுடியாத நிஜமான குரங்கிடம் போய் இன்னும் சிறிது காலத்தில் நீ சிந்திப்பாய், காரோட்டுவாய், வழியில் சந்தித்த வாலிபரிடம் ஆன்மீக தத்துவமெல்லாம் பேசுவாய்’ என்று சொன்னால் அதற்கு எதுவும் புரிந்திருக்காது. அதே போல ஆர்வமில்லாத மனிதனிடம் அடுத்த நிலையைப் பற்றிப் பேசினால் புரிந்து கொள்வானா என்ன?’ என்று கூறி சிரித்தாள் பூரணி.

‘இதுதான் கடவுளை கண்டடையும் வழி என்று உபதேசித்து புதிய மதத்தைப் பூரணயோகம் உருவாக்கவில்லை. பல மதங்களைக் கலந்து வேறொரு மதத்தை அமைக்கவில்லை.

பழைய எந்த மதத்தையும் புதுப்பிக்கவில்லை. வரையறுக்கப்பட்ட முறைகளற்ற, மதமற்ற, குருவற்ற யோகமிது’ என்றேன்.

‘குரு இல்லாத யோகமா!’ என்றாள் பூரணி.

‘குரு என்று பிற யோகங்களில் குறிப்பிடப்படுபவரைப் போன்றவர் பூரணயோகத்தில் இல்லை. இறைவனைத் தவிர பிற அனைவரும் சாதகர்கள்தாம். வாழ்வில் எல்லாமே யோகம் என்று கூறும் இந்த யோகத்தில் எல்லாமே குருதாம். நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள், மிருகங்கள், பொருட்கள், நிகழ்ச்சிகள் எல்லாமே ஏதோ ஒன்றை நமக்குச் சொல்லித் தர வரும் குரு. கற்கவேண்டியத்தை நாம் கற்றுக் கொண்டதும் ஒரு குரு விலகி வேறொரு குரு வருவார்’ என்றேன்.

‘பூரணயோகத்தின் நோக்கம் என்ன?’ என்றாள் பூரணி.

‘அகவளர்ச்சி மூலம் ஆன்மீக வளர்ச்சி பெற்று மனித சுபாவத்தை இறைமயமாக்கி, மனிதவாழ்வை இறைவாழ்வாக்கி, மனதைக் கடந்த சூப்பர்மைண்ட் என்ற உயர்ந்த சித்தத்தை பெறுவது’ என்றேன்.

‘சித்தம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?’ என்று கேட்டாள் பூரணி.

‘பொதுவாக நனவு நிலையை, மனதின் ஒரு திறனை, சிந்திக்கவல்ல நிலையை கான்ஷியஸ்னஸ் என்று உலகம் சொல்கிறது. மயங்கி விழுந்தவரை கான்ஷியஸ்னஸ் இல்லாத-வராகி விட்டார் என்கிறது. ஆன்மீகத்தில் அது வேறொன்றைக் குறிக்கிறது. தூங்கும்போது சிந்திக்காமலே இருந்தாலும் குளிரெடுத்தால் போர்வையை கை நாடுகிறது. பூச்சி மேலே விழுந்தால் தூக்கத்திலும் தட்டி விடுகிறோம். கனவு காண்கிறோம். நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கவனிக்காத, சிந்தனையற்றுப் போன நிலையிலும் ஏதோ நம்மில் ஒரு சக்தி, ஒரு கரணம், ஒரு பகுதி நம் வாழ்வை அனுபவித்து அறிந்து கொண்டே இருக்கிறது. யோகத்தில் அதைத்தான் கான்ஷியஸ்னஸ், சித், சித்தம், போதம் என்று கூறுகிறோம். அது மனதின் திறனோ, உயிரின் திறனோ, உடலின் திறனோ அல்ல’ என்றேன்.

‘உயர்ந்த சித்தம், தாழ்ந்த சித்தம் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டாள் பூரணி.

‘எல்லோருக்கும் கண் என்ற அங்கம் இருந்தாலும், ஆயிரம் அடி தள்ளியிருக்கும் கனியை அர்ச்சுனனால் மட்டுமே பார்க்க முடியும். திருதராஷ்டிரனால் எவ்வளவு முயன்றாலும் எதையும் பார்க்க முடியாது. திருதராஷ்டிரனின் மனைவி வசுமதி தன் கண்களைத் தானே பட்டுத்துணியால் கட்டிக் கொண்டு எதையும் பார்க்க மறுத்தாள். சித்தம் எல்லோரிடமும் உண்டு என்றாலும் அது வெவ்வேறு நிலைகளில் இருக்கிறது. மனிதனின் காதுகள் குறிப்பிட்ட அளவுகளுக்கு உட்பட்ட ஒலிகளைத்தான் கேட்க முடியும். அந்த அளவுகளைவிட அதிகமாகவோ, குறைவாகவோ உள்ளவற்றை அவனால் கேட்க முடியாது என்கிறது அறிவியல். அவனால் கேட்க முடியாதவற்றைச் சில மிருகங்கள் கேட்கின்றன, சில கருவிகளால் பதிவு செய்கின்றன. மனிதனது சித்த நிலையைவிட அதிக வீச்சும், அதிக வீரியமும், அதிக தெளிவும் உள்ள சித்த நிலை உயர்ந்த சித்த நிலை. அவனது சித்த நிலையைவிடக் குறைவான வீச்சும், குறைவான வீரியமும், குறைவான தெளிவும் உள்ள சித்த நிலை தாழ்ந்த சித்த நிலை. அவனது தற்போதைய புலன்களைக் கொண்டு அவற்றை அறியமுடியாது. பிரபஞ்சத்தில் அனைத்திற்குமே சித்தம் உண்டு. அவை உள்ள நிலைகள்தான் வேறு’ என்றேன்.

‘முயன்றால் சித்த நிலையை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தி கொள்ளலாம்தானே?’ என்றாள் பூரணி.

‘தாழ்த்தவும் செய்யலாம். பரிணாமத்திற்கு எதிரான செயல்முறை அது. மனிதன் உயர்ந்தவை வந்தால் அதை ஏற்க மறுத்து, இருப்பது போதும் என்பான். பெரும்பாலான மனிதர்கள் அதைத்தான் செய்கிறார்கள். திருதராஷ்டிரன் பிறக்கும்போதே பார்வையற்றவன். இருளில் ஒலிகளால் மட்டுமே உலகை உணர்ந்து வாழ்ந்தவன். மிகவும் பெருந்தன்மையானவன். அதனால் விண்ணுலக தேவனொருவன் அவனுக்குப் பார்வை தந்தான். ஒளியில் உலகையும், உருவங்களையும், வண்ணங்களையும் கண்ட திருதராஷ்டிரன் பித்துப் பிடித்தவனைப் போலாகிவிட்டான். ‘இது என் உலகமல்ல, எனக்கு எதுவும் புரியவில்லை, இதில் என்னால் வாழமுடியாது’ என்று முறைப்பாடு செய்யவே தேவன் பழைய இருள் உலகத்தைத் திரும்பத் தந்தான். அதன்பின்தான் திருதராஷ்டிரன் நிம்மதி அடைந்தான். இருப்பினும் அவன் பெருந்தன்மைக்குப் பரிசாக சொற்களால் காட்சியைச் சிறைபிடிக்கும் சஞ்சயனை உதவியாளனாக வாழ்வு அனுப்பி வைத்தது’ என்றேன்.

‘உயர்வது சிரமம், விழுவது எளிது. உயர்வதைப் பற்றி மட்டும் பேசுவோம். பூரணயோக தத்துவத்தைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள்’ என்றாள் பூரணி.

‘பிரபஞ்சத்தின் தோற்றங்களுக்குப் பின்னால் அழிவற்ற ஒற்றை சத்தியம் உள்ளது, அதையே இறைவன் என்கிறோம். அஞ்ஞானத்தால், அகங்காரத்தால் பிரிந்தது போல தோற்றமளிக்கும் அனைத்துமே பிரிக்க முடியாத அந்த ஒற்றைப் பெருஞ்சத்தியத்தால் ஆனவையே. அகமுயற்சியான யோகப்பயிற்சியின் மூலம் பிரிவுண்டாக்கும் சித்தத்தை விலக்கி தன்னுள்ளும் பிறவற்றினுள்ளும் இறைவனைக் கண்டு, அவனாக மாறி, உலகில் இறைவாழ்வை நடத்த முடியும். அந்த முயற்சியே பூரணயோகம். ஆர்வத்துடன் சுயார்ப்பணம் செய்து தன்னுள் இறைவனைச் செயல்பட வைக்கும் ஆரம்பகட்ட முயற்சியை மனிதன் செய்து முடித்துவிட்டால், மீதி யோகத்தை இறைவன் செய்து முடிப்பான்’ என்றேன்.

‘ஆர்வமே சாதனைக்கு அஸ்திவாரம் என்கிறார்கள். ஆன்மீக ஆர்வம் போன்ற அபூர்வமான ஒன்று எழும் தூய இடத்திலும் தடைகள் உண்டாவது ஏன்?’ என்று கேட்டாள் பூரணி.

‘பிழைத்திருத்தலே வாழ்க்கை என்பதே கிட்டத்தட்ட எல்லோருடைய நிலையும். மனிதனுக்கு மனம் இருந்தாலும் உணவு, இனப் பெருக்கம், தன்னலம் மட்டுமே அவனுக்கு முக்கியமாக இருக்கின்றன. இந்த ஜட வாழ்வு கீழே இருப்பதாக வைத்துக் கொண்டால், நாம் நாடும் இறைவாழ்வு மேலே இருக்கிறது. இரண்டுக்கும் நடுவில் இருக்கும் நாம் நமது சக்தியை கீழிருப்பவற்றிற்காக செலவழிக்குந்தோறும் மேல் நோக்கிய பயணத்தில் தாமதம் ஏற்படுகிறது. கீழிருப்பவற்றிற்காக செலவழிக்கும் சக்தியை மேலிருப்பவற்றிற்காக செலவழிக்குந்தோறும் நம் பயணம் துரிதப்படுகிறது. மேலிருப்பதைத் தவிர வேறெதையும் கருதாத முழு மாற்றம் நிகழாதவரை கீழிருந்து தடைகள் எழுந்து கொண்டேதான் இருக்கும்’ என்றேன்.

‘ஒரேயடியாக முழு மாற்றத்தைக் கொண்டு வர முடியாதா?’ என்று கேட்டாள் பூரணி.

‘மிகவும் சிரமம். மனித சுபாவம், ஏன் பிரபஞ்சமே கூட, பழக்கங்களால் ஆனது. நம் பழக்கங்களே நம் ஆன்மீக முயற்சிகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன. மனிதன் என்பவன் ஏதோ ஒரு சில பெரிய குணாதிசயங்களும், பழக்கங்களும் அவற்றை ஆதரிக்கும் பல சிறு குணாதிசயங்களும், பழக்கங்களும் ஒன்றாகத் திரண்டவன். இந்த குணாதிசயத் தொகுப்பை இழப்பது இறப்பதற்கு சமானம். ஆன்மீக முயற்சி மனித சுபாவத்தை மாற்றி வேறு வகையான இறை சுபாவத்தைப் பெறும் முயற்சி என்பதால்தான் அதை மறுபிறப்பு என்கிறோம்’ என்றேன்.

‘என்ன செய்தால் இந்த மறுபிறப்பை நிகழ்த்திக் காட்ட முடியும்?’ என்று கேட்டாள் பூரணி.

‘மனம் புறவயமானவற்றில், ஜடத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்திருக்கிறது. அதை முதலில் மாற்ற வேண்டும். மனம் அகவயப்பட்டு, புலன்களால் அறிய முடியாதவற்றின் மீதும் நம்பிக்கை கொண்டு, இறைவனை மட்டுமே நாடி, மனிதனை இறைவனுக்கு ஏற்ற கருவியாக மாற்ற சதா முயல வேண்டும். ஒவ்வொரு கரணத்திலும், ஒவ்வொரு அசைவிலும் மனிதன் பூரண சரணாகதியை நாட வேண்டும். மனித மனம் இறை மனமாக, மனித உயிர் இறை உயிராக, மனித வாழ்வு இறை வாழ்வாக, மனித உடல் இறை உடலாக மாற வேண்டும்’ என்றேன்.

‘எனக்குத் தெரிந்தவரை உடலால் சிலர் யோகம் செய்கின்றனர். மனதாலோ அல்லது உணர்வாலோ வேறு பலர் யோகம் செய்கின்றனர். அனைத்தின் மூலமும் யோகம் செய்வது அசாதாரணமானது’ என்றாள் பூரணி.

‘அனைத்தையும் சரணாகதி செய்யும் யோக வழி பூரணயோக வழி. இது உபநிஷதம் காட்டும் பிரம்மத்தை அடையும் வழி. பிற வழிகள் மனிதர்கள் காட்டும் பிரம்மத்தை அடையும் வழிகள்’ என்றேன்.

‘மேலே சொல்லுங்கள்’ என்றாள் பூரணி.

‘யோகம் சிரமமானது. அஞ்ஞானத்திலும், அகந்தையிலும், இருளிலும் இருக்கும் மனிதன் ஞானத்தை, அகந்தையின்மையை, ஒளியை நோக்கிச் செல்வதை வாழ்வும் அவனது கரணங்களும் எதிர்க்கின்றன. நல்லவனை எதிர்ப்பவன் கெட்டவனாகத்தான் இருக்க முடியும் என்ற எளிய சூத்திரத்தை முன்னிறுத்தி இறைவனை அடையும் முயற்சிக்கு எதிராக இருப்பவை எல்லாம் மாயை என்று பிற யோகிகள் சொல்லிவிட்டார்கள். அவற்றை விலக்கி விட்டார்கள். தொந்தரவு தருபவற்றை ஏற்று மாற்றுவதைவிட விட்டுவிடுவது எளிதாக இருந்தது’ என்றேன்.

‘பிரச்சனை செய்யும் கணவனையோ, மனைவியையோ ஏற்று மாற்றுவதைவிட விவாகரத்து செய்து விடுவது எளிதாகத்தான் இருக்கும். அப்படிச் செய்தால் இணைவின் இன்பத்தை இழக்கிறோம் என்பதை விவாகரத்து செய்பவர்கள் அறிவதில்லை’ என்றாள் பூரணி.

‘பிற யோக சாதகர்கள் இறைவனிடம் எது இட்டுச் செல்லும் என்று நம்பினார்களோ அதை மட்டும் இறுகப் பற்றிக் கொண்டார்கள். உயிர் வாழத் தேவையான குறைந்தபட்ச வாழ்வாதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை விட்டுவிட்டார்கள்’ என்றேன்.

‘பூரணயோகம் இது போன்ற குறுக்கு வழியை அனுமதிப்பதில்லை அல்லவா?’ என்று கேட்டாள் பூரணி.

‘நாம் ஏற்றவற்றில் மட்டுமின்றி, விலக்கியவற்றிலும் இறைவன் உண்டு. இறைவனே உலகமானான் என்கிறது பூரணயோகம். ஏற்பவையும், விலக்கியவையும் இறைவனே. எதை விலக்கினாலும் இறைவனோடு நமது கூடல் முற்றாக நிகழவில்லை என்பதால் பூரணயோகம் பூரணமற்றுப் போய்விடுகிறது. எதையும் விலக்காமல் ஜடத்திலும், வாழ்விலும், மனத்திலும், அகத்திலும், புறத்திலும் உள்ள இறைவனை வெளிப்படுத்தி அனைத்தையும் அடுத்த நிலைக்கு உயர்த்துவதே பூரணயோகம்’ என்றேன்.

‘நம் முழு கவனத்தையும் ஒன்றே ஒன்றில் வைத்தால், அதில் நிபுணத்துவம் வருமே? குறுகிய காலத்தில் முன்னேற அதுதானே உதவும்?’ என்று கேட்டாள் பூரணி.

‘பிற வழிகளில் ஒரு கரணத்தை மட்டும் பற்றிக் கொண்டு பிற கரணங்கள் உண்டாக்கும் தடைகளைப் பொருட்படுத்தாமல் வேகமாக முன்னேறுவது ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் ஒரு நிலையில் யோகம் தடைபட்டு, குறைபட்டு நின்றுவிடும். பூரணயோகம் எல்லாக் கரணங்களையும் தயார் செய்வதால் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்குப் பின் தயார் செய்யப்பட்டுவிட்ட கரணங்கள் ஒன்றுக்கொன்று உதவத் தொடங்கும். வாழ்வும் உதவத் தொடங்கும். அப்போது முன்னேற்றம் வெகு துரிதமாக இருக்கும்’ என்றேன். பின் ‘நீங்கள் விவாகரத்திற்கு எதிரியா?’ என்று கேட்டேன். ‘ரத்து இருக்கட்டும். விவாகமே தேவையா என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு’ சிரித்துக் கொண்டே சொன்னாள் பூரணி.

அவள் வார்த்தைகள் என்னை சோர்வடைய வைத்தன. மழையால் போக்குவரத்து எதுவுமில்லாதிருந்தாலும், சிவப்பு விளக்கு எரிந்ததால் காரை நிறுத்தினாள் பூரணி. வேறொரு கார் சிவப்பு விளக்கை பொருட்படுத்தாமல் சென்றது.

‘மனிதன் மேற்பரப்பில் வாழ்கிறான். தன் அகத்தில் என்ன இருக்கிறது என்பது அவனுக்குத் தெரிவதேயில்லை. பூரணயோகம் அவனுள் இருப்பவற்றை வெளியே கொண்டு வரும். அனைத்து சிக்கல்களும் உள்ள உலகத்தைத் தன்னுள் சாதகன் காண்பான். அத்தனை சிக்கல்களையும் அவன் தீர்க்க வேண்டும்’ என்றேன்.

‘வாசுகியை மத்தாக்கி பாற்கடலை கடைந்தபோது எதிர்பாராதவை எல்லாம் வெளியே வந்தனவாம். ஸ்ரீதேவியோடு மூதேவி வந்தாள். அமிர்தமோடு விஷமும் வந்தது’ என்றாள் பூரணி.

‘பல பயங்கரமான காட்டு மிருகங்களையும், பல இனிய தேவதைகளையும் பூட்டி வைத்திருக்கும் கூண்டுதான் நம்முடைய அகம். அது பாற்கடல். யோகப்பாம்பைக் கொண்டு நம்மைக் கடைந்தால் என்னென்னவோ வரும். ஆராய்ந்தால் அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டு, ஒன்றோடொன்று முரண்பட்டுக் கொண்டு தத்தம் விருப்பப்படி செயல்படுவதைப் பார்க்க முடியும். அவற்றிடையே இணக்கத்தை, ஒத்திசைவை, ஒற்றுமையைக் கொண்டு வரவேண்டும்’ என்றேன்.

‘மனம் சொல்வதைப் பிராணன் கேட்குமா? பிராணனுக்கு உடல் எந்தக் காலத்தில் கட்டுப்பட்டது? ஒவ்வொன்றும் தன் வாலை விழுங்கத் துடிக்கும் பாம்பு’ என்றாள் பூரணி

‘மனிதன் எப்போதுமே சந்தை நடுவில் நிற்பவன். பனி மலையிலும், குகைகளிலும் தனித்துத் தவமிருப்பவனும் அப்படிச் சந்தையில் நிற்பவன்தான். தான் பிறரிலிருந்து பிரிந்து தனித்து நிற்பதாகக் கற்பனை செய்து கொள்கிறான். அகத்திலும், புறத்திலும் அவன் ஒருபோதும் அப்படி இருக்க முடியாது. அவன் தன் எண்ணங்கள் என நினைப்பவற்றில் பெரும்பாலானவை வெளியே உருவாகி அவனுக்குள் நுழைந்தவை. நம் பெரும்பாலான அக அசைவுகளும், பழக்கங்களும் அப்படிப்பட்டவையே’ என்றேன்.

‘குழந்தை ஒன்று ரிக்ஷா என்பதை ரிஷ்கா என்று தவறாக உச்சரித்தது. அப்பா ‘ரிஷ்கா இல்லை, ரிக்ஷா’ என்று திருத்தினார். அடுத்தடுத்து வந்த நாட்களில் குழந்தை மீண்டும் மீண்டும் ரிஷ்கா என்று தவறாக உச்சரிக்க, அப்பா மீண்டும் மீண்டும் திருத்தினார். ஒரு நாள் நண்பர்களிடம் பேசும்போது ரிஷ்கா என்று அப்பா உச்சரித்து விட்டு அதிர்ந்து போகிறார்!’ என்றாள் பூரணி.

சிரித்தேன். ‘எத்தனையோ வெவ்வேறு சக்திகள் நம்மை இயக்குவதை நாம் தவறாக நம்மை நாமே இயக்குவதாக நினைத்துக் கொள்கிறோம். பிரபஞ்ச உலக வாழ்வு சக்திகளின் எளிய கைப்பாவை நாம். நம் அகந்தை மட்டும் ‘நான் தனி, நான் வேறு, நான் எல்லாம் வல்லவன்’ என்று புலம்பிக் கொண்டிருக்கும். மனிதன் எண்ணற்ற ஓட்டைகள் கொண்ட பாத்திரம்’ என்றேன்.

‘எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் பூரணயோகம் மிகவும் சிக்கலானது என்று தோன்றுகிறது. ஒரு கரணத்தை மட்டும் பின்பற்றுவதால் பெரிய சிக்கல் என்ன வந்து விடப் போகிறது?’ என்றாள் பூரணி.

‘என்ன இவ்வளவு சாதாரணமாகக் கேட்டு விட்டீர்கள்? மற்ற யோகங்களில் தான் ஏற்றுக் கொண்ட வழிக்குரிய கரணத்தின் மீது மட்டும் முழு கவனத்தையும் ஒருமுனைப்படுத்தினால் போதும். பிற எதையும் பொருட்படுத்த வேண்டியதில்லை. பக்தியோகி உணர்ச்சியால் இறைவனை அடைய முயல்கிறான். மனதையோ, உடலையோ அவற்றின் சிக்கல்களையோ அவன் பொருட்படுத்துவதேயில்லை. ராஜயோகி மனதின் மூலம் இறைவனை கண்டடைய முயல்கிறான். அவனுக்கு உடலோ, பிராணனோ முக்கியமில்லை. அவை எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டுவிடுகிறான். நான் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் ஒவ்வொரு கரணமும் தனக்கேயுரிய சிக்கல்களை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும். கவனிக்காமல் விட்ட பிராணனைப் போல ஆபத்து விளைவிக்கும் எதிரி உண்டா? எப்பேர்ப்பட்ட ரிஷியின் தவத்தையும் எளிதாக அப்சரசை வைத்து கலைத்திருக்கிறார்களே! ஹடயோகிகள் மனநிலை பிறழ்ந்து போனதுண்டு. உடல் ஒத்துழைக்காமல் போனதால் பக்தியோகத்தை முடித்துக் கொண்டவர்கள் உண்டு’ என்றேன்.

‘உண்மைதான்’ என்றாள் பூரணி.

‘பலர் உலகை, வாழ்வை விட்டு விலகி இறைவனோடு மட்டும் வாழ்கிறேன் என்று தனிமையை நாடுகிறார்கள். அப்படிச் செய்யும்போது, வாழ்வை இழந்து விடுகிறார்கள்’ என்றேன்.

‘ஸ்ரீ அரபிந்தோ இறுதிவரை தனிமையில் இருந்தார் என்று படித்தேனே?’ என்று கேட்டாள் பூரணி.

‘தனிமைக்குப் போகும்முன், அவர் பார்க்காத படிப்பா, இங்கிலாந்தா, ராஜசபையா, பத்திரிகையா, இல்லை புரட்சியா? அவரைவிட அதிகமாக எத்தனை யோகிகள் வாழ்வின் பல முகங்களைப் பார்த்திருக்கப் போகிறார்கள்? யோகம் செய்ய தனிமையை நாடாமல் வாழ்வில் தொடர்ந்திருந்ததால்தானே பொறுமையிழந்த பிரம்மம் அவரைச் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தது?’ என்றேன்.

கிளுக்கென்று சிரித்தாள் பூரணி. “தனிமை தேவையில்லை என்கிறீர்கள்?”

‘பூரணயோகத்தில் மாற்ற முடியாத சட்டம் என்று எதுவுமே இல்லை. இன்னும் சொல்லப் போனால் சமர்ப்பணம், சரணாகதியைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. அவரவர் சுபாவத்தை ஒட்டி மாற்றத்திற்கான முறைகளைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஊதாரி, கருமியாக இருந்து பார்க்க வேண்டும். கருமி, ஊதாரித்தனமாகச் செலவழித்து அனுபவம் பெற வேண்டும். எப்போதும் கூட்டத்தின் நடுவே இருப்பவன் தனிமையை நாட வேண்டும். தனிமையை விரும்பி கூட்டத்தைத் தவிர்ப்பவன் மேடையேறிப் பேச வேண்டும். புலால் உண்ணாதவன் சில நாட்களாவது மீன் குழம்பும், கோழி வறுவலும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். எதிரான அனுபவங்களைப் பெறும்போது நாம் முழுமையை நோக்கிப் போகிறோம். முன்னேறியபின், அறியவேண்டியதை அறிந்தபின், எதிரான இரு அனுபவங்களுமே நமக்குத் தேவையற்றவையாகி விடுகின்றன’ என்றேன்.

‘ஆனால், எதைச் செய்தாலும் நிதானம் தவறாமல் பொதுபுத்தி பிசகாமல் செய்யவேண்டும், என்றாள் பூரணி.

‘ஆமாம். புத்தமத பயிற்சி பெற்ற வெளிநாட்டு சாதகர் ஸ்ரீ அரபிந்தோவைத் தேடி வந்தார். அகிம்சாவாதியான அவருக்குக் கோழி சூப் தயாரிக்கப்படும் இடத்தை ஒட்டிய அறை ஒதுக்கப்பட்டது. இரவும், பகலும் கோழிகள் கொல்லப்படும்போது எழுப்பிய கதறலை முதலிரு நாட்கள் அவரால் பொறுக்கவே முடியவில்லை. தத்துவத்தைப் புரிந்துகொண்டவர் மனதைச் சமநிலையில் வைத்துக் கொண்டார். ஒரு வாரத்திற்குள் தன் சுபாவத்தின் ஒரு பகுதியை வென்றார். அன்றே அவருக்கு அமைதியான வேறொரு இடத்தில் புதிய அறை ஒதுக்கப்பட்டது! ஆடிட்டர் அலுவலகத்தில் சந்துரு என்று ஒரு பையன் இருக்கிறான். உயிர்க்கொலை என்றால் அவன் மனம் துடிக்கும். சாதகர் கதையைக் கேட்டதும் சில நாட்கள் கசாப்புக்கடை வாசலில் நின்று ஆட்டுக்குட்டிகள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதன்பின் தன் மனம் அமைதி அடைந்துவிட்டதாகச் சொன்னான். இதுபோல எவரும் எதிர்பார்க்க முடியாத காரியங்களை அடிக்கடி செய்து விடுவான்’ என்றேன்.

‘வேடிக்கையான மனிதர்! பார்க்க வேண்டும் போலிருக்கிறது’ என்றாள் பூரணி.

‘சாதகனுக்கு அக, புற தனிமை அவனது நீண்ட ஆன்மீகப் பாதையில் அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் குறுகிய நேர ஓய்வைப் போன்றது. வாழ்வை அவன் தவிர்க்கவே கூடாது. யோக நிலையின் தேவையை ஒட்டி தனிமை தேவையா என்று முடிவு செய்ய வேண்டும்’ என்றேன்.

‘புரிகிறது’ என்றாள் பூரணி.

‘பூரணயோகி தனக்காக மட்டுமல்லாமல் உலகத்திற்காகவும் யோகம் செய்கிறான். தன்னந்தனியாக உலகத்தோடு போர் செய்கிறான்’ என்றேன்.

‘சிறு நாட்டின் மீது உலகம் போர்த் தொடுக்கும்போது, உள்நாட்டுக் கலகத்தோடு உலகப் போரையும் சமாளிக்க வேண்டும்’ என்றாள் பூரணி.

‘ஆமாம். அவன் தனக்கேயுரிய தனிப்பட்ட சிக்கல்களோடு, உலக சிக்கல்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறான். எத்தனை முறை சிக்கல்களைத் தீர்த்தாலும் அவை மீண்டும் மீண்டும் அடுத்த நிலையில் எழுந்தபடியே இருக்கும். என்னுடைய சாதக நண்பரின் பிரிய அண்ணன் மூன்று லட்சம் கடன் வாங்கி திருப்பித் தரமுடியாமல் சிரமப்பட்டார். சாதகர் ஆன்மீக முயற்சியால் போன வருடம் அதைத் திருப்பிக் கட்டினார். போன மாதம் அண்ணன் முப்பது லட்சம் கடனாளியாகி விட்டதாகச் சொன்னார். யோகத்தால் திருப்பி கட்டி விட முயற்சி செய்கிறார்’ என்றேன்.

‘அதன்பின் என்ன நடக்கும்?’ என்றாள் பூரணி.

‘அடுத்த வருடம் சொல்கிறேன்’ என்று கூறிச் சிரித்தேன். ‘இதில் கவலைப்படவோ, பயப்படவோ எதுவுமில்லை. சிக்கல் வருவது மேலும் உயரத்தான். தனிமனித சிக்கல் சாதகரைத் தேடி வரவில்லை என்றால் அவரைத் தேடி உலகச் சிக்கல் வரப் போகிறது என்று அர்த்தம்!’

‘உள்நாட்டுக் கலவரங்கள் அடங்கிய பின்னும் உலகக் கலவரங்களை மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள வேண்டிவருமென்றால் அவனது சிறு நாடு உலகமாக மாறிவிடுகிறது என்றுதானே அர்த்தம்?’ என்று கேட்டாள் பூரணி.

‘அதேதான், ஆனால் பூரணயோக சாதகனால் சிறு அகச்சிக்கல்களைக் கூட எளிதாகத் தீர்த்துவிட முடியாது. பிற எந்த யோக மார்க்கத்திலும் அகச்சிக்கல்கள் உண்டாகும். அவற்றால் புறச்சிக்கல்களும் உருவாகும். சிக்கல்களைத் தவிர்ப்பதன் மூலம், பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் இருப்பதன் மூலம், பிற யோகி தன் வழியில் முன்னேறுகிறார். பூரணயோக சாதகன் எதையும் தவிர்க்கவோ, துறக்கவோ கூடாது. எல்லாவற்றையும் இறைவனுக்கு தேவைப்படும் கருவிகளாக ஏற்று அவற்றை மாற்றுவதே அவன் சாதனை’ என்றேன்.

‘தவிர்க்கவே முடியாத பெரிய சிக்கல் வரும்போதுகூட இதுவேதான் சட்டமா? அப்போதுகூட தனிப்பட்ட கவனத்தை தவிர்க்கவேண்டுமா’ என்று கேட்டாள் பூரணி.

‘மாற்ற முடியாத சட்டம் என்று பூரணயோகத்தில் எதுவுமே இல்லை என்று சொன்னேனே! ஒரு முக்கியமான சிக்கலைத் தீர்க்க அதன்மேல் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தலாம் என்றாலும் அதை எப்போதாவது தற்காலிகமாகத்தான் செய்ய வேண்டும். அவனுக்குரியது அனைத்தையும் தழுவி ஏற்கும் கவனம். பக்தி யோகத்தில் உணர்வு மொத்தமும் ஒருமுனைப்பட்டு இறைவனை நாடுகிறது. ராஜயோகத்தில் மனமும், ஹடயோகத்தில் உடலும் ஒருமுனைப்பட வேண்டும். பூரண யோகத்தில் ஒருமுனைப்படுதல் அவசியம்தான். ஆனால் மனிதனுள் இருக்கும் அனைத்துமே ஏககாலத்தில் இறைவனில் ஒருமுனைப்பட வேண்டும்’ என்றேன்.

‘ஒரு கருத்திலோ, ஒரே ஒரு கோட்பாட்டிலோ, ஒரு மந்திரத்திலோ ஒருமுனைப்படக் கூடாதா?’ என்று கேட்டாள் பூரணி. ‘அவ்வப்போது அப்படியும் செய்யத்தான் வேண்டியிருக்கும். அதெல்லாம் வழியில் இருக்கும் தனி மரங்களிலிருந்து கிடைக்கும் உதிரிப்பூக்கள். நாம் நாடுவது பூந்தோட்டத்தை. உதிரிப்பூக்கள் உதவியாக இருக்கும் சிறு முறைகள், அவ்வளவுதான் அவற்றின் முக்கியத்துவம். நாம் தேடுவது விரிந்த பெருந்திறப்பை, பரந்த மகத்தான விழிப்பை. மனிதனுள்ளிருக்கும் ஒவ்வொரு அணுவும் மலராகப் பூத்து அனைத்தும் ஆண்டவனுக்கு சமர்ப்பணமாக வேண்டும்’ என்றேன்.

‘அனைத்தும் ஒருமுனைப்படுவது அத்தியாவசியம் என்றாலும் அதைச் செய்வது சாத்தியமா? சுபாவம் எத்தனை சிக்கலானது என்று கீதை காலத்திலிருந்தே நமக்குத் தெரியுமே. உலகப் பந்தை கைகளால் தூக்கும் முயற்சி’ என்றாள் பூரணி. ‘பிற எதையும்விட சுபாவம் அதிக சிக்கலானது. அதன் எல்லா பகுதிகளையும் ஒரே சமயத்தில் கையாள்வது தனியாளாக ஒருவன் பல காட்டு விலங்குகளை ஒரே சமயத்தில் எதிர் கொள்வதைப் போல ஆபத்தானது. ஒரு சமயத்தில் ஒன்றை கையாளுவதே சிரமமானது என்றாலும் அப்படித்தான் செய்தாக வேண்டும். அவரவர் சுபாவத்தை அனுசரித்து, நம் சுபாவத்தில் உள்ளவற்றில் எது உயர்ந்த அம்சமோ அதைப் பற்றிக் கொண்டு முயற்சி செய்ய வேண்டும்’ என்றேன்.

‘விமானம் ஓட்டத் தெரிந்தவன் சைக்கிள்தான் ஓட்டுவேன் என்று சொல்லக் கூடாது. ஆனால் தாழ்ந்ததை பற்றிக் கொண்டு உயர்ந்ததை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தால்தான் மனிதனுக்கு வாழ்வு சுவையானதாக இருக்க முடியும்’ என்றாள் பூரணி.

‘கிட்டத்தட்ட மிருகம் போல நடந்து கொண்டாலும், மனிதன் உணர்வுகள் மட்டுமே உள்ள விலங்கு அல்ல. அவனிடம் உயர்ந்த மனமும், சைத்திய புருஷனும் உண்டு. அவற்றைக் கொண்டு தாழ்ந்த பகுதிகளை மாற்ற அவனால் முடியும். சமர்ப்பணம் செய்தால் மனதையும், சைத்திய புருஷனையும் நம் சுபாவத்தை மீறி கொக்கிகளாக மாட்டி இறைவன் நம்மை எளிதாக மேலே உயர்த்தி விடுவான்’ என்றேன்.

‘சைத்திய புருஷனா?’ என்று கேட்டாள் பூரணி.

‘பிரம்மமே உலகமாகத் தோன்றுகிறது. நம் மனம் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அதை வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கிறோம். அப்படிப்பட்ட பெயர்களில் ஒன்று ஆன்மா. பாலுக்குள் நெய் போல மனிதன் கண்ணுக்குத் தெரியாமல், அதே சமயம் அவனுள் எப்போதும் ஆன்மா இருக்கிறது. அது இறைவனே என்றும், இறைவனின் பகுதி என்றும், இறைவனின் பிரதிநிதி என்றும், இறைவனோடு தொடர்பு கொள்ளவல்ல மனித கரணம் என்றும் யோகிகள் அவரவர் கண்ட தத்துவ முறைப்படி விளக்கினார்கள். ஒருவர் கடவுளைக் கண்டதும் அது கரையக் கூடியது என்றார். இன்னொருவர் அது கரையாது என்றார். பொதுவாக எல்லோருமே அது மாறாத ஒன்று என்று நினைத்தார்கள்’ என்றேன்.

‘பூரணயோகம் என்ன சொல்கிறது?’ என்று கேட்டாள் பூரணி.

‘மனிதனின் நெஞ்சின் நடுவே சூட்சுமமாக இருக்கும் ஆன்மாவின் ஒரு பகுதி சைத்திய புருஷன். அது மனிதனின் உடலும், மனமும் வளர்வதைப் போல வளரக் கூடியது என்கிறது பூரணயோகம். தினம்தினம் போதம் பெறுகின்ற அனுபவங்களை உணவாகக் கொண்டு வளர்கிறது. இறைவனின் நேரடியான பிரதிநிதியான அது வெளிவருவது யோகத்தில் முக்கியமான கட்டங்களில் ஒன்று. பூரணயோகத்தில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு இது’ என்றேன்.

‘விலங்கிற்கு இல்லாத பகுத்தறிவும், தர்க்கமும் மனிதனுக்கு உண்டு. அவற்றைப் பயன்படுத்தினாலே உயர்ந்து விடலாம்’ என்றாள் பூரணி.

‘அப்படியா? தனியே காரில் செல்லும் அழகிய இளம் பெண், ஆளரவமற்ற தெருவில் அறிமுகமில்லாத ஆணை தன் காரில் ஏற்றிக் கொள்வது பகுத்தறிவுள்ள செயலா?’ என்று கேட்டேன்.

‘பகுத்தறிவைப் பயன்படுத்தி இருந்தால் ஆன்மீக வாய்ப்பை இழந்திருப்பேன்’ என்றாள் பூரணி.

‘பகுத்தறிவால் பல சமயங்களில் பெரும்பலன் கிடைக்கும். சில சமயங்களில் பேரிழப்பு ஏற்படலாம். ஆனால் சமர்ப்பணம் செய்யப்பட்ட உயர்ந்த மனதைக் கொண்டு இருண்ட ஆசைகளை ஒளிமயமானவையாக மாற்ற முடியும். அப்படிச் செய்யும் போது பிரபஞ்ச அறிவையும், தனிமனிதர்களின் அறிவையும் கொண்டவனின் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகிவிடும். பூரண யோகம் என்பது மனதை நிறைக்கும் இறைவனைப் பற்றிய ஒற்றைச் சிந்தனை, இதயத்தை நிறைக்கும் இறைவனைப் பற்றிய ஒற்றை உணர்வு, அனைத்தையும் நிறைக்கும் இறைவனைப் பற்றிய ஒற்றை விருப்புறுதி என்ற மூன்று அங்கங்களைக் கொண்ட முப்புரி யோகப்பாதை. அதையடைய நம் முழு கவனமும் இறைவனின் மீது ஒருமுனைப்பட வேண்டும்’ என்றேன்.

‘இறைவன் என்றால் யார், என்ன என்று பொதுவாக யாருக்கும் தெரியாது. என்னவென்று தெரியாத ஒன்றின்மீது எப்படி கவனம் ஒருமுனைப்படும்? தத்துவங்களைத் தெரிந்து கொண்ட பின் பயிற்சி செய்வதுதான் நல்லதா?’ என்று கேட்டாள் பூரணி.

‘தத்துவ நூல்களைப் படித்த பின்தான் யோகம் செய்ய வேண்டுமானால் அவதாரபுருஷர்கள் மட்டுமே யோகம் செய்ய வேண்டியதாகி விடும். தத்துவ நூல்களை வார்த்தை வார்த்தையாக வாழ்நாளெல்லாம் கற்று ஞானக் கடலாக ஆன பின்னும் யோகத்தில் ஒரு அடி முன்னேறாமல் இருப்பவர்கள் பலர் உண்டு. ஞானக் கல்வி யோகத்திற்குப் பயனுள்ளது என்றாலும் அது அவசியமான ஒன்றில்லை. மனமும் இதயமும் விருப்புறுதியும் ஆர்வத்துடன் இறைவனை நாட வேண்டும். அதுதான் அவசியமான ஒன்று’ என்றேன்.

‘ஆர்வம் அணைந்தணைந்து எழுகிறது. நம்பிக்கை வளர்வதும் தளர்வதுமாக இருக்கிறது. விருப்புறுதி இருக்கிறதா என்றே தெரியவில்லை’ என்றாள் பூரணி.

‘புயல் காற்றிலே ஏற்றி வைத்த சிறிய தீபம் போலத்தான் இருக்கும். ஆனால் எண்ணெய் ஊற்றாக சமர்ப்பணம் இருந்தால் ஆர்வதீபம் படபடத்துக் கொண்டே இருந்தாலும் அணையாமல் இருக்கும். மெல்ல மெல்ல சூரியனாக மாறிவிடும். தாழ்ந்த மரப்பொந்தில் வைத்த தீப்பொறி காட்டையே வேள்வித்தீயாக மாற்றிவிடும். ஒரே ஒரு பொறி உண்மையான ஆர்வம் இருந்தால் போதும்’ என்றேன்.

‘ஒரே ஒரு முறை மட்டுமே இறைசிந்தனை எழுந்த கொள்ளைக்காரர்கள் திருமங்கையாழ்வாராக ஆனதையும், வால்மீகியாக ஆனதையும் வேறு எப்படி விளக்க முடியும்?’ என்றாள் பூரணி.

‘சமர்ப்பணம் மட்டுமிருந்தால் போதும். எதையும் எவரையும் இறைவன் ஏற்றுக் கொண்டு விடுவான். சாதகனின் இதயத்தில் இருப்பவனால் சாதகனின் சத்தியத்தை அறிய முடியாதா? சமர்ப்பணத்தோடு அதைப் பற்றிய கருத்துத் தெளிவும் இருந்தால் மலைச்சரிவில் நீரோட்டம் போல பயணம் துரிதமாக இருக்கும். அனைத்தையும் தழுவி அவற்றைக் கடந்து நிற்கும் இறைவனது அன்பில், கருணையில், மாறாத நம்பிக்கை வைத்துச் சமர்ப்பணம் செய்தாலே போதும். செய்ய வேண்டியவற்றை அவன் செய்து முடித்து விடுவான்’ என்றேன்.

பூரணிக்கு விளக்கம் தருவது என்னை வேறொரு மனிதனாக உணர வைத்தது. திறமையாகப் பேசி அவள் பாராட்டைப் பெற வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

‘யோகத்தை ஆரம்பித்து சீக்கிரம் வெற்றி பெற வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது’ என்றாள் பூரணி.

‘ஆர்வத்துடன் யோகத்தை ஆரம்பித்ததுமே ஆசை எழுந்து குறுக்கிடும்’ என்றேன்,

‘ஆர்வமும், ஆசையும் ஒன்றில்லையா?’ என்று கேட்டாள் பூரணி.

‘அகந்தையின்றி அடைய முயல்வதை ஆர்வம் என்றும், அகந்தையோடு அடைய முயல்வதை ஆசை என்றும் வைத்துக் கொள்ளுங்களேன்’ என்றேன்.

‘ஆசை எழுந்ததும் அதை விலக்கி விட வேண்டுமா?’ என்று கேட்டாள் பூரணி.

‘அதுதான் இல்லை. மனிதனின் ஆழத்தில் தூய ஆன்மா இருக்கிறது. மேற்பரப்பில் ஆசை ஆன்மா இருக்கிறது. இரண்டுமே வெவ்வேறு நிலைகளில் இருக்கும் இறைவனின் வடிவங்கள்தான். குடும்பப் பெண்ணும், விலைப் பெண்ணும் வெவ்வேறு நிலைகளில் இருந்தாலும் இருவருமே பெண்கள்-தானே! குடும்பப்பெண் எல்லாவற்றையும் பெற்று குடும்பத்திற்காக தரத் தயாராக இருப்பாள். விலைப் பெண்ணோ எல்லாவற்றையும் தான் பெற்றுக் கொள்ளத் தயாராக இருப்பாள். அகந்தையோடு இருக்கும் ஆசை ஆன்மா யோக முயற்சியால் உண்டாகும் நன்மைகளைத் தானே பெற்று தனக்காக பயன்படுத்திக் கொள்ள முனையும்’ என்றேன்.

பூரணியின் முகத்தில் ஒருகணம் வலியுணர்வு தோன்றி மறைந்தது. சிறிது துணுக்குற்றேன். ஒரு பெண்ணோடு நன்றாகப் பழகி அவள் நெருக்கமான தோழி ஆன பின்னும் சிலவற்றைப் பற்றி இயல்பாக பேசத் தயங்குவான் மனிதன். நானோ இப்போதுதான் பழக ஆரம்பித்திருக்கும் பூரணியுடன் ஏன் என்னையறியாமல் இப்படியெல்லாம் பேசுகிறேன்.

‘எதையுமே விலக்கக் கூடாதா?’ என்று கேட்டாள் பூரணி.

‘எத்தனை முறை கேட்டாலும் கூடாது என்பதுதான் பூரணயோகத்தின் பதில். விலகுபவனும், விலக்குபவனும் பூரணயோகி இல்லை. தவறான பார்வை மட்டுமே நாம் விலக்க வேண்டியது. அப்படிச் சொல்வது கூட சரியில்லை. தவறான பார்வையை ஏற்று அதைச் சரியான பார்வையாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசையின் நாயகனை முழுமையாக ஏற்று அவனை மெல்ல மெல்ல மாற்ற வேண்டும். அனைத்து ஆசைகளையும் இறைவனுக்காக வாழும் ஆர்வங்களாக மாற்ற ஆரம்பத்திலேயே அவனுக்குச் சொல்லித் தந்துவிட வேண்டும்’ என்றேன்.

‘பூரண யோகத்தினால் நன்மை எதுவும் கிடைக்காது என்று நமக்கே சொல்லிக் கொண்டால் ஆசை அடங்குமா?’ என்று கேட்டாள் பூரணி.

‘பூரண யோக முயற்சியின் பலனாக பலவகையான ஆன்மீக நன்மைகளும் நிச்சயம் கிடைக்கும் என்றாலும் தான் அவற்றைப் பெறுவதைப் பற்றி நினைக்காமல், தன்னுள்ளும் உலகத்தினுள்ளும் எங்கும் எதிலும் இருக்கும் இறைவனுக்காக மட்டும் எதையும் நாட ஆசை ஆன்மாவைப் பழக்க வேண்டும். அதன்பின் சரியாக நாடும் முறையை அதற்குச் சொல்லித் தர வேண்டும். அதுதான் சிரமமானது’ என்றேன்,

‘அதென்ன சரியாக நாடும் முறை?’ என்றாள் பூரணி.

‘அறியாமையில் இருக்கும் அகந்தை எதையும் இப்படித்தான் இருக்க வேண்டும், எதையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நினைக்கும். எதை நாடினாலும் தனக்கு விருப்பமான வழிகளில் மட்டுமே அதை அடைய முயலும். அதை மாற்றி இறை விருப்பத்தின்படி நடப்பதைச் சலனமின்றி ஏற்க ஆசை ஆன்மாவைப் பழக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஆசை ஆன்மா இறைவனுக்கு உகந்த வலிமையான தூய கருவியாக மாறி விடும். ஆசையான்மா இறைவனுக்குத் தன்னை சமர்ப்பணம் செய்துவிட்டால் எண்ணமும், இதயமும், விருப்புறுதியும் இறைமயமாகிவிடும்’ என்றேன்.

‘அகந்தையின் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மனதை, வாழ்வை, உடலை செம்மை செய்யவில்லை. இவற்றை இறைவனின் கோவிலாக்கவே சமர்ப்பணம் செய்கிறோம். சரிதானே?’ என்றாள் பூரணி.

‘சமர்ப்பணம் முழுமையாகாமல் அதைச் செய்ய முடியாது’ என்றேன்.

‘அகந்தையே மனிதனாக இருக்கும்போது அது சமர்ப்பணமாகிவிட்டால் எது எஞ்சும்? இறைவனுக்கு எது கருவியாக இருக்கும்?’ என்று கேட்டாள் பூரணி.

‘சிறு அகந்தையின் பின்னே மாபெரும் ஆன்மீக புருஷன் இருக்கிறான். சமர்ப்பணத்தால் அகந்தை கரைந்தபின் அவன் வெளிப்படுகிறான். அவன் கரைவதில்லை. அவனே இறைவனின் விருப்புறுதியை நிறைவேற்றும் கருவியாக இருப்பான். அது நடக்க சமர்ப்பணம் இடைவிடாமல் செய்து கொண்டிருப்பது தேவையான ஒன்று’ என்றேன்.

‘எந்த அளவிற்குச் சமர்ப்பணம் செய்தால் யோகம் பலிக்கும்?’ என்று கேட்டாள் பூரணி.

‘முழுமையான சமர்ப்பணம் குறைந்தபட்ச தகுதி. அந்தத் தகுதி இல்லாமல் பூரணயோகத்தின் முதல் சித்தி கிடைக்காது’ என்றேன்.

‘அது என்ன சித்தி?’ என்று கேட்டாள் பூரணி.

‘தான் பிரபஞ்சமாகி இறைசக்தி தன்னுள் தடையின்றி இடையறாமல் செயல்படும் நிலையைப் பெறுவதே முதல் சித்தி’ என்றேன்.

‘நீங்கள் சொல்வதைச் செய்து முடிக்க தொடர்ந்து முயன்றாலும் நீண்ட காலமாகும் என்று தோன்றுகிறது’ என்றாள் பூரணி.

‘பூரண சமர்ப்பணம், பூரண சரணாகதி. அதைச் செய்து முடிக்க நீண்ட காலமாகும்தான்’ என்றேன்.

பூரணி ஏதேனும் கேள்வி கேட்பாள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. அவள் தன்னுள் மூழ்கியவளாக இருந்தாள். சிறிது நேர மௌனத்திற்குப் பின் மீண்டும் நானே பேசினேன்.

‘அந்த நீண்ட காலத்தை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.

முதல் கட்டம் மனித செயலாலானது. மூன்றாவது கட்டம் இறை செயலாலானது. நடுவே இருக்கும் கட்டம் மனிதசெயலும், இறைசெயலும் கலந்திருக்கும் கட்டம்’ என்றேன்.

‘தூய பாலை அழுக்கு பாத்திரத்தில் ஊற்றுவது தவறு.

முதலில் பாத்திரம் சுத்தமாக வேண்டும்’ என்றாள் பூரணி.

‘அதேதான். முதல் கட்டத்தில் முழு அகந்தையோடு நுழைகிறோம். அகந்தை உள்ளவரை மனித முயற்சி அவசியம். பூரண சரணாகதி நிறைவேறும் மூன்றாவது கட்டத்தில்தான் மனித முயற்சியற்ற இறைசெயல் நிகழும். இறை சக்தியை அழைத்துக் கொண்டே இருந்தால் முதல் கட்ட மனித முயற்சி எளிமையாகத் தொடங்கும்’ என்றேன்.

‘நான் முதல் கட்டத்தில் எங்கிருந்து என் முயற்சியை ஆரம்பிக்க வேண்டும்?’ என்று கேட்டாள் பூரணி.

‘எங்கு இருக்கிறோமோ அங்கிருந்துதான். முதல் கட்டத்தில் இறைவாழ்விற்கு நம்மைத் தயார் செய்து கொள்வதற்காக சுய முயற்சியை முழுமையாக எடுக்க வேண்டியிருக்கும். எதிலும் இறைவனை நினைத்து, உணர்ந்து அவனுக்காக செயல்படும் பாவனையை மேற்கொள்வதும், இறையார்வத்திற்கு ஒத்துவராத எதையும் ஏற்க மறுத்து அனைத்தையும் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்வதும் நிகழ வேண்டும். இந்த முயற்சி முழுச் சுயார்ப்பணத்தை நிகழ்த்தி சரணாகதிக்கு இட்டுச் செல்லும். இதை அடிப்படையாகக் கொண்டால் நாம் எங்கிருந்தாலும் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று புரிந்து கொள்வது சுலபம்’ என்றேன்.

‘புரிகிறது’ என்றாள் பூரணி.

‘இரண்டாம் கட்டம் மனிதநிலைக்கும், இறைநிலைக்கும் இடைப்பட்ட நிலை. மனிதசக்தி குறைவாகவும், இறைசக்தி அதிகமாகவும் செயல்படும் நிலையிது. மேலிருந்து பாய்ந்திறங்கும் இறைசக்தி அற்புதமாக செயலாற்றுவதைக் கண்களால் காணக் கூடிய நிலையிது. மூன்றாம் கட்டம் கதிரொளியால் மொட்டு இயல்பாக மலராவதைப் போல சாதகமும், செயலும் முழுக்க முழுக்க இறைவிருப்பத்தின்படி இயல்பாக நடக்கும். அது மனித முயற்சியோ, முறையோ எதுவுமற்ற நிலை’ என்றேன்.

‘ஒரு கட்டம் முடிந்து அடுத்த கட்டம் ஆரம்பிப்பதை அறிந்து கொள்வது எப்படி?’ என்று கேட்டாள் பூரணி.

‘கட்டங்கள் அடுத்தடுத்து உள்ளன என்றாலும் ஒன்று முடிந்த பின்தான் அடுத்தது ஆரம்பிக்கும் என்று சொல்ல முடியாது. இரண்டாவது கட்டம் ஆரம்பித்த பின்னும் முதல் கட்டத்தின் சில நிலைகள் அவ்வப்போது குறுக்கிடும். பிரம்மம் இறுதியில் தரப் போகும் பரிசு என்ன என்பதை உணர்த்துவதற்காக மூன்றாம் கட்ட நிலை அவ்வப்போது முதல் கட்டத்தில் தலைகாட்டும். முதல் கட்டத்தில் முழுமையான மாற்றம் ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே உயர்ந்த சக்தி ஒன்று நம்மை வழி நடத்துகிறது என்ற உணர்வு ஏற்படும்’ என்றேன்.

‘இது ‘உயர்ந்த சக்தி நம்மை கருவியாக்கி செயல்படுகிறது, நம் சுயார்ப்பணம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான மறுமொழியும் கிடைக்கத் தொடங்கிவிட்டது’ என்பதற்கான அடையாளம். தான் தேர்ந்தெடுத்தவனைத் தன் திருக்கரங்களால் தூயவன் இறுகப் பற்றிக் கொண்டு விட்டான் என்ற நிலை.

சரியா?’ என்றாள் பூரணி.

‘நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். எது எப்படியோ இப்படியெல்லாம் நடக்கும்போது மெல்ல மெல்ல நம் அகமும், புறமும் பேரொளியின் தீண்டலால் பக்குவப்படுகிறது என்பதை உணர முடியும்’ என்றேன்.

‘அதிகப்பிரசங்கியாக நிறைய கேள்விகள் கேட்கிறேனா?’ என்று கேட்டாள் பூரணி.

‘இடைவிடாமல் பிரம்மத்தைப் பற்றி பிறருக்கு உபதேசித்துக் கொண்டிருந்தால் மேலிருந்து கீழிறங்கும் சத்தியம் மதங்களாக மாறிவிடுகிறது. அது பிரம்ம உபதேசத்தின் பலன்.

எக்கருத்தையும் பற்றி கேள்வி எழுப்புவதன் மூலம் முரண்பட்டு நிற்கும் கருத்துகளிடையே இணக்கத்தை உருவாக்கி, மேலுயர்ந்து மறந்த சத்தியத்தை மீண்டும் அடையலாம். அது பிரம்ம சம்வாதம். பிரம்ம உபதேசத்தைவிட பிரம்ம சம்வாதமே எனக்குப் பிரியமானது’ என்றேன்.

நான் தங்கியிருந்த இடம் வந்து விட்டது. ஏன் இவ்வளவு சீக்கிரமாக வந்தது என்று தோன்றியது. பேச இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனவே!

காரிலிருந்து இறங்கியபின், பூரணியை நான் தங்கியிருந்த அறைக்கு அழைக்கலாமா வேண்டாமா என்று யோசித்து முடிவெடுப்பதற்குள், ‘இன்னும் எத்தனை நாட்கள் இங்கே தங்கி இருப்பீர்கள்?’ என்று கேட்டாள் பூரணி.

‘இன்றே கிளம்பி இருக்க வேண்டும். மழை தங்க வைத்து விட்டது. நாளை காலை புறப்பட வேண்டும்’ என்றேன்.

‘காலையில் உங்களோடு பேச முடியுமா? நாளை மதியம் போங்களேன்’ என்றாள் பூரணி.

என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே என் நாக்கு ‘சரி’ என்றது. ‘நாம் பேசியவற்றிலிருந்து பூரண யோக அழைப்பை ஏற்றதும் உடனே செய்யக் கூடியது என்ன என்று புரிந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வினாடியிலும் எந்தவொரு அசைவையும் என் நெஞ்சிலிருக்கும் தேவனை அழைத்துச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அவனைத் தவிர வேறெவருக்காகவும், வேறெதற்காகவும், எதையும் செய்யப் போவதில்லை’ என்றாள்.

‘அழைப்பையும், சமர்ப்பணத்தையும் தவிர வேறு என்ன வேண்டும்? எப்போதிலிருந்து உங்கள் யோக முயற்சியை ஆரம்பிக்க உத்தேசம்?’ என்று கேட்டேன்.

பூரணி என் கண்களைப் பார்த்து புன்னகைத்தாள். பின் கையசைத்துவிட்டு காரை நகர்த்தினாள்.

நீரற்றுக் காய்ந்துபோன மலர்ச்செடி, மழைத்தூறலால் விரிந்தெழுவதைப் போல, அவள் புன்னகையால் என்னிதயம் விரிந்தது. உற்சாகத்துடன் என்னறைக்குள் நுழைந்து, புத்தகப் பையையும், குடையையும் மேசை மீது வைத்துவிட்டு, படுக்கையில் சாய்ந்தேன். பூரணியோடு தினமும் பேச வேண்டும். அவளை மகிழ்விக்க வேண்டும். கருத்துகளை, புதிய சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி விளக்க வேண்டும். என் சிந்திக்கும் திறனை, விளக்கும் திறமையை உணர்ந்து அவளது விழிகள் வியப்பால் விரிய வேண்டும். அது அடிக்கடி நடக்க வேண்டும்.

பூரணியைச் சந்தித்த பரபரப்பும், படபடப்பும் அடங்கியபின் என் போதம் விழித்துக் கொண்டது.

இவ்வளவுதானா என் ஆன்மீக ஆர்வம்? நான் உண்மையில் பூரணயோக சாதகன்தானா? அழகிய இளம்பெண்ணைப் பார்த்ததும் இப்படியா என்னிலையை மறந்து போவேன்?

இவள் எதற்காக என் வழியில் குறுக்கிட்டாள்? முற்காலத்தில் முனிவனின் தவத்தைக் கலைக்க மயக்கும் அப்சரஸ் வருவாளாம். என்னை மயக்க வந்த அப்சரஸா பூரணி? துரியா, மூடா, மூடா, மங்கை ஒருத்தி உன்னை மயக்கினாள் என்றால் அது அவள் குற்றமா, உன் குற்றமா? முட்டாளாக, சுயஏமாற்றுக்காரனாக இருக்காதே.

இவளது கண்களை நேருக்கு நேர் பார்த்தேனே? அதன்பின்னும் எப்படி என்னால் அவளைப் பற்றி இப்படி யோசிக்க முடிகிறது?

இத்தனை நேரம் பூரணிக்கு நான் கூறியது அத்தனையும் எனக்கு நானே கூறிக் கொண்டதுதான். எதையும் விலக்காதே என்று கூறினேன். பெண்களோடு பழகுவதை இதுவரை தவிர்த்தே வந்திருக்கிறேன். அவர்களால் கவனம் சிதறி விடுமோ என்ற அச்சம். என் அகத்திலிருந்த அச்சத்தை எனக்கு உணர்த்த பெண்ணுருக் கொண்டு வந்த பிரம்மம் பூரணி.

என்னைப் போன்ற வாலிபனின் அருகாமையாலோ, பழகும்போதோ, சிறிதும் சலனமடையாமல், எத்தனை இயல்பாக நான் கூறுவதைப் புரிந்து கொள்வதிலேயே அவள் கவனமாக இருந்தாள். அதே சமயம் காரை எத்தனை லாவகமாக ஓட்டினாள். நான்தான் சலனமடைந்து விட்டேன். பெண்ணின் அருகாமையை, அவளது மென்மை தரும் இனிமையை என் ஆண்மை விரும்புகிறது. நான் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்வதால் என்ன பயன்? உள்ளதை ஒப்புக் கொள்ள மறுத்தால் முன்னேற்றம்தான் தடைபடும்.

பெண்ணின் அழகின் மீது, ஆனந்த அலைகளை இதயத்திலும், உணர்விலும், உடலிலும், ஏற்படுத்தும் பெண்மை மீது நான் காதல் கொண்டுவிட்டேன் என்பதை ஏற்கிறேன். இருப்பதை, உள்ளதை உள்ளபடி ஏற்பதைத் தவிர பூரண யோக சாதகனுக்கு வேறு வழியில்லை. இந்தச் சலனத்தை, காதலை, பூரணிக்குள் இருக்கும் பிரம்மத்தின் மீது, அவளது இதயத்திற்குள் சுடர் விட்டு ஒளிரும் சைத்திய புருஷனின் மீது கொண்ட அன்பாக மாற்றுவேன்.

இன்று காலையில்தான் ஒரு குட்டிக் கதையை வாசித்தேன்.

ஒரு நாளிரவு அந்தகன் ஒருவன் மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டு, தெருவில் நடக்க ஆரம்பித்தான். ‘உனக்குத்தான் கண் தெரியாதே, எதற்கு விளக்கு?’ என்று பக்கத்து வீட்டுக்காரன் கேட்டான், ‘மற்றவர்களுக்குத் தெரியுமே, என் மீது மோதாமலிருப்பார்கள்!’ என்று கூறிவிட்டு நடந்தான் அந்தகன். சிறிது நேரத்தில் யாரோ அவன் மீது மோத, கோபத்துடன் ‘விளக்கைக் கண்டு விலகக் கூடாதா?’ என்று கேட்டான். மோதியவன், ‘தோழா, உன் விளக்கு ஏற்கனவே அணைந்து விட்டிருக்கிறது, உன்னால் அதை அறிய முடியவில்லை’ என்றான்.

அறியாமையில் இருக்கும் நான், அடுத்தவருக்கு வழிகாட்ட கிளம்பி விட்டேன். முதலில் என் அகத்தினுள் அணையாத தீபத்தை ஏற்றுகிறேன்.

என்னிடம் கற்றுக் கொள்ள விரும்பும் பூரணியை என் வழிகாட்டியாக, குருவாக ஏற்கிறேன்,

பிறரின் நிறைகளை மட்டுமே பார்க்கும் பூரணி என் குறையை நீக்கட்டும்.

(தொடரும்)

**********book | by Dr. Radut