Skip to Content

08. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

31. தீராத பிரச்சனை:

இறைவன் மனிதனுக்கு அவனால் தீர்க்க முடியாத பிரச்சனையைக் கொடுப்பதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனால் தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை மட்டுமே இறைவன் கொடுக்கிறான். ஆனால் மனிதன் அதிகபட்ச முயற்சி எடுத்து, முயன்றால் அவை தீரும். சாதாரண முயற்சியால் சாதாரணப் பிரச்சனை தீரும். தீவிர முயற்சியால் எந்தப் பிரச்சனையும் தீரும். பலர் முயன்று தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொண்டு முன்னேறுகிறார்கள். மற்றவர் அந்த முயற்சியை எடுப்பதில்லை. முயன்றோர்க்கு முன்னேற்றம் என்பது அன்னை பிரச்சனைகளைப்பற்றி சொல்லியிருப்பது. ரூ.2000 மாத வருமானமும், ரூ.75,000 சொத்தும் உள்ளவர்க்கு இரண்டரை இலட்ச ரூபாய் கடனானால் அது அவரால் தீர்க்கக்கூடிய பிரச்சனை என்று எப்படிச் சொல்வது? அவரை மீறிய பிரச்சனை அல்லவா அது? மேற்படி நபர் நாணயமானவர். அவர் போட்ட திட்டம் (project)) வெகு இலாபகரமானது. அவரது நாணயத்தாலும், திட்டத்தின் அதிகபட்ச இலாபத்தாலும் கடன் கிடைத்தது. தற்சமயம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கவில்லை; வட்டி சேர்ந்து பாரமாகிவிட்டது; விழி பிதுங்குகிறது என்ற நிலையில் கடைசியாக அன்னையால் ஏதாவது வழி பிறக்குமா என்று அரைகுறை நம்பிக்கையுடன் ஆசிரமம் வந்தார். மறுநாளே கழுத்தில் இருந்த கத்தி விலகியது. ஆனால் விழி பிதுங்கும் நிலை ஒன்றரை வருஷம் மாறவில்லை. எந்தச் சாதுர்யத்தைப் பயன்படுத்திக் கடனை முதலில் வாங்க முடிந்ததோ, அதே சாதுர்யத்தைப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்க வேண்டும் என்ற சவால் அவருள்ளிருந்து எழுந்தது. அதன்பின் பிரார்த்தனை பலித்தது. புதிய நிலைமை சாதகமாக ஏற்பட்டது. உயிரை விட்டுச் செய்த முயற்சியால் திட்டத்தை வெற்றிப் பாதைக்கு மாற்றிவிட்டார். நிலைமைக்கு மீறிய கஷ்டத்தை உற்பத்தி செய்தவர்கள் தங்களுக்கு உள்ள சாமர்த்தியம், சாதுர்யம், நாணயம், செல்வாக்கு, சிபாரிசு ஆகிய முழு முயற்சியுடன் தம் முழுமூச்சுடன் செயல்பட்டு அந்தக் கஷ்டத்தை உருவாக்கியிருப்பார்கள். முயற்சி பெரியது. அறிவு இல்லாமல் ஆசையால் உந்தப்பட்டு ஒரு நிலைமையை ஏற்படுத்தி விடுவார்கள். பின்னர் பிரச்சனை வடிவம் பெற்று, உயிர் பெற்று, வேரூன்றி, தீர்க்க முடியாது என்றாகிவிட்டால், அப்படியே போட்டு விட்டு ஓடிவிடலாம் என நினைப்பார்கள்; ஓடிவிடுவார்கள். எப்படி முழுமூச்சோடு நிலைமையை உருவாக்கினார்களோ, அந்த முழுமூச்சுடன் நிலைமையைச் சமாளிக்க முயன்றால், பிரச்சனை தீரும். அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை பலிக்கும்.

இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் உள்ளவர், இப்படிப்பட்ட முடிவை எடுத்துவிட்டால், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பல வழிகள் உள்ளன. அப்படிப்பட்ட முயற்சியை எடுக்க முடிவு செய்தபின் செய்யும் பிரார்த்தனை பூரணமாகப் பலிக்கும். முயற்சியைச் செய்வதற்கு முன்னும் பலிக்கும். இந்தக் கோணத்தில் பார்த்தால், தீர்க்க முடியாத பிரச்சனை, தீராத பிரச்சனை என்று ஒன்றில்லை எனலாம்.

இந்த முடிவை நிறைவேற்ற உதவும் முறைகள் பல. அவையாவன:

  1. தவறு என்னிடம் இருக்கிறது. நான் திருத்திக்கொள்கிறேன் என்ற முடிவை ஏற்றுக்கொள்ளுதல்.
  2. இதுவரை நான் செய்த முயற்சிகளைவிட அடுத்த கட்டத்தில் ஒரு முயற்சியைச் செய்ய நான் தயார்.
  3. இதுவரை என்னால் விடமுடியாத குறையை நான் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக விட்டுவிட முடிவு செய்து விட்டேன்.
  4. இன்று செயல்படும் கட்டத்தில் (perfection) பூரணச் சிறப்பை அடைய முயல்வேன்.
  5. முயன்றால் முடியாதது ஒன்றில்லை என்ற நம்பிக்கை இருக்கிறது. பிரச்சனை தீரும்வரை விடாமுயற்சி செய்வேன்.
  6. மற்றொருவரால் இதுபோன்ற பிரச்சனையைத் தீர்க்க முடியுமானால், என்னால் அது முடியும்.
  7. பிரச்சனையைத் தீர்க்கக்கூடிய இரகஸ்யம் ஒன்று உண்டு. அதைக் கண்டுபிடிக்க முயல்வேன்.
  8. நாம் நம்பும் கருத்துகளின் எதிர்மறையானவையும் (opposite ideas) உண்மை என நான் ஏற்றுக்கொள்கிறேன்.
  9. முயற்சி செய்யாமல் அழிவதைவிட, முயற்சி செய்து தோல்வி அடைதல் சிறப்பு. 

1. தவறு என்னுடையதே:

இந்தக் கொள்கை சிறப்பானது. என் மீது தவறில்லை எனும்போது செயல்படுவது அகந்தை. நான் எனும் முனைப்பு, அகங்காரம். தவறு என்னுடையதே என்று சொல்லியவுடன் அகந்தை அகற்றப்படுகிறது. அத்துடன் நம் திறமைகள் எல்லாம் அகந்தையின் பிடியிலிருந்து விலகி, பிரச்சனையைத் தீர்க்க தங்கள் வலுவை நமக்குக் கொடுக்கின்றன. இது பெரிய விஷயம்.

“தவறு என்னுடையது மட்டுமே. எல்லாத் தவற்றுக்கும் நானே பொறுப்பாளி. திட்டம் (project) கூடிவரவில்லை என்றால் தவறு இருக்கிறது என்று பொருள். அப்படி இருக்கும் தவற்றுக்கு முழுப் பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறி முதல் போட்ட கூட்டாளியிடமிருந்து விலகிய கஷ்டக் கூட்டாளிக்கு, 10-ஆம் நாள் முழுத்திட்டமும் (project) தானே திரும்ப வந்தது. இந்தக் கொள்கைக்குரிய திறன் அத்தகையது. “தவறு என்னுடையது என்று ஏற்றுக்கொண்டேன். திட்டம் (project) வந்துவிட்டது. ஆனால் கூட்டாளி செய்த துரோகத்தை நினைத்தால் இன்றும் ஆத்திரம் பொங்கிவருகிறது. கோபம் வருவது தவறு. இனி என் கோபத்தை அழிக்க முற்படுவேன்” என்று சபதமிட்டு கோபத்தை முழுவதுமாக அடிக்கடி நான்காண்டுகள் முயன்று வெற்றி கிட்டிய அதே க்ஷணத்தில், துரோகம் செய்த கூட்டாளி அவரைஅழைத்து, “நடந்ததெல்லாம் சரியில்லை. நீங்கள் செய்தது அனைத்தும் சரி. ஆரம்பத்திலிருந்தது போல் நாமிருப்போம்” என்று கூறி நட்பை அளிக்க முன்வந்தார்.

2. இதுவரை செய்யாத முயற்சியை நான் செய்ய ஏற்றுக்கொள்கிறேன்:

S.S.L.C.யை எட்டினால் போதும், நம் வீட்டுப் பையன் S.S.L.C.பாஸ் செய்ய முடியாது என திட்டவட்டமாக நம்பிய குடும்பத்தில் அவர்கள் வீட்டுப் பையன் S.S.L.C..யை மூச்சைப் பிடித்துக்கொண்டு பாஸ் செய்து, இன்டர்மீடியட் சேர்ந்து 3 முறை தவறி, 4-ஆம் முறை 35 மார்க்குடன் பாஸ் செய்தான். அவனை B.A. (Hons.) சேர வேண்டுமென சொன்னபொழுது அவனுக்குப் பீதி ஏற்பட்டது. B.A. (Hons) மூலம் 4 வருஷ .M.A. படிப்பை 3 வருஷத்தில் முடிக்கலாம். ஆனால் பரீட்சை ஒரே ஒரு முறைதான் எழுதலாம். பெயிலானால் மீண்டும் இன்டர்மீடியட்தான் நிலைக்கும். B.A. (Hons.) அட்மிஷன் வாங்குவது கஷ்டம். தான் இதுவரை அசுரப் பிரயத்தனம் செய்துவருவதால் இதைவிட அதிக முயற்சிக்கு இடம் இல்லை எனப் பையன் பின்வாங்கினான். “நீ செய்த முயற்சி அளவு கடந்தது, சரி. ஆனால் முயற்சியின் தரத்தை (quality) உயர்த்தினால் பலனுண்டு. முயற்சியின் அளவை (quantity) இனி உயர்த்த முடியாது. இதற்கு நீ சம்மதித்தால் நல்ல எதிர்காலம் உண்டு” என்ற அறிவுரையை அவன் ஏற்றுக்கொண்டான். B.A. (Hons.) முதல் நிலையில் (I class) பல்கலைக்கழகத்தில் முதல்வனாகத் தேறி, M.Litt.-ம் பெற்று வெளியே சென்று, மீண்டும் M.A.-யும், Ph.D.-யும் பெற்று பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் ஆனான்.

இன்றுவரை உள்ளதைவிட உயர்ந்த நிலை ஒன்றுண்டு. அதை அடையச் செய்யும் முயற்சிக்கு உள்ள பலனைக் கனவிலும் நாம் கருத முடியாது. அப்படிப்பட்ட முயற்சியே அன்னை வழிபாடு. அன்னையை வழிபட அதைவிடச் சிறந்த முறைகளில்லை. அன்னார் வாழ்வில் அன்னை அளவிறந்து செயல்படுவார்கள். வாழ்வே வழிபாடு ஆகும்.

தொடரும்...

*******



book | by Dr. Radut