Skip to Content

07. சமூகம் நம்மைக் காக்கும் தாய்

சமூகம் நம்மைக் காக்கும் தாய்

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

சொற்பொழிவு : திரு நாகராஜன், ராணிப்பேட்டை மையம்.

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 07/09/2014

உடலுக்குத் தாய் பெற்றவள், ஊரைப் பெற்றெடுத்த தாய் சமூகம். சமூகம் மனிதனுக்குப் பாட்டி, தாயைப் பெற்றெடுத்த பெரிய தாய். மூச்சு இடைவிடாமல் உயிரைக் காப்பது போல், சமூகம் இடைவிடாது நம்மைக் காப்பாற்றி, உயிரளித்து, உற்சாகமூட்டுவதை நாம் கண்டுகொள்வதில்லை. கடையில் போய் ஒரு பொருள் வாங்கும்பொழுது - பழம், பேனா, நாற்காலி, புத்தகம் - சமூகம் இதைத் தயாரித்து விநியோகம் செய்வதை நாம் நினைவு கூர்வதில்லை. போலீஸ் ஸ்டேஷனில்லாவிட்டால் ரோட்டில் நடக்க முடியாது. குழந்தைகளைத் தனியே அனுப்பமாட்டோம். கேரளாவில் சூரியன் மறைந்தபின் பெண்கள் வெளியே வருவதில்லை. ஹர்த்தால் அன்று இது சற்று அதிகமாகப் புரியும். ஹர்த்தாலில் போலீஸ் சற்று ஒதுங்கியிருப்பதால், அவரவர் தம் எதிரிகளைத் தாக்கும் சந்தர்ப்பமாக அதைக் கொள்வதும் உண்டு. எவரும் அடுத்த வீட்டில் நுழைந்து பொருட்களை எடுத்துப் போகவில்லை என்பது மக்களுடைய நாகரீகமான கட்டுப்பாடு என்று கூறுவதைவிட சட்டம், போலீஸ் தடி மூலம் அமுலாகும் என்பதால் என அறியலாம். எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்று இன்றுவரை நடைமுறையில் காண்கிறோம். ஒருவன் ஏமாந்தவனானால், 1) அவன் அழ அழ மற்றவர் வெறியேற்றுவர், 2) அவன் பொருட்களைப் பறித்துக் கொள்வார்கள், 3) அசகாய சூரர்கள் அவனிடம் எதைப் பெற்றாலும் ஏமாற்றலாம் எனக் கருதி அவனிடம் பல பொருட்களையும் கேட்டுவாங்கி, “ஏமாற்றி விட்டேன், திரும்பி வாங்கி விடுவாயா?” என சவால் விடும் சமூகம் இது. உள்ளதைக் காப்பாற்ற முடியாத மனிதனை ஊரின் அநியாயத்திலிருந்து சமூகம் காப்பாற்றும். படிக்க வசதியற்றவனுக்குப் படிக்க எல்லா வசதிகளையும் சமூகம் தருகிறது.திருமணத்திற்குத் தகுதியில்லாதவர்க்குத் திருமணம் செய்து வாழ்நாள் முழுவதும் வாழ்க்கைத் துணையை வழங்குகிறது. பெற்றவர் பராமுகமானால், கொடுமை செய்தால், அதனால் பையன் ஓடிப்பிழைக்க முயன்றால், சமூகம் அவனைக் கோடீஸ்வரனாக்குகிறது. பிள்ளைகள் வயதான காலத்தில் பெற்றோரைக் காப்பாற்றாவிட்டால், அவர்கட்கு பென்ஷன் தந்து, முதியோர் இல்லத்தில் பாதுகாக்கிறது. வீடு கட்ட நினைக்க முடியாதவர்க்கு வீடு கட்டிக் கொடுக்கிறது. சம்பாதிக்க முடியாதவனுக்குக் கடன் உதவி, முதல் தேவைப்பட்டால், சம்பாதித்துச் சேமித்து வைத்தவன் முதலை பாங்க் மூலம் வாங்கித் தருகிறது. அறிவேயில்லாத ஆயிரம் பேருக்கு அறிவிற்சிறந்த மேதைகள் உருவாக்கிய பொருட்களை அனுபவிக்கும் வகையில் உற்பத்தி செய்து தருகிறது. கரணம் தப்பினால் மரணம் என்று — நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமையுள்ள உலகில் — அமைந்த வாழ்வில் பெரும்பாலும் மரணத்திலிருந்து காப்பாற்ற வழி செய்கிறது. மரணத்தால் அழிந்தவன் குடும்பம் வாழ இன்ஷுரன்ஸ் ஏற்பாடுண்டு. உள்ளூரை விட்டு B.A. பாஸ் செய்யும்வரைரயில் பிரயாணம் செய்யாதவருக்குப் பிள்ளைகளை அமெரிக்கா அனுப்பும் வசதி சமூகம் தருவதாகும்.

சமூகம் உயிரைக் காப்பாற்றுகிறது. உள்ளம் வளம் பெறும் கலைகளையும் கற்பனைகளையும் வழங்குகிறது. ஆயுள் 1947-இல் 30 ஆண்டாக இருந்ததை 60 ஆண்டாக வாழ உதவுகிறது. குடிநீரைச் சுத்தம் செய்து அதனால் வரும் வியாதிகளினின்றும் காப்பாற்றுகிறது. நிலத்தில் மண்வெட்டி எடுத்து வேலை செய்தவனுக்கு ஆலையில் வேலை தருகிறது. Pick Pocket-டையே பரம்பரையாகப் பழகி இந்தியா முழுவதும் பரவிய பரம்பரையை நாணயமான மக்களாக மாற்ற நெசவாலையை ஏற்படுத்துகிறது. 50 மைல் பிரயாணம் செய்தறியாத மக்களுக்கு 5000 மைல் பிரயாணம் செய்யும் வாய்ப்பை அளிக்கிறது. கலவரங்களில் மனிதன் மிருகமாக நடந்து ஒரு கோடி பேர் ஊரை விட்டுப் போய் அவதியுற்ற பொழுது மனிதனுடைய உண்மை நிலையை நாம் அறிய முடிந்தது. அவர்கள் மீண்டும் வாழ்வு பெற சர்க்கார் செய்த பேருதவி, இன்று எந்தப் பகுதியிலும் (அவர்கள் தங்கிய இடங்களில்) அவர்களே அதிக வசதி பெற்றவர் என்ற நிலையை அடைய உதவி செய்தது சமூகம். சமூகத்திற்குச் சக்தியுண்டு.அதை நமக்குத் தருகிறது. கேட்காமலும் தருகிறது. சமூகம் படைக்கும் திறனுடையது. மனிதன் படைக்க முடியாததைப் படைத்து அவனுக்குப் படைக்கிறது. தாயாகவும், தந்தையாகவும், ஆசானாகவும், குருவாகவும், நண்பனாகவும், உறவினனாகவும், தெய்வமாகவும் எல்லாமுமாக சமூகம் மனிதனுக்குச் செயல்படுகிறது. மனிதனை மேதையாக்குவது சமூகம். சமூகம் உலக அனுபவங்களையும், அறிவுக் களஞ்சியங்களையும் திரட்டி வைத்துள்ளது. கல்லூரிகள் மாணவர்கட்கு அதன் ஒரு பகுதியைத் தருகின்றன.முழுவதையும் தரும் அமைப்பு கல்லூரியில் அனைவருக்கும் பொதுவான பாட திட்டத்தையே ஏற்க முடியும். மேதை என்பது தனி ஒருவன் தன் திறமையின் திண்மையால் உச்சகட்ட உயர்வு பெறுவது. அந்த அமைப்புக்குக் கல்லூரி இடம் தராது. புதியதாக வந்த Web Course-களில் கல்லூரிகளைவிட அதிக சந்தர்ப்பம் உண்டு. மேதைகளை (புதிய Genius) உற்பத்தி செய்யும்படி Web Course-கள் அமைக்க முடியும் என்றாலும் ஜனத்தொகையில் பாதிபேர் தற்போது அடிப்படையான கல்வியறிவும் பெறாத நிலையில் இருப்பதால், அதை முதன்மையாக கவனிப்பது அவசியமாகிறது. கல்வி முறையின் நுணுக்கங்கள் ஏராளம். சமூகம் முதல் நிலையிலிருந்து முடிவு வரையுள்ள எல்லா சிறப்பையும் பெற்றுள்ளது. பெற முன்வருபவர் பெறலாம் என்பதே நிலை. அது போல் ஒரு நூற்றாண்டில் மேதைகளாக உருவானவர் 100 பேரில்லை. 20-ஆம் நூற்றாண்டில் உலகம் கண்ட மேதைகளை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் சமூகம் தனி மனிதனை மேதையாக்கவல்ல ஞானம் வழங்கும் தாய். கல்வியென்பதை கல்வி, கேள்வி எனவும் கேள்வி ஞானம் எனவும் குறிப்பிடுவார்கள். உலகின் அறிவு, அனுபவம், ஞானம், திறமை, திண்மை, சூட்சுமம், நுணுக்கம் ஆகியவை நமக்குத் தெரிந்த பல இடங்களிலும், தெரியாத ஏராளமான இடங்களிலும் சேகரம் செய்யப் பட்டுள்ளது. இன்று Internet வந்துவிட்டது. எவரும் அதை அதிகபட்சம் பயன்படுத்தலாம். எல்லாவற்றையும் அதன் மூலம் அனைவருக்கும் தரலாம். 100 ஆண்டுகளில் சில மேதைகட்குப் பதிலாக இம்முறையால் ஆண்டிற்கு ஒரு மேதை உருவாவர். கல்வியின் எல்லா நுணுக்கங்களையும் அறிந்து, பெறுபவர் பெறும் அளவின் தரம் அறிந்து, கொடுக்கும் கருவியின் வீச்சையும் அறிந்து Web Course உருவாக்கப்பட்டால் ஆண்டுதோறும் அநேக மேதைகள் ஏற்படுவர். எந்தச் செயலுக்கும் குறைந்தபட்சம், அதிகபட்சம் உண்டு. இடைப்பட்ட நிலைகள் ஏராளம். 100 ஆண்டிற்குமுன் ஒரு பிரெஞ்சு சிந்தனையாளர் திருஷ்டியில் இந்த விஷயம் எழுந்தது. அவர் 3 கோடியே 70 லட்சம் மேதைகள் 4 துறைகளில் எழுவர் என்றார். அது அதிகபட்சமாக இருக்கும். மேதை என்பது யார்? எது மேதாவித்தனம்?

மனப்பாடம் செய்து பெறுவது அறிவு என்பது முதல் நிலையான ஒரு நிலை. அக்கறை, ஆர்வம், ஆசை எழுந்தால் கல் உடைப்பவன் சிற்பியாகிறான். படம் எழுதுபவன் ஓவியனாகிறான். வாயைத் திறந்தால் நாடோடிப் பாடல் பாடுபவன் கம்பன் போலக் கவிஞனாகவும், காளமேகம் போல புலவனாகவும் மாறுவான். ஆசை மனத்தின் வேகம். ஆத்மாவின் வேகம் ஆர்வம் எனப்படும். ஒருவனுடைய ஆத்மா ஒரு கலையில் ஆர்வம் கொண்டால் அவன் மேதையாவான். அவனை மேதையாக்குவது சமூகம் பெற்ற ஞானம், திறமை மற்றும் அதன் ஸ்தாபனங்கள். இன்று இந்த வாய்ப்பை Web உலகில் அனைவருக்கும் வழங்க முடியும். அதையும் இலவசமாகவும் வழங்க முடியும். அந்தப் பேறு பெறும் வழி பெருஞ்செல்வம் பெறும் வழியாகவுமாகும். கல்வியைப் பெற்ற சமூகம் கல்வியைத் தரும்.செல்வத்தைப் பெற்ற சமூகம் செல்வத்தைத் தரும். கல்வி உயிரின் செல்வம். செல்வம் மனமும், உயிரும் பெற்ற ஞானம். இவை அடிப்படையில் இணைந்துள்ளன. லக்னோவில் சட்டக்கல்லூரியும், கலைக்கல்லூரியும் இணைந்து செயல்பட்டன. சட்டக்கல்லூரி தரும் பட்டம் L.L.B. கலைக்கல்லூரி தருவது M.A. இரண்டு பட்டங்களும் இரண்டாண்டில் பெறும் வசதியை இரு கல்லூரிகளும் இணைந்து ஏற்பாடு செய்தன. அதே தத்துவப்படி கல்வியும், செல்வமும் சேர்ந்து பெறும் முறை Learning while earning or earning while learning ஆகும். மனிதன் மேதையாகலாம், பெருஞ்செல்வம் பெறலாம், இரண்டையும் சேர்த்துப் பெறலாம், ஏராளமாகவும் பெறலாம். லோகமாதாவுக்கு 4 அம்சங்கள் உண்டு என்றார் பகவான். மஹேஸ்வரி, மகாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி என்று அவற்றைக் குறிப்பிட்டார்.அதுபோக மேலும் 8 அம்சங்களுண்டு. அவை சிருஷ்டியில் இன்னும் வெளிப்படவில்லை என்றார். அவை சிருஷ்டியில் வந்தால் மனிதனுக்கு அவற்றை வழங்குவது சமூகம். சமூகம் தாய், பாதுகாப்பு தரும், பண்பும் தரும், ஞானமும், கல்வியும், செல்வமும், நலமும் தவறாது வழங்கும் தாய். பெற்றோர், குறிப்பாக தாய் எந்த நேரமும் குழந்தைகள் நினைவாகவே இருப்பாள். பிள்ளைகளுக்குப் பெற்றோர் நினைவு வராது. சிறுவனானாலும், இளைஞனானாலும், வளர்ந்த நிலையிலும் மனிதன் தன் எதிர்காலத்தை உருவாக்கியபடியிருப்பான். பெற்றோர் அவனைப் பெற்று ஆளாக்கினர். அது அவர்கள் கடமை. சுயநலமே இல்லாத பெற்றோர் பிள்ளைகளைச் சுதந்திரமாக வளர்த்தால், பிள்ளைகள் தங்கள் வாழ்வில் முன்னுக்கு வருவார்கள்.பெற்றோர் நினைவே வராத பிள்ளைகள் சௌக்கியமாக, சந்தோஷமாக வாழ்ந்தால் பெற்றோர் சுயநலத்தின் சுவடேயில்லாதவர் என்று அறியலாம். அவர்கட்குப் பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமை தங்குதடையின்றித் தானே பூர்த்தியாகும். பிள்ளைகள் பெற்றோரிடம் பாசமாக இருந்தால் குடும்பம் பாசமான குடும்பம், நெடுநாள் பல தலைமுறைகளாகப் பண்பாக வாழ்ந்த குடும்பம் என அறியலாம். நாம் சமூகத்தை நினைவு கூர்வதில்லை என்பதே சமூகம் சுயநலமற்ற தாய் என்பதற்கு அடையாளம். எழுதப் படிக்கத் தெரியாத தாய் குழந்தைக்கு உடல் நலம் பேணுவாள். நற்பழக்கங்களையும் நற்பண்புகளையும் தருவாள். தாய் படித்தவளாக இருந்தால் அவள் குழந்தைக்குச் செய்யக்கூடியது ஏராளம். தன்னைவிட மகள், மகன் அதிகமாகப் படிக்க வேண்டும் என முயல்வாள். செய்து முடிப்பாள். தாயின் எண்ணம் தனயன் பெற்ற ஆசீர்வாதம். தாய் நினைப்பது தானே முடியும். தாயார் முயல்வது தவறாது. அறிவுள்ள தாய், நல்லெண்ணமும், பண்பும் பெற்று இலட்சியமான திறமையுடையவளானால், மகனை அரசனாகவே உயர்த்த முடியும்.

தாய்மை சிருஷ்டியின் திறமை.

கென்னடிக்கு உடன் பிறந்தவர் 9 பேர். தகப்பனார் 9 மில்லியன் டாலர் சம்பாதித்தவுடன் சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வருவதில் வாழ்நாளை செலவிட்டார். “துறை எதுவானாலும், அங்கு முதன்மையாக வருவதே இலட்சியம்” என்பது அவர் கொள்கை.அது பெரு முயற்சி, அரிய முயற்சி, பெற்ற பலன் பெரியது.சமூகம் தாய். பெற்றோர் பிள்ளைகட்கு ஒரு சிறு சமூகம்.நாட்டில் உள்ள அத்தனை பெருமைகளையும் தாய் மகளுக்கோ, மகனுக்கோ பெற்றுக் கொடுக்க முயன்றதில் வெற்றி பெற்றவர் சிலரே எனினும், அது சிறப்பான வெற்றி. ஒரு ஜில்லா தலைநகரில் 150 வக்கீல்கள் இருந்தனர். அவர்களுள் 50 பேருக்கு மேல் வக்கீல் குமாஸ்தா, கோயில் குருக்கள் மகன்கள். அக்குடும்பங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கப்பட்டது பெரும்பாடு. அது பாடுபட்டு மட்டும் சாதிக்க முடியாது. தாயன்பும் தகப்பன் பொறுப்பும் மகன் திறமையாக மலர தாய் தகப்பனுடன் ஊரும் உலகமும் சம்மதித்து ஆதரவு தர வேண்டும். ஒரு இளைஞன் படித்து, பட்டம் பெற்று, வாழ்வில் நினைப்பதை, அதுவும் வசதியற்ற குடும்பங்களிலிருந்து வரும் இளைஞர் வாழ்வை கவனித்தால் ஒவ்வொரு கட்டத்திலும் சமூகத்தின் ஆதரவும், ஆமோதிப்பதும் எவ்வளவு அவசியம் எனத் தெரியும். ஏழை படித்தாலும், வேலைக்கு வந்தாலும் சமூகம் ஏற்க வேண்டும்.அவனை ஏழையென ஏளனம் செய்தால் ஊரில் இருக்க முடியாது. ஊர் ஏற்பது கடினம். உலகம் உவந்தேற்பது இறைவனின் அருள். தாழ்ந்த ஜாதி மக்களில் பெரிய வேலைக்கு வந்தவர்கள் தங்கள் ஜாதியினரைச் சேர்ப்பதில்லை. எவர் சேர்த்தாலும் சேர்க்காவிட்டாலும் நம் ஜாதியில் உயர்ந்தவர், மற்றவரைச் சேர்ப்பதேயில்லை. அதைக் கருதும்பொழுது சமூகத்தின் ஆதரவு, ஆசீர்வாதமாகும். சமூகத்தின் தாய்மை ஒருவகையில் இறைவனின் அருள். வாழ்வில் social status சமூக அந்தஸ்தே முக்கியம். முன்னுக்கு வந்தவர் வராதவரை ஆதரிக்க மாட்டார்கள். இலட்சியம் எனக் கருதி தாழ்ந்த ஜாதிப் பெண்ணைத் திருமணம் செய்தவருக்குக் குடும்பம் முழு ஆதரவு கொடுத்தது. திருமணம் ஆனபின் வீட்டில் சேர்க்கவில்லை. அவளுடனேயே போய் அவர் குடும்பம் நடத்த வேண்டியதாயிற்று. சமூகம் எளிதில் ஆதரவு தராது. தருவது தாய்மை.

ஆபத்திலிருந்து காப்பாற்றுவது அவசியம். ஆனால் அது ஆரம்பம். சமூகத்தில் வாழத்தகுதியற்றவர், வசதி பெறாதவர், வசதியிருந்தும் அனுபவிக்க முடியாதவர், தனக்கு வருபவற்றைப் பிறர் அனுபவிப்பது கண்டும் சும்மா இருப்பவர்கள் ஏராளம். இதைக் கடந்து மேல் மட்டத்தில், பெருந்திறமை மற்றும் பெரிய நல்ல குணங்கள் அடையும் இலட்சியம் உள்ளவர் ஏராளமாக உண்டு. எதுவுமற்ற தாழ்ந்தவருக்கும் இதுபோன்ற சில உயர்ந்தவை இருக்கும். அன்னை அவற்றிற்குப் பலன் தருவார். அது அளவு கடந்த பெரியது. வாழ்வும் தரும். அது அடுத்தபடி. சமூகமும் ஏராளமாகத் தரும். அது அதைவிடச் சிறியது. அந்த மிகச் சிறியதே நமக்கு மிகப் பெரியதாகும். கூலி வேலை செய்தவன் 158 கல்லூரி, பள்ளிகளை நடத்துவது அது போன்றது. சமூகம் தருவது நம் சமூக அந்தஸ்திற்குரிய நல்லதாகும். வாழ்வு தருவது நம் குண ராசிக்குரியதாகும். அன்னை தருவது ஆன்மாவின் அம்சத்திற்குரியதாகும். ஆன்மாவின் அம்சம் வேலைக்காரனுக்கோ, வேலைக்காரிக்கோ இருக்கும். வாழ்வின் அம்சம் கெட்ட பழக்கம் உள்ளவர்க்கிருக்கும். ஆன்மாவின் அம்சம் தேஜஸ் உள்ளவர்க்கிருக்கும்.

(தொடரும்)

********

ஜீவிய மணி

சக்தி பொங்கி வழிந்தால் சந்தோஷம் பொங்கி வழியும்.
சந்தோஷம் இருந்தால் சாதனை பெருகும்.

 

**********



book | by Dr. Radut