Skip to Content

06. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

கர்மயோகி

1. திருவுள்ளம்

தபஸ்வியின் நிஷ்டையும், பக்தனின் உருக்கமும், மாந்தரின் வழிபாடும், மனிதன் இறைவனை அடையச் செய்யும் முயற்சிகள். பகீரதப் பிரயத்தனம் செய்து பரம்பொருளை அடைய மனிதன் படும் தவிப்பை உலகம் அறியும். அந்த நாணயத்திற்கு மறுபுறமும் ஒன்றுண்டு. அதை நாமறியோம். இறைவன் மனிதன்மீது தீராக் காதல் பூண்டு, தணியாத அனலென எரிந்து, மனிதனுள் உறையும் ஆன்மா தன்னைத் திரும்பிப் பார்க்காதா என உருகி, மனித வாழ்வில் ஆயிரம் முறை குறுக்கே வந்து, தன் அன்பு மழையைப் பொழிந்து, அருட்பிரவாகத்தால் அவனை அணைத்திட முயன்று தவறாது தோல்வி பெற்று, ஏக்கமுற்று, காலமெல்லாம் காத்திருக்கிறான். மனிதன் அதை அறிந்தானிலன். இதன் பலனாக ஒரு சமயம் மனிதன் ஒரு கணம் நின்று, இறைவனை நினைந்து, பக்தியை உணர்ந்து, அவனை அடைய விரும்பினால், அதுவே இறைவனுக்குக் கிடைத்த பரிசு; இறைவன் அழைப்பை மனிதன் ஏற்றுக்கொண்ட சிறப்பு.

“இறைவனை நாடும் மனிதனை முன்னரே இறைவன் தேர்ந்தெடுத்துவிட்டான்” என்பது ஸ்ரீ அரவிந்தரின் கூற்று (He who chooses the infi nite has already been chosen by the infi nite). ஏற்கனவே இறைவன் நம்மைத் தேர்ந்தெடுத்துவிட்ட காரணத்தாலேயே நாம் இன்று அவனை நாடுகிறோம் என்பது பழம்பெருங்கருத்து. மனிதன் மறந்துவிட்ட ஒன்று, மனித உள்ளம் திருவுள்ளத்தை அறியும் நேரம், அதை நாடும் கணம், சிருஷ்டியின் சிறப்பான நேரம், சிருஷ்டியின் இலட்சியம் பூரணமடையும் தருணம்.

சிறு குழந்தைகள் பத்துப் பேர் ஒன்று சேர்ந்து விளையாட வரும்பொழுது, அவர்கள் குதூகலமாக இருப்பார்கள். இரு கட்சியாகப் பிரிந்து, “நீங்கள் ஒளிந்துகொள்ளுங்கள்; நாங்கள் கண்டுபிடிக்கிறோம்” என்று திட்டமிடும்பொழுது குதூகலம் கிளர்ச்சி மிகுந்ததாகும். ஆட்டம் ஆரம்பித்து, ஒளிந்துள்ள குழந்தையை மற்றொரு குழந்தை கண்டுபிடித்த நேரம், ஆரவாரம் மிக்க அதிர்ச்சி நிறைந்த கோஷம் கேட்கும். அதே குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் அதுபோன்ற ஒரு சந்தோஷத்தை அனுபவிப்பது அரிது. இதற்குக் குழந்தைகளின் விளையாட்டு எனப் பெயர். இறைவன் தன்னுள் ஒரு பகுதியை எடுத்துப் பல்லாயிரம் ஆன்மாக்களாக்கி அவற்றை, “நீங்கள் பூவுலகுக்குச் சென்று இருளில் ஒளிந்துகொள்ளுங்கள். நான் அங்கு வந்து உங்களை எல்லாம் தேடி அலைந்து கண்டுபிடிக்கிறேன்” எனச் சொல்லி உலகத்தைச் சிருஷ்டித்தார். ஒவ்வொரு ஆன்மாவும் இருளால் கவ்வப்பட்ட உடலில் ஒளிந்துகொண்டு, பொய்யால் பீடிக்கப்பட்ட வாழ்வை ஆரம்பித்து நடத்தும்பொழுது, இறைவன் அவற்றைத் தேடி பூவுலகில் இறையருளாக வந்து, க்ஷணமும் தவறாமல் தன் அருளழைப்பை இடையறாது விடுக்கிறான். அந்த அழைப்பு எந்த ஆன்மாவின் காதிலும் விழுவதில்லை. மௌனமாக ஆயிரம் அற்புதங்களை நிகழ்த்தி, தானிருப்பதை அறிவிக்கின்றான். அற்புதங்களின் பலனைப் பெற்றவர் அடுத்த க்ஷணம் வேறு வேலையைக் கவனிக்கப் போய்விடுகின்றனர். இறைவனின் ஏமாற்றத்திற்கு அளவில்லை.

அளவிறந்த காதல் கொண்ட இறைவன் அளவில்லாத அருள் மழையால் மனித வாழ்வைச் சூழ்ந்து புனிதப்படுத்தினால், மனிதன் தன் சுகதுக்கங்களின் பிடிப்பில் மேலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறானே தவிர, தன்னை நெருங்கிவரும் இறைவனின் காலடிச் சத்தம் அவன் காதில் விழுவதில்லை. இவையெல்லாம் கடந்து ஒரு பக்தன் இறைவனை நினைத்தால், இறைவன் அவன் மனதில் உருவமாகத் தென்படுகிறான். அவனை அழைத்தால் அருட்பிரவாகமாக மனிதனுடைய ஜீவனுள் இறைவன் நுழைகிறான். கண்ணீர் மல்க பக்தன் சாந்தத்தால் சூழப்பெறுவதையும், ஒளியின் கதிரால் பிரகாசப்படுவதையும், அருவிபோல் அனந்தன் தன் பிராணனுள் நுழைவதையும், பெருமிதம் விம்மும் உடல் பூரிப்பு அடைவதையும் காண்கிறான். தன் அழைப்பை மனித ஜீவன் ஏற்றுக்கொண்டபொழுது, இறைவன் அவனை விட்டகல்வதில்லை. வாழ்வின் செயல்களில் சிக்கிய ஜீவன் ஒரு க்ஷணம் தன்னைத் திரும்பிப் பார்க்கும் நேரத்திற்காக பக்தனுடைய சூழலில் (atmosphere) இறைவன் சூட்சுமமாக இரவு, பகலாக இருக்கிறான். இதற்கு இறைவனின் லீலை என்று பெயர்.

ஒரு ரிஷியின் தபோவலிமை அதிகமாவதை அறிந்த இந்திரன் தன் பதவிக்கு ஆபத்து வரலாமென உணர்ந்து, அவர் தபஸைக் கலைக்க ஓர் அப்ஸரஸை அனுப்புகிறான். நதி தீரத்தில் காலைச் சந்தியாவந்தனம் முடிந்து திரும்பும் ரிஷி, அப்ஸரஸைப் பார்த்து தம்மை இழந்து அவளுடன் இரண்டறக் கலந்த நிலையில் 900 ஆண்டுகளைக் கழித்தார். பின்னர் ஒரு நாள் தம் சுயநினைவு வந்து, அன்று மாலை அவளிடம் “நதிக்கரைக்குச் சென்று சந்தியாவந்தனம் முடித்து வருகிறேன்” என்றார். 900 வருஷங்கள் இல்லாத சந்தியாவந்தனம் இப்பொழுது எப்படி வந்தது என அவள் கேட்டபொழுதுதான் 900 வருஷங்கள் ஒரு பொழுதாகப் போனது ரிஷிபுங்கவருக்குத் தெரிய வருகிறது. புனித மனத்தின் ஆசையில் எழுந்த பாசத்தின் பிணைப்பு இது. இறைவனின் அன்பு மனிதனுக்காக யுகாந்த காலமாகக் காத்துக் கிடக்கிறது.

ஒரு ஜீவன் இறைவனை நாடினால் திருவுள்ளம் பூரித்துச் சிருஷ்டியின் கோலாகல நேரம் வந்து, தெய்வலோகப் பூமாரி பொழிவதைப் போன்ற ஆரவாரம் உலகத்தைச் சூழ்ந்து கொள்ளும். அது இறைவனுக்குக் கிடைத்த வெற்றி. நெடுநாள் அந்த வெற்றி கிடைக்காவிட்டால், தான் சிருஷ்டித்த ஆன்மாக்களின் அன்பை நாடி இறைவன் தானே உலகில் அவதரித்து, அந்த ஆன்மாக்களைத் தாங்கி உலவும் மனிதர்களை விழைந்து, அவர்கள் வாழ்வில் கனவிலும், நனவிலும் சூட்சுமமாகச் செயல்பட்டு அவர்கள் அறியாத இறையருளை அவர்கள்மீது பொழிந்து, தன்னை ஏற்றுக் கொண்டு, தன்னை நோக்கி அவர்கள் வரும் கணத்தை எதிர்பார்த்து ஆன்மநேய ஒருமைப்பாட்டின் பூரணத்திற்காகக் காத்திருக்கிறான். அவனை நாடி எவரும் வருவதில்லை. ஆயிரம் வருடங்களில் ஒருமுறை இராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு விவேகானந்தர் கிடைத்தது போல் ஒரு நிகழ்ச்சி ஏற்படுகிறது. “உன்னைக் காணாவிட்டால் என் மனதைப் பிழிவது போலிருக்கிறது” என்று பரமஹம்ஸர் விவேகானந்தரிடம் துண்டைப் பிழிந்து காண்பித்துச் சொன்னார்.

அவதார நிலையிலும் தன்னை மனித ஜீவன் திரும்பிப் பார்க்காவிட்டால், மனித உருவாக வந்து அவனெதிரில் காட்சி அளிக்கிறான். இறைவனாகவும், அவதாரமாகவும், குருவாகவும், நண்பனாகவும், தாயாகவும், குழந்தையாகவும், ஆசிரியனாகவும், ஆயிரம் உருவில் மனிதனின் வாழ்வுப் பாதையில் குறுக்கிட்டு அவன் பக்திப் பார்வைக்காக ஏங்கும் இறைவனின் அழைப்பு அணையாத ஜ்வாலை. அதை ஏற்றுக்கொள்ளும் ஜீவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்யும் உடனுறை தெய்வம். அந்த ஜீவனின் தவிப்பும், இறைவனின் தவிப்பும் ஒன்றை ஒன்று பூரணப்படுத்தும் செயல். சிருஷ்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முதல் அடி. இதுவே இறைவனின் இலட்சியத்தின் முதல் இலக்கு. பூரண யோகம் இங்கு ஆரம்பித்து, இறைவனின் கடைசி இலட்சியமான மனித தெய்வ சிருஷ்டியைச் சாதிக்கும் பணியை உலக மாந்தருக்கு அளிக்க விழைகிறது. இறைவனை அழைக்கும் மனித ஹ்ருதயத்தில் எழுவது அமுத ஊற்று. மனிதனை அழைத்து, அவனைத் தேடியலைந்து ஆர்வம் மிகுந்து, யுகாந்த காலமாகக் காத்துக்கிடக்கும் இறைவனின் திருவுள்ளத்தில் எழுவது அருளமுத ஊற்று.

தொடரும்...

*******

ஜீவிய மணி
 
அனுபவம் விவேகமானால் ஆனந்தம் நன்றியாகும்.
நன்றியில் ஆனந்தம் இளமையின் விவேகம்.
 

*******



book | by Dr. Radut