Skip to Content

05. நெஞ்சுக்குரிய நினைவுகள் - சமர்ப்பணம்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

சமர்ப்பணம்

கர்மயோகி

சமர்ப்பணம் முழுமையாகச் செய்ய முடியவில்லை என்று அறிவது, சமர்ப்பணத்தின் முழுமையை அறிவது. சமர்ப்பணம் சூட்சுமமானது. நாம் வாழும் உலகம், அதன் நிகழ்ச்சிகள், நம் செயல்கள் ஜடமானவை, ஜீவனற்றவை. மனத்திலும் அறிவைவிட உணர்வு சூட்சுமமானது. விளக்கம் தேவைப்படுவது அறிவு. அந்த அளவில் அதற்கு சூட்சுமமில்லை. ஜடம் எனலாம். குறிப்பாய் உணர்வது சூட்சுமம். சூட்சுமம் மிகுதியாகி இரகஸ்யமானால் குறிப்பும் எழாது. குறிப்பும் தேவைப்படாது. சூழல் குறிப்பதையும் தவிர்க்கும். குறிப்பை குறிப்பாக விலக்கும் சூழலில் குறிப்பையும், அதனால் உணர வேண்டியதையும் மனதால் பார்க்காமல் கிரகித்துச் செயல்பட்டால் சமர்ப்பணத்தின் சூட்சுமம் பலன் தரும். யோகப் பலனை எதிர்பார்ப்பதே அதை இழக்கும் வழி. மெய்ம்மறந்து, எந்தச் சிந்தனையுமின்றி, நேரம் போவதே தெரியாமல், மனம் குதூகலமாக இறைவன் சூழலிருப்பதை உணரும் அன்பர் சமர்ப்பணம் செய்யக் கூடியவர்.

Synthesis of Yoga என்ற நூலில் சரணாகதித் தத்துவத்தை பகவான் விவரமாக, படிப்படியாக விளக்குகிறார். அதிலுள்ள முக்கிய கட்டங்களான கருத்துகள்:

  1. பூரண யோகம் ஆசனம், பிராணாயாமம், மந்திரங்களைப் பயன்படுத்தவில்லை. பூரண யோகம் ஆன்மீகப் பரிணாம யோகம். ஆசனம் உடலுக்குள்ள முறை, பிராணாயாமம் பிராணனுக்குள்ளது. ஜபம், மந்திரம் மனத்திற்குரியவை. ஆன்மீக மனமுறைகளை மட்டும் கையாள்வதே நம் நோக்கம். அதனால் பெரும்பலனை சீக்கிரம் பெற முடியும் — சரணாகதி தத்துவம். மனித ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்தைத் தெய்வீக ஜீவன், ஜீவியம், சக்தி, ஆனந்தத்திற்குச் சரணம் செய்வது முறை. இம்முறையால் அகந்தை கரையும்.
  2. அகந்தை கரைந்தால் மனிதன் அகந்தையை இழந்து பிரபஞ்ச ஆத்மாவாவான். பிரபஞ்ச ஆத்மாவுக்குப் பிரபஞ்ச வாழ்வில் ஆனந்தம் உண்டு. அதை அனுபவிக்கும் மனிதன் அடுத்த கட்டத்திற்கும் உயர வேண்டும். பிரபஞ்சத்திற்கு அவனிடம் உள்ள ஆத்மா, பிரம்மத்தை எட்டித் தொட்டு, பிரம்மத்திற்குரிய ஆத்மாவாகி, அதனுடன் மனித சுபாவத்தையும் சரணம் செய்தால் பூரண யோகம் பூர்த்தியாகும். 

யோகத்தை மேற்கொள்ள தீவிரம், நீடித்த தீவிரம், (sincerity) உண்மை, ஆழ்ந்த ஈடுபாடு, ஜீவன் ஆழத்தில் நல்ல எண்ணம், மௌனம், அமைதி, இயல்பான ஆனந்தமான குதூகலம், பொறுப்புணர்ச்சி, நம்மைச் சேர்ந்தவர் அனைவர் செயலுக்கும் ஏற்கும் பொறுப்புணர்ச்சி, இனிமை, இதம், பதம், பக்குவம், பவித்திரம், இங்கிதம் ஆகியவை பயன்படும். இவையனைத்தும் ஒன்றே. ஒன்று போன்றவையே எனினும், கூர்ந்து பார்க்கும் பொழுது பெரும் வித்தியாசம் தெரியும். வித்தியாசம் விபரமானது. யோகம் செய்ய எந்தத் தகுதியும் தேவையில்லை என்பதும் உண்மை.

 

******

 

ஜீவிய மணி
 
ராசியும், வசதியும் சேரா.
எதிரான இருவரிடமும் நல்ல பெயர் வாங்க முடியாது.
நட்பும், செல்வாக்கும் சேர்ந்து உடன் வாரா.
அறிவும், நம்பிக்கையும் அர்த்தபுஷ்டியாகா.
சுதந்திரமும், கட்டுப்பாடும் சுயமாக சேர முன்வாரா.
சுதந்திரமான கட்டுப்பாடு சொந்தமான பண்பு.
 

*******



book | by Dr. Radut