Skip to Content

12. நல்லெண்ணத்தைப் பற்றிய குறிப்புகள்

நல்லெண்ணத்தைப் பற்றிய குறிப்புகள்

N. அசோகன்

  1. நல்லெண்ணம் என்பது வெளிநோக்கிச் செல்கின்ற ஒரு உணர்வாகும். அதாவது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துகிற நபர் தன்னைத் தவிர அடுத்த ஒருவரைப் பற்றி நினைத்து அவருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று இவர் விழைகிறார்.
  2. நல்லெண்ணம் என்பது பாத்திரத்தின் கொள்ளளவுக்கு மேல் இருக்கின்ற தண்ணீர் வழிந்து ஓடுவதைப் போல நல்லெண்ணம் கொண்டவருடைய இதயத்தின் கொள்ளவுக்கு மேல் இருக்கின்ற அன்பும் பரிவும் வழிந்து ஓடுவதைக் காட்டுகிறது.
  3. நல்லெண்ணம் கொண்டவர் மனோபலமும், பொருளாதார பலமும் கொண்டவராக இருந்தால் அடுத்தவர் மேல் காட்டும் அவருடைய நல்லெண்ணம் பலிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கும்.
  4. பரிசுத்தமான நல்லெண்ணம் வெறும் வாய் வார்த்தைகளாக வெளிப்படலாம். ஆனால் அதைவிட நல்லெண்ணம் பொருளாதார உதவியாகவும் physical help ஆகவும் வெளிப்படும் பொழுதுதான் மற்றவரிடையே வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
  5. தெய்வத்தினுடைய நல்லெண்ணத்திற்கு அதனால் பயனடைகிற மனிதனுடைய நன்றியறிதலோ, அங்கீகாரமோ தேவையில்லை. ஆனால் மனிதன் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும்பொழுது அடுத்தவருடைய நன்றியறிதலையும் பாராட்டையும் எதிர்பார்க்கிறான். மனித நல்லெண்ணத்தினுடைய மிகப்பெரிய குறைபாடாக இது அமைந்துவிடுகிறது.
  6. விவேகமும், பாரபட்சமும் இல்லாத நல்லெண்ண வெளிப்பாடு ஆண்டவனுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் மனிதன் பாகுபாடு தெரிந்துதான் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தகுதி இல்லாதவர்க்கு உதவப் போய் வீண் பிரச்சனை தேடிக் கொண்டதாக வரும்.
  7. நல்லெண்ணம் என்பது ஒருவருடைய பர்சனாலிட்டியை விரிவடையச் செய்யும் உணர்வாகும். இப்படி நல்லெண்ணம் கொண்டவருடைய பர்சனாலிட்டி மேலும் விரிவடையும் பொழுது அவரை நோக்கி அருளும், அதிர்ஷ்டமும் அதிகமாக வருவதற்கு இதுவே ஒரு காரணமாகவும் அமைகிறது.
  8. நல்லெண்ணம் கொண்ட ஒருவரிடம் அடுத்தவர் வந்து தனக்கு ஒரு நல்லது நடந்திருப்பதாகச் சொல்லும் பொழுது முதலாமவருக்கு இது ஒரு வெறும் செய்தியாக இருந்தாலும் இவருக்கு அதில் எந்த ஆதாயமும் இல்லை என்றாலும் இரண்டாமவருக்கு என்ன சந்தோஷம் கிடைத்ததோ அதே சந்தோஷத்தை முதலாமவரும் அனுபவிப்பார்.
  9. இயற்கையாக நல்லெண்ணம் உள்ளவரை மற்றவர்கள் சூழ்ந்து கொள்வார்கள். காந்தம் இரும்பை இழுப்பது போல நல்லெண்ணம் மற்றவர்களைத் தன் பக்கம் இழுக்கும்.
  10. நல்லெண்ணம் உள்ளவர்களால் சூழப்பட்டவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றிருப்பார்கள். ஆனால் கெட்ட எண்ணம் உள்ளவர்களால் சூழப்பட்டவர்களுக்கு இப்படி நீண்ட ஆயுள் அமைவது கடினம்.
  11. அன்னையின் சூழலில் வாழ்பவர்கள் தங்களுடைய நல்லெண்ணத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்த அருட்சூழலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி அன்னையின் சூழலில் இல்லாதவர்கள் அவர் மூலம் கிடைக்கக்கூடிய பாதுகாப்பு இல்லாமல் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் பொழுது தேவையில்லாத ஏமாற்றங்களையும் பாதிப்புகளையும் சந்திக்கும்படி நேரிட்டு ஆரம்பத்தில் இருந்த நல்லெண்ணத்தை இழக்க நேரிடலாம்.
  12. நல்லெண்ணம் உள்ளவர்கள் தொடங்கும் எந்த வேலையும் தொடர்ந்து வளரும். அவர்கள் தொடங்கும் எந்தத் திட்டமும் பெருவளர்ச்சியைக் காணும். அம்மாதிரியே யார் மேல் அவர்கள் கவனம் திரும்புகிறதோ அவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள்.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையை ஏற்றால் அனைவரும் ஏற்பர்.
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
முரண்பாடே இரகசியம்;
உடன்பாடே வாழ்வு.
 
******



book | by Dr. Radut