Skip to Content

07. அஜெண்டா

அஜெண்டா

Sri Aurobindo's atmosphere till Lake, Falsehood exhausts.

பகவான் சூழல் லேக் எஸ்டேட் வரையுண்டு.
பொய்மை வலிமையற்றுப் போகிறது.

  • சூழல் என்றால் என்ன? நகரப்புறத்துச் சூழல் நாட்டுப்புறத்திலில்லை. பண்பான குடும்பச்சூழல் பண்பற்ற ஊரிலிருக்காது. கல்லூரியில் படிப்புச் சூழலுண்டு. ஒரு மக்களின் மன இயல்பு நம்மையறியாமல் நம் மனத்தைத் தொடுவது சூழல்.
  • துடுக்கான குழந்தைகள் அன்பான குடும்பத்தில் வந்தால் துடுக்கை இழந்துவிடும். சூழல் வெளிப்படும்.
  • பவுடர் கம்பெனியில் வேலை செய்தால் மேலேயெல்லாம் பவுடர் வாசனையிருக்கும்.
  • அமைதியான சூழலில் அகராதியானவரும் பேச்சையிழந்துவிடுவார்.
  • தண்ணீர் பஞ்சமான ஊரில் மக்கள் மனம் வறண்டிருக்கும்.
  • ஆன்மீகச் சூழலில் சத்தியம் வலிமை பெற்றிருக்கும். பொய் வலுவிழக்கும்.
  • அன்னிபெசண்ட் அம்மையார் சிகாகோ அருகில் வந்தவுடன் ஆகாயம் கறுத்திருப்பதைக் கண்டார்.
  • ஆயிரக்கணக்கான மாடுகளை அங்குத் தினமும் கொல்கின்றனர். அச்சூழல் கறுமையாக உள்ளது.
    அமெரிக்காவில் குண்டர்கள் வாழும் ஊர் அது.
    உயிர்க்கொலை குண்டர் வாழ்வாகிறது.
  • வீட்டில் பணமில்லை, சுத்தமில்லை, சதா சண்டை போடுகிறார்கள், எதற்கும் பஞ்சம், பிள்ளைகள் படிக்க வசதியில்லை, பெண்கட்கு திருமண வாய்ப்பில்லை என்ற வீட்டிலிருந்து ஒருவர் அன்னையை ஏற்றுக் கொண்டால் அவர் முதலில் கூறுவதும் முடிவாகக் கூறுவதும் அன்னை சூழலை வளர்க்கும்.
    முதலில்:
    நிலைமை எதுவும் மாறவில்லை. அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.
    முடிவாக:
    என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் புரியவில்லை. பழைய பிரச்சனைகள் எதுவுமில்லை.
    சூழலால் வரும் பயன் இது. அன்னையை ஏற்றபின் வரும் பயன் பெரியது, நீடிக்கக் கூடியது.
  • பொய்யே சொல்லாதவர் வீட்டில் சூழல் தானே எழுந்து அபரிமிதமாகச் செயல்படும்.
  • சுயநலம் சூழலுக்கு எதிரி. நல்லெண்ணம் சூழலை வரவழைக்கும்.
  • படிப்பில்லாத கிராமத்து ஏழை, பணக்கார உறவினர் வீட்டில் சென்னையில் கொஞ்ச நாள் தங்கியிருந்தால் அவன் அனுபவிக்கும் ஆயிரம் வசதிகளுக்கு அவன் அருகதையில்லை. கிராமத்திற்கு வந்தால் அது போகும்.
  • நம் முயற்சி, தகுதியின்றி அன்னையின் கருணையால் கற்பனைக்கெட்டாத வசதிகளைத் தருவது சூழல்.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற வழக்கு இதைக் கூறுகிறது.
  • மகாத்மா காந்தியைக் கண்டவர் கண நேரத்தில் மனம் மாறுவது அவர் சூழல்.
  • தெய்வ நம்பிக்கையுள்ள குடும்பங்களில், "எனக்குத் தெரிந்தவரை எத்தனையோ வருஷமாகத் தேள், பாம்பு, பூரான் எவரையும் தீண்டியதில்லை, விபத்து என ஏற்பட்டதில்லை, படுக்கையாகப் படுக்கும் வியாதி எவருக்கும் வந்ததில்லை" என்பது நம்பிக்கையின் சூழல்.
  • சுத்தமான சூழலில் தொற்று வியாதி வாராது.
  • புதுவைக்கு வந்தால் அன்னை நினைவு இயல்பாக எழுகிறது. எங்களூரில் அப்படியில்லை என்பது சூழல்.
  • புதுவையில் உள்ளபொழுது தினமும் The Life Divine படித்தவர் அவர் நாட்டிற்குப் போனபின் திரும்ப வரும்வரை அதைத் தொட முடியவில்லையெனக் கண்டார். இந்தியாவில் ஆன்மீகச் சூழலுண்டு. புதுவை புண்ணிய பூமி.
  • பொய் சொல்ல முடியாதவர் செய்யும் காரியம் கூடிவருவது மெய்யின் சூழல்.
  • "முழுப்பொய்யனும் என்னிடம் பொய் சொல்வதில்லை" என்பது மெய்யின் அகச்சூழலில் வாழ்பவர் அனுபவம்.
  • இயல்பான மன நிம்மதி, பொதுவாக நல்லெண்ணம், சுறுசுறுப்பு நல்ல சூழலுக்கு அடையாளம்.

******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னை மூலம் சென்றால் எவரையும் தவறாது அணுகலாம்.
 

*******



book | by Dr. Radut