Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/54) மனத்தைக் கரைத்து பிரம்மத்தை அதிகமாகக் கண்டால் மனம் சத்தியஜீவியமாகிறது.

  • மனம் கரைந்து பிரம்மம் எழும் சத்தியஜீவியம்.
  • சிருஷ்டியை அறிய முயன்றவர் அதன் பெருமையைத் தம் அடக்கத்தால் அறிந்து "இது புரியாத புதிர்'' என்று கூறினர்.
  • இன்றுவரை உலகம் ஜடத்தையே அறிகிறது.
  • சந்திரனுக்குப் போன பின்னும், 10,000 மைலை நொடியில் கடந்து பேச முடிந்தும், மேல் நாட்டார் வாழ்க்கையை அறியவில்லை.
  • பூமி, சூரியன், சந்திரன், செவ்வாய் கிரகங்கள் செல்லும் பாதையை வினாடி தவறாமல் அறிய முடிகிறது. 400 ஆண்டுகட்கு முன் எழுதிய ஹாம்லெட் நாடகத்தில் ஏன் நாயகன் தகப்பனார் கட்டளையை, அரை நிமிஷத்தில் நிறைவேற்றக் கூடியதை, முடிவு வரைத் தள்ளிப்போட்டான் என அறிய முடியவில்லை.
  • எப்படி இந்திய சுதந்திரம் போராட்டமின்றி நிறைவேறியது என்ற கேள்வியை 60 ஆண்டுகளாக எழுப்ப முடியவில்லை.
  • மனிதன் உற்பத்தி செய்த பணம், மனிதனை ஆட்டிப் படைப்பதை, மனிதனை அழிக்க முயல்வது ஏன் என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
  • இக்கேள்விகட்கு பதில் அறிய வாழ்வின் சட்டங்களை அறிய வேண்டும்.
  • உலகம் ஜடத்தை வென்று வாகை சூடுகிறது. அதைக் கடந்து வாழ்வை எட்டவில்லை.
  • மனம் வாழ்வைக் கடந்தது.
  • உலகில் எந்த அறிஞனும் மனம் என்றால் என்ன என்ற கேள்வியை இதுவரை எழுப்பவில்லை.
  • அது தெரிந்த பின்னரே மனம் எப்படி வேலை செய்கிறது என்பது எழும்.
  • சத்தியஜீவியம் மனத்தைக் கடந்தது.
  • சச்சிதானந்தம் சத்தியஜீவியத்தைக் கடந்தது.
  • பிரம்மம் முடிவானது.
  • பிரம்மம் எப்படிச் செயல்பட்டு, சிருஷ்டித்தது என்ற கேள்வியைச் சில ஆயிரம் ஆண்டுகட்கு முன் நம் முன்னோர் எழுப்பினர்.
  • அதற்கு விடை தெரியவில்லை எனக் கூறினர்.
  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் அப்பதிலைக் கூறுகிறார்.
  • பிரம்மம் அகம் புறமாய் பிரிந்து சிருஷ்டி ஏற்பட்டது என்கிறார்.
  • முதலில் சச்சிதானந்தமும், பிறகு சத்தியஜீவியமும், அதனின்று மனமும் எழுந்தன எனக் கூறுகிறார்.
  • மனம் கரைந்தால் எழுவது சத்தியஜீவியம்.
  • பிரம்மத்தை மனத்திலும் காணலாம், சத்தியஜீவியத்திலும் காணலாம்.
  • சத்தியஜீவியத்தில் பிரம்மத்தை மனத்தைவிட அதிகமாகக் காணலாம்.
  • சத்தியஜீவியம் என்ற முழுமை இரு கூறாகப் பிளக்கும் பொழுது அவற்றிடையே மனம் உற்பத்தியாகிறது.
  • மனம் சத்தியஜீவியத்தைவிடச் சிறியது.
  • ஜடம், வாழ்வு, மனம், சத்தியஜீவியம், சச்சிதானந்தம் கரைந்தால் பிரம்மம் வெளிப்படும்.
  • ஜடம் பிரம்மம், வாழ்வு பிரம்மம், மனம் பிரம்மம், சத்தியஜீவியம் பிரம்மம், சச்சிதானந்தம் பிரம்மம்.
  • எது கரைந்தாலும் பிரம்மம் வெளிப்படும்.
  • மேலே போனால் பிரம்மம் அதிகமாக வெளிப்படும்.

******

II/55) ஜடமான மனிதன் தன் கண்ணோட்டத்தை மாற்றினால் ஜடம் திருவுருமாற்றமடைகிறது. அந்த நேரம் பிரம்மமும் சிருஷ்டியும் ஒன்றென அறிகிறோம்.

  • சிருஷ்டியைப் பிரம்மமாக்கும் திருவுருமாற்றம்.
  • பிரம்மம் சிருஷ்டியானது பிரம்மம் விரும்பிச் செயல்பட்டதால்.
  • சிருஷ்டி பிரம்மமாவதும் பிரம்மம் விரும்பிச் செயல்படுவதால்தான்.
  • சிருஷ்டி பிரம்மமாகத் திருவுருமாற்றம் வழியென்றாலும், செய்வது மனிதன்.
  • மனிதன் எடுக்கும் முடிவு, சிருஷ்டியை விட்டு பரிணாமத்தைத் தேடும் முடிவு.
  • பிரம்மம் கடவுள், கடவுள் எல்லாம் வல்லவர், அவரால் எதுவும் முடியும். பிரம்மத்தைச் சிருஷ்டியாக்க முடியும், சிருஷ்டியைப் பிரம்மமாக்க முடியும் என நாம் கொள்வது நம்பிக்கை. அது தெளிவு பெற்ற அறிவாகாது.
  • நம்பிக்கை அறிவைவிட உயர்ந்தது எனினும், அறிவு ஏற்பட்டபின் அதைக் கடந்து எழும் நம்பிக்கை உயர்ந்தது.
  • அறிவு ஏற்படுமுன் எழும் நம்பிக்கை பலன் தரும். ஆனால் அது மூடநம்பிக்கையை ஒத்தது. அதுவும் அறிவைவிட உயர்ந்தது.
  • பிரம்மம் தானே செயல்படும் - சிருஷ்டியாகும், பரிணாமமாகும் - என்றால் பரிணாமத்தில் மனிதனின் பங்கு என்ன என்றறிவது தெய்வீக ஞானம்.
  • அதை அறிவது, அறிந்து தெளிவது விஞ்ஞானம் எனவும் கூறலாம்.
  • நம்பிக்கையுடன் பரிணாமத்தை ஏற்றால் சத்தியஜீவியத்தை அடையலாம்.
  • சத்தியஜீவியத்தில் ஏராளமான நிலைகள் உண்டு.
  • அதன் முழுமை, முடிவு, சிறப்பு, உயர்வு இதனால் கிடைக்காது.
  • அதன் முதல் நிலை பலனாகக் கிடைக்கும்.
  • அன்பர்கள் பிரார்த்தனை பலிப்பது போல், அந்த நம்பிக்கை யோகப்பலனைத் தரும்.
  • அறிவு பெற்று, தெளிவு பெற்று, அறிவைவிட நம்பிக்கை சிறந்தது என உணர்ந்து, அறிவைக் கடந்து அந்நம்பிக்கையை ஏற்பது சிறப்பு.
  • இதைச் செய்வது திருவுருமாற்றம்.
  • திருவுருமாற்றம் பெற உதவுவது சரணாகதி.
  • சரணாகதி முழுமை பெற அன்னை யார் என்ற ஞானம் முழுமை பெற வேண்டும்.
  • அன்னை இயற்கை - பிரகிருதியின் தெய்வீக ஜீவியம்.
  • இயற்கையில் இறைவன் ஆழ்ந்து உறைகிறான்.
  • இயற்கை அதன் சக்தியால் செயல்படுகிறது.
  • புயல் வேகமாக அடித்து நாசம் விளைவித்து மக்களை உஷாராக்குகிறது.
  • இயற்கையின் தெய்வீக ஜீவியம் ஆழத்திலிருந்து சற்று எழுந்து வந்தால், புயல் உருவாகி, அமைதியாகி, மக்கள் மனத்தில் தெய்வ நம்பிக்கைக்கு உயிரளித்து, தெய்வத்தை நினைத்து அழைக்கச் செய்து, புயல் நாசத்தால் நெடுநாளில் விளைவித்த ஞானத்தை க்ஷணத்தில் மக்கள் பெற உதவும்.
  • அன்பர் அதைச் செய்யும் பொழுது புயல் அடங்கும். அவர் அன்னையைத் தெய்வீக இயற்கை ஞானமாக அறிகிறார். அன்னை எல்லாச் செயல்களிலும் எல்லா நேரத்திலும் அப்படிப்பட்டவர். நாசம் விளைவிக்கக் காத்திருக்க வேண்டாம் என அறிந்து அன்னையை முழுமையாக அறிந்து சரணாகதியை மேற்கொள்வதாகும்.

தொடரும்....

******

ஜீவிய மணி
 
பிரிக்கும் சக்தி இணைக்கும்.
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பற்றாக்குறை என்பதில்லை, பயன்படுத்தத் தெரியவில்லை என்பதே உண்மை.
 
 
*******



book | by Dr. Radut