Skip to Content

13. அன்னையின் அருளையும், பிரார்த்தனையையும் பற்றிய உண்மைகள்

அன்னையின் அருளையும், பிரார்த்தனையையும் பற்றிய உண்மைகள்

N.அசோகன்

  1. அன்னையின்அருள் நிபந்தனையில்லாதது. நிபந்தனைகளுடன் வருவதாக இருந்தால் அதை நாம் அருளென்று சொல்ல முடியாது.
  2. அன்னையின்அருள் மின்னல் வேகத்தில் செயல்படுகிறது. மேலும் நாம் எதிர்பார்ப்பதைவிட வேகமாக நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.
  3. அருளால் தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் வேரோடு அழிக்கப்படுவதால் அவை பொதுவாகத் திரும்பி வருவதில்லை.
  4. காலம், இடம் மற்றும் வடிவம்போன்றவைகள் அருளின் செயல்பாட்டிற்குத் தடையாக அமைவதில்லை. ஏனென்றால் அருள் சத்தியஜீவிய நிலையிலிருந்து துவங்குகிறது. அந்நிலை காலம், இடம், வடிவம் ஆகியவற்றைக் கடந்தநிலைஎன்பதால் அருளுக்கு இவை தடையாக இருப்பதில்லை.
  5. நாம் வாயால் சொல்கின்ற பிரார்த்தனைகள் மட்டும்தான் நிறைவேற்றப்படுகின்றனஎன்று இல்லை. நாம் வாயால் வெளிப்படுத்தாத, ஆனால் மனதில் தீவிரமாக இருக்கின்ற எண்ணங்களும், ஆசைகளும் வெளிப்படையாகச் சொல்கின்ற பிரார்த்தனைகளைவிட வேகமாக நிறைவேற்றப்படுகின்றன.
  6. எப்பொழுதுமே அருள் நாம் கேட்பதைவிட அதிகமாகத்தான் கொடுக்கிறது. ஏனென்றால் அருள் வரையறையற்றது என்பதால் எப்பொழுதுமே அளவு கடந்துதான் அது செயல்படுகிறது.
  7. இப்பொழுது செய்கின்ற பிரார்த்தனைக்கு உண்டான பலனை இப்பொழுதே அருள் தாராமல் இருக்கிறதென்றால், பின்னர் நாம் கேட்பதைவிடப் பெரிய பலனை அருள் தரப்போகிறது என்று நாம் திடமாக நம்பலாம்.
  8. திரு.கர்மயோகி அவர்களுடைய கருத்துப்படி மூன்று நாள் பிரார்த்தனை பலிக்க தவறியதே இல்லை.
  9. அருள் நம் வாழ்க்கையில் செயல்படும்பொழுது நம்முடைய வருமானத்தைப் பல மடங்கு அபிவிருத்திச் செய்கிறது. நம் உடல் நலத்தைப் பாதுகாக்கிறது. மற்றவர்களோடு நமக்கு இருக்கின்ற உறவில் சுமுகத்தை வளர்க்கிறது. மேலும் நாம் எடுக்கின்ற முயற்சிகளையெல்லாம் வெற்றியடையச் செய்கிறது.
  10. நம்முடைய வாழ்க்கையில் உதயமாகும் வாய்ப்புகளெல்லாம் அருள் நம் வாழ்க்கையில் செயல்படுகிறது என்பதற்கு உண்டான திடமான அறிகுறிகளாகும்.
  11. அருள் செயல்படும்பொழுது கேட்காமல் உதவி கிடைக்கும். சின்ன முயற்சிக்குக்கூட பெரிய பலன் கிடைக்கும். நீண்ட கால முயற்சியின் இறுதியில் கிடைக்கக்கூடிய பலனை முயற்சியின் துவக்கத்திலேயே வாழ்க்கை கொடுத்துவிடும்.
  12. சுத்தம், கடின உழைப்பு, நல்லெண்ணம், செயல் நேர்த்தி, காலம் தவறாமை, பரநலம் பாராட்டுதல்போன்ற பண்புகளை நாம் வளர்த்துக்கொள்ளும்பொழுது அருளின் செயல்பாடு பல மடங்கு வலிமை பெறுகிறது.
  13. ஏற்கனவே கிடைத்த பலன்களுக்காக நாம் நன்றி செலுத்தும் பொழுது இந்த நன்றியறிதல் ஒரு காந்தம்போல் செயல்பட்டு நம் வாழ்க்கைக்குள் மேலும் நிறைய அருளைக் கொண்டு வருகிறது.
  14. சரணாகதி உணர்வோடு சமர்ப்பணம்செய்து செய்யப்படுகின்ற பிரார்த்தனைதான் மிகவும் சிறந்த பிரார்த்தனை. ஏனென்றால் இப்படிச் செய்யும்பொழுது பிரார்த்தனைக்கு என்ன பலன் கொடுப்பது என்பதை அன்னையின் திருவுள்ளத்திற்கு நாம் விட்டுவிடுகிறோம்.
  15. திரு.கர்மயோகி அவர்களுடைய கருத்துப்படி பார்த்தால் அன்னை வழங்கும் தண்டனைகள்கூட அவருடைய அருளின் வெளிப்பாடுகள் ஆகும். ஏனென்றால் தண்டனைஎன்பது நமக்கு விழிப்புணர்வு இல்லாத இடங்களில் விழிப்புணர்வை வரவழைக்கிறது. இப்படி விழிப்புணர்வு வரும்பொழுது நம் பர்ஸனாலிட்டியில் தாழ்ந்துபோயிருக்கிற இடங்கள் விழிப்புணர்வுள்ள உயர்ந்த இடங்களோடு ஒன்று சேர்கிறது.
  16. அருளின் ஆற்றலையும், சக்தியையும் நாம் பூரணமாக நம்புவது என்பது தான் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்ற முன் வருகின்ற அருளுக்கு நாம் வழங்கும் ஒத்துழைப்பு ஆகும்.
  17. பணபலம், பதவிபலம், தெரிந்தவர்கள் என்று நாம் எதை எல்லாம் நம்புகின்றோமோ அவையெல்லாம் கைக்கொடுக்காத நேரத்தில் அருள் நமக்குக் கைகொடுக்கும்.
  18. பிரச்சினை எப்படி உண்டானது என்ற அறிவு நமக்கு இருக்கும் பொழுது அருளின் செயல்பாடு விரைவு பெறுகிறது. ஆகவே எப்படி பிரச்சினை வந்தது என்று கூடத் தெரியாமல் பிரார்த்தனை செய்வதைவிட பிரச்சினைக்குண்டான மூலகாரணத்தைத் தெரிந்துகொண்டு பிரார்த்தனை செய்வது நல்லது.
  19. முடியாததை முடியும் என்ற நிலைக்குக் கொண்டுவருவது அருளின் வழக்கமான செயல்பாடு. நம்முடைய ஆன்மா நம்முடைய அறிவைவிட சக்தி வாய்ந்தது என்பதால் நம் அறிவால் முடியாததை நம் ஆன்மா முடித்துக்கொடுக்கும் என்றாகிறது.
  20. அருளினுடைய நேரடி செயல்பாட்டிற்கு நாம் தடையாக இருக்கும்பொழுதும், விழிப்புணர்வு இல்லாமல் அறியாமையில் மூழ்கி இருக்கும்பொழுதும், அருள் பிரச்சினையின் ரூபத்தில் தலைகீழாக வருவதுண்டு.
  21. பிஸிக்கல் லெவலில் மழை என்பது அருளினுடைய அறிகுறியாகும். ஐஸ்வரியம், பாதுகாப்பு, அருள் ஆகியவற்றின் சின்னங்களாக விளங்கக்கூடிய மலர்கள் அருளின் செயல்பாட்டைத் தீவிரப்படுத்துகின்றன.
  22. வாழ்க்கையில் நாம் தவறவிடுகின்ற வாய்ப்புகள் திரும்பி வருவது அபூர்வம். ஆனால் அருள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது சம்மந்தப்பட்டவர் தம்முடைய விழிப்புணர்வை அதிகரித்துக்கொண்டால், இப்படி தவற விடுகின்ற வாய்ப்புகள் கூடத் திரும்பி வரும்.
  23. பர்ஸனாலிட்டியின் ஆழத்திற்குச் சென்று மனதில் முழு சின்ஸிரிட்டியுடன் ஒரு சில நிமிடங்கள் செய்கின்ற பிரார்த்தனை நெடுநாட்களாக மேலோட்டமாக செய்கின்ற பிரார்த்தனையைவிடச் சிறப்பானதாகும்.
  24. நம் வாழ்க்கையில் நாம் முழுவதும் அருளைச் செயல்பட அனுமதித்தோம்என்றால் வரம்பற்ற வருமானம், கற்பனை செய்ய முடியாத சாதனை, என்றிந்த ரூபங்களில் வரம்பற்ற நிலை நம் வாழ்க்கைக்குள் வரும்.
  25. பிரச்சினைகளை அருள் தீர்க்கும்பொழுது நாம் அருளின் செயல்பாட்டை உணர்கிறோம். ஆனால் வருமானம், உடல் நலம், நம்முடைய மனித உறவுகள்என்று எந்தஇடத்திலும் நமக்கு பிரச்சினையே வாராமல் வாழ்க்கை அமைதியாகவும், சீராகவும் ஓடிக்கொண்டிருந்தால் அதுவே அருள் சிறப்பாகச் செயல்படுவதற்குச் சிறந்த நிரூபணமாகும்.
  26. நமக்குக் காரியம் நடக்க வேண்டும்என்றால் நாம் கருவிகளை நாடுகிறோம். ஆனால் பலனை தருவதற்கு அருளுக்குக் கருவிகள் தேவையில்லை. அருள் மருந்தின் உதவியின்றி நோயைக் குணப்படுத்தும்.
  27. வருமானத்திற்கு வழியில்லாதவர்களுக்கு, செல்வ வளம் கொடுக்கும்; மழை பெய்யாத நாட்களில் மழையை கொண்டு வரும்; நாம் கேட்காத உதவியை நமக்குப் பெற்றுத் தரும்.
  28. வாழ்க்கை நம் தேவைகளை மதிப்பதில்லை. நம்முடைய தகுதியைத்தான் கருதுகிறது. தகுதி இருந்தால் நமக்கு நல்லது செய்யும். தகுதி இல்லாதுபோனால் இருப்பதை எடுக்கும். ஆனால் அருள் நம் தகுதியை கருதாமல் நம் தேவையைத்தான் கருதுகிறது. அப்பட்சத்தில் தகுதி இல்லாத ஒன்று நமக்கு தேவைப்பட்டாலும் நம் தேவையை மதித்து அது நமக்கு வழங்குகிறது. அருளின் நிபந்தனையற்ற தன்மைக்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும்.
  29. அன்னை பூவுலகில் உடலோடு இருந்ததைவிட இப்பொழுது அவருடைய அருட்சக்தி மேலும் சிறப்பாகச் செயல்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் நம்மோடு உறவாடுவதற்காக அவர் பூவுலகில் உடம்பு என்ற வரையறைக்குத் தம்மை ஆட்படுத்திக்கொண்டார். இப்பொழுது உடம்புஎன்ற வரையறை இல்லாமல் அவருடைய சொந்த இருப்பிடமான சத்தியஜீவிய நிலையில் சுதந்திரமாகச் செயல்படுவதால் அவருடைய அருள் மேலும் சக்தியோடு செயல்படுகிறது.
  30. "ஆண்டவனின் நேரம்' என்று பகவான் அழைக்கின்ற நேரம் இப்பொழுது செயல்பட்டுக்கொண்டிருப்பதால்தான் பகவானும், அன்னையுமே பூவுலகில் அவதரித்தார்கள். இந்த "ஆண்டவனின் நேரம்" மிகவும் சக்தி வாய்ந்தது என்பதால் பல நூற்றாண்டுகளில் முடியக்கூடிய வேலையை சில நாட்களிலேயே முடித்துக்கொள்ளலாம் என்று பகவான் கூறியிருக்கிறார்.
  31. பிரார்த்தனை என்பது நாம் தெரிந்தே செய்கின்ற ஒரு காரியம் ஆகும். ஆனால் அழைப்பு என்பது நம்முடைய ஆழத்திலிருந்து இயற்கையாக நம்முடைய மேலோட்டமான முயற்சியை வென்று, தானே வருவதாகும். நம்முடைய வேலையை சமர்ப்பணம் செய்து, செய்யும்பொழுது பிரார்த்தனையின் உதவிகூட இல்லாமல் வேலை வெற்றிகரமாக இருக்கும். ஏனென்றால் சமர்ப்பணம் செய்யப்பட்ட வேலையே உடம்பின் பிரார்த்தனையாக அமையும்.
  32. நாம் வேலையை சமர்ப்பணம் செய்யும்பொழுது பிரார்த்தனை செய்யாமல்போனாலும் அந்த வேலை வெற்றிகரமாக முடிகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் சமர்ப்பணத்தின் மூலம் நாம் செய்கின்ற வேலையே உடம்பின் பிரார்த்தனையாக மாறுகிறது.
  33. ஓர் உண்மையான பக்தனுக்கு அடையாளம் என்னவென்றால் பிரச்சினைஎன்று வந்த உடனேயே அன்னையை நினைவு கூறுவதாகும். மற்ற எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனபின் அன்னையை நினைவுகூறுவதென்பது உண்மையான பக்திக்கு அடையாளமில்லை. நம் பர்சனாலிட்டிலி யில் ஏதோ ஓர் இடம் அன்னையை சதா நினைத்துக் கொண்டிருந்தால்தான் பிரச்சினை எழுந்தவுடனேயே அன்னையை நம்மால் நினைக்க முடியும்.
  34. அளவு கடந்த பொறுமையும், சுயக்கட்டுப்பாடும் உள்ளவர்களுக்கு மௌனசக்தி ஒரு சிறப்பான பிரார்த்தனையாக செயல்படுகிறது.
  35. அருள் ஓர் அன்பருக்குக் கிடைக்கும்பொழுது அதனுடைய பலன் அவரைச் சுற்றியுள்ள பல பேருக்கும் பரவும். அருள் அகண்டமயமானதென்பதால் அதனுடைய பலன் இப்படிப் பல இடங்களில் பரவுகிறது.
  36. மாதத்தின் முதல் நாளன்று ஒருவர் அழைப்பில் ஈடுபட்டார் என்றால், அம்மாதம் முழுவதும் அவர் சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்குத் தேவையான எனர்ஜி அவருக்குக் கிடைத்துவிடும். மேலும் அம்மாதம் முழுவதும் அருளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
  37. அருளை பலனாகப் பார்க்கும்பொழுதுதான் நம்மால் அதனை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால் இறையன்பு, இறைஆனந்தம், இறைஅமைதிஎன்ற உணர்வுகளைப் போன்று அருளும் ஓர் இறைஉணர்வுதான். ஆகவே பலன்களாக மட்டும் பார்க்காமல் ஓர் இறைஉணர்வாகவும் நாம் அருளை அனுபவிக்கலாம்.
  38. அன்பர் ஒரு குறிப்பிட்ட பலனுக்காக பிரார்த்தனை செய்கிறார். சாதகர் பிரார்த்தனைக்குப் பதிலாக சமர்ப்பணம் செய்கிறார். தனக்குள் அன்னை இருப்பதை ஒருவர் உணர்ந்துவிட்டார் என்றால், அவருடைய எண்ணம் அன்னையின் எண்ணத்துடன் ஐக்கியமாகிவிடுகிறது. அப்பட்சத்தில் அவர் பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல்போய்விடுகிறது.
  39. அருள் பிஸிக்கல் நிலையில் செயல்படும்பொழுது ஐஸ்வர்யம், உடல்நலம், மற்றும் காரியபூர்த்தி ஆகியவை அதிகரிக்கின்றன. உணர்வு நிலையில் செயல்படும்பொழுது சந்தோஷம், அன்பு, சுமுகம் ஆகிய உணர்வுகள் அதிகரிக்கின்றன. அறிவு நிலையில் செயல்படும்பொழுது நம் அறிவு விருத்தி அடைகிறது.
  40. தான் அன்னையிடம் கேட்கின்ற அதிர்ஷ்டம் மற்றும் ஐஸ்வரியம் ஆகிய இரண்டும் மற்றவர்களுக்கு முதலில் கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றவர்கள்தான் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் உகந்தவர் ஆவர்.
  41. அருள் மின்சாரம்போன்றது. அது எந்த மெஷினுக்குள் போகின்றதோ அதற்கேற்றவாறு ஒளி, வெப்பம், இயக்கம், ஒலி, காட்சி என்று பல்வேறு பலன்களைத் தருகிறது. இம்மாதிரியே நம்முடைய தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ற வகையில் அருளும் பல வகையான பலன்களை வழங்குகிறது. இருந்தாலும் லைனில் இருக்கும்பொழுது மின்சாரம் எப்படி ஒரு வெறுஞ்சக்தியாக இருக்கிறதோ அம்மாதிரியே அருளும் அதற்குச் சொந்தமான நிலையில் வெறுஞ்சக்தியாகவே இருக்கிறது.
  42. நாம் சுத்தத்தைக் கடைப்பிடிக்கும்பொழுது நாம் வசிக்கின்ற சூழலின் தரத்தை உயர்த்தி, அதன் பலனாக நமக்கு மேலும் கூடுதலாக அருள் கிடைக்க சுத்தம் வழி செய்கிறது.
  43. கடின உழைப்பும், செயல் திறமையும் பிஸிக்கல் நிலையில் அருளுக்கு வாயிலாகச் செயல்பட்டு நமக்கு அதிக அளவில் ஐஸ்வரியம் கிடைக்க உதவுகின்றன.
  44. உணர்வு நிலையில் நல்லெண்ணமும், பரநலம் பாராட்டலும் நம்முடைய பர்சனாலிட்டியை விரிவடையச் செய்து, அதன் வழியே நமக்கு அருள் மேலும்கிடைப்பதற்கு வழி செய்கின்றன.
  45. கர்மயோகி அவர்களுடைய கருத்துப்படி பார்த்தால், நம் வாழ்க்கையில் நடக்கின்ற எல்லாமே அருளின் வெளிப்பாடுதான். நாம் அருளோடு நல்ல அலைண்மெண்ட்டில் இருக்கும்பொழுது அது நம் வாழ்க்கையில் ஆசீர்வாதமாக நுழைகிறது. அருளுடன் நமக்கு அலைண்மெண்ட் கெட்டிருக்கும்பொழுது அதிர்ஷ்டமாக உள்ளே வருவது துரதிர்ஷ்டமாக மாறுகிறது.
  46. அன்னை ஒரு தாயாராக இருப்பதால்தான் நமக்கு தகுதியில்லை என்றாலும் அவருடைய அருள் இப்படி அபரிமிதமாக நமக்குக் கிடைக்கிறது. அவர் வெறும் ஆன்மீக குருவாகமட்டும் இருந்தார்என்றால், அவருடைய அருள் இவ்வளவு தாராளமாக நமது வாழ்க்கையில் செயல்படும் என்று சொல்ல முடியாது.
  47. நம் இஷ்டப்படி செயல்பட நமக்கு உரிமை இருப்பதால் அதன் பலனாக அருள் நமக்குக் கொடுக்கக்கூடிய பலன்கள் மிகவும் சுருங்கிவிடுகின்றன. தன்னுடைய விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு அருளின் தேவைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்கின்றவர், தன்னிஷ்டிப்படி நடப்பதால் தம் வாழ்நாளில் அவர் என்ன சாதிப்பாரோ அதை ஓரிரு ஆண்டுகளில் சாதிப்பார்.
  48. நாம் செயல்படும் விதத்தையும், நம் பழக்க வழக்கங்களையும் நாம் மாற்றிக்கொள்ளும்பொழுது அருளால் கிடைக்கும் பலன் நமக்கு இரண்டு மடங்காகிறது. நம்முடைய மனோபாவங்களை மாற்றிக்கொள்ளும்பொழுது பலன் நூறு மடங்காகிவிடுகிறது. நம்முடைய பண்புகளை மாற்றிக்கொள்ளும்பொழுது பலன் ஆயிரம் மடங்காகிறது. அருளோடு பூரண அலைண்மெண்ட்டை கொண்டுவரும்பொழுது அருளால் நமக்குக் கிடைக்கின்ற பலன் வரம்பில்லாமல் அதிகரிக்கிறது.
  49. அருள் நிபந்தனையில்லாமல் செயல்படுவதால் நம்மிடமிருந்து நன்றியறிதலை பிரதிபலனாக எதிர்பார்க்கிறது என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் நம்முடைய ஏற்புத் திறனை அதிகரித்துக்கொள்வதற்காக நாம் அருளிடம் நன்றியறிதலோடு நடந்துகொள்வது நமக்கு நல்லது.
  50. தன்னையும், தம் திறமைகளையும் நம்பாமல் அன்னை மேல் பூரண நம்பிக்கை வைத்து, எப்பொழுதும் நிதானமாகவும், சந்தோஷமாகவும் இருப்பவரோடு அருள் என்றுமே உடன் இருக்கிறது என்று நாம் நிச்சயம் நம்பலாம்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தீமை மாறுதலுக்கு அவசியம். தீமை என்ன என்பதை அறிந்தால் தீமை மறையும். தெளிவு குறையும் வரை தீமையால் கஷ்டப்பட வேண்டும்.
 
தீமையின்றி மாறுதலில்லை. தெளிவால் தீமை அழியும்.

******



book | by Dr. Radut