Skip to Content

11. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்

அன்னை இலக்கியம்

மனிதனும் மிருகமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

சியாமளா ராவ்

"உள்ளே போவதா? வேண்டாமா?"

சஞ்சலம் எழ, அதைத் தவிர்த்து, வெகு நிதானமாய் அடியெடுத்து உள்ளே வந்த ராமனாதனை, "வாங்கோ! யார் வேணும்? யாரைப் பார்க்கணும்?" என சீனுவும், ராமுவும் சேர்ந்து கேட்க, விதிர்விதிர்த்து நின்றார் ராமனாதன்.

சந்தடி கேட்டு, மாமியும் வெளியே வந்தார். கண்களை இடுக்கியபடியே உறுத்துப் பார்த்தார். மனதில் குமுறிக்கொண்டு வெளியே வரத் துடித்ததை அப்படியே அடக்கினார். அன்னையை மனதிலிறுத்தித் திடப்படுத்திக்கொண்டார்.

"ம்... வாப்பா... எப்படியிருக்கே? மொதல்ல நன்னா குளிச்சுட்டு சாப்பிட வா... மத்ததெல்லாம் அப்புறமா... ம்..."

"மாமி..." என்று கதறியபடியே... காலடிகளில் வீழ்ந்து கதற ஆரம்பித்தார் ராமனாதன்.

"ச்ச்... என்னயிது? காலுல விழுந்துண்டு... அழுதுண்டு... ம்...ஹூம்... எழுந்திருப்பா, சொல்றேன்... அதோ... அங்கேயிருக்கிற தெய்வத்துக்கிட்டே போய் மனசார அழுதுடு. இருந்த கசடையெல்லாம் வுட்டுட்டு வந்துருக்கேன்னு... உன்னோட அழுகையிலேயே புரிஞ்சுபோச்சு. இனிமே... இவா ரெண்டு பேருந்தான்... உனக்கும் தெய்வம். புரிஞ்சுண்டியா? அதை மனசார ஏத்துண்டு, அவா ரெண்டு பேர்கிட்டயும் எல்லாத்தையும் சொல்லு. எங்களுக்கு எதையும் சொல்ல வேண்டாம்னா வேண்டாம்தான். நடந்துபோனதைக் கிளறவும் வேண்டாம். இனிமே அதைப்பத்தி நீயும் நினைக்கவும் வேண்டாம். புரிஞ்சுதா? இன்னிலேருந்து, நீ... புத்தம்புது மனுஷனா மாறணும், சரியா... பின்பக்கம் போய், நன்னா குளிச்சுட்டு வாப்பா... சீனு அப்பாவுக்கு துண்டும், சோப்பும் கொண்டு போய் குடுப்பா. மாமாவோட வேஷ்டி தரேன், அதையும் கொடுத்துட்டு, கடைக்குப் போய், புது வேஷ்டி, பனியன் மூணு செட் வாங்கிண்டு வாப்பா. கை வச்ச பனியனாயிருக்கட்டும். பாரு!... சாப்பாடு இருக்குமே... அதை சூடு பண்ணும்மா... பாவம்... எங்கெங்கோ அலைஞ்சு, திரிஞ்சு, திருந்தி வந்துருக்கான். பசி, அவனோட கண்ணுலேயே தெரியறதுடி. கொண்டு வந்து வச்சுடு. நான் பரிமாறறேன்... சரியா..."

எதற்கும் வாய் திறக்காமல், முகத்தில் எந்தவிதமான உணர்வையும் வெளிப்படுத்தாமல், மாமி சொன்னதை சொன்னபடி செய்தாள். மனதுள் எந்தவிதமான எண்ணமும் எள்ளளவும் தோன்றவில்லை.

கையில் ஓர் ஊதுபத்தியை ஏற்றி, அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் எதிரில் வைத்து, அப்படியே கண்களை மூடி அமர்ந்தவள்தான். அவளிடம் எந்தவிதமான சலனமுமில்லை. தீவிரமான தியானம் அவளை அப்படியே ஆட்கொண்டது.

வயிறாரச் சாப்பிட்ட ராமனாதன், கையலம்பியும் வந்தாயிற்று. ம்...ஹூம்... எந்தவிதமான சலனமுமில்லை. யாரும் அவளைத் தொந்திரவும் செய்யவில்லை. அவரவர் வேலையை அவரவர் சத்தமின்றி, பேச்சுமின்றி வேலை செய்ததைப் பார்த்து, மனம் கனிந்து, இதயம் பூரிக்க, கண்கள் தன் வேலையைச் செய்ய ஆரம்பிக்க, தடுக்க முயன்று தோற்றார்.

*****

"சாயந்திரமா இங்கே, பக்கத்துலேயே கூட்டிட்டுப் போறேன். அங்கேயே, உன்னால முடிஞ்சதை செய்யிப்பா. கஷ்டமானதா தரமாட்டா. ஆனா, நீயும் மனஸ்பூர்த்தியா செய்யணும். அதுதான் முக்கியம். சரியா..."

தலையையாட்டியபடியே ராமனாதன் ஆமோதித்தார்.

பார்வதியிடம் எந்தவிதமான சலனமுமில்லை. மௌனமாகவே வேலைகளைச் செய்தாள். எந்தவிதமான அனாவசியப் பேச்சுகளோ, சத்தமோ... யாரிடமும் இல்லை. பாத்திரங்களைக்கூட அவரவர் கையாளுவது துளிக்கூட சத்தமின்றியிருந்தன. அந்த அமைதியும், அதே சமயம் அந்த வீட்டின் சூழ்நிலையும், அதன் அமைதியும் அவரை பிரமிக்கவைத்தன. மற்றவர்கள் வேலை செய்யும்போது பேசும் பேச்சுகளில் அவசியம் தவிர, அனாவசியம் எதுவுமில்லை. ராமுவும், சீனுவும் அவரவர் வேலையைச் செய்தபடி, கேரியரை எடுத்துப் போனதையும் கவனித்தார்.

மனசு கிடந்து தவித்தது. "எத்தனை அழகான குடும்பம் என்னுடையது! அதை எப்படி சின்னாபின்னமாக்கி, சீரழிச்சேன். அப்போ, என் உடம்பில் ஓடின ரத்தத்தில் முழுக்க, முழுக்க திமிர்தானே ரொம்பியிருந்தது. என் திமிர் அடங்க, அடங்க, ரத்தம் சுண்டச் சுண்ட, மூளை இப்பத்தானே வேலை செய்ய ஆரம்பிச்சுருக்கு. நான் இங்கேயிருக்க தகுதியானவன்தானா? இல்லேங்கறது புரியறது. வேறே... வழி? யாரும் என்னைச் சீண்டாம... என்னை ஒரு கேள்வியும் கேக்காம... உடனே ஏத்துண்டாளே... இது சாத்தியமா? என்னால தாங்கலே... மாமியாவது என்னைப் பார்த்ததும் ஆவேசமா திட்டக்கூடாதா? எப்படி மனசுக்கு இதமா, பதமா பேசினா... உடுத்தத் துணிகூடயில்லாம, அழுக்குப் பண்டாரமா நின்ன என்னை மறுக்காம, உடனே மாத்துத் துணியை வாங்கிண்டு வரச் சொல்லி... ம்மா... தாங்கலையே... இந்த ஒட்டுதலான நடப்பு... என்னாலேயே ஏத்துக்க முடியலே... இதுதான் எனக்குப் பெரிய தண்டனை... ஆமாம்... மாமி என்னைத் திட்டிக் கத்தியிருந்தா, நானும் பதிலுக்குப் பேசி, இன்னும் விவகாரமாகி, என்னை வெளியே தள்ளியிருப்பா... ஆனா, அப்படியில்லாம... முடியலே... என்னால இந்த அன்பான, மிதமான பேச்சைத்தான் தாங்கவே முடியலே..."

"ராமனாதா... வரியாப்பா... வாப்பா..." அதற்கு மேல் மனது எந்த எண்ணத்தையும் நினைக்கவிடாமல் நின்றது. சட்டென எழுந்தான். கண்கள் பார்வதியைத் தேடினாலும், மாமியின் பின்னால், பசுவைத் தொடர்ந்து செல்லும் கன்றைப்போல் நடந்தான்.

தியானமையத்தின் வாசலிலிருந்து உள்ளே நுழையுமுன்பே ஒரு பிரமிப்பு. உச்சிமுதல் பாதம்வரை ஓர் இனம் புரியாத உணர்வில் மயிர்க்கூச்சல் சரீரம் முழுவதும். காற்றில் பறப்பதுபோல், மிதப்பது போல், தானே கனமற்று, எடையற்று லேசானது எப்படி?

அன்னையின் கருணை நிறைந்த விழிகள் அவனை ஆதுரத்துடன், "வந்துட்டியா... சரி... உக்காரு" என்று சொன்னது போல், அந்தசிரித்த முகத்தின் தேஜஸ், அவனை மண்டியிட வைத்தது.

இரு கரங்களையும் கூப்ப வைத்தது. கண்களில் தாரை, தாரையாய் நீர் சுரந்தது. இதயத்தின் துடிப்பு தடதடவென அதிர்வது... அவனால் உணர முடிந்தது. ஆனால், அந்த இடத்தைவிட்டு கிஞ்சித்தும் நகரயியலாதபடி அப்படியே ஆணியடித்ததுபோல் இருந்தான்.

மாமாவும், சத்தியனும், ராமனாதனை அழைத்துக்கொண்டு ஆபீஸ் ரூமில் உட்காரவைத்தனர். எதைப் பற்றியும் ஒன்றுமே கேட்கவில்லை. ஆனால், எப்படியெப்படி நடக்க வேண்டும், தியான நேரத்தில் எப்படி தியானம் செய்ய வேண்டும்போன்ற பொதுவானவைகளையே கூறினரே தவிர, வேறொன்றுமே அவரைக் கேட்கவில்லை. அவரை அங்கேயே தங்கவும் அனுமதி தந்தனர்.

******

ராமனாதன் இப்போது மிகத்தெளிவானவராகவும், பந்தம், பாசம்என்பதை வைத்துக்கொண்டு நாடகமாடும் அந்த வேண்டாத அசட்டு சாமர்த்தியத்தையும், வேண்டாத எண்ணங்களையும் துறந்தவராகவும்... மௌனமே மொழியாக, அன்னை, ஸ்ரீ அரவிந்தரே தெய்வமாக, தியானமையத்திலேயே தங்கி, யாரிடமும் அதிகம் பேசாமல், சிரித்த சாந்தமான முகத்துடன், "அன்னையே சரணம்" என்று, தான் உண்டு, தனக்கான வேலையுண்டுஎன்று நடந்து கொண்டதில் அனைவரும் விரும்பும் மனிதராக மாறியதுதான் நிஜமானது.

மிருகம் தன்னியல்பை மாற்றுவதும் கிடையாது; பசிக்கு இரையைத் தேடுமேதவிர, அதனிடம் வேறெதுவுமில்லை.

ஆனால், மனிதன்? ஆம், இப்போது மாறிய ராமனாதன், "அன்னையே சரணாகதி" என்று வந்தபின், "முழு மனிதனாகி", அனைவரும் விரும்பும்படியானவனாக மாறினான் என்பதே உண்மையான நிஜமானது. மாறுதல் மனிதரிடமே தவிர, மிருகங்களிடமன்று.

(அன்னையே சரணம்)

அன்னை எழுதிய இந்த வாக்குகள் மனிதனுக்கு எத்தனை பொருத்தமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென்பதே நோக்கமானது.

"நம் சிந்தனைகள் இன்னும் அறியாமையில் இருக்கின்றன. அவைகள் ஒளியூட்டப்பட வேண்டும்.

நம் ஆர்வம் இன்னும் குறைபாடு உடையதாய் இருக்கிறது. அது தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

நமது செயல்கள் இன்னும் வலுவற்றவையாக இருக்கின்றன. அவை ஆற்றல் வாய்ந்தவையாக ஆக வேண்டும்".

"அன்னையே சரணம்".

முற்றும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தன் லட்சியத்தை அழிப்பதன்மூலம் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் தன்மை இறைவனுக்குண்டு.
 
அழிவும் சிருஷ்டியாகும்.
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நம்பர் போடுவதில் குறை ஏற்பட்டால், மனம் ஏற்றுக் கொள்ளும் பொறுப்பை, செயலில் பூர்த்திசெய்யும் திறனை அதற்குரிய சிறப்புடன் பெறவில்லைஎனப் பொருள்.
 
மனம் ஏற்றதைச் செயல் ஏற்பது அரிது.
 
*******



book | by Dr. Radut