Skip to Content

12. அன்னை இலக்கியம்

"அன்னை இலக்கியம்"

படகு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

இல. சுந்தரி

நேற்றுவரை, "பவானி, பவானி" என்று அன்புடன் அழைத்த அத்தை, இனி இவளை அழைக்கமாட்டாள். மாலை மரியாதைகளுடன் அவளுடல் இறுதிப்பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

அன்புடன், நோயாளிப் பெண்ணாகிய தன்னை சுவீகாரம் எடுத்துக்கொண்டு, பெற்றவளைவிட அதிக அன்புடன் பேணி வளர்த்தவள். பெற்றோரும், உடன்பிறந்தவர்களும், எத்தனையோ மருத்துவ உதவிகள் அளித்தபோதெல்லாம் குணமடையாத இவள் உடல்நிலை அத்தையின் அன்பிலும், பக்தியாலும், அவள் பிரார்த்தனையாலும் குணமடைந்தது.

இவளை நிராதரவாய் விட்டுச் சென்றாள் என்றுகூட சொல்ல முடியாது. வாழ்விற்குத் தேவையான செல்வம் வைத்துச் சென்றிருந்தாள். பெற்றவள், வளர்த்தவள் எல்லோரையும் தாண்டி நித்யமாய் உள்ள தாயையும் (ஸ்ரீ அன்னை) உணர்த்திவிட்டுத்தான் போயிருக்கிறாள்.

சகோதரர்கள், அண்ணியர், சகோதரியர், மாமாக்கள் எல்லோரும் வந்திருந்து அத்தையின் காரியங்களை நிறைவேற்றினர்.

இனி பவானியைத் தனியே எப்படி விட்டுச்செல்ல முடியும்? என்ற பிரச்சினை உருவாயிற்று. அவள் தங்களில் யாருடன் வந்திருந்தாலும் சரி, அவளுக்குத் திருமண ஏற்பாடு செய்து விரைவில் அவளை ஒருவரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று முடிவு செய்தனர்.

அத்தையின் பிரிவால் தன் மனம் மிகவும் பாதித்திருப்பதால், தனக்குச் சிறிது அவகாசம் வேண்டும் என்று பவானி கூறினாள்.

ஒரு முதிய பெண்மணியையும், வேலைக்காரச் சிறுவனையும் இவளுக்குத் துணையாக விட்டுவிட்டு அவரவர் தங்கள் தங்கள் இருப்பிடம் சென்றனர்.

கடந்த காலத்தில், அண்மைக்காலமாக அவள் அத்தையுடன் தியானமையம் சென்று வந்தாள். தானும், அத்தையும் தன் உடல் நலம் குறித்து அன்னைக்குச் செய்துகொண்ட பிரார்த்தனையால் உடல் நலமடைந்தது. தனக்கு நலமளித்தவர் ஸ்ரீ அன்னை என்று அவள் பரிபூரணமாக நம்பினாள். பிரார்த்தனை பலித்தவுடன் அதற்குப் பின்னுள்ள அன்னையின் அருளை, சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உரைகளைக் கேட்டிருக்கிறாள். அன்னையைப் பற்றிய புத்தகங்களைப் படித்து, அதில் ஈடுபாடு கொண்டிருந்தாள்.

விவேக் நகரில் ஆண்டாளம்மா என்றொரு பெண்மணி இருந்தார். அவர் அன்னையிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர். அன்னையின் கோட்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எதைச் செய்தாலும், "இது அன்னை முறை" என்று செய்வார். கோபமே அவர்களிடம் காண முடியாது. மிகக்கடும் சூழல்கூட அவர் இனிமையாகவே நடந்து கொள்வார். "இப்போதுகூட கோபம் வரவில்லையா உங்களுக்கு?'' என்று யாரேனும் கேட்டால், "கோபம் அன்னைக்குப் பிடிக்காது'' என்பார். அவருடன் மேலும் சில அன்பர்களும் சேர்ந்து தியானமையத்திற்கு வருவார்கள். தியான மையத்தினர், "அன்னைகுடும்பம் வந்துவிட்டதா? அன்னைகுடும்பம் சொல்வதுபோல் செய்வோம்'' என்பர். முதலில் பவானிக்கு இது விளங்கவில்லை. பிறகுதான் ஆண்டாளம்மாவைத்தான் அவர் "அன்னைகுடும்பம்" என்று சொல்கிறார்கள் என்று தெரியவந்தது. அத்தையும், பவானியிடம் அடிக்கடி சொல்வார், "உன்னை நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுத்துவிட்டு, நான் அன்னை குடும்பத்திற்குப் போய்விடப் போகிறேன்'' என்று. அதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்தது. அத்தை சேர எண்ணிய அன்னை குடும்பத்தில் ஏன் தானும் சேர்ந்துவிடக்கூடாது என்று ஒரு எண்ணமும் தோன்றியது.

மறுநாளே ஆண்டாளம்மாவின் வீட்டிற்குச் சென்றாள் பவானி. காம்பவுண்ட் சுவரிலிருந்து சிறிது உள்புறம் தள்ளி வீட்டின் முகப்பு. சற்றுப் பெரியதாக இரண்டு கதவுகள் கொண்ட ஒரு வாயில். பக்கத்தில் ஒரு கதவு கொண்ட சிறிய வாயில் ஒன்று. இரண்டு கதவுகள் கொண்ட வாயில் கதவு திறந்தும், கண்ணாடிக் கதவு மூடியும் இருந்தது. சிறிய வாயிலில் உள்ள ஒற்றைக் கதவு திறந்தே இருந்தது. அதன் வழியாகச் சென்று, முன்னிடத்திலேயே நின்றவண்ணம், "அம்மா!” என்று அழைத்தாள்.

ஏறக்குறைய இவள் வயதிருக்கும் பெண் ஒருத்தி உள்ளிலிருந்து வந்து, "வாருங்கள், நீங்கள் யாரைப் பார்க்கவேண்டும்'' என்றாள். இந்தப் பெண்ணை இதற்கு முன் பவானி பார்த்ததில்லை.

"ஆண்டாளம்மா இருக்கிறார்களா? என் பெயர் பவானி'' என்றாள்.

"உள்ளே வந்து உட்காருங்கள். அம்மாவிடம் சொல்கிறேன்'' என்று உள்ளே சென்றாள்.

ஆண்டாளம்மா ஏதோ சமையல் வேலையாய் இருந்திருப்பார் போலும். கையில் கரண்டியுடன் வந்தார்.

"வாம்மா, நானே உன்னைப் பார்க்க வரவேண்டும் என்றிருந்தேன்'' என்றார்.

ஆண்டாளம்மாவைத் தொடர்ந்து உள்ளே சென்றாள்.

அங்கு சமையலறையில் காலைச் சிற்றுண்டி தயாராகிக் கொண்டிருந்தது. ஆனால் பெரிய அளவில், கிட்டதட்ட பத்து பேர்களுக்குக் குறையாமல் வேலை செய்துகொண்டிருந்தனர். சிலரை ஆண்டாளம்மாவுடன் தியானமையத்தில் பார்த்திருக்கிறாள். அவர்கள் வேலையைக் கவனித்துக் கொண்டே இவளையும் வரவேற்கும் பாவனையில் புன்னகை செய்தனர். இவர்களைப் பார்த்திருக்கிறாளே தவிர, பேசியதில்லை. வேறு விபரங்களும் தெரியாது.

அந்த வீட்டில் ஒரு மெஸ் நடக்கிறது. அதற்காகத்தான் இவர்கள் இட்லி, சாம்பார், பூரி, கிழங்கு என்று தயாரித்துக் கொண்டிருந்தனர். இளம் வயது, நடுத்தர வயது என்று சொல்லத் தக்கவர்களாயிருந்தனர். எல்லோருமே ஆண்டாளம்மாவை "அம்மா" என்றழைத்தனர். ஒரு குடும்பத்து உறுப்பினர் யாவரும் ஒன்று சேர்ந்து மெஸ் நடத்துகிறார்கள் என்று எண்ணிக்கொண்டாள் பவானி.

ஆண்டாளம்மா பூரி மாவைப் பிசைந்து, ஒரு வட்டமான அச்சில் வைத்து அழுத்தி, நிலவு, நிலவாக எடுத்து ஒரு பெரிய தட்டில் இட, அதை ஒரு பெண் எண்ணெயில் பொறித்து வடிதட்டில் இட, மற்றொரு பெண் எண்ணெய் வடிந்த பூரிகளை ஒரு எவர்சில்வர் டிரம்மில் அடுக்கி, எடுத்து முன்புறம் இரட்டைக் கதவமைந்த ஹாலில் கொண்டு வைக்கிறாள். சிறிது நேரத்தில் அங்குள்ள மேடையில் இட்லி, சாம்பார், பூரி, கிழங்கு, யாவும் வைக்கப்பட்டன. சரியாக 9 மணி. இரண்டு கண்ணாடிக் கதவுகளும் திறக்கப்பட்டன. அந்தக் கதவு வழியே சிலர் வந்தனர். அவர்கள் மிகவும் பழகியவர்கள் போலும். அவரவர் தத்தமக்கு ஒரு பிளேட்டில் தேவையான பலகாரத்தை எடுத்துக் கொண்டு, அமைதியாக அமர்ந்து தவம்போல் சாப்பிட்டனர். வீட்டினர் எவரும் பரிமாறச் செல்லவில்லை. அவர்களுக்குப் பில் கொடுக்கப்படவில்லை. அங்கு கல்லாப்பெட்டியுமில்லை. அங்கு ஒரு பெரிய தகர உண்டியலிருந்தது. சிற்றுண்டி உண்டவர்கள் நாணயமோ (அ) ரூபாய்த் தாள்களையோ உண்டியில் இட்டுச் சென்றனர். உள்ளேயிலிருந்து ஜன்னல் வழியே இவற்றைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பவானி. சரியாக அரை மணி நேரத்தில் எல்லோரும் வந்தது போலவே வரிசையாகச் சென்றுவிட்டனர். கண்ணாடிக் கதவு உள்புறம் தாளிடப்பட்டது.

எப்படி? எப்படி இது சாத்தியம்? நடக்குமா? உலகில் நல்ல உணவு கிடைக்கிறது என்றால் எல்லோரும் தேடி வருவார்கள். குறைந்த விலை என்றால், நிறைய வாங்குவார்கள். பில் இல்லை என்றால், கவனிக்கவில்லையென்றால், ஏமாற்றுவார்கள். ஆனால் இவர்கள், தேவைக்கு உண்டனர், வீணாக்கவில்லை, ஆரவாரம் இல்லை, மிக அமைதியாக வந்து ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்துச் சென்றனர். அங்கு இசை ஏதும் ஒலிபரப்பப்பட வில்லை. ஆரவாரம் இல்லாத சிற்றுண்டிச்சாலையா? பிரமித்து நின்றாள் பவானி.

"என்ன பார்க்கிறாய், பவானி?'' என்றாள் ஆண்டாளம்மா சிரித்தவண்ணம்.

"ஆரவாரமில்லாமல் சாப்பிட்டுவிட்டுப் போகிறார்கள். டிபனுக்கு நீங்கள் பில் தரவில்லை. அவரவர் நாணயத்தையோ, ரூபாய்த் தாளையோ உண்டியல் போடுகிறார்கள். யார் எவ்வளவு சாப்பிட்டார்கள் என்று எப்படிக் கணக்கு வைப்பீர்கள்? லாபமா, நஷ்டமா என்று எப்படித் தெரியும்? எல்லாம் வியப்பாயிருக்கிறது'' என்றாள் பவானி.

"வியப்பொன்றுமில்லை பவானி. சிறு வயதிலிருந்தே எனக்கு ஓர் ஆசை. எல்லோரும் உண்மையாய், நேர்மையாய், சண்டைசச்சரவு இல்லாமல் வாழ வேண்டுமென்ற ஆவலுண்டு. ஆனால் வாழ்க்கை அனுபவத்தில் ஒரு குடும்பத்திற்குள்ளேயே உண்மையான அன்பில்லை, நேர்மையில்லை, எடுத்துச் சொன்னால் சண்டை வருகிறது. நிறைய பார்த்துப் பார்த்து வெறுப்படைந்தேன். மனதில் பொய்ம்மையும், நேர்மை இன்மையும் உள்ள மக்களுடன் வாழ்வது சுகாதாரமற்ற சூழலில் வாழ்வதுபோல் அசௌகரியமாய்த் தோன்றியது. சுதந்திரமாய்ச் செயல்படவும் சமுதாயம் அனுமதிக்கவில்லை. திருமணம், குடும்பம் என்று ஒரு சிக்கலான சூழலில் வாழும் ஆரோக்கியமற்ற வாழ்வு எனக்குக் கிடைத்தது. என் கணவர் நிறைய பொய் சொல்வார். ஆரம்பத்தில் உண்மையென்று நம்பினேன். போகப்போக அவர் பேச்சில் பொய்ம்மை இருப்பது புரிந்தவுடன் ஒரு விலங்குடன் வாழ்வது போல் அருவருப்புத் தோன்றி, மனத்தால் விலகி வாழ்ந்தேன். பொய்ம்மையானவர்க்குப் பிள்ளை பெற்றுக் கொண்டால், அதுவும் அப்படி இருக்குமோ என்று அஞ்சினேன். ஆனால், கட்டாயத்தில் பிள்ளை பெற்றேன். அஞ்சியதுபோல் அந்தப் பிள்ளை பொய், பித்தலாட்டம் செய்வதில் தந்தையை மிஞ்சியது. தன் குறைகளுக்கு வெட்கப்படாத கணவர், தம் பிரதிநிதியான பிள்ளையைக் கண்டு பெருமை பெற்றார். திருத்த முயன்றேன் பிள்ளையை. அப்பாவின் ஆதரவு கிடைத்த தைரியத்தில் என் பேச்சை அலட்சியம் செய்து, கெட்ட குணங்களை வளர்த்துக் கொண்டான். வாழ்வு நரகமாயிற்று. அவனுக்கு மணம் பேசும்போது வரப்போகும் மருமகளுக்கு என் மனம் பரிதாபப்பட்டது. ஆனாலும் தடுத்து நிறுத்த பாசம் இடம் தரவில்லை. வாழ வந்த பெண் அவன் சுயரூபம் அறிந்தவுடன், இவனுடன் வாழ முடியாது என்று துணிந்து வெளியேறிவிட்டாள். என் கணவர் நோய்வாய்பட்டு இறந்தார். மகன் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு எங்கோ போய்விட்டான். சத்தியத்திற்கு ஆசைப்பட்டேன். பொய்யை எதிர்த்துப் போராட வலிமையில்லை. இறைவனே தளைகளை அறுத்துத் தடுத்தாள்வது போல், ஸ்ரீ அன்னை பற்றி அறியும் வாய்ப்புகளைக் கொடுத்தான். தியானமையம் செல்ல ஆரம்பித்தேன். பகவானின் பூரணயோகம் பற்றி அறிந்தேன். வாழ்வனைத்தும் யோகமே என்ற ஸ்ரீ அன்னையின் அருள்வாக்கு என்னையீர்த்தது. ஓயாது அவர்கள் கூறியவை பற்றியெல்லாம் கேட்கவும், படித்தறியவும் ஆசைப்பட்டேன்.

இதுதான், இதுதான் நான் தேடிய வாழ்வு என்று உள்மனம் அடையாளங்காட்டியது. ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றியவண்ணமிருந்தது. அன்னையிது பற்றி என்ன கூறுவார் என்றறிய எண்ணி, அன்னையின் புத்தகம் ஒன்றைப் பிரித்தேன். அதில்,

"உருப்படியான காரியம் ஏதாவது செய்ய வேண்டுமானால், அதற்குமுன் அகங்காரப் பிராணமய எதிர்வினைகள் எல்லாம் மறைய வேண்டும்'' என்ற அன்னையின் அறிவுரை கண்ணில்பட்டது. அதை ஓயாது எனக்கு நானே சொல்லிக் கொண்டு, என்னை மாற்ற முயன்றேன்.

"வேலையை யோகசாதனையாகச் செய். நீ செய்யும் வேலைகளை உனது முழுத்திறமையோடு செய்து, அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, பலனை அவன் பொறுப்பில் விட்டுவிடு'' என்ற ஸ்ரீ அன்னையின் அமுதமொழி எனக்கு மிகவும் உற்சாகமளித்தது.

நான் அன்னையை நேசிக்கிறேன். அவர் வழியில் வாழ ஆவல். இப்போது நான் எந்தச் செயலில் ஈடுபடுவது என்று எண்ண ஆரம்பித்தேன்.

அப்போது அவர் கூறிய, "பேருண்மைக்குத் தொண்டு புரிய பல வழிகள் உள்ளன. இத்தகைய தொண்டு புரிய வேண்டும் என்ற முடிவில் நேர்மையுடனிருப்பவர்கள் எல்லோருக்கும், ஒவ்வொரு கணமும் அந்த வகையில், செய்ய வேண்டியது இன்னது என்று தெரியும். அல்லது அவர்களுக்கு அது உணர்த்தப்படும்'' என்ற செய்தி என் கண்ணில்பட்டது. அது பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது,

அன்னையன்பர் ஒருவர் வந்தார். அவர் அன்னை பெயரால் தாம் ஒரு பாலர் பள்ளி தொடங்கப்போவதாயும், அதில் வழக்கமான பாட புத்தகம், பாட அட்டவணையை நிறைவு செய்தல் போன்ற கெடுபிடி ஏதுமில்லாமல், குழந்தைகளை அவர்கள் வழியில் ஊக்குவிக்க திட்டம் வைத்திருப்பதாயும், அதற்கு இடம்கூடத் தன்னிடம் இருப்பதாயும் கூறினார்.

உடனே ஆரம்பித்துவிடுவது தானே? என்றேன்.

என்ன செய்வது ஆண்டாளம்மா? இந்தப் புதிய முறையில் பெற்றோர்களுக்கு ஆர்வமில்லை. பிள்ளைகளை அனுப்பத் தயங்குகிறார்கள் என்று வருத்தமாகச் சொன்னார். "புதியது எங்கு தோன்றினாலும், அங்கு அன்னையிருப்பார்'' என்று படித்த வாசகம் நினைவுக்கு வந்தது.

கோபாலன், நாம் ஒன்று செய்வோம். அன்னை வழியில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று எனக்கும் ஆர்வம் இருந்துகொண்டே இருக்கிறது. நாம் சில அனாதைக் குழந்தைகளை எடுத்து வந்து, அவர்கள் உணவு, உடை, தேவைகளுடன் இந்தப் புதிய முறைக் கல்வியைத் தொடங்கிவிடுவோம் என்றேன்.

அதற்கு அவர், என்னிடம் திட்டமும், இடமும்தானிருக்கிறது. மற்றைய தேவைகளுக்குப் பொருள் இல்லையே என்றார்.

நன்கொடைஎன்ற பெயரால் பணம் வசூல் செய்யாமல், நான் என்னிடமுள்ள பொருளை வைத்து ஒரு மெஸ் தொடங்குகிறேன். அன்னை முறைக் கல்விக்கு ஆதரவு தர விரும்பும் அன்பர்கள் சாப்பிட்டுவிட்டுத் தம்மால் இயன்றதைக் கொடுக்கட்டும். அதைக் கொண்டு பள்ளியைத் தொடங்குவோம் என்றேன்.

அமோக வரவேற்பு கிடைத்தது. அன்னை வழியில் வாழ விரும்பும் அன்பர்கள் மட்டுமே இங்கு வருபவர்கள். பொருளைக் கொண்டு பத்து பிள்ளைகளை வைத்துத் தொடங்கினோம். குழந்தைகளின் அறிவு வளர்ச்சியைப் பார்த்துவிட்டு, முன்பு வரத் தயங்கியவர்களும் தங்கள் பிள்ளைகளையும் சேர்த்து, உதவித் தொகையும் தருகிறார்கள்.

பள்ளியும் வளர்ந்துவிட்டது. அங்கும் சரி, இங்கும் சரி, எல்லோரும் சேவை மனப்பான்மையுடன் உழைப்பவர்களே. எவருக்கும் சம்பளம் கிடையாது. இருப்பவர்கள் பணம் முதலீடு செய்து, உழைக்கவும் செய்கிறார்கள். பணமில்லாதவர்கள் நேர்மையான உழைப்பால் தொழிலை வளப்படுத்துகிறார்கள்.

மெஸ்ஸிலிருந்து வரும் வருமானம் உணவுப் பொருள் வாங்கியதுபோக, பள்ளியின் வளர்ச்சிக்கும், "அன்னை குடும்பம்" என்ற மாதிரி குடும்பத்தை உருவாக்குவதற்குமே செலவிடுவது என முடிவு செய்தோம்'' என்றாள் ஆண்டாளம்மா.

"உங்களுக்குள் கருத்து வேறுபாடு நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?'' என்றாள் பவானி.

"அன்னை வழி என்பது அடுத்தவரைக் குறைகூற முடியாதது. ஒவ்வொருவரும் தன்னுள்ளே நோக்கி, உரசல்களுக்கும், தப்பெண்ணங்களுக்கும் உரிய காரணங்களைக் கண்டுபிடிப்பதும், அவற்றை விலக்குவதும் தம் பொறுப்பாய்க் கொள்ளவேண்டும். மேலும், எங்களில் எவருக்கும் சுயநலத் தேவைகள் இருக்கக்கூடாது என எண்ணினோம். யாரும் யாருக்கும் அடிமையோ, அதிகாரியோ அல்லம். விதிகள் வகுக்கப்படாமல் தாங்களாகவே சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். கட்டுப்பாடுகளை மீறி தவறு செய்தாலும், செய்யத் தோன்றினாலும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு வெளியேற வேண்டும். அல்லது திருந்துவேன் என்று உறுதிகொள்ள வேண்டும். அவரவர் அகமே புறம் என்பது அன்னைகோட்பாடு'' என்று கூறிக் கொண்டிருக்கும்போது பவானி,

"அகமே புறம் என்றால் என்ன என்று புரியும்படிச் சொல்லுங்கள்'' என்றாள்.

"அதாவது நமக்குப் புற நிகழ்ச்சியாகத் தெரிவது அக உணர்ச்சியின் பிரதிபலிப்பே. புற நிகழ்ச்சி நம் கையில் இல்லை. அக நிகழ்ச்சி நம் கட்டுப்பாட்டிற்குட்பட்டது. அதை மாற்றும் திறன் நமக்கு உண்டு. அதைச் செய்தால், வெளி நிகழ்ச்சிகள் அதே சமயத்தில் கட்டுப்படும். மற்றவர் பொருளை விரயம் செய்வதாக எனக்குத் தோன்றினால், அதை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டு, என்னைச் சோதித்து, அதைத் திருத்திக் கொண்டால் உடனே அன்பர் அந்தப் பிழையைத் திருத்திக் கொள்வதைக் கண்கூடாகக் காணலாம். சுயபரிசோதனையும், சுய சீர்திருத்தமும் தான் வேண்டப்படுவது. அவரவரும் அவரவரைத் திருத்திக் கொள்வதே கொள்கை. அடுத்தவரைக் குறைசொல்லக் கூடாது. இந்த அன்னை முறைகளே இந்தக் குடும்ப வாழ்வின் அடிப்படை'' என்றாள்.

"அப்படியென்றால், இவர்களெல்லாம் உங்கள் உறவினர்கள் இல்லையா?'' என்றாள் வியப்புடன் பவானி.

"உறவினர்கள் தாம் இவர்கள். இதுவரை, அதாவது அன்னை குடும்பம் தோன்றும்முன் இரத்த பாசமுள்ளவர்களை "உறவினர்" என்று கூறிக்கொண்டு, விட்டுக்கொடுத்து, மூடி மறைத்து வாழ்ந்தேன். ஆனால், இனி "அன்னைபக்தி" என்ற உறவே என் உறவு. இங்கு மூடி மறைத்தல் கிடையாது. அன்னைமுன் சத்தியத்துடன், திறந்த புத்தகம் போன்ற உறவுமுறை இது. அன்னையின் கோட்பாடுகளே இங்கு சட்டம்'' என்றாள்.

"அப்படியென்றால்?'' என்று பவானி கேட்கிறாள்.

"அதாவது சட்டம், ரூல், பாஸ், இவற்றை அன்னை விரும்புவது இல்லை. அவையின்றியே நேர்மையாக நடக்கவேண்டும். அதனால்தான் பில்புக் போடவில்லை. உணவுக்கு அளவு நிர்ணயம் செய்யவில்லை'' என்றாள் ஆண்டாளம்மா.

"இது எவ்வாறு சாத்தியம் என்று இப்போதும் எனக்கு வியப்பாயுள்ளது'' என்றாள் பவானி.

"அன்னை கூறும் பரிசுத்தத்தைக் கடைப்பிடித்தால் இது சாத்தியமே'' என்றாள் ஆண்டாளம்மா.

"அன்னை கூறும் பரிசுத்தம் என்ன என்பதையும் சொல்லி விடுங்கள்''.

"அன்னை முறையில் பரிசுத்தம் என்பது அவசரம், கோபம், போட்டி, பொறாமை, சந்தேகம், சோம்பல் போன்றவற்றை அழிப்பது'' என்றாள் ஆண்டாளம்மா.

"ஆகா, இப்படியொரு முறை எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கும் உங்களைப்போல், உங்களில் ஒருத்தியாக வாழ ஆர்வம் எழுகிறது. ஆனால் எந்த அளவிற்கு என்னால் இந்த உயர் குணங்களைக் கடைப்பிடிக்க முடியும் என்று தயக்கமாகவுள்ளது'' என்றாள் பவானி.

"எல்லாவற்றிற்கும் ஒரு பயிற்சிக் காலம் உண்டல்லவா? உன் மனவமைதிக்குச் சிறிது காலம் எங்களுடன் இருந்து பார். எதுவும் கட்டாயமில்லை. ஆர்வம் நல்ல வழியில் ஏற்படும்போது அதை வளர்க்க முயல்வதில் தவறில்லை'' என்றாள் ஆண்டாளம்மா.

அங்கு வந்து அவர்களுடன் பணிகளைப் பகிர்ந்து கொள்ள ஆர்வம்தான் அவளுக்கு. உள்ளூரத் தயக்கமும் இருந்தது. இங்கு வந்து நல்லவற்றைக் கேட்டதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டு, மெஸ்ஸிலிருந்த காலிபாத்திரங்களைத் துலக்குவதற்குரிய இடத்திற்கு எடுத்துச் சென்று துலக்க ஆரம்பித்தாள். மனம் இலேசாவது போலுணர்ந்தாள். பாத்திரங்கள் பளிச்சென்று துலங்கின.

ஆண்டாளம்மா, இவள் திறமையும், நேர்த்தியும் கண்டு மகிழ்ந்தாள். இவள் துலக்கி வைத்த பாத்திரங்களை சுகுமார் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பில் எடுத்துச் சென்று, தூய வெள்ளைத் துணியால் ஒவ்வொன்றாய்த் துடைத்து, அதற்குரிய இடத்தில் ஒழுங்குற அடுக்கினான். பாத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசாமல், ஒலி எழுப்பாமல் கவனமாய்ச் செய்தான்.

அங்குள்ளவர்கள் வேலை செய்வதில் ஆண், பெண் என்ற பேதமின்றி, கடுமையான வேலை, எளிய வேலை என்ற பாகுபாடின்றிச் சுமுகமாகச் செய்தனர். ஒருவரும் அதிர்ந்து பேசவில்லை, அதிகம் பேசவுமில்லை. "கருமமே கண்ணாயினர்" என்பது போன்றிருந்தனர். இவர்களுடன் வந்து தங்கி இந்தத் தவவாழ்வைப் பயிலவும் ஆர்வம் மிகுந்தது.

பிறகு வருவதாய்க் கூறி விடைபெற்றாள். இந்த நேரத்தில் இவள் பெருஞ்சொத்துடன் தனியளாய் இருப்பது கண்டு, உறவினர் ஒவ்வொருவராய் வரத் தொடங்கினர். தங்களுடன் வருமாறு அழைத்தனர். திருமணம் பேசவேண்டும் என்றனர். தவ வாழ்வில் பேர் ஈடுபாடும், மண வாழ்விலும் சிறிது ஈடுபாடும் இவளுக்கு இருந்தது; குழப்பமாகவுமிருந்தது. இன்று தியானமையத்தில் அன்னையிடம் தெளிவு பெற்றுவர வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, தியானமையம் சென்றாள்.

அன்றைய சொற்பொழிவு இவளுக்கு விடை அளிப்பதாய் இருந்தது.

"ஆசைகளும், ஆன்மீகமும் பொதுவாக ஒன்றுக்கொன்று எதிராகவுள்ளன. ஆசைகளையே ஆன்மீகமயமாக்கிவிட்டால், அன்னை நம் ஆசைகளையும் நிறைவேற்றி, ஆன்மீகத்தையும் வளர்ப்பார். அன்பர்களில் பெரும்பாலோர் சாதாரணமாகவும், ஏதோ ஒரு சிலர்தான் அசாதாரணமாகவும் இருப்பார்கள். சாதாரண நிலை என்பது ஓரளவு ஆன்மீகப் பக்குவமும், மற்றபடி மனிதனுக்குண்டான

வழக்கமான ஆசைகள், தேவைகள் இவற்றால் நிறைந்த மனநிலை ஆகும். அசாதாரண நிலை என்பது ஆன்மீகப் பக்குவம் அதிகமாகவும், வழக்கமான ஆசைகள் மற்றும் தேவைகளின் மேலுள்ள பிடிப்பு குறைவாகவும் உள்ள மனநிலையாகும். இவர்களை அன்னையின் அருள் அவர்கள் நிலைக்கேற்ப ஆள்கிறது. சாதாரணமானவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் அன்னை, அசாதாரணமானவர்களின் ஆசையை நிறைவேற்றுவது அவர்கள் ஆன்மீக ஆர்வத்திற்குப் பாதிப்பு என்று அறிவார். இப்படிப்பட்ட ஆன்மீக ஆர்வம் உள்ளவர்கள் தாமே தம் ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தம் கவனத்தைத் தம் ஆன்மாவின் பக்கம் திருப்பினால் அன்னையை நெருங்கலாம்'' என்றெல்லாம் சொற்பொழிவாளர் பேசினார்.

அன்றிரவு தன் மனப்பக்குவத்தை எண்ணிப் பார்த்தாள். தனக்குச் சாதாரண பொருள்களில் ஏற்படும் ஆர்வத்தைவிட, அன்னை குடும்பத்தின் மீது ஏற்படும் ஆர்வம் ஆன்மீக நாட்டத்தையே குறிப்பதாக எண்ணினாள்.

அத்தையின் மறைவுக்குப்பிறகு தனக்கொரு ஆதரவு வேண்டும் என்பதற்காக, திருமணத்தை நினைத்தாளே தவிர, அதில் பெரியதொரு ஈடுபாடு இல்லை என்பதையும் உணர்ந்தாள். அன்னை குடும்பத்து உறுப்பினர்கள் யாவரும் தத்தம் உறவு, பட்டம், பதவி, யாவற்றையும் விட்டுவந்து ஆன்ம நாட்டத்திற்காக வாழ்பவர்கள் என்பதும் நினைவில் எழுந்தது.

ஆனால் தன் சிறு பருவத்தில் உடல்நலம் குன்றியபோது இந்த உறவினர்கள் தன்னை நீராட்டி, தனக்கு சோறூட்டி, உதவிகள் செய்தார்களே, அவர்களைப் புறக்கணித்துவிட்டு முன்பின் அறிந்திராத மூன்றாம் மனிதர்களுடன் சேர்வது சரியாகுமோ என்ற தயக்கமும் எழுந்தது.

அனுபவம்மிக்க ஆண்டாளம்மாவிடம் போய்க் கேட்க முடிவு செய்தாள். அது மதிய உணவு நேரம். எளிய வீட்டுச் சாப்பாடு தயாராகி, மணந்துகொண்டிருந்தது. பழக்கம் காரணமாய் உணவுச் சாலைக்குள்ள நேர்வாயிலைத் தவிர்த்து, வீட்டுக்குச் செல்லும் ஒற்றைக் கதவு வாயில் வழியாக உள்ளே சென்றாள்.

மதிய உணவுப் பொறுப்பை ஏற்றுச் சில ஆண்களும், பெண்களும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். வலப்பக்கத்தில் ஒரு பெரிய அறை. அதில் பெரிய ஜன்னல் ஒன்று. அதன் வழியே பின்புறம் உள்ள பெரிய தோட்டத்திருந்து மரஞ்செடி, கொடிகளைத் தழுவிய காற்று, தடையின்றி அறைக்குள் பிரவேசிக்கிறது. இரண்டு புறமும் சுவர் அலமாரிகளில் நிறைய புத்தகங்கள். எல்லாம் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இவர்களைப் பற்றியதே.

வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் விருப்பம்போல் படிக்கலாம். தமிழிலும், ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலுமாக புத்தகங்கள் இருந்தன. பூரணயோகம் பற்றியும், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அன்பர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களும், அவர்களுடன் வாழும் பேறுபெற்ற அன்பர்களின் அனுபவங்களுமாக ஏகப்பட்ட புத்தகங்கள்.

இங்கு கூடி வாழும் அன்பர்கள் எளிய தன்மையுடையவர்களாய் வெளித் தோற்றம் கொண்டிருப்பினும், உயர்ந்த ஆன்மீகப் பக்குவமும், நிறைந்த மொழியறிவும் உடையவர்கள் என்பது தெரியவந்தது.

ஆண்டாளம்மா ஏதோவொரு புத்தகத்தில் மூழ்கியிருந்ததால் இவளைக் கவனிக்கவில்லை. இடையூறு செய்யக்கூடாது என எண்ணி, அமைதியாக நின்றாள்.

அங்கு வந்த பரிமளமும், சுகுமாரும் இவளைப் பார்த்துவிட்டு, "ஏன் மேடம் நிற்கிறீர்கள்? இப்படி உட்காருங்கள்'' என்று சுருட்டி வைக்கப்பட்டிருந்த அழகிய பாயை விரித்தனர். அவளும் உட்கார்ந்து கொண்டாள்.

பேச்சுக்குரல் கேட்டுத் திரும்பிய ஆண்டாளம்மா, "அட, பவானியா? வாம்மா. நான் புத்தகத்தில் ஆழ்ந்ததில் நீ வந்ததே தெரியவில்லை'' என்றாள்.

"அதனாலென்ன, உங்கள் தவத்தைக் கலைக்க வேண்டாம் என்றுதான் காத்திருந்தேன்'' என்றாள் பவானி.

தனக்குத் தேவையான புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியே போனாள் பரிமளம். புத்தகம் ஒன்றைத் தேர்வு செய்து கொண்டிருந்த சுகுமார், "அப்படியானால், நான்தான் உங்கள் தவத்தைக் கலைத்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள், அம்மா'' என்று விளையாட்டாய்க் கூற, ஆண்டாளம்மா சிரித்தாள்.

"நீ கூறியதும் சரிதான் பவானி. இந்தப் புத்தகங்களைப் படிப்பது தவம் செய்வதைப் போன்றதுதான். நீ எப்படியிருக்கிறாய், பவானி?'' என்று அன்புடன் விசாரித்தார்.

"நன்றாக இருக்கிறேனம்மா. அடிக்கடி என் மனம் உங்கள் அனைவரையும் நினைக்கிறது. அடிக்கடி இங்குவரத் தோன்றுகிறது. மனம் இன்னும் நிலைப்படவில்லை'' என்றாள் பவானி.

"நீ இங்கு வருவதில் தடையேதுமில்லை. வந்து புத்தகங்கள்கூட படித்துவிட்டுப் போகலாம். உன் மனத்திற்கு ஆறுதலாயிருக்கும்'' என்றாள் ஆண்டாளம்மா.

குறிப்பிட்ட அன்பர்கள் வந்து மதியவுணவு சாப்பிட்டுவிட்டு சென்றுவிட்டதால் முன்பக்கக் கடைக் கதவைச் சார்த்தி, தாளிட்டுவிட்டு அனந்தநாயகி வந்தாள்.

"அம்மா, வாங்க சாப்பிடலாம். பவானி நீயும் வா'' என்றாள்.

"எல்லோரும் சாப்பிட வந்துவிட்டீர்களா?'' என்றாள் ஆண்டாளம்மா.

"எல்லோரும் வந்துவிட்டோம்'' என்று பிரேமாவும் கூறினாள்.

"வா, பவானி'' என்று அவளையும் அழைத்துக் கொண்டு, சாப்பாட்டு முன்னறைக்குச் சென்றாள். நீண்ட டைனிங் டேபிளில் இரண்டு புறமும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. நடுவில் உணவு வைக்கப்பட்டிருந்தது. எல்லோருக்கும் தட்டுகள் இடப்பட்டிருந்தன.

முதல் இலைக்குப் பரிமாறுதல் என்று எல்லோருக்கும் காய், கூட்டு போன்றவற்றை எல்லோர் தட்டிலும் இடுவது வழக்கம். பட்டாபி அதைச் செய்தார். சந்தானம் சோறு வைத்தார். பிரேமா குழம்பை ஊற்றினாள். பிறகு அவளும் அமர்ந்து கொள்ள எல்லோரும் அமைதியாக தவம்போல் உணவு உண்டனர்.

ஆசைக்கு என்று உண்ணாமல், தேவைக்கு உண்பது என்ற முறையைக் கடைப்பிடித்ததால், போதும், போதாது என்றில்லாமல், விமரிசனங்கள் ஏதுமின்றி உண்டது வியப்பாக இருந்தது பவானிக்கு.

அடுத்து பாத்திரம் கழுவும் பணிக்கென்று சில பெண்கள் வந்தனர். "இவர்களுக்குச் சம்பளம் என்ன கொடுப்பீர்கள்?'' என்றாள் பவானி.

"இவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்யவில்லை. விருப்பத்தால்   செய்கின்றனர்'' என்றாள் ஆண்டாளம்மா.

பவானிக்கு மேன்மேலும் வியப்பு. படித்தவர்கள், தெரிந்தவர்கள் என்ற முறையில் இவர்கள் ஒரு தவவாழ்வை ஏற்று வாழ்கின்றனர். ஆனால், கூக்கு வேலை செய்பவர்கள்கூட தாமே முன்வந்து வேலை செய்வது வியப்பாயிருந்தது.

மதியம் இரண்டு மணியிலிருந்து மாலை ஐந்தரை மணி வரை சமையல் தவிர விருப்பம்போல் வேறு எதுவும் செய்யலாம். இரவு சமையல் பொறுப்பு இல்லாதவர்கள் தோட்டத்துச் செடிகளுக்கு நீர் வார்த்தல், தியானம் செய்தல் போன்றவை செய்யலாம். யாரும், யாரையும் எதுவும் சொல்லாமல், யாரும் யாரோடும் மோதாமல் தாங்களே முன்வந்து வேலைகளைச் செய்து, எப்போதும் உற்சாகமாய் இருந்தனர்.

தொடரும்....

*****



book | by Dr. Radut