Skip to Content

10. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

மனம், உடல், உயிர், மனத்திலிருந்து விடுபட்டால், பிராணமயப் புருஷன், மனோமயப் புருஷன், சத்தியஜீவன் வெளிப்படுவான் (P.169) "மனமும் சத்தியஜீவியமும்" என்ற அத்தியாயத்தில் வரும் கருத்து இது. சிருஷ்டி, பரிணாமம் எதிரானவை. சிருஷ்டியில் சச்சிதானந்தம் ஜடமாகிறது. அதாவது சத் கீழே வருகிறது. பரிணாமத்தில் ஜடம் சச்சிதானந்தமாகிறது. அதாவது மேலே போகிறது. சிருஷ்டி பரிணாமத்தால் பூர்த்தியாகிறது. The Life Divineஇன் பெரும்பாலான அத்தியாயங்கள் சிருஷ்டியின் ஆதியில் ஆரம்பித்து, ஒவ்வொரு படியாக இறங்கிவந்து ஜடத்திலும், ஜட இருளிலும் சிருஷ்டியைப் பூர்த்தி செய்து, மீண்டும் பரிணாமத்தை அடியில் ஆரம்பித்து, பிரம்மத்தில் பூர்த்தி செய்யும்வரை விளக்குகிறது. சில அத்தியாயங்கள் சத்தியஜீவியத்துடன் முடியும். ஒரு சில அத்தியாயங்களில் முக்கிய அம்சங்கள்வரை குறிப்பிடுகிறார். சுருக்கமாக இந்த அத்தியாயத்தில்,

  1. சிருஷ்டியில் பிரம்மம் சச்சிதானந்தம், சத்தியஜீவியம், மனம், உயிர், உடல், ஜட இருள்வரை இறங்கி வருவதையும்,
  2. பரிணாமத்தால் ஜட இருளினின்று பிரம்மம் உடல், உயிர், மனம், சத்தியஜீவியம், சச்சிதானந்தம் வழி மீண்டும் பிரம்மமாகும் வரை எழுதுகிறார்.

முக்கியமாக சத்தியஜீவியத்தில் ஆரம்பித்து, உடல் வரை இறங்கிவந்து, உடலினின்று மீண்டும் சத்தியஜீவனையடைவதை வலியுறுத்தி விளக்கமாக எழுதுகிறார். இந்த விளக்கத்தைப் பூர்த்தி செய்ய ஒவ்வொரு கட்டத்திலும் மனத்திற்கும், சத்தியஜீவியத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுதுகிறார். உதாரணமாக,

  • மனம் சர்க்கார் ஊழியன் போன்றது.
    அவனுக்குச் சம்பளம், வேலை நிலையாக உண்டு.
    பிரமோஷன் படிப்படியாக, சீனியாரிட்டிபடி வரும்.
    அதற்கும் நடைமுறையில் அளவுண்டு.
    கிளார்க், கெஜட் பதவியை அடையலாம்.
    அதற்குமேல் போக சட்டம் இடம் கொடுத்தாலும், வழக்கில்லை.
    ஒவ்வொருகட்ட பிரமோஷனுக்குரிய பரிட்சை பாஸ் செய்ய வேண்டும்.
    சர்வீஸ் ரிஜிஸ்டர் சுத்தமாக இருக்க வேண்டும்.
    பென்ஷன், பிராவிடண்ட் ஃபண்டு (P.F.), விதவா பென்ஷனுண்டு.
    எல்லாம் நிலையானவை, எதற்கும் அளவுண்டு, நிபந்தனையுண்டு.
  • அரசியல்வாதிக்கு எதுவும் நிலையில்லை.
    பதவிலியிருந்தால் சம்பளம் உண்டு.
    பென்ஷன் கிடையாது.
    பிரமோஷன் உச்சகட்டம் வரையுண்டு.
    எந்தக் கட்டத்திலும் பரிட்சையில்லை.
    சீனியாரிட்டி பார்க்கமாட்டார்கள்.
    எலக்ஷனே எல்லாம்.
    எதுவுமே நிலையில்லை; எல்லாம் உண்டு.

சத்தியஜீவியம் அரசியல் வாழ்வு போன்றது. மனம் சர்க்கார் வேலை போன்றது.
இந்த அத்தியாயத்தின் முக்கிய கருத்துகளை எழுதுகிறேன்.

  1. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிகிறது.
  2. இரண்டின் இடையே மனம் உற்பத்தியாகிறது.
  3. சத்தியஜீவியம் முழுமையின் கருவி, மனம் பகுதியை அறியும் கருவி.
  4. மனம் இரண்டாகப் பிரிந்தவுடன் தன் முழுமையை இழந்துவிடுகிறது.
    ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தையே காணமுடியும்.
    அடுத்த பக்கம் திரும்பிப் பார்த்தால், அடுத்த பகுதி தெரியும்.
  5. மனம் அடுத்த பகுதியைப் பார்க்க மறுத்தால், அஞ்ஞானம் எழுகிறது.
    அஞ்ஞானம் முழுமையைக் காணமுடியாதநிலை.
  6. மனம் தன் செயலில் தன்னை இழக்கிறது. இது அஞ்ஞானத்தை வலுப்படுத்தும்.
  7. மனம் தன்னோடு ஐக்கியமாகிறது.
  8. உயிருடன் மனம் ஐக்கியமாகிறது.
  9. உடலுடன் மனம் ஐக்கியமாகிறது.
    கீழே போகப் போக அஞ்ஞானம் வலுப்படுகிறது.

அஞ்ஞானத்தினின்று விடுபடும் வழிகள்:

  1. உடலோடுள்ள ஐக்கியத்தினின்று விடுபடுதல்.
    இதனால் உயிரிலுள்ள புருஷன் - பிராணமயப் புருஷன் - விடுபடுகிறான்.
  2. உயிருடன் உள்ள ஐக்கியத்தினின்று விடுபடுதல்.
    இதனால் மனத்திலுள்ள புருஷன் - மனோமயப் புருஷன் விடுபடுகிறான்.
  3. மனத்திலிருந்து விடுபடுதல்.
    இதனால் சத்தியஜீவன் விடுபடுகிறான்.

இவ்வழி பரிணாமம் பூர்த்தியாகிறது.

மனத்திற்கும், சத்தியஜீவியத்திற்கும் உள்ள வேறுபாடு:

 
மனம்
சத்தியஜீவியம்
1.
பகுதியானது.
முழுமையானது.
2.
அஞ்ஞானத்தின் கருவி.
ஞானத்தின் கருவி.
3.
ஞானமும், உறுதியும் பிரிந்துள்ளன.
ஞானமும், உறுதியும் இணைந்து உள்ளன.
4.
முக்கிய திறமை  - organising - முறைப்படுத்துவது.
சுமுகமாக அனைத்தையும் இணைப்பது.
5.
காலத்தில் செயல்படுவது.
மூன்றாம்நிலைக் காலத்திலுள்ளது.
6.
முழுமையை அறியும் திறனற்றது.
முழுமையையும், பகுதியையும் அறியும் திறனுள்ளது.
7.
கீழ் நோக்கிச் செல்வது.
மேல் நோக்கிச் செல்வது.
8.
செயல் உரிய நேரத்தில் பூர்த்தியாகும். அவசரப்பட முடியாது.
உடனே பூர்த்தியாகும்.
9.
கர்மத்திற்குக் கட்டுப்பட்டது.
கர்மத்திற்குக் கட்டுப்படாதது.
10.
பிரம்மத்தையறியாது.
பிரம்மத்தைவிட்டு அகலாது.
11.
மாயையை உற்பத்தி செய்வது.
மாயையை மாயை என மாற்றுவது.
12.
ரிஷிகள் மனம் சிருஷ்டித்தது என நினைக்கின்றனர்.
உலகை சத்தியஜீவியம் சிருஷ்டித்தது என பகவான் கூறுகிறார்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் தன்னை கடந்து செல்ல, சத்தியம், நன்மை, அழகு, அனந்தம் ஆகியவற்றை நாடி அங்கு நிலைக்க வேண்டும்.
 
மனத்தைக் கடந்த சத்தியம்.



book | by Dr. Radut