Skip to Content

09. வாழ்க்கையை மேம்படுத்த Life Divine கருத்துகள் பயன்படுமிடங்கள்

வாழ்க்கையை மேம்படுத்த Life Divine கருத்துகள் பயன்படுமிடங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

ஆனால் கர்மயோகி அவர்கள் அவசியமான செலவுகளை நாம் விரும்பி ஏற்று அதன்பொருட்டு தாராளமாக செலவு செய்தால், நம் கையில் பணம் தீரும் பொழுது புது வருமானம் உடனே வரும் என்கிறார். கிணற்றிலுள்ள நீரை நாம் வெளியேற்றும் பொழுது அங்கு உண்டாகும் வெற்றிடத்தை நிரப்ப கிணற்றின் சுவர்களிலிருந்து ஊற்று எழுவதை நாம் பார்க்கிறோம். இருக்கின்ற நீரை நாம் வெளியேற்றாமல் புது ஊற்று எழப்போவதில்லை. அம்மாதிரியே கையிலிருக்கின்ற பணத்தை நாம் செலவு செய்யாதவரையிலும் புது வருமானம் நம்மை நாடி வரப்போவதில்லை.

அறிவும், பணமும் எப்படி செலவு செய்யும்பொழுது அதிகரிக்கின்றதோ அம்மாதிரியே தான் நம்முடல் தெம்பும் செலவு செய்யும் பொழுது அதிகரிக்கின்றது. வேலை செய்யாமல், சரியான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பவர்களைக் கவனித்தால் அவர்களுடைய உடல் தசைகள் வலுவிழந்து காட்சியளிக்கும். வேலை செய்யாமல் சும்மாவிருப்பதால் அவர்களுடைய உடம்பில் எனர்ஜி ஏராளமாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. திடீரென்று அவர்களைக் கடுமையாக இரண்டு நாளைக்கு வேலை செய்யச் சொன்னால் அவர்களால் அதைச் செய்யவே முடியாது, துவண்டுபோய்விடுவார்கள். எனர்ஜியே இல்லை என்பார்கள். ரெகுலராக கடினமாக உழைப்பவர்களால்தான் எமர்ஜென்சி நேரங்களிலும் வேகமாகச் செயல்பட முடியும். சாப்பாடு, தூக்கமில்லாமல் வேலை முடியும்வரை அயராமல் உழைக்க முடியும்.

Finiteஆக இருப்பது தன்னால் முடிந்த அதிகபட்ச முயற்சியை எடுத்து, ஓய்ந்துபோகும்பொழுது, அந்தக் கடைசிக் கட்டத்தில் அந்த finiteற்குள் மறைந்திருக்கும் infinite விழித்துக்கொண்டு, மேற்கொண்டு தேவைப்படும் ஏராளமான எனர்ஜியை வழங்குவதை நாம் வாழ்க்கையில் பார்க்கலாம். அன்னைச் சேவை சம்பந்தமான பணிகளில் ஈடுபடுபவர்கள் இதைக் கண்கூடாகப் பார்த்துள்ளனர். சேவை சம்பந்தமான செலவுகள் ஏராளமாக இருக்கும் பொழுது, தம் கையிலிருக்கும் கடைசி ரூபாய்வரை அவர்கள் செலவு செய்து, அவர்கள் பணவிருப்புக் காயாகும் பொழுது, பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான நிதி வரவு அவர்களைத் தேடி வருவது அன்பர்கள் பலருடைய அனுபவமாகும். Finiteஇன் அதிகபட்ச முயற்சி அதற்குள் மறைந்திருக்கும் infiniteஐ வெளிவரத் தூண்டுகிறது என்பதோர் உண்மையென்றால், இதைவிட இன்னொரு பெரிய உண்மையும் உள்ளது. Finite, infiniteஆக மாறுவதற்குச் சிறந்த வழி finite, infinite இடம் சரணமடைவதுதான்.

Surrender என்பது finiteஐ infinite ஆக்கும் என்பது நம்மறிவிற்கு ஏற்புடையதாக இல்லை. சரணாகதியை நம்மறிவு தோல்வி என்று எடுத்துக்கொள்கிறது. தோல்வி எப்படி சிறியதைப் பெரியதாக்கும் என்று நம்மறிவு கேள்வியை எழுப்புகிறது. உண்மையில் தோல்விக்கும், சரணாகதிக்கும் சம்பந்தமே இல்லை. இரண்டு எதிரிகள் சண்டை போடும் பொழுது ஒருவரால் அடுத்தவரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாது என்று தெரியும் பொழுது பலஹீனமானவன் பலசாயிடம் சரணமடைகிறான். பலசாலி அக்கட்டத்தில் பலஹீனமானவனைத் தனக்கு அடிமையாக்கிக் கொள்கிறான். இது வாழ்க்கையில் எதிரிகளுக்கிடையே சாதாரணமாக நடக்கும் பலப்பரிட்சையின் விளைவாக நிகழும் சரணாகதி.

ஆனால் ஆன்மீகத்தில் எதிரிகளோ, போட்டியோ தேவையில்லை. நம்முடைய உடம்பு, உணர்வு, அறிவு, அகம்பாவம் என்றிந்த நான்கைவிட நம்மான்மா பெரியது. தம்மைவிடப் பெரிதான ஆன்மாவிற்கு இவையெல்லாம் சரணமடைந்தால், ஆன்மாவின் பலம் இவற்றிற்கும் கிடைத்து, முன்பைவிட இவையெல்லாம் பல மடங்கு வலுவடையும். ஆன்மாவின் எனர்ஜி நம்முடம்பிற்குக் கிடைத்தால் ஏராளமான எனர்ஜி கிடைக்கும். உணர்வில் ஆன்மீக சக்தி வெளிப்பட்டால் இறையன்பை நம்மால் வெளிப்படுத்த முடியும். அறிவு ஆன்மீகமயமானால் படைப்பின் ரகசியங்கள் புரியுமளவிற்கு நம்மறிவு விரிவடையும். அகம்பாவம் ஆன்மாவிற்கு அடிபணிந்தால், sense of Separation அகன்றுபோய் படைப்பினுடைய முழுமை தெரியவரும். ஆகவே சிறியது பெரியதாவதற்குச் சிறந்த வழி சரணாகதிதான் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். அடுத்ததாக பிரம்மத்தின் பூரணத்தை நாம் பேசும் சாதாரண மொழியால் கூறமுடியாது. வேதத்தின் கனத்த பாஷையால் கூறலாம்என்ற கருத்திற்கு வருவோம்.

கண்டார் விண்டாரில்லை, விண்டார் கண்டாரில்லை என்ற ஒரு நம்பிக்கை நம் ஆன்மீக பாரம்பர்யத்தில் நிலவிவருகிறது. வேத காலத்து ரிஷிகள் கண்டது அக்ஷர பிரம்மமாகும். இது பிரம்மத்தின் ஒரு பகுதிதான். அக்ஷர பிரம்மம்என்றால் மாற்றமில்லாத பிரம்மம் என்றர்த்தமாகும். க்ஷர பிரம்மம் மாற்றமுடையதாகும். நாம் கண்ட அக்ஷர பிரம்மத்தை நம்மால் விவரிக்க இயலாதுஎன்று வேதரிஷிகள் கூறினார்கள். பிரம்மத்தின் பகுதியையே விவரிக்க இயலாது எனும் பொழுது, அக்ஷர பிரம்மம் மற்றும் க்ஷர பிரம்மம் என்றிரண்டையும் உள்ளடக்கிய பூரண பிரம்மத்தை எப்படி விவரிக்க இயலும் என்று கேள்வி இயற்கையாக எழுகிறது. ஆனால் தான் கண்ட பூரண பிரம்மத்தை வேதத்தின் கனத்த மொழியால் விவரிக்க இயலும் என்று பகவான் குறிப்பிட்டுள்ளார்.

Life Divine புத்தகத்தின் ஆங்கில மொழியில் பூரண பிரம்மத்தை விளக்க பகவான் முயன்றுள்ளார்என்பதை வைத்துப் பார்க்கும்பொழுது ஆங்கில மொழிக்கு வேதத்தின் கனத்தை பகவான் வழங்கியுள்ளார், அம்மொழியை அந்தளவிற்கு பக்குவப்படுத்தியுள்ளார் என்று நாம் புரிந்துகொள்ளலாம். அப்படியொரு பக்குவத்தை ஆங்கில மொழிக்கு தாராமல் Life Divine கருத்துகளையும், சாவித்ரி கருத்துகளையும் ஆங்கிலத்தின் மூலம் வழங்க அவர் முயன்றிருக்கமாட்டார்.

பிரம்மத்தையோ, சத்தியஜீவியத்தையோ புரிந்துகொள்ள கர்மயோகி அவர்கள் ஒரு புதிய அணுகுமுறையைச் சொல்கிறார். ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டு பின்னர் அதை அனுபவிப்பது ஒரு வழி. முதலில் அதை அனுபவித்துவிட்டு, அவ்வனுபவத்தை வைத்துக் கொண்டு அதைப் புரிந்துகொள்வது இரண்டாம் வழி. சத்தியஜீவியத்தால் நமக்குக் கிடைக்கக்கூடிய பலனென்னஎன்று நாம் பார்த்துவிட்டால், அப்பலனை வைத்துக்கொண்டு அது எவ்வளவு மகத்தான சக்தி, எப்படியெல்லாம் செயல்படக்கூடியதென்று நமக்குப் பின்னர் புரியவரும். மின்சாரத்தைப் பற்றிய theory விவரங்களை நாம் physics புத்தகங்களில் படிக்கும்பொழுது மின்சாரத்தைப் பற்றி நமக்கு அவ்வளவு விவரமாகப் புரிவதில்லை. ஆனால் மின்சாரத்தால் நமக்குக் கிடைக்கக்கூடிய வெளிச்சம், air-conditioning, T.V.காட்சிகள், ரேடியோ ஒலிபரப்பு, கம்ப்யூட்டர் இயக்கம் என்றிவை எல்லாவற்றையும் பலனாக அனுபவிக்கும்பொழுது, மின்சாரம் எவ்வளவு மகத்தான சக்தி என்று நமக்கு உடனடியாகப் புரிகிறது.

சத்தியஜீவியத்தால் கிடைக்கக்கூடிய பலன்களைப் பெறுவதற்கு அடக்கமான, மென்மையான மொழியில் நமக்குப் பேசத் தெரிய வேண்டும் என்று கர்மயோகி அவர்கள் கூறுகிறார். எனக்குத் தெரிந்த விவசாய விஞ்ஞானி ஒருவர் அப்படி அடக்கமாக, மென்மையாக பேசத் தெரிந்தவர். அவரை நோக்கிப் பெரியபெரிய பதவிகளும், பாராட்டுகளும் குவிந்தவண்ணமுள்ளன. அவருக்கு நிகரான கல்வித் தகுதியும் அனுபவமும் கொண்ட விவசாயத்துறை விஞ்ஞானிகள் இந்தியாவில் இன்னும் 250 பேராவது இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பேரும், புகழும் இவருக்கு மட்டும் கிடைப்பதற்குக் காரணமே இவரிடம் காணப்படும் அந்த மென்மையான, அடக்கமான பேச்சுதான். வருங்காலத்தில் Nobel Prizeகூட அவருக்குக் கிடைக்கும் என்றவொரு பேச்சு விஞ்ஞானிகளின் வட்டாரத்தில் அடிபடுகிறது.

பகவானைப் பற்றி அவருக்கு லேசாகத்தான் தெரியுமே தவிர, பகவானுடைய பூரணயோகக் கொள்கைகளைப் பற்றியோ, சத்திய ஜீவியத்தைப் பற்றியோ அவருக்கு எதுவுமே தெரியாது. அவருக்கு ஒன்றும் தெரியாத நிலையிலும் சத்தியஜீவியத்திற்கு ஏற்ற பக்குவமான பேச்சு அவரிடமிருப்பதால் சத்தியஜீவியம் அவர் வாழ்க்கையில் செயல்பட்டுகொண்டிருக்கிறது. அதனால் அவருடைய வாழ்க்கையில் வியக்கத்தக்க முன்னேற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

அவர் வளர்த்துக்கொண்டுள்ள அடக்கமான பேச்சை நாமும் வளர்த்துக்கொண்டால், நம் வாழ்க்கையிலும் சத்தியஜீவியம் செயல்பட ஆரம்பித்து, அதன் பலனாக, கற்பனைக்கெட்டாத பலன்கள் வரும் என்று கர்மயோகி அவர்கள் சொல்கிறார். பலன்களை நேரடியாக அனுபவிக்கும்பொழுது அதன் சிறப்பு நமக்கு நிதர்சனமாக விளங்கும். பின்னர் Life Divine புத்தகத்தை எடுத்துப் படித்தால், சத்தியஜீவியம் என்றால் என்ன? பூரணபிரம்மம் என்றால் என்ன? என்பது தானே விளங்கும்.

நான்காவது கருத்தான சிவனுக்கும், காளிக்கும் உள்ள தொடர்பென்னஎன்பதை நாமிப்பொழுது பார்ப்போம். பூரணபிரம்மம் என்பது Static பிரம்மம், Dynamic பிரம்மம் ஆகியவிரண்டையும் உட்கொண்டதாகும். சச்சிதானந்தத்தில் இயக்கமில்லை, எனவே அது Static பிரம்மமாகிறது. பிரகிருதி என்று நாம் வழங்கும் இயற்கையில் இயக்கம் இருக்கிறது. ஆகையால் அது dynamic பிரம்மமாகிறது. சிவன் Static பிரம்மத்தின் சின்னமாகவும், காளி dynamic பிரம்மத்தின் சின்னமாகவும் செயல்படுகின்றனர். அசைவில்லாத பிரம்மம் அசைவையும், இயக்கத்தையும் நாடியதால்தான் படைப்பையே நிகழ்த்தியுள்ளது என்பதை கருதும்பொழுது, அவ்வியக்கத்தின் சின்னமான காளியுடைய தொடர்பில்லாமல், அமைதியின் சின்னமான சிவன் முழுமை பெறமாட்டாரென்றாகிறது. அன்னையே ஓரிடத்தில் "அவரில்லாமல் நானில்லை. நானில்லாமல் அவர் வெளிப்படமாட்டார்'' என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இயற்கை என்பது வெறும் இயக்கம். அதற்கு உயிர் தருவது இயற்கையோடு இணைந்து அதற்கு உயிர்தரும் புருஷன்தான். இந்த புருஷா-பிரகிருதி மற்றும் சிவன்-காளி என்ற கருத்துகளை நாம் வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்கலாம். ஒரு தொழிலை நாம் வெறுந் தொழிலாகச் செய்தால், அது வெறும் இயக்கமாகவே இருக்கும். தொழிலுக்குள் பண்புகளைப் புகுத்தி, அப்பண்புகளின் அடிப்படையில் அத்தொழிலைச் செய்தால், அத்தொழில் ஜீவன் பெற்று வளரும், உச்ச நிலைக்கும் போகும். வெறுந்தொழில் என்பது காளியின் வெறும் இயக்கத்தைக் குறிக்கிறது. பண்பின் அடிப்படையில் தொழில் நடத்துவது காளியின் இயக்கத்துடன் சிவனின் ஜீவன் ஒன்று சேர்வதைக் குறிக்கிறது.

இன்று வளர்ந்து வரும் கம்பெனிகள் எல்லாவற்றையும் பார்த்தால் அவ்வளர்ச்சிக்குப் பின்னால் தொழிலும், பண்பும் இணைந்து இருப்பது தெரியவரும். Infosys வேகமாக வளர்கிறது என்றால், அங்கே Perfection என்ற பண்புள்ளது. அண்மையில் Arthur Anderson என்ற பெரிய அமெரிக்க accounting companyயின் பெயரும் புகழும் கெட்டுப்போய் அக்கம்பெனி சுருங்கிவிட்டதாக newspaperகளில் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். Accounts என்றால் நேர்மை அவசியம். மகாராஷ்டிராவில் இயங்கி வந்த Enron என்ற அமெரிக்க power கம்பெனியின் financial முறைகேடுகளுக்கு Arthur Anderson துணைபோனதால் இரண்டு கம்பெனிகளுமே படுத்துவிட்டன என்று பேப்பரில் படித்தோம்.

நேர்மை, நாணயம் என்ற பண்புகள் விலகும்பொழுது தொழிலின் ஜீவன் தொழிலைவிட்டு விலகுகிறது. அதனால் தொழில் சுருங்குகிறது என்றறிகிறோம். பண்போடு இணைந்த தொழிலுக்குத்தான் இனி எதிர்காலமுள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.

அடுத்ததாக பகவான் சொல்லும் பிரபஞ்ச மாயைக்கும், சங்கரர் சொல்லும் உலக மாயைக்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்போம். சங்கரர், "பிரம்மம்தான் நிஜம், உலகம் என்பதே பொய், வெறுங்கனவு அல்லது பிரமை'' என்கிறார். ஆனால் பகவானோ, மாயை என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் பிரமை என்பதே இல்லை. மாயை என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் படைக்கும் திறன் என்கிறார். காலப்போக்கில் இந்த அர்த்தம் மறைந்து போய் போலி, பிரமை என்ற வேறோர் அர்த்தம் தலைதூக்கி இருக்கிறது.

சங்கரர் பொய் என்று சொல்ய படைப்பை, பகவான் ஏன் உண்மை என்று சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். படைப்பு என்றவொன்றை இறைவன் விரும்பியிருக்காவிட்டால், இப்படைப்பு என்பதே நிகழ்ந்திருக்காது. இது நிகழ்ந்துள்ளது என்றால், இறைவன் இதை விரும்பித்தான் செய்திருக்கிறார் என்றாகிறது.

படைப்பை நிகழ்த்தியவர் தானே நேரடியாக அதைச் செய்யாமல், யோகமாயா என்ற சக்தியை உண்டுபண்ணி, அச்சக்தி இப்படைப்பை நிகழ்த்தும்படிச் செய்துள்ளார். வீடுகட்ட ஒருவர் முன்வரும்பொழுது எப்படி civil contractor என்றொருவரை முன்வைத்து அவர் மூலமாக அந்த வீட்டைக் கட்டுகிறாரோ அம்மாதிரியே இறைவனும் யோகமாயா என்ற சக்தியை முன்வைத்து படைப்பை நிகழ்த்தியுள்ளதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

படைப்பு இறைவனிடமிருந்து இரண்டு விஷயங்களில் வேறுபடுகிறது. இறைவன் Infiniteடானவன். ஆனால் படைப்போ finiteடானது. இறைவன் ஒன்றாவன், படைப்போ எண்ணற்ற பொருட்களாய் பிரிந்து நிற்கின்றது. இப்படி limitationஐயும், பிரிவினையையும் கொண்டுவந்து படைப்பை இறைவனிடமிருந்து பிரித்துக் காட்ட யோகமாயா என்றொரு தனி சக்தி கருவியாகச் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆற்றில் ஏராளமான தண்ணீர் ஓடுகின்றது என்றாலும், நேரடியாக பயிர் செய்யும் விவசாயியால் முழுஆற்றுத் தண்ணீரையும் பயன்படுத்த முடியாது. ஆற்றிலுள்ள எல்லா நீரும் விளைநிலத்திற்குள் வந்தால் பயிரே மூழ்கி வீணாகிவிடும். ஆற்றிருந்து கால்வாய் வெட்டி, பயிருக்கு வேண்டிய அளவிற்குத் தண்ணீரை நிலத்திற்குள் கொண்டு வந்தால்தான் பயிருக்கே அத்தண்ணீர் உதவும். சூரிய வெளிச்சம் ஏராளமாக உள்ளது என்றாலும், நம் வீட்டிற்குள் அவ்வெளிச்சம் முழுமையாக வந்தால், அது நமக்குத் தாங்காது. ஜன்னல் என்ற opening மூலம் நமக்குப் போதுமான அளவிற்கு வெளிச்சம் உள்ளே வந்தால்தான் நமக்கு அவ்வெளிச்சம் பயன்படும்.

கால்வாயும், ஜன்னலும் எப்படி அளவு கடந்த தண்ணீரையும், வெளிச்சத்தையும் அளவிற்குட்படுத்துகின்றனவோ, அம்மாதிரியே யோகமாயா என்றவொரு சக்தி இறைவனின் அளவுகடந்த சக்தியை அளவிற்குட்படுத்தி படைப்பாக மாற்றியுள்ளது.

படைப்பு அளவிற்குட்பட்டுவிட்டது என்ற ஒரே காரணத்தினால் அது பொய்யாகிவிடாது. Infiniteஆன இறைவன் தான் தன்னை finiteஆன படைப்பாக மாற்றிக்கொண்டுள்ளான் என்பதைக் கருதும்போது, படைப்பும் நிஜம் என்று ஏற்க வேண்டும்.

பணத்தை நாம் வீடாகவும், நிலமாகவும், நகையாகவும், பொருட்களாகவும் மாற்றிக்கொள்கிறோம். பணம் வீடாக மாறிய பிறகு அவ்வீட்டிற்கு மதிப்பில்லை என்று சொல்லி விட முடியுமா? தேவைப்பட்டால் வீட்டைவிற்று மீண்டும் பணமாக மாற்றிக் கொள்ளலாம்.

அம்மாதிரியே finiteஆன படைப்பிற்குள் தன்னுடைய Infinite அம்சத்தை இறைவன் ஒளித்து வைத்துள்ளான் என்றாலும், ஒரு கட்டத்தில் மறைந்துள்ள அந்த Infiniteஐ வெளிப்படுத்தி, படைப்பையும் Infinite ஆக்குவான் என்பது உறுதி. சத்தியஜீவியம் படைப்பில் வெளிப்படும் பொழுது படைப்பும் Infinite ஆகும். சச்சிதானந்தத்தில் உள்ள அதே தெய்வீகம் படைப்பிலும் வெளிப்படும். அப்பொழுது படைப்பு மாயை என்று சங்கரர் சொல்லியது எவ்வளவு பெரிய தவறு என்பது நமக்குத் தெளிவாக விளங்கும்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பகுத்தறிவை நம்பி விஞ்ஞானிகள் மூட நம்பிக்கைகளிலிருந்து வெளியேறினர். சமூகத்தின் ஆதரவு என்பதிலிருந்து விஞ்ஞானி இப்பொழுது வெளிவர வேண்டும்.
 
விஞ்ஞானம் மூட நம்பிக்கையை உற்பத்தி செய்கிறது.book | by Dr. Radut