Skip to Content

08. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம் 

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. வாழ்வெனும் கடலில் தன்னை ஒரு தூசியாக அறிவது உடலின் அடக்கமாகும்.
    கடல் போன்ற வாழ்வில் தூசியான உடல்.
    • ஆன்மீகச் சட்டப்படி உலகில் ஒரே உடல், ஒரே உயிர், ஒரே மனம், ஒரே ஆத்மா உள்ளது.
    • நமது உடல் அதன் ஒரு பகுதி. நாம் அதை முழுமையாக அறிகிறோம்.
    • "இது என் வயல். இந்த 20 காணியும் எனக்குச் சொந்தம்'' என ஒருவன் கூறும் பொழுது, "பூமி பெரியது, பிரம்மாண்டமானது. அதில் 20 காணி ஒரு துரும்பு. அதற்கு எல்லையிட்டு, அது தனக்குரிமை என்பவன் யுகாந்த காலமான அப்பூமியின் மீது 50 ஆண்டு வாழும் மனிதன்' என அவன் அறிவதில்லை.
    • Pure Existent சத் புருஷன் என்பது The Life Divineஇல் 9ஆம் அத்தியாயம். அதன் ஆரம்பத்தில் ஹிருதய சமுத்திரத்தைப் பற்றி எழுதுகிறார். நாம் அகந்தையுள் வாழ்கிறோம். அதன் பார்வை குறுகியது, கறுப்பானது. அகந்தையை அகற்றிய கவிகள், கலைஞர்கள் இயற்கையை அகங்காரமற்ற பார்வையால் காணலாம். அப்பார்வைக்கு உலகம் சக்தி சமுத்திரமாகத் தெரியும். இதை வேத ரிஷிகள் அறிவார்கள். நாம் அந்த சமுத்திரத்தின் பகுதி. அந்த சமுத்திரம் நம் வாழ்வை எளிதாக நடத்தும். நாம் அதனினின்று விலகி நிற்கிறோம். அதை எப்படிப் பயன்படுத்தலாம் என நினைக்கிறோம். அது ஆணவம். ஆணவமழிந்து, நாம் சமுத்திரத்தின் பகுதியென அறிந்தால், சமுத்திரம் அதன் முழு சக்தியையும் நம் வாழ்வில் வெளிப்படுத்தும். நாம் அதை அனுமதிப்பது இல்லையென பகவான் கூறுகிறார்.
    • அடக்கம் என்பதைக் கீழ்ப்படிதல், பணிவு எனக் கொள்கிறோம். இந்த சமுத்திரத்தைக் கண்டு, அதனுள் நம் வாழ்வும், உடலும் தூசியென உணர்வது உண்மையான அடக்கம் என்கிறார்.

      தமிழ்நாட்டில் மந்திரிகளைக் கண்டால் கூட்டம் சூழ்ந்து கொள்ளும். பெருங்கூட்டம் கூடிவிடும். அதுவும் 1950, 1960இல் அதுவே வழக்கம். சினிமா நடிகரை வரவேற்பதுபோல கூட்டம் செயல்படும். கேரளாவில் அரசியல் தலைவர்களை அப்படி நடத்துவது இல்லை. அங்கு படிப்பு அதிகம். 1950இல் சென்னை வைஸ்சான்ஸ்லர் லட்சுமண சுவாமி முதயார் இலண்டனில் ஒரு கூட்டத்தில் கதவருகே நின்றிருந்தார். அவரை முதுகில் தொட்டு, "நீங்கள் சென்னை வைஸ்சான்ஸ்லரல்லவா?'' என ஒருவர் கேட்டார். திரும்பிப் பார்த்தார். அது இங்கிலாந்து பிரதமர் ஆட். இலண்டனில் பிரதமரைக் கண்டும் கூட்டம் கூடுவதில்லை. அது படித்த நாடு. சென்னை முதல்வர் இலண்டன் போய் வந்தார். அங்கெல்லாம் நம்மை எவரும் கண்டு கொள்வதில்லையென்றார். உலகம் பெரியதுஎன்பதை வெளியில் போய்ப் பார்த்தவர் அறிவர்.

      • நான் பெரியவன்என்று நினைப்பவர், தம்மைச் சிறிய மனிதனாக நடத்துவது அடக்கம்என அறியப்படுகிறது. சிறிய கிராமம், சிறு சந்தர்ப்பங்களை மட்டும் அறிந்தவர், அங்குள்ள கடுகுபோன்ற விஷயங்களை மலைபோலக் கருதுவர். 15 ரூபாய் மாதச் சம்பளம் 1940இல் பெறுபவர் கரும்பு தோட்டத்தில் ஆலையில் மேஸ்திரியாக இருந்தார். தாம் எழுதிய கணக்கை மானேஜர் சந்தேகப்படவில்லைஎன்றதால், அந்த 100 ஏக்கர் தோட்டச் செலவில் கணிசமாகத் திருடினார். சர்வீஸில் 40,000 சேர்ந்தது. மைத்துனனிடம் கொடுத்து, சொத்து வாங்கச் சொன்னார். அவர் மகன், "என் தகப்பனார் சிறு வயது முதல் நாங்கள் பணக்காரர்கள்என்ற நினைவில் வளர்த்தார்'' என்று தன் 40ஆம் வயதில் கூறினார். 3 உடன் பிறந்தவர், 7½ ஏக்கர் நிலம். ஆளுக்கு 2½ ஏக்கர். அந்த வீட்டார் பேசியதைக் கேட்டு மற்றவர்கள் வெளியூரில் பிரமித்துவிட்டார்கள். "எங்கள் நிலம் ஊரிலேயே பெரியது. அறுவடை ஆரம்பித்தால், ஒரு மாதம் நடக்கும். நாங்கள் ஊரிலேயே பெரிய பணக்காரர்கள்'' என்று ஆழமாக நம்பி, அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார்கள். குன்னியூர் சாம்பசிவ அய்யர் 5000 ஏக்கரும், பெரிய பண்ணை வடபாதி மங்கலம் 20,000 ஏக்கரும் நிலம் பெற்றிருந்த நாட்கள் அவை.
      • எதுவுமறியாமல் தன் உயர்வைக் கருதுவது அறிவீனம்.
      • ஆன்மீக ஞானம் அகிலத்தையும் காட்டுவதால் எழும் உணர்வு, அடக்கம்.
  2. கொலை, தீவிர எதிர்ப்பு, பரம வைரியாவது, ஆழ்ந்த வெறுப்பு, மானம் போகும் சொரணை, ஆழ்ந்த சோகம், மரியாதை போவது, மனம் புண்படுதல், பிடிக்காதது, ஏற்காதது, உறுத்தாத நினைவு இருப்பது, ஜீவனற்ற செயல் மறைய மறுப்பது ஆகியவை அகந்தை அழியும் நிலைகள்.
    அகந்தை அழியும் நிலைகளின் சரித்திரச் சுருக்கம்.

    மனிதன் என்பது அகந்தை. அதன் சட்டம் தான்மட்டும் வாழ வேண்டும். இல்லையேல் அனைவரும் தனக்கு அடங்கியிருக்க வேண்டும். எவராவது எதிர்த்தால், அவரைக் கொலை செய்ய வேண்டும். முடியாவிட்டால் அவருக்கு தீவிர எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். செயல் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாவிட்டால், மனம் அவரைப் பரம வைரியாகக் கருத வேண்டும். மனம் அவர் மீது ஆழ்ந்த வெறுப்பை எழுப்பவேண்டும். அல்லது அவர் மானம் போகும்படியான காரியங்களைச் செய்யவேண்டும். அல்லது ஆழ்ந்த சோகத்தில் உறையவேண்டும். அவர் மரியாதை போகும் காரியங்களைச் செய்யவேண்டும். அல்லது அவர் மனம் புண்பட நடக்க வேண்டும். அவர் மனம் புண்படாவிட்டால் நம் மனம் புண்படும். பிடிக்காதுஎன்று முடிவு செய்யவேண்டும். ஏற்க மறுக்கவேண்டும். மனம் உறுத்தும். மறக்க முயன்றால், உறுத்தல் போகும். உறுத்தாத நினைவு இருக்கும். அதுவும் போனால், நம் செயல் ஜீவனற்றுப் போகும், அது மறைய மறுக்கும்.

    • ஒருவன் கிராமத்தில் பெருந்தொகை சம்பாதித்தால், எக்காரணமும் இன்றி மற்றவர் கூடி அவனை அடித்துக் கொன்றுவிடுவார்கள்.
    • கொலை செய்ய முடியவில்லையெனில், அனைவரும் ஏக மனதாகத் தீவிர எதிர்ப்புத் தெரிவிப்பார்கள்.
    • "அவன் என் பரம வைரி'' என்று ஒருவர் சொன்னால், "அவன் ஜெயிக்கிறான், அவனைப்போல என்னால் ஜெயிக்க முடியவில்லை, அவன் மீது எனக்குப் பொறாமை, என்னைப் போலிருந்தவன் இப்பொழுது உயர்ந்துவிட்டான், தாங்க முடியவில்லை, அவனைக் கொலை செய்யலாம் போலிருக்கிறது, என்னையே மாய்த்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது” என்பவையெல்லாம்,
      பொறாமையின் சின்னங்கள்.
      அகந்தை வலுவில்லாமல் துடிக்கும் நிலைகள்.
      அதன் நிலைகள் ஆயிரம்.
      கட்டுரையாகவோ, கதையாகவோ எழுதலாம்.
    • அகந்தை அடிபட்டு துவண்ட நிலையில், வெற்றி பெறுபவன் பரமவைரி. அவனை நினைத்தால் ஆழ்ந்த வெறுப்பு எழும்.
    • ஓரூரில் புதியதாகப் பணம் பெறுபவர் ஊராரிடமிருந்து தவறாது பெறும் வெகுமதிகள் இவை. வெறுப்புக்கு ஆளானவர் கூடிப் பேசுவதைக் கேட்டால், ஒவ்வொருவர் கூறுவதையும் நாம் மாற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரியும்.

     
    பொறாமைக்காரர் பேசுவது
    நாம் மாற்றிப் புரிந்துகொள்ள வேண்டியது
    1.
    பொல்லாத மனிதன் அவன்.
    அவன்வெற்றி என் மனதைப் புண்படுத்துகிறது.
    2.
    பெரிய மோசடிக்காரன்.
    மோசடி செய்து சம்பாதிக்கும் அளவு சம்பாதிக்கிறான்.
    3.
    ஆபாசமான மனிதன்.
    என் மனத்துள் உள்ள ஆபாசத்தை எழுப்புகிறான்.
    4.
    இவனை ஊரை விட்டு விரட்டவேண்டும்.
    இவன் வெற்றியை என்னால் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. ஊரை விட்டு
    ஓடிவிடலாம் போலிருக்கிறது.
    5.
    இவனை அவமானப் படுத்தவேண்டும்.
    இவன் வெற்றி என்னை அவமானப்படுத்திற்று.
    6.
    இவனை சும்மா விடக்கூடாது.
    என் மனத்தை இவன் சும்மாயிருக்க விடமாட்டேன் என்கிறான்.
    7.
    இவன் மரியாதையை எடுக்க வேண்டும்.
    என் மரியாதை இவன் வெற்றியால்
    போயிற்று.
    8.
    அனைவரும் இவனை ஏமாற்ற வேண்டும்.
    பேசுபவருடைய ஆழ்ந்த சுபாவம்
    வெளிவருகிறது.
    9.
    என் மனம் இவனால் புண்பட்டுவிட்டது.
    அவன் மனத்தைப் புண்படுத்த
    வேண்டும்என இவர் விரும்புகிறார்.
    10.
    எனக்கு இவனைப் பிடிக்கவேயில்லை.
    இவன் வெற்றி எனக்குப் பிடிக்கவில்லை.
    11.
    என்னால் இவனை ஏற்க முடியாது.
    பிறர் வெற்றியை என் மனம் ஏற்காது.
    12.
    மனம் உறுத்துகிறது.
    எவரும் நன்றாக இருக்கக்கூடாது.

    அன்பர் ஒருவர் உள்ளபடி அகந்தையை அழிக்க தீவிரமாக முயன்றால் மேற்சொன்னவை படிப்படியாக அவர் அனுபவமாக எழும். விஷயம் ஒன்றே - தோற்றம் மாறித் தோன்றுகிறது. அகந்தை அழிய மறுத்து, அடுத்த அடுத்த கட்டங்களுக்குரிய தோற்றத்தை ஏற்கிறது. உடன்பிறந்தவர், நண்பர், கூட்டாளி வெற்றிபெற்றால், இயல்பாக மனத்தில் "இவனுக்குச் சாவு வாராதா, எவனாவது வந்து கொலை செய்யக்கூடாதா, இவனைச் சுட்டால் தேவலை” என்று மனம் தெளிவாக குரல் கொடுக்கும். அகந்தையை அழிக்க, பொறாமையை அழிக்க வேண்டும். அதை அழிக்க முயன்றால், அதிகமாகும். ஓரளவு வெற்றி கிடைத்தால், அவருக்கு உண்மையிருக்கிறதுஎனப் பொருள். வெற்றி கிடைத்த பின்னுள்ள கட்டங்கள் சோகம், உறுத்தல், நினைவு போன்றவை. பொறாமை போய், அகந்தை அழிந்ததற்கு அடையாளம், பிறர் வெற்றியைப் பற்றிய செய்தி கேட்டவுடன் மனம்,

    சந்தோஷத்தால் நிரம்பி, பொங்கி வழிந்து, கண்கள் கலங்கவேண்டும்.
    அது அன்னைக்கு இந்த வெற்றிக்காக நன்றி கூறுவதாகும். அது யோகபக்குவம்.

  3. பெருமையை நாடும் வீறாப்பும், புண்படும் அன்புள்ளமும் ஒரே நாணயத்தின் இரு புறங்கள். ஒன்றை அழித்தால், அடுத்ததும் மறையும்.
    வீறாப்பு எளிதில் புண்படும்.
    • மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பது பழைய இலக்கியச் சொல்.
    • எதற்காக வாழ்வது, மரியாதை வேண்டாமா, மரியாதை போனபின் என்ன இருக்கிறது என்பது அடிக்கடி அனைவரும் கூறுவது.
    • பணம் பாதாளம் வரை பாயும் என்பது சொல். பணம் எட்டாத இடத்தையும் மரியாதை எட்டும்.
    • மரியாதை அனைவரும் நாடுவது; பெருமை சிறிய உள்ளம் நாடுவது.
    • உரிமையைச் செலுத்திப் பெருமையை நாடும் இடம், தேர்தல் வெளியூரிலிருந்து வந்து ஓட்டுப் போடுவது.
    • "நான் யார் எனக் காட்டுகிறேன் பார்” என்பது புதிய பணம், பதவி வந்தவர் சொல்.
      இக்குரல் தன்னையழிக்கும் குரல்.
      இக்குரலை எழுப்பியவர் தம்மை அழித்துக் கொள்ளத் தவறுவதில்லை.
      அரசியல் தலைவருக்கு, அதுவும் பெரும்பதவியிலுள்ளபொழுது, தொழிலதிபர் துரும்பு.
      இத்தலைவர்கள் தொழிலதிபருக்கு நிகரில்லை.
      அப்படிப்பட்ட தலைவர், இப்படிப்பட்ட தொழிலதிபரை நிகராக்கி, சவால் விட்டார்.
      "இவரைச் சமாதி கட்டிவிட்டு மறுவேலை செய்கிறேன்'' என்றார்.
      தொழிலதிபர் அன்பர்.
      அன்பர் என்றாலும், பணத்தையும் பதவியையும் நம்புவது போல் அன்னையை நம்பாதவர்.
      அதிபருக்குக் கூட்டான பெரிய தொழிலதிபர் தம் குறைகளை அன்பரிடம் கூறி வந்தார்.
      அவை பிரம்மாண்டமானவை.
      அன்பர், "பிரச்சினை பிரம்மாண்டமானது. ஆனால் பிரார்த்தனை பலிக்கும்'' என்றார்.
      "அது உண்மையானால், ஏன் என் பார்ட்னர் அரசியல் தலைவரால் அவதிப்படவேண்டும்'' என்றார். வழி பிறந்தது.
      ஆபத்து, "சமாதி கட்டுவது" நினைவு வரும்பொழுதெல்லாம் அன்னையை நினைப்பது வழி.
      31ஆம் நாள் தலைவர் பதவியிழந்தார்.
      வீறாப்பும், சவாலும் தன்னையே அழித்துக் கொள்ளும்.
      வீறாப்பானவர் ஆழ்ந்த சுபாவமுள்ளவராக இருப்பார்கள்.
      வாயால் சொல் வெளி வாராது. மனம் கர்வம் காட்டும்.
      அவர்கள் எதிரியை நிச்சயமாக அழிப்பார்கள்.
      அன்பர்கள் விஷயத்தில் அவர்கள் நிலையும் வேறு.
      ஆழ்ந்த சவாலை மௌனமாக எழுப்பினால், அன்னை ஆழ்ந்த உரிமையை மௌனமாக எடுத்துவிடுவார்.
      ஸ்தாபனத்தலைவர் எளிமையான ஊழியர் மீது வெறுப்புக் கொண்டார்.
      வெளியில் பேசவில்லை.
      ஊழியரை அழிக்கத் திட்டமிட்டார்.
      அத்திட்டத்தில் முடிவான கட்டத்திற்குப் போனார்.
      ஊழியரை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்.
      எல்லா அதிகாரமும் உள்ளவர்.
      இருந்தாலும், "மேலேயுள்ளவர்" என ஒருவரிருந்தார்.
      அவர் அனுமதியை நாடினார்.
      அவர் அன்பரால் பேர் ஆதரவு பெறுவதை இவர் அறியார்.
      மேலேயுள்ளவர் மறுத்துவிட்டார்.
      ஸ்தாபனத் தலைவரின் திட்டம் நடைபெறவில்லை.
      அன்னை அத்துடன் நிற்பதில்லை.
      அன்னை தாமே தண்டிப்பதில்லை.
      செய்கையால் தம்மைவிட்டு விலகுபவர் செய்யும் காரியத்தால் பெறும் தண்டனை பெறுவதை அனுமதிப்பார்.
      நிலைமை மாறியது.
      ஸ்தாபனத் தலைவரை ஸ்தாபனத்தைவிட்டு விலக்கினர்.
      அவர் ஊழியருக்கு நினைத்தது அவருக்கே நடந்தது.
      அன்பு புண்படாது.
      அதற்கு அன்புமட்டும் தெரியும்.
      புண்படுவது அகந்தை.
      புண்படும் அன்புள்ளம் அகந்தையின் மறுபுறம்.
      எவர், எது செய்தாலும், அன்பு புண்படாது.
      அன்பில் அகந்தை கலந்திருந்தால், அகந்தை புண்படும்.
      புண்படும் அகந்தையும், வீறாப்பாகச் சவால்விடும் அகந்தையும் ஒன்றே.
      மனம் புண்பட்டால் மாசு உள்ளது எனப் பொருள்.
      அன்பை அடுத்தவர் புண்படுத்தினால், அன்பு தீவிரமாகும்.
      புண்படும் அன்பு, அன்பாகாது.
      வீறாப்பாகப் பேசுபவன் வெட்கப்படும் வாய்ப்புண்டு.
      புண்பட்ட அன்புக்கு தான் அகந்தையெனத் தெரிய வழியில்லை.
      வீறாப்பு விடுபட வழியுண்டு.
      அன்புருவம் கொண்ட அகந்தை துரோகம் செய்யும் நண்பன்.
      எதிரியிடமிருந்து தப்பலாம்; நண்பனிடமிருந்து தப்ப முடியாது.
      எதிரியால் பாதிக்கப்பட்டவர் ஏராளம்.
      நண்பரால் அழிந்தவர் அனைவரும்.
      "என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. என் எதிரிகள் எனக்குப் பொருட்டில்லை'' என்று கடவுளை ஒரு மேதை கேட்டுக் கொண்டார்.
      அகந்தையை அழிக்கும் யோகம், பூரணயோகம்.
      சமர்ப்பணம், அகந்தை அழியும் மார்க்கம்.
      சமர்ப்பணம் பலிக்க பல ஜன்மங்களாகும்.

தொடரும்.....

*****



book | by Dr. Radut