Skip to Content

07. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் மதர் ஸ்ரீ அன்னை!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஓம் அனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!

அமுதசுரபியில் ஸ்ரீ கர்மயோகி அன்னையைப் பற்றி எழுதிய கட்டுரைகளைப் படித்துவிட்டு நான் அன்னையின் பக்தையானேன். என் இரு மகன்களுக்கும் அன்னை மீது நம்பிக்கை உண்டு. எங்கள் குடும்பத்தில் எத்தனையோ இன்னல்கள் அன்னையின் அருளால் தீர்ந்திருக்கின்றன. என் இளையமகன் அன்னையின் அருளால் நன்றாகப் பயன் அடைந்திருக்கிறான்.

ஒரு சமயம் நான் நன்றாகப் படித்துக் கொண்டிருந்த என் இளைய மகனை எந்த மேற்படிப்பு படிக்க வைக்கலாம் என்று தெரிந்து கொள்ள என் சிநேகிதிக்குத் தெரிந்த ஜோசியரிடம் அவன் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு, நாங்கள் மூவரும் சென்றோம். அவர் என் மகன் முன்பு அவன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "கிரக நிலைகள் சரியில்லை. அவன் மேற்படிப்பு படிக்கமாட்டான்'' என்று சொல்லிவிட்டார். எனக்கும், என் மகனுக்கும் அவர் சொன்னது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவன் எப்பொழுதும் முதல் ரேங்க் வருவான். அவர் சொன்னதைக் கேட்டு அவனும் தைரியம் இழந்துவிட்டான். ஆனால் நான் அன்னையின் மேல் நம்பிக்கை வைத்து, அவன் மேற்படிப்பிற்காக பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தேன். அவன் தடை எதுவுமில்லாமல் CET எழுதி, நல்ல கல்லூரியில் என்ஜினீயரிங் கோர்ஸில் அவன் விருப்பப்பட்ட சப்ஜெக்டை எடுத்து நன்றாகப் படித்தான். அவன் காலேஜ் கேம்பஸ் இன்டர்வியூ வந்தபொழுது அவனுக்குதான் முதன் முதலில் நல்ல வேலை கிடைத்தது. பிறகு இரண்டு வருடம் வேலை பார்த்துவிட்டு, CAT Exam எழுதி IIMஇல் MBA முடித்தான். அங்கே "Lion of IIM" Award வாங்கினான். தற்பொழுது நல்ல வேலையில் இருக்கிறான்.

ஒரு நாள் அவன் நெரிசல் நிறைந்த சாலையில் (பெங்களூரு) ஆபீஸிற்குச் செல்லும்பொழுது பைக்கிலிருந்து விழுந்து, பைக் சேதம் அடைந்தாலும் அவனுக்கு பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதைத் தவிர ஒரு பிரைவேட் கிளினிக் முன்னால் விழுந்ததால் உடனே முதலுதவியும் கிடைத்தது. அன்று அவன் தப்பித்தது அன்னையின் அருளால்தான். நாங்கள் என்றும் அன்னையின் அருளுக்குப் பாத்திரமாக இருக்கவேண்டும். அன்னையிடம் என் நன்றியை தெரிவித்துக் கொண்டே இருக்கிறேன். ஸ்ரீ அன்னையை எனக்கு அறியவைத்த ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கும் கடமைபட்டிருக்கிறேன். அன்னைக்கு என் பல கோடி வணக்கங்கள்.

- R. சுலோச்சனா, பெங்களூரு.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அகந்தை அழிந்தால், மனிதன் பிரபஞ்சம் முழுவதும் பரவுவான்.
எந்த க்ஷணம் அகந்தை மறைகிறதோ, அதே நேரம் சைத்தியம் எழும்.
அகந்தை அழிந்தால் சிருஷ்டியின் புருஷனுடைய வாயில் நிற்போம்.
உடலின் அகந்தை கரைந்த பொழுது அன்னை சச்சிதானந்தத்தைத் தொட்டார்.
இதனால் அகந்தைக்குரிய நிலைகள் பலஎன நாம் அறிகிறோம். அவை பரந்துள்ள நிலைகளும் உயர்ந்துள்ள உயரங்களும் பல.
 
அகந்தை, பரந்தும் உயர்ந்தும் உள்ளது.
அகங்காரம் மறைந்தால் அனந்தம்.
க்ஷணத்தில் சைத்திய புருஷனை எழச் செய்வது.

 



book | by Dr. Radut