Skip to Content

06. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

  1. பூவுலகில் தீயசக்திகளை முறியடிப்பது அவ்வளவு சுலபமில்லை. ஏனென்றால் அவை ஜட உலகில் ஆட்சி செய்கின்றன. ராவணனின் மகன் இந்திரஜித்தைக் கொல்லும் சக்தி பெறுவதற்கு ராமனின் தம்பியான லட்சுமணன் பதினான்கு வருடங்கள் உண்ணாமல், உறங்காமல் இருக்க வேண்டியிருந்தது.
  2. குற்றவாளிகளும், சமூக விரோத சக்திகளும் நடமாடுவதென்பது சமூக ஸ்தாபனம் சிறப்பாக இல்லை என்பதைக் காட்டுகிறது. வாழ்க்கை போட்டியில் தோற்கின்ற சிலர் சமூகத்தின்மேல் வெறுப்பு வந்து இப்படிக் குற்றவாளிகளாக மாறுகிறார்கள்.
  3. பெரும்பாலான குற்றவாளிகள் பிளவுப்பட்ட குடும்பங்கள் மற்றும் நகரங்களில் உள்ள குப்பங்களில் இருந்துதான் வருகிறார்கள். ஏழ்மை மற்றும் அன்பின்மை குற்றங்கள் புரியும் மனப்பான்மையை வளர்ப்பதாகத் தெரிகிறது.
  4. குற்றம் சாற்றப்பட்டவர்களைத் தண்டிக்க சட்டம் வலுவான ஆதாரங்களைக் கேட்கிறது. அப்படிக் கேட்பதால் ஆதாரம் இல்லாமல் கெட்ட எண்ணத்தின் பேரில் வீண்பழி சுமத்துவது தவிர்க்கப்படுகிறது.
  5. ஏழையைவிட பணக்காரனுடைய வாக்குமூலத்திற்குச் சட்டம் அதிக மதிப்புத் தருகிறது. பணத்திற்குச் சமூகத்தில் மதிப்பு இருப்பதால் சட்டமும் இப்படிச் செய்கிறது.
  6. சட்டம் நியாயத்தை வழங்குவதற்காகத்தான் இருக்கிறது. ஆனால் எந்நேரமும் சட்டம் நியாயத்தைத்தான் வழங்குகிறதுஎன்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் நீதிபதிகள்கூட பணம் மற்றும் செல்வாக்கிற்குக் கட்டுப்படுகிறார்கள்.
  7. ஒரு வழக்கை வெற்றிகரமாக நடத்தி வெல்லக்கூடிய அளவிற்கு டைனமிசம் இல்லாத வழக்கறிஞர்கள் அறிவாளிகளாக இருந்தால், அந்த அறிவின் பலத்தை வைத்துக்கொண்டு சட்டத்தைப் புரிந்து கொண்டு, நீதி வழங்கக்கூடிய நீதிபதிகளாக வருகிறார்கள்.
  8. உரத்த குரலில் பேசுகின்ற பல வழக்கறிஞர்கள் இந்தியாவில் ஜெயிக்கிறார்கள். நீதி வழங்குவதில் உரத்த குரல் இப்படி ஒரு முக்கிய இடம் வகிப்பது இந்திய நீதித் துறையில் உள்ள ஒரு குறைபாட்டைக் காட்டுகிறது.
  9. போன நூற்றாண்டுகளில் மரண தண்டனை சுலபமாக வழங்கப்பட்டது. ஆனால் இப்பொழுது ஒரு சில அபூர்வ வழக்குகளில் மட்டும்தான் மரண தண்டனை விதிக்கிறார்கள். சமூகத்தில் இரக்க குணமும், மனித உயிரின் மேல் உள்ள மதிப்பும் உயர்ந்துள்ளதை இது காட்டுகிறது.
  10. பணமும், செல்வாக்கும் உள்ளவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புகிறார்கள் என்பது நீதித்துறை அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
  11. ஆன்மீக உண்மை என்பது பல பக்கங்களைக் கொண்டது. இதை பரிபூரணமாக உணர்வதற்கு ஒரு பரந்த கண்ணோட்டம் தேவை. ஆனால் இந்திய ஆன்மீகத்தில் ஒருவரை மட்டும் குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர் பின்பற்றும் தத்துவங்களை மட்டும் கருத வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீகத்தின் பரந்த கண்ணோட்டத்திற்கு இது முரண்பாடாகவும் உள்ளது.
  12. இந்தியாவில் குருநாதரின் வீட்டிலே சீடர் வசிப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. அருகிலேயே இருக்கும் பொழுது பாடத்தை இன்னும் சிறப்பாகக் கற்றுக் கொள்ளலாம் என்று நம்பப்படுகிறது.
  13. சீடர்கள் குருநாதருக்கு அடிபணிந்து இருப்பது அவருக்கு இதமாக இருக்கலாம். ஆனால் சீடர்களை முறையாக வழிநடத்துவதென்பது ஒரு பெரிய பொறுப்பாகும். சீடர்களை அதிகாரம் செய்வது ஒரு பக்கம் இன்பமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் அதற்குச் சரிசமமாகப் பொறுப்புக்குண்டான பாரமும் வந்துவிடுகிறது.
  14. குருநாதருக்குத் தெரிவித்து, அவருடைய பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளாமல் ஆன்மீகத்தில் புதிய முயற்சிகள் எடுப்பது ஆபத்தானது ஆகும். இம்மாதிரியே ஆன்மீக அனுபவம் நிலைபெறுவதற்கு முன்னால் குருநாதரைத் தவிர மற்றவரிடம் சொல்வதும் அறிவற்ற செயலாகும். ஏனென்றால் அப்படிச் சொல்லும் பொழுது இந்த அனுபவத்தின் தாக்கம் குறைந்துவிடுகிறது.
  15. சீடன் என்பவன் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் குருநாதருடைய ஆன்மீக பிள்ளையாவான். தாம் பெற்ற பிள்ளை பணியிலும், வருமானத்திலும் தம்மை மிஞ்சுவதை தகப்பனார் வரவேற்பதைப் போல ஆன்மீகத்தில் சீடன் தம்மை மிஞ்சுவதை குருநாதரும் வரவேற்கிறார்.
  16. ஒரு பக்கம் ஆன்மீகஞானம் இருந்தாலும், குருநாதரிடம் மற்ற குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் குருநாதர் அப்பழுக்கு அற்றவர்என்று சீடன் திடமாக நம்பினால், அந்த நம்பிக்கையின் பலமே அவரைக் குறையற்றவராக மாற்றவும் செய்யும்.
  17. சீடனுக்குப் பயிற்சி எப்பொழுது முடிகிறது, அவன் எப்பொழுது சொந்தமாகச் செயல்படலாம்என்பதை குருநாதர்தான் முடிவு செய்ய வேண்டும். சீடன் தானே அதை முடிவு செய்து கொள்வது அவ்வளவு சரியாக இருக்காது.
  18. சீடனுடைய பர்சனாலிட்டி சூட்சுமமாக இருந்ததென்றால், குருநாதரும் சூட்சுமமாகவே தம்முடைய ஆன்மீகஞானத்தை வழங்க முடியும். வாய்விட்டு நிறைய பேசித்தான் ஆன்மீகஞானத்தைச் சீடனுக்கு வழங்க முடியும்என்ற நிலையிருந்தால் அது சீடனுடைய பர்சனாலிட்டியில் சூட்சுமம் குறைவு என்பதைக் காட்டுகிறது.
  19. சீடர்கள் கேள்வி கேட்காதவரையிலும் நம்பிக்கை சிறப்பாகச் செயல்பட்டு குருவிற்கும், சீடர்க்கும் உள்ள உறவை நன்கு பலப்படுத்தும். கேள்வி கேட்கும் குணம் தலையெடுத்தால், குரு-சீடர் உறவில் நம்பிக்கையின் பங்கு போய்விடும்.
  20. குரு தானாக முன்வந்து கொடுப்பது நீடிக்கும். அது வேண்டும், இது வேண்டும் என்று அவசரப்பட்டுக் கேட்டு வாங்கும்பொழுது, அது நீடிப்பது சந்தேகம்.

தொடரும்.....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உடல் அசைவுகளே நாம் என இருந்தால், உடல் மனத்தைக் கட்டுப்படுத்தும். மனத்தின் எண்ணங்களே நாமாவோம் என்றால், மனம் உடலை நிர்ணயிக்கும்.
 
மனம் உடலின் அதிபதி.



book | by Dr. Radut