Skip to Content

02. தானே செயல்படும் தெய்வம்

தானே செயல்படும் தெய்வம்

N. அசோகன்

 மனித முயற்சி முடியுமிடம் - இறை முயற்சி தொடங்குமிடம் என்ற உண்மையை நிரூபிக்கும் நிகழ்ச்சிகள் ஏராளமாகவுள்ளன. நாம்தான் இக்கோணத்தில் வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. இறைவனிடம் வேலையை விட்டால், அது நல்லபடியாக நடக்கும் என்பதை நாம் கருதுவதேயில்லை. ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால் அது பற்றி நாம் சிந்திக்க ஆரம்பித்து, அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கிவிடுகிறோம். இப்படி ஒரு முயற்சி எடுப்பது நல்லதுதான். இருந்தாலும், ஆக வேண்டிய காரியத்தில் நாம் மூழ்கிப்போகாமலிருப்பது அதைவிட நல்லது. இத்திசையில் நாம் பொதுவாகச் சிந்திப்பதில்லை.

பொதுவாக நம்மால் முடிந்த முயற்சியை எடுக்கிறோம். அது கூடிவந்தால் நம்மை நாமே பாராட்டிக் கொண்டு, நம் திறமை மேலுள்ள நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கிறோம். சில சமயங்களில் தோல்வியைத் தழுவுகிறோம். அச்சமயங்களில் மேற்கொண்டு முயற்சியைத் தொடர வாய்ப்பில்லை என்று உணர்கிறோம். அவ்வுணர்வின் காரணமாக முயற்சியைக் கைவிடுகிறோம். நம்முடைய முயற்சி எல்லாம் தோற்றுப் போயிருந்தாலும், சிறிது நேரத்தில் "காரியம் பூர்த்தியாகிவிட்டது” என்ற செய்தி வருகிறது. செய்தி அசாதாரணமென்றாலும், சில சமயங்களில் உண்மையாகவே இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன.

  • நாமெடுத்த முயற்சியால் வேலை நடக்காமல், அதை மீறி நடந்துள்ளதென்பதை நாம் பார்க்கலாம்.
  • நமக்குத் தெரியாத அல்லது நாம் நினைத்துப் பார்க்காத வழியில் காரியம் பூர்த்தியாகியுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
  • இவ்வாறு பூர்த்தியாவது வழக்கத்தைவிடச் சிறப்பாக அமைவதையும் பார்க்கலாம்.

ஒரு காரியத்தை முடிக்க சிரமப்படுவதென்பது சரியான அணுகுமுறைதான். ஒரு வேலையை முழுமையாகக் கற்றுக் கொள்ளும்வரைதான் இது உண்மை. வேலையை முழுமையாகக் கற்றுக்கொண்டபிறகு நமக்குத் தெரிந்த அணுகுமுறையை நாம் வலியுறுத்தாமல், வேலையை அதன் போக்கில் பூர்த்தியாக விட வேண்டும். இப்படி விடாமல், நம் பாணியை வலியுறுத்தும் வகையில் நாம் நடந்து கொள்வது வேலை பூர்த்தியாக விடாமல் தடுக்கும் வகையில் அமைகிறது. நம்மால் இந்த வேலை முடியவில்லைஎன்று நாம் அதைக் கைவிடும் சமயம், மேற்கண்ட ஆன்மீக உண்மையை நாம் "நெகட்டிவாக” பின்பற்றுகிறோம் என்று அர்த்தமாகிறது.

தாம் எட்டு ஆண்டுகளாக நடத்திக் கொண்டு வந்த ஒரு திட்டம் வெற்றிகரமாகப் பூர்த்தியானது பற்றி ஒருவர் மிகவும் திருப்தி அடைந்திருந்தார். இத்திட்டம் ஓரளவுக்குப் பெரிய திட்டமாக இருந்ததால், இதுவே தம்முடைய கடைசி முயற்சியாக இருக்கும் என நினைத்தார். அப்படிப்பட்ட மனநிலையில் இருந்த பொழுது மேற்கண்ட ஆன்மீக உண்மையைப் பற்றிக் கேள்விபட்டார். உடனே தம் மனநிலையை மாற்றிக் கொண்டார். அவருடைய "கடைசித் திட்டம்” போல் இரண்டு மடங்கு பெரிய திட்டம் தானாக அவரைத் தேடி வந்தது. இப்போது இதைச் செயல்படுத்த, தாம் எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் என்று தீர்மானித்தார். அத்திட்டம் தானே செயல்பட ஆரம்பித்து, 70 நாட்களில் நிறைவு பெற்றது.

ஒரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் இடமாற்றம் காரணமாகச் சென்னையில் உள்ள ஒரு மருத்துவத் துறைக்கு இயக்குனராக வர நேரிட்டது. அவர் கவனம் ஆன்மீகம் பக்கம் திரும்பியது. ஆன்மீக சக்தியை அழைக்கும்போதெல்லாம், தம் வாழ்க்கையில் தொடர்ந்து அற்புதம் நிகழ்வதைக் கவனித்தார். ஸ்லோகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் சொல்ய பொழுது நடக்காத அற்புதங்கள் எல்லாம் இப்பொழுது நடப்பதைக் கவனித்தார். அவருடைய மகளுக்குப் பெரிய ஆபத்து வந்தபொழுது, யாரும் ஆன்மீக சக்தியை அழைக்காத நேரத்தில்கூட, அந்த ஆபத்திலிருந்து தம் மகளைக் காப்பாற்றும் அளவிற்கு சூழல் பாதுகாப்பு நிறைந்து இருப்பதை அறிந்து, மனம் நெகிழ்ந்துபோனார். அதாவது, எந்த நேரமும் அருள் சூழல் இருக்கிறது என்பது அர்த்தமாகிறது. சூழல் இம்மாதிரி பலத்த பாதுகாப்பு இருப்பதால், இவருக்குத் தன்னம்பிக்கை அதிகமாகி, அஜாக்கிரதை அதிகமாகியது. ஒரு நாள் சென்னை நகருக்குள் பஸ்ஸில் பயணம் செய்தவர், பஸ் தம் அலுவலகத்திற்கு அருகில் உள்ள சிக்னல் நிற்பதைக் கவனித்தார். ஆனால் போக்குவரத்து விதிப்படி யாரும் அவ்விடத்தில் இறங்கக்கூடாது. இவரோ அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறது என்ற ஆசையால் இறங்கி, சாலையைக் கடக்க முயன்றார். அப்பொழுது எதிர்த் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த இன்னொரு பஸ் தன் மேல் மோதக்கூடிய அபாயத்தை உணர்ந்தார். உடனே அவருக்கு மயக்கம் வந்தது. ஆனால் அவருடைய வாய் மட்டும் எப்படியோ "அன்னை'' என்று கத்தியது. அடுத்து கண் திறந்து பார்க்கும் பொழுது, சாலை ஓரத்திலுள்ள ஒரு கற்குவியல் மேல் படுத்திருந்தார். ஏதோ ஒரு சக்தி அவரை அப்படியே தூக்கி வந்து, ஆபத்திலிருந்து காப்பாற்றி, சாலை ஓரத்தில் படுக்க வைத்திருக்கிறது என உணர்ந்தார். இனிமேல் மனித முயற்சிக்கு இடமில்லை என்ற நிலை வரும் பொழுது, தெய்வம் தானே செயல்படுகிறது என்பது மேற்கண்ட நிகழ்ச்சியின் மூலம் நிரூபணமாகிறது.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அடக்க முடியாதது, கணக்குப் போடுவது, கணக்குப் போடாத தெளிவு, தெளிவான மனத்தின் நோக்கம், உணர்வுடைய நோக்கம், உடலின் சொரணை ஆகிய நிலைகளைக் கடந்து சமத்துவம் எழும்.
 
பண்பு உருவாகும் முன் பல நிலைகளைக் கடக்க வேண்டும்.book | by Dr. Radut