Skip to Content

10. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. மன்னிக்க முடியாத குற்றத்தை அளவுகடந்து பாராட்டு.

    பெண்ணுக்குத் திருமணம் செய்தால் அவள் வருமானம் போய்விடும் என்று திருமணம் செய்யாமலிருப்பது; நேருவை இந்த நாட்டில் பேர், ஊர் தெரியாத தலைவர் எனப் பேசுவது; மகாத்மா காந்தியை 1945இல் சிலர் பின்பற்றினர் என்பது; மகன் முதல் மார்க் வாங்கியபொழுது "இக்காலத்தில் மார்க்கை அள்ளிப் போடுகிறார்கள்" என்பது; ரூ.20 சம்பாதிக்கும் தகப்பனாரிடம் 1960இல் தான்பெற்ற 62 ரூபாய் சம்பளத்தில் 1 ரூபாயும் எடுத்துக்கொள்ளாமல் கொண்டுவந்து கொடுத்தால், "அப்படி வை" என்று சொல்லி 5 மணி நேரம் அதைத் தொடாமலிருப்பது; ஊரிலேயே பெரிய சொத்து சம்பாதித்தவரை "அவருக்கு வருமானமில்லை, சும்மா உட்கார்ந்திருக்கிறார்” என்பது அனைவரும் காணமுடியாத அற்புதங்கள். இவை மன்னிக்க முடியாத, பொறுக்க முடியாத குற்றங்கள். வாழ்க்கையில் இதற்குப் பொதுவாகக் கிடைக்கும் பலன், பெண் தானே திருமணம் செய்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறுவாள்; உள்ள பெரிய பதவி அழிவது (சர்ச்சில் இங்கிலாந்து பிரதமராக இருந்தபொழுது நேருவை அப்படிப் பேசினார். இங்கிலாந்தின் பிரதமர் அன்று உலகப் பிரதமர். அவர் போரில் நாட்டையும், உலகையும் காப்பாற்றினார். போர் முடியும்முன் பதவி போய் விட்டது); காந்திஜீயை அப்படிப் பேசியவர் அல்பாயுசாகப் போனார்; தகப்பனார் அலட்சியம் செய்த சம்பளம் அடுத்த மாதத்திலிருந்து அவருக்கு வாராது; சும்மா உட்கார்ந்திருக்கிறார் எனக் கூறியவருக்கு சாப்பாடில்லாமல் சும்மா உட்காரும்நிலை தண்டனையாக வரும்; மன்னிக்க முடியாதவையென்னும் இவை வாழ்வின் வண்ணங்கள். நாம் செய்யக்கூடியவை அவற்றைவிட்டு விலகலாம்; ஆத்திரமாக எதிர்த்து சண்டையிடலாம்; நிச்சயமாக வெற்றி கிடைக்கும். அவை சரி. ஏற்பதும், பாராட்டுவதும் தேவையில்லை. இவை நமக்கு ஏன் வந்தன என அன்னை நோக்கத்தில் கண்டால், இப்படிப்பட்டவருள்ளும் அன்னை வசிக்கிறார்; அவரைக் கண்டறிவது அன்னையின் அதியுயர்வைக் காண வாய்ப்பு என ஓர் அன்பர் புரிந்துகொண்டால், இது அவருக்குரிய முறை.

    • அப்படிச் செய்த பெண்தான் தன் இஷ்டப்படி திருமணம் செய்து, கடைசி வரைப் பெற்றோரைக் காப்பாற்றினாள்.
    • அலட்சியம் செய்யப்பட்ட மகன் தகப்பனாரைக் கடைசிவரைக் காப்பாற்றியதுடன், அவர் ஆசையை - கற்பனைக்கெட்டாத ஆசையையும் - பூர்த்திசெய்தார்.
    • சும்மா உட்கார்ந்திருக்கிறார் எனப் பேசிய உத்தமருக்கு ஒரு பக்கம் வருமானம் 15 மடங்கு அதிகரித்தது; செல்வாக்கு பெருகியது. உலகில் உள்ள அவ்வளவு வியாதிகளும் ஒன்று தவறாமல் வந்து பெரும்பாலும் ஆஸ்பத்திரி, மருந்து, குறை சொல்வதுடன் வாழ்கிறார்.
    • குணம் வியாதியாகப் பரிமளிக்கும் என இவர் வாழ்வு நிரூபிக்கிறது.
    • அன்னை அவற்றுள்ளும், அவற்றைக் கடந்தும் தெரிவார். அதைக் காண்பது யோக பாக்கியம். இப்படிப்பட்டவரிடம் நல்லபேர்என எவரும் பெற்றிருக்கமாட்டார்கள். அதை ஒரு நண்பர்பெற முனைந்தார், பெற்றார். அவர் வாழ்வு பரிமளித்தது. மன்னிக்க முடியாத குற்றத்தை அளவுகடந்து பாராட்ட பரந்தமனம் தேவை. பரந்தமனம் பல கோணங்களிலும் வரும்.

     

  2. வெறும் கவர்ச்சி அர்த்தமற்றது என அறிய வேண்டும்.
    கவர்ச்சி தவறாது கவரும்.

    Pride & Prejudiceஇல் Wickham கவர்ச்சியாய் அதிக இதமாக அவன் பேசும் மொழி இனிமையாக சுவைக்கும். தானே பேசமாட்டான். கேட்டால் பக்குவமாகப் பதில் கூறுவான். சொல் நயம், பொருள் நயத்துடன் இழைந்து, நாகரீகத்தின் நயத்தைக் காட்டும். அவன் பொய்யானவன். அவனால் தீங்கிழைக்க முடிந்தது. Fitz William வில்லியம் அதே கதையில் அவனைப்போலப் பெரும்பாலும் இனிமையானவன். அவன் gentleman நல்லவன். அவனால் எவருக்கும் தீங்கு வரவில்லை. விக்காம் அழகன். அழகன் கவர்ச்சிக்கு அடிபணியாதவரில்லை. கவர்ச்சி பெரியதானாலும், இளைஞர்கள் கண்ணில் படாதவை பெரியவர் கண்ணில் படும். பெரியவர்கள், அதுவும் முக்கிய நேரங்களில் முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் சுபாவத்தைக் காட்டும் செயல்களைக் காணமறுப்பது மன்னிக்க முடியாத காரியம்.

    அன்பர்கட்கு, பெரியவருக்கும் இல்லாத அறிவு, சூட்சுமம், ஞானம், பாதுகாப்புண்டு.

    அத்தனையையும் புறக்கணித்து கவர்ச்சியை மட்டும் அன்பர் கருதுவாரானால் அது நாம் ஏற்கக்கூடாதது.

    முகம், நடை, உடை, பாவனை, சொல், எப்படியிருந்தாலும், செயல் மனிதனைக் காண்பிக்கும். செயலில் திறமையை குணத்திலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும்.

    திறமையுடன் நடத்தை தவறாக அமையலாம்.

    நல்ல குணத்துடன் கெட்ட நடத்தை இணைந்து வாராது.

    சொல் கடுமையானால், அவன் நல்லவனாக இருக்கலாம். ஆனால் கடுமையான சொல்லும் இதமான செயலும் சேரா.

    திருமணம், பார்ட்னர் விஷயங்களில் இது மிகவும் முக்கியம்.

    அன்பருடைய அன்றாடச் செயல்கள் திருமணத்திற்குச் சமமானவை.

    அன்னையின் அன்பர் என்றால், அவர் சொர்க்கலோகவாசி, உலகில் நடமாட வந்திருக்கிறார் என்று பெயர் (citizens of heaven domiciled on earth).

    வெறும் கவர்ச்சி தீயசக்திகள் நுழையும் வாயில்.

    கவர்ச்சி கண்ணை மறைக்கும்.

    கண் போதாது, திருஷ்டி வேண்டும் என்பவர் கண்ணையும் மறைத்துக் கொண்டால் என்ன செய்வது?

    நாம் சொல்லும் ஞான திருஷ்டி நெற்றிக்கண்ணை விட உயர்ந்தது.

    அந்நிலையில் அன்பர் கண்ணைக் குருடாக்கிக் கொள்வது சரியா?

    கவர்ச்சி அறிவை மறைக்கும் அஞ்ஞானத்திரை.

தொடரும்....

*****



book | by Dr. Radut