Skip to Content

08. முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

சாதிக்கும் முறையென்ன என்று நாம் பார்த்துவிட்டோம். இப்பொழுது சாதனைக்கு உதவும் முக்கியப் பண்புகளைப் பற்றிப் பார்ப்போம். சாதனையை விரைவுபடுத்தும் பண்புகள் நிறைய இருந்தாலும், முக்கியமான பத்து பண்புகளை மட்டும் நான் இங்கு எடுத்துக்கொள்கிறேன். அவையாவன: கடின உழைப்பு, அறிவு மற்றும் திறமை, ரிஸ்க் எடுக்கும் துணிவு, விடாமுயற்சி, தைரியம், resourcefulness, அதாவது சமயோசித திறமை, ஆர்வம், ஆர்கனைஷேஷன், சுமுகம் மற்றும் ஏற்புத்திறனாகும்.

நானொரு பத்து பண்புகள் சாதனைக்கு உதவும் என்று சொல்கிறேன் என்றாலும், பல பேரும், பல நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட பண்பை உச்சக்கட்டத்திற்கு வளர்த்து, அதன் சிறப்பை வைத்து சாதிக்கின்றார்கள். தி.மு.க. 1967இல் ஆட்சியைப் பிடித்ததற்கு முக்கிய காரணமே தி.மு.க. தலைவர்களின் சிறந்த பேச்சாற்றல்தான். ஹிட்லரும், ஜெர்மானிய விமானப்படையும் இங்கிலாந்தை தாக்கிய பொழுது, அவர்களை எதிர்க்க இங்கிலாந்து மக்களை ஊக்குவிக்க இங்கிலாந்துப் பிரதமர் சர்ச்சில் அவர்கள் தம்முடைய சிறந்த பேச்சாற்றலைத் தான் பயன்படுத்தினார். அவருக்கு அந்த நேரம் சிறந்தவொரு பேச்சாற்றல் இல்லாமல் போயிருந்தால், இங்கிலாந்து மக்கள் அவ்வளவு உற்சாகமாகவும், தைரியமாகவும் ஜெர்மனியை எதிர்த்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.

கோகோ கோலா கம்பெனி soft drink துறையில் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அதனுடைய product quality தான். இந்தியாவில் அதன் தரம் குறைந்துவிட்டதாக complaint எழுந்தாலும் உலகரீதியாகப் பார்க்கும்பொழுது இக்கம்பெனி இன்னும் முன்னணியில் தான் நிற்கிறது. சரவணபவன் ஓட்டல்கள் சென்னையில் பாப்புலராக இருப்பதற்கு முக்கியக் காரணம் அவ்வோட்டல்களில் காணப்படும் சுத்தமாகும். சுத்தமென்ற பண்பை அவர்கள் உச்சக்கட்டத்திற்கு வளர்த்துள்ளார்கள். Federal எக்ஸ்பிரஸ் என்ற courier கம்பெனி அமெரிக்காவில் முதன்மை இடத்திருக்கிறது. On-time delivery என்ற பண்பை அவர்கள் சிறப்பாகப் போற்றி நடைமுறையில் கடைபிடிப்பதால் இந்த முதன்மை நிலை அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

இப்படி ஒரு பண்பை உச்சக்கட்டத்திற்கு வளர்த்து, நம்மால் சாதிக்க முடியுமென்றாலும், பொதுவாக நாம் எல்லாப் பண்புகளையும் வளர்த்துக்கொள்வதற்கான முயற்சியை எடுப்பது நல்லது.

கடின உழைப்பு:

சாதிப்பதற்குத் தேவையான முதல் குவாலிட்டி கடின உழைப்பு என்று தொடக்கத்திலேயே குறிப்பிட்டேன். Common-sense கண்ணோட்டத்தில் பார்த்தால்கூட இவ்வுண்மை விளங்கும். கடின உழைப்பு அவசியம் என்று பலபேருக்குத் தெரிந்தாலும், ஏன் அவசியம் என்று கேட்க பலபேருக்குத் தோன்றுவதில்லை. நாம் physical planeஇல் வாழ்வதால் கடின உழைப்பு அவசியமாகிறது. இந்தக் குறிப்பிட்ட physical planeஐ நகர்த்துவதோ, அதிலொரு தாக்கத்தை உண்டுபண்ணுவதோ கடினமான காரியம். மேலும், இந்த plane ஒரு resultஐக் கொடுப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தும். இக்காரணங்களால்தான் இந்த physical planeஇல் சாதிப்பதற்கு நாம் கடினமாக உழைக்க வேண்டியதாகியுள்ளது. நாம் ஆன்மீக நிலையிலோ, அறிவு நிலையிலோ மற்றும் உணர்வு நிலையிலோ செயல்படும்பொழுது சாதிப்பது இவ்வளவு கடினமாகவோ, அல்லது காலதாமதமாகவோ இருப்பதில்லை. நாம் அன்னைக்குப் பிரார்த்தனை செய்யும்பொழுது அவருடைய ஆன்மீக சக்தி செயல்படுகிறது. அன்னையிடம் வேலை வேண்டுமென்று பிரார்த்தனை செய்த மறுநாளே நல்ல வேலை கிடைத்த அனுபவம் பல அன்பர்களுக்கு உண்டு. இப்படி அன்னைக்குப் பிரார்த்தனை செய்யாமல் தம் சொந்த முயற்சியால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க பல மாதங்களாகலாம். Physical planeஇல் பல மாதங்கள் கழித்துக் கிடைக்கக்கூடிய ஒரு பலனை பிரார்த்தனைஎன்ற ஒரு ஆன்மீக அணுகு முறை ஒரு நாளிலேயே கொடுத்துவிடுகிறது.

அரசாங்கத்தில் கிளார்க் வேலையில் தம் 25ஆவது வயதில் சேர்பவர் ஆபீஸர் ஆவதற்குள் ரிட்டையராகும் வயது வந்துவிடும். அறிவு குறைவாக இருக்கும்பொழுது உடலுழைப்பை நம்பி செயல்பட வேண்டியிருப்பதால் அதிகாரியாவதற்கு இப்படி 30 வருடமாகிறது. ஆனால், அறிவாளியான இளைஞர் நேரடியாக தன்னறிவு பலத்தை பயன்படுத்தி I.A.S பரிட்சை எழுதி, தம்முடைய 25ஆவது வயதிலேயே அதிகாரியாக வந்துவிடுகிறார். 35 வருட உடலுழைப்பு தரும் பலனை அறிவு ஒரு பரீட்சை எழுதியவுடன் தந்துவிடுகிறது. நாமொரு ஈடுபாட்டுடன் உற்சாகமாக வேலை செய்யும்பொழுது பல நாள் வேலை சில நாட்களில் முடிவதைக் காண்கிறோம். உற்சாகம் இல்லாமல் வெறுங்கடமைக்காக வேலை செய்யும்பொழுது வெறும் உடம்பு மட்டும் வேலை செய்கிறது. அதனால் காலதாமதமாகிறது. நம்முடைய உற்சாகம் தூண்டிவிடப்பட்டுள்ள பொழுது அதனுடைய எனர்ஜியும் நம் வேலைக்குப் பயன்படுவதால் வேலை விரைவு பெறுகிறது. பலனும் விரைவில் கிடைக்கிறது.

பொதுவாகப் பார்க்கும்பொழுது நம் வாழ்க்கை பிஸிக்கலாக இருப்பதால் சாதிப்பதற்குக் கடினவுழைப்பு அவசியம் தேவைஎன்பது நிரூபணமாகிறது. விவசாயமாகவோ, வியாபாரமாகவோ, டாக்டர், வக்கீல், ஆசிரியர் போன்ற professional பணிகளாகவோ மற்றும் சங்கீதம், நடிப்பு, ஓவியம், இலக்கியம் என்று கலைத்துறை சம்பந்தப்பட்ட வேலையென்று, எந்த வேலையாகவிருந்தாலும், அடிப்படையில் இவையெல்லாம் physical planeஇல் நடக்கின்ற வேலையாக இருப்பதால், கடினமாக உழைத்தால் தான் சாதிக்க முடியும் என்றாகிறது.

அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் எடிசன் தம்முடைய கண்டுபிடிப்புகளைப்பற்றிப் பேசும்பொழுது, "creativity என்பது ஒரு சதவீதம் உள்ளெழுச்சி, மற்றும் 99% உடலுழைப்புதான்'' என்று குறிப்பிட்டு உள்ளார். கம்யூனிஸம் என்ற புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கையை உலகிற்கு அளித்தவர் கார்ல் மார்க்ஸ். ஆனால், இவ்வுண்மையை நிரூபிக்க ஆதாரங்கள் தேடும்பொருட்டு மார்க்ஸ் அவர்கள் பதினெட்டு வருடங்கள் லண்டனிலுள்ள British Museum நூல் நிலையத்தில் படித்து, ஆராய்ச்சிசெய்து, புள்ளி விவரங்கள் சேகரித்தார்.

ஆகவே, கடினவுழைப்பு தேவையா என்பது பற்றி யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஏன் சிலரால் கடினமாக உழைக்க முடிகிறது? ஏன் சிலரால் அப்படி உழைக்க முடிவதில்லை? என்றொரு கேள்வி எழுகிறது. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவர்கள் கடினவுழைப்பாளிகளாகவும், ஆரோக்கியம் இல்லாதவர்கள் சோம்பேறிகளாகவும் இருப்பார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால், இது மட்டுந்தான் உண்மை என்று சொல்ல முடியாது. நல்ல தேக ஆரோக்கியம் படைத்தவர்களும் வேலையில் நாட்டமில்லாமல் சோம்பேறிகளாக இருப்பதுண்டு. அதை வைத்துப் பார்க்கும்பொழுது, கடினவுழைப்பிற்குக் காரணம் வேறு என்று தெரிகிறது. தாம் செய்கின்ற வேலையில் ஓர் ஈடுபாட்டையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்துகின்றவர்களாலும், சாதிப்பதில் ஆர்வமுள்ளவர்களாலும், அதற்கேற்ற கடினவுழைப்பை வழங்க முடிகிறது. செய்கின்ற வேலையில் ஈடுபாடு இல்லை, சாதிப்பதில் ஆர்வமில்லை என்பவர்களால் கடினமாக உழைக்க முடியாமல் போய் விடுகிறது.

பிஸினஸ் செய்கின்ற ஒருவருக்கு, அவருடைய தொழிலில் ஈடுபாடும், சாதிப்பதில் ஆர்வமுமிருக்கும்பொழுது, அவரால் வழக்கத்தைவிட அதிக நேரம் வேலைக்காகச் செலவு செய்ய முடிகிறது. தேவைப்பட்டால், night shiftற்குகூட வரமுடிகிறது. நீண்ட தூர பயணத்திற்கு உண்டான உடல் தெம்பை அந்த ஈடுபாடு கொடுக்கிறது. உணவு இடைவேளை தாமதப்பட்டாலும் அந்த தாமதத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடிகிறது. விடுமுறை நாட்களில் வேலை செய்ய வேண்டுமென்ற அவசியம் வந்தாலும் அவரால் வேலை செய்ய முடிகிறது.

ஈடுபாடில்லாமல் வேலை செய்யும்பொழுது அப்படிப்பட்டவருக்கு office time முடிந்தவுடனேயே வீட்டிற்குப் போகத் தோன்றுகிறது. நீண்ட தூர பயணமென்றால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. உணவு இடைவேளை தாமதப்பட்டால் எரிச்சல் வருகிறது. விடுமுறை நாளில் வேலைக்குக் கூப்பிட்டால், மனைவி, மக்களுடன் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் வருகிறது.

வேலையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இவையெல்லாம் தடைகளாக வரவில்லை என்னும் பொழுது, உற்சாகமும், ஆர்வமும்தான் கடின உழைப்பிற்குக் காரணமாகவுள்ளன என்று சொல்லத் தோன்றுகிறது. இந்த உற்சாகமும், ஆர்வமும் இல்லாதவர்கள் சோம்பேறிகளாக இருந்துவிடுகிறார்கள் என்றாகிறது.

பொதுவாகப் பார்த்தால், மனிதச் சுபாவத்தில் உழைப்பின்மேல் அதிக நாட்டமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனிதர்களை அவர்கள் இஷ்டத்திற்குவிட்டால், எவ்வளவு குறைந்தபட்சம் வேலை செய்ய முடியுமோ, அவ்வளவு வேலைதான் செய்வார்கள். வாழ்க்கை நம்மை வேலை செய்யும்படிக் கட்டாயப்படுத்துகிறது. ஏனென்றால், சம்பாதிக்கவில்லையென்றால், நம்முடைய சாப்பாட்டிற்கே வழியில்லை என்றாகி விடும். இப்படி வேலை, சம்பாத்தியம் மற்றும் சாப்பாடு ஆகிய மூன்றும் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் பெரும்பாலோர் வேலை செய்ய முன் வருகின்றார்கள். அப்படி முன்வருகின்றவர்களும் 9.00 to 5.00 அல்லது 10.00 to 5.00 என்று தம்முடைய work scheduleஐ நிறுத்திக்கொள்கிறார்கள். இப்படி நிறுத்திக்கொள்வது நமக்கு பல வகைகளில் சௌகர்யமாக இருக்கலாம். ஆனால், இறுதியில் நமக்கு கிடைக்கும் பலனும் அளவாகத்தானிருக்கும்.

அன்னை மிகவும் கடினவுழைப்பாளி என்று பெயர் வாங்கியவர். இரவில் அவர் 2 அல்லது 3 மணி நேரத்திற்குமேல் தூங்கியதில்லை. ஆசிரமவாசிகள் எழுதும் கடிதங்களுக்குப் பதில் எழுதுவதற்காக பகவான் இரவில் தினந்தோறும் 12 மணிக்கு மேல் வரை விழித்து இருந்து எழுதுவாராம். இதை அவர் சுமார் 20 வருடங்கள் செய்தார். அன்னை தம்முடைய அறிவுரைகள் ஒன்றில், "உங்களால் அதிகபட்சம் என்ன முடியுமோ அதைச் செய்யுங்கள். அது கடினமாக இருந்தாலும் பரவாயில்லை'' என்று சொல்லியிருக்கின்றார். கடின உழைப்பிற்கு நாம் முன் வாராமல் கடினமான காரியங்களைச் சாதிக்க முடியாது.

கடந்த இரண்டு வருடமாக கர்மயோகி அவர்கள் தம்முடைய கட்டுரைகளில் அன்னை அன்பர்கள் தம்முடைய மாத வருமானத்தை லட்ச ரூபாய்க்கு உயர்த்திக்கொள்ளலாமென்று எழுதிக்கொண்டு வருகிறார். இந்த வருமானம் 9.00 to 5.00 work scheduleஐ மட்டும் ஏற்றுக்கொள்பவர்களுக்குக் கிடைப்பது கடினம். "வேலை முக்கியம். மற்றனவெல்லாம் இரண்டாம்பட்சம்'' என்ற மனநிலை உள்ளவர்களுக்குத் தான் இது கிடைக்கும். தரிசன நாட்களில் வேலையை விட்டுவிட்டு தியான மையங்களுக்கு வந்து தியானம் செய்ய முடியாத அளவிற்கு வேலையில் பிஸியாகவுள்ள அன்பர்கள் இருக்கின்றார்கள். மற்ற அன்பர்கள் இதையொரு குறைபாடாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அன்னை, "உழைப்பு என்பது உடலின் வழிபாடு'' என்று தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். அதன்படி பார்க்கும்பொழுது தரிசன நாட்களிலும் வேலையை விடாமல் செய்கின்றவர்களும், அந்நாளில் அன்னையை பிரார்த்திக்கின்றார்கள் என்று தான் ஆகிறது.

தொடரும்.....

*****



book | by Dr. Radut