Skip to Content

07. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

 

ஓம் மதர் ஸ்ரீ அன்னை!
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!
ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!

நான் அரசாங்க உத்யோகத்தில் வேலை செய்கிறேன். நான் ஒரு சுருக்கெழுத்து தட்டச்சர். 21-3-07 அன்று அலுவலகத்தில் கடிதம் வாங்கும் அன்பர் பணிக்கு வாராததால், அன்று எல்லாத் தபால்களும், கோப்புகளும் பணியின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு நான் வாங்கினேன். கல்வித் துறையில் இருந்து ஒரு கோப்பு பெறப்பட்டு, அலுவலக மேலாளரிடம் கோப்பு பற்றி விவரித்துப் பேசினேன். அக்கோப்பில் 50 சத்துணவு மையங்களுக்கு LPG gas connection மேடை அமைக்கும் பணிக்காக ரூ.10,00,000/- காசோலையுடன் பெறப்பட்டது. நான் மேலாளரிடம் காண்பித்துவிட்டு, அன்றைய பணியில் சேர்ந்த ஒருவரிடம் தபாலில் entry போடுமாறு கூறிவிட்டுச் சென்றேன். அன்று மாலை 4 மணியளவில் கோப்பு காணவில்லை. அன்னையின் பக்தர் ஒருவரிடம் இதைப்பற்றி அழுதுகொண்டே பஸ்ஸில் பேசினேன். மாம்பலத்தில் உள்ள தியான மையத்திற்குச் சென்று காணிக்கை செலுத்தி, அன்னையிடம் சமர்ப்பித்தேன். மறுநாள் அன்றைக்கு எந்தெந்த துறை தபாலுக்கு வந்ததோ, அங்கு எல்லாம் சென்று பார்த்தனர். புதிதாகப் பணியில் சேர்ந்தவரும், மேலாளரும் ஃபைலைத் தேடிச் சென்றனர். அலுவலர் அனைத்து பீரோக்களிலும் தேடச் சொன்னார். மறுபடியும் தியான மையம் சென்று எனது மனக்குழப்பத்தைத் தெரிவித்தேன். எனக்கு எப்படி பிரார்த்தனை பண்ணவேண்டும் என்று தெரியாது. அப்போது, தியான மையத்தில், "பிரச்சினையை உன்னிடத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறாய். அன்னையிடம் விட்டுவிடவும்'' என்றனர். மேலும் சுந்தரம் CIT நகரில் இருக்கும் தியான மையத்திற்குப் போக சொன்னார்கள். அங்கேயும் பிரார்த்தனை பண்ணினேன். "அன்னை எத்தனையோ பேர்களுக்கு நல்லது செய்து இருக்கிறார். கவலைப்படவேண்டாம்'' என்று கூறினர். என்னுடைய தோழியும், தினந்தோறும், "கோப்பு கிடைத்ததா?'' என்று கேட்டுக்கொண்டே இருப்பார். என் தாயாரும் காலபைரவருக்கு வேண்டிகொண்டு, இரும்பைத் தண்ணீரில் போட்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றச் சொன்னார்கள். யார், எது சொன்னாலும் அன்னை கூறுவதாக நினைப்பேன். இப்படியாக 26 நாட்கள் ஓடிவிட்டன. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக இருந்தது; வீட்டில் குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை; சமையல் செய்ய முடியவில்லை; எப்பொழுதும் கோபமாக இருந்தது. 16-4-07 அன்று அன்னையிடம் "இன்று வாழ்வா, சாவா?” என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். இதற்கிடையில் இரு தினங்களுக்கு முன்னால் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. 16-4-07 அன்று காலை அலுவலகத்திற்கு வந்துசேர்ந்தேன். இங்குதான் அன்னையின் miracle ஒன்று நடந்தது. குழப்பமான சூழல் மனம் தியானத்தைகூட மேற்கொள்ள முடியவில்லை. அன்று அன்னையின் புத்தகத்தைத் தரும் என் தோழி அலுவலகத்திற்கு வந்தார். "ஏன் இன்னும் கோப்பு கிடைக்கவில்லை? எங்கோ தவறு நடந்து இருக்கிறது. உன் ஆழ்மனத்தில் கோப்பைப் பற்றி நினைவு இருக்கிறது. இதுவே ஒரு தடையாகும்'' என்றார். அவள் உடனே Sunshade என்று சொல்லச் சொன்னார்கள். எப்படி பிரார்த்தனை செய்வது என்பது பற்றியும் சொன்னார். என்னுடைய உள்மனத்திலிருந்து நினைவை நீக்கி, அன்னையிடம் சமர்ப்பணம் செய்தேன். நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது சுமார் 2½ மணி இருக்கும். என் சக ஊழியர் "மேடம், கோப்பு கிடைத்துவிட்டது'' என்று கூறினார். எனது அலுவலகம் இரண்டாவது மாடியில் உள்ளது. முதல் தளத்தில் இருந்து கோப்பு கிடைத்தது. Sunshade என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிந்தது. கண்ணீர் மல்க ஆனந்தக் கண்ணீருடன் அன்னைக்குக் கோடானு கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியிலிருந்து அன்னை எனக்கு ஒரு பாடம் சொல்லியிருக்கிறார். "உனக்குத் தேவையில்லாத வேலையைச் செய்யக்கூடாது என்றும், பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டாம் என்றும்” அறிவுறுத்தப்பட்டது. அன்னை என் மனதில் உள்ளதை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு, பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
குடும்பத் தலைவர் கட்டுப்பாட்டை வலியுறுத்தாவிட்டால், குடும்பம் உருவாகாது. கட்டுப்பாடு எனும் குடும்பப் பண்பைக் குலைக்க, குடும்ப முக்கியஸ்தர் முனைந்தால், எந்தக் குடும்பமும் அதிக நாள் நீடிக்காது. உயர்ந்த குடும்பம், தாழ்ந்த குடும்பத்தில் சம்பந்தம் செய்தால் இந்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட குடும்பங்கள் உடையாமலிருக்கும் அதிசயத்தை அன்னையின் அருளில் காணலாம்.
 
தாழ்ந்த சம்பந்தம் குடும்பத்தை அழிக்கும்.
அதையும் காக்கும் அதிசயம் அன்னையின் அருள்.

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அருள் அதிகரிக்கும்பொழுது அறியாமையும் அதிகரிக்கின்றது.
ஏதோ ஒரு நிலையில் அருளும் அறியாமையும் ஒன்றல்லவா?

 

****



book | by Dr. Radut