Skip to Content

09.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா - மாயா, பிரகிருதி, சக்தி

"அன்பர் உரை"

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி

                                                     (சென்ற இதழின் தொடர்ச்சி....)

(இராணிப்பேட்டை தியான மையத்தில் 15.8.2003 அன்று திருமதி. வசந்தா லக்ஷ்மி

நாராயணன் நிகழ்த்திய உரை)

பத்து பேர் ஒரு தொப்பியைக் கண்டால் ஒன்பது பேருக்கு அது தொப்பியாகத் தெரியும். ஒருவர் இந்த தொப்பி அறிவாளிக்கு உரியது என்கிறார், அவர் சிந்திப்பவர். தொப்பி பெரியது என்று அவருக்குத் தெரிகிறது, பெரிய தொப்பிக்கு உரியது பெரிய தலை என்பதால் அவர் அறிவாளி என்று முடிவு செய்கிறார்; இதற்கு சிந்தனை என்று பெயர். தொப்பியையும், தலையையும் இணைத்துப் பார்ப்பது சிந்தனை.சிந்தனை இல்லாதவருக்கு இது புரியாது. சாவி தொலைந்தால் அன்னையை அழைக்கிறோம், உடனே கிடைக்கிறது. இது நம்முடைய உண்மையான அனுபவம், நமக்குப் புரிவது இல்லை. சாவி என்பது ஜடப்பொருள், சாவி நமக்குப் பயன்படுவதால் நம்முடன் தொடர்புகொள்கிறது. நம் கவனமும், நினைவும் தொடர்புக்கு உரியன; கவனம் குறைந்தால் தொடர்பு குறைகிறது; தொடர்பு அறுந்தால் சாவி தொலைகிறது. விழிப்புப் போய் கண்மூடியாகிறோம். அன்னை விழிப்பே உருவானவர், உலகமே அவருள் உள்ளது. நாம் அவரை அழைக்கிறோம், அழைப்பால் தொடர்பு ஏற்படுகிறது, அழைப்பைக் கேட்டு அன்னை வருகிறார், அன்னை நம் நினைவைத் தொடுகிறார். சாவி அன்னை ஜீவியத்தில் உள்ளது. சாவி இருக்கும் இடம் தெரிகிறது, கிடைக்கிறது. சத்தியஜீவியத்தினுள் உலகம் உறைவதை மனம் ஏற்கவில்லை, எனவே புரியவில்லை. ஒரு கம்பெனியில் தினசரி வருமானம், மாத வருமானம், நிலை, கூலி, ஆகிய பல விஷயங்களை அட்டவணையாக எழுத நமக்கு மூன்று மாதங்கள் ஆகும். கம்ப்யூட்டரில் இந்த விஷயங்களை டைப் செய்ய நமக்கு ஒரு மணி நேரம் ஆகும். டைப் முடிந்தவுடன் கம்ப்யூட்டர் அட்டவணையைத் தருகிறது, நமக்கு அது ஆச்சர்யம். புருஷன் அனந்தம், அவன் செயல் அனந்தம்; அவை அறிவிற்கு உட்பட்டவை அல்ல, அதனால் அதற்கு அர்த்தம் இல்லை என்று ஆகாது. அர்த்தம் புரிந்தால் அதன் செயல் விளங்கும். தொடர்பு இல்லை என்றால் புதிராக இருக்கும். ஒரு குழந்தை சண்டி செய்கிறது, அன்பால் சமாளிக்க முடியவில்லை, பள்ளிக்கூடம் போக மறுக்கிறது. திட்டினால், அடித்தால் குழந்தை அடங்குகிறது. அடியும், திட்டும் அன்பால் எழுந்தது என்பது வினோதம்.

இதை பகவான் ஹையர் ரீசன் (higher reason) என்கிறார். ஒரு கூடையில் பல பொருட்களைப் போடுகிறோம். எடுக்கும்போது போட்டது நினைவு வருகிறது. ஒருவன் கதையைப் படிக்கிறான், பிறருக்குச் சொல்கிறான்; இரண்டும் ஒன்று. கூடையில் போட்ட பொருட்கள் கண்ணுக்குத் தெரிகின்றன, எடுக்கும்பொழுது அது புரிகிறது. கதை மனதில் போய் வெளிவருகிறது, அது புரிவது இல்லை. கூடையும் பொருட்களும் ஜடம், கதையின் நினைவு சூட்சுமம். ஜடம் புரிவதுபோல் சூட்சுமம் புரிவது இல்லை. அனந்தமான பிரம்மம் கண்ணுக்குத் தெரியாது. உலகம் அதிலி ருந்து எழுந்தது என்கிறார்கள். பிரம்மம் சூட்சுமத்தைக் கடந்தது. சூட்சுமத்தைக் கடந்து காரணத்தையும் கடந்தது. பிரம்மம் தெரியவில்லை, புரியவில்லை. எதிலிருந்து எது வருகிறது என்று விளங்கவில்லை, ஆனால் உலகம் உண்மை; இது ஒரு புதிர். 100 ஏக்கர் பொட்டல்காட்டை ஒருவர் பெரிய தொழிற்பேட்டையாக மாற்றுகிறார். அவரைப் பார்க்கிறோம், செயலைப் பார்க்கிறோம்; தொடர்பு தெரியவில்லை, ஆனால் நாம் அதை மறுப்பது இல்லை. இந்தத் தொழிலதிபர் பிரம்மத்தில் இருந்து வந்தவர்.

அவரே இந்தத் தொழிற்பேட்டையை உற்பத்தி செய்த பிரம்மம். தொழிற்பேட்டையைத் தொழிலதிபர் உற்பத்தி செய்தார், அதேபோல் உலகம் பிரம்மத்திலிருந்து எழுகிறது. நம்முள் அந்த பிரம்மம் உண்டு. அங்குப் போனால் உலகம் பிரம்மமாகத் தெரியும், பிரம்மம் உலகமாகத் தெரியும். நம் உடல் அணுக்களாலும், செல்களாலும் செய்யப்பட்டது. அணுவின் சட்டம் உடல் இயங்குவதை விளக்குவது இல்லை. மனமும், ஆன்மாவும் உடன் சட்டத்தால் விளக்கப்படுவது இல்லை. விவசாயம், வியாபாரம், மார்க்கெட், கல்வி, போன்றவை சர்க்காரின் அம்சங்கள். பார்லிமெண்ட் இயற்றும் சட்டங்களையோ,மந்திரி சபையின் சட்டங்களையோ விளக்குவது இல்லை; நடைமுறையில் அவை முரணாக இருக்கின்றன. ஒன்றை மற்றது அழிப்பதாக அமைகிறது. பயிர் அறுவடை ஆனபின் பேங்க் பயிரிட கடன் தருகிறது, ஸ்காலர்ஷிப் வசதி உள்ள பிள்ளைகளுக்குப் போகிறது, அணையைக் கட்டினால் பயிரிடும் நிலங்கள் அழிவதாக அமைகின்றன. கண்டத்தின் பின்னால் அகண்டம் உண்டு. அதுவே கண்டத்தைப் பூர்த்தி செய்யும். கண்டித்தால் பையன் நன்றாகப் படிப்பான், ஆனால் கண்டிப்பிற்கு அளவு உண்டு. பட்டினி இருக்கும் பையனுக்குக் கண்டிப்புப் பயன்படாது. மதிய உணவு அதிக பிள்ளைகளை வரச்செய்யும். படிப்பு வருமா எனத் தெரியவில்லை. பெற்றோர் கவனமும், பெற்றோர் படிப்பும் மாணவன் படிப்பை நிர்ணயிக்கும். அவை பலன்பெறச் சில தலைமுறைகள் காத்து இருக்கவேண்டும். எதற்கும் பின்னால் அடுத்த நிலை உண்டு. அது பிரம்மம்வரை தொடரும்.

மனித ஜீவியம் வளர்வதே வளர்ச்சி என்றார் நேரு. குடும்பம் படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்தால் பையன் நன்றாகப் படிப்பான். அடுத்தபடிப் பையனின் ஜீவியம் விழிப்புற்றால் முன்னேற்றம் அதிகம். பல தலைமுறைகளாக நன்றாகப் படித்த பெற்றோரின் குழந்தைகள் நன்றாகப் படிக்கும். இவற்றின் பின்னால் பிரம்மம் உள்ளது. அதிகபட்சப் பலனுக்கு பிரம்மத்தை நாடவேண்டும். பிரம்மத்தை நாடினால் அதிகபட்சப் பலன் வரும். பிரம்மம் புரிய பகுதிகள் பயன்படா. நாம் பிரம்மத்தை நாடினால் பிரம்மம் புரியும்.புருஷன் காலத்தைக் கடந்தவன், நாம் காலத்தில் வாழ்கிறோம். நம் மனம், நோக்கம், இலட்சியம், நடத்தை காலத்தில் உள்ளன. நம் சட்டங்கள் பிரம்மத்தையோ, புருஷனையோ அறிய உதவா. இருப்பினும் நாம் அதையே செய்கிறோம். நாடு ஜாதியால் ஆளப்படுகிறது, குடும்பத்தில் பெண் ஆணுக்கு அடக்கம், சிறுவர் பெரியவருக்கு அடக்கம். கோர்ட் சட்டத்தை அமல்படுத்துகிறது. சட்டத்தின்முன் சகலரும் சமம். தாழ்ந்த ஜாதிக்காரன் உயர்ந்த ஜாதிக்காரனிடையே குடி இருக்கக்கூடாது எனக் கோர்ட்டிற்குப் போகமுடியாது. பிரின்ஸ்பால் மகன் தன்னைவிட மற்றவர் அதிகமாக மார்க் பெறக்கூடாது எனக் கேட்கமுடியாது, ஸ்தாபகர் மகனும் கேட்கமுடியாது. மார்க் போடும் சட்டம் பிரின்ஸ்பால் மகனுக்கு விசேஷ சலுகையைத் தாராது. நாம் கடவுளை அறிய முயன்றது இதுபோன்ற செயல் ஆகும். நமக்குப் புருஷனும், பிரகிருதியும் தெரியும். பிரம்மம் இரண்டையும் உட்கொண்டது இல்லை என்று நாம் நினைப்பது இல்லை. கடவுள் அநியாயமானவர் இல்லை என நாம் பறையறைவிப்போம், நம்புகிறோம். உண்மையில் அநியாயம் ஆண்டவனுடைய நியாயம். மனிதனுக்கு நியாயம் வழங்க தெய்வம் கையாளும் முறைகளில் அதுவும் ஒன்று. நம் வாழ்வு மேல்மனத்திலும், ஆழத்திலும் உள்ளது. சட்டங்கள் அளவுகடந்து மாறுபடும். மேலே உள்ள சட்டங்கள் கீழே செல்லாது. கோர்ட் சட்டத்திற்குக் கால வரையறை உண்டு. உரிமை, அளவு, காலம் கருதி கோர்ட் கேஸை ஏற்கும். மனித வாழ்வு நியாயத்திற்குக் கட்டுப்பட்டது. நாலு வருஷத்திற்குமுன் கொடுத்த கடனை வசூலிக்க சட்டம் இல்லை, ஆனால் வாங்கியவர் திருப்பிக்கொடுப்பதைச் சட்டம் மறுக்காது. குடும்பம் பாசத்திற்கும், பிரியத்திற்கும் கட்டுப்பட்டது, அது சட்டத்திற்கு உட்படாது. பெற்றோரைப் பராமரிக்க கோர்ட் ஆர்டர் போடமுடியாது, ஆர்டர் போட்டாலும் அமுல் செய்யமுடியாது. மனம் அறிவிற்கு உட்பட்டது, வாழ்வு அறிவிற்குக் கீழ்ப்பட்டது. வாழ்வைக் கட்டுப்படுத்த சூட்சுமம் வேண்டும். அறிவு வாழ்வைக் கட்டுப்படுத்த முயன்றால் முடியாது. நீச்சல் தெரியாதவனுக்கு ஆறும், ஏரியும் எச்சரிக்கை செய்வது இல்லை, பொய் மணலும் அப்படியே. நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் இறங்கி உயிரை இழக்கிறான். ஏன்? எச்சரிக்கை செய்யக்கூடாதா என்று தண்ணீரை நாம் கேட்பது இல்லை. சூட்சுமமானவன் பொய் மணலில் இறங்கும்போதே ஆபத்து இருப்பதை உணர்வான். சூட்சுமமானவனுக்கு ஆபத்து தன்னை அறிவிக்கும். அது எச்சரிக்கை. பிரம்மத்தை அறிய விரும்புபவனுக்கு பிரம்ம சூட்சுமம் தேவை. அது இல்லாதவனுக்குக் கடவுளோ, தெய்வமோ, பிரம்மமோ இல்லை. அறிவிற்கு உட்படாத வாழ்வை அறிவு சமாளிக்க முடியாது. வாழ்வைச் சமாளிக்கமுடியாத அறிவால் அறிவிற்கு மேற்பட்ட ஆன்மாவைச் சமாளிக்க முடியாது. புத்தர் பெற்ற ஞானோதயம், சங்கரர் புத்த மதத்தை வென்றது. ஆயிரக்கணக்கான அருளின் செயல்பாடுகளை ஞானத்தால் விளக்கலாம், அறிவால் விளக்கமுடியாது. சேல்ஸ்மேன் M.L.A ஆவது, டிரைவர் மந்திரியாவது,

பேங்கில் கேட்பதைவிட அதிகம் தருவது, செலக்ஷனில் தேறாத மாணவன் பரீட்சையில் பரிசு பெறுவது, ஆகியவை அருளின் செயல். அறிவிற்குப் பொருத்தமில்லாத இவற்றின்பின் கவனிக்காமல் விட்டுப்போனவை உண்டு. சேல்ஸ்மேனுடைய திறமை, டிரைவருடைய அரசியல் ஆர்வம், வாடிக்கைக்காரருடைய உழைப்பு, மாணவனின் புத்திசாலி த்தனம் பின்னணியில் உள்ளன. இவை அறிவின் கண்ணில் படா. ஞானம் தவறாது கவனிக்கும். இவற்றைக் கவனிக்கும் ஞானம் பிரம்மத்துடன் உள்ள தொடர்பைக் கவனிக்கும். அறிவைக் கடந்தது அறிவில்லாதது ஆகாது. ஞானம் கவனிப்பதை அறிவு கண்டுகொள்வதில்லை. கண்டுகொண்டால் அவற்றை நம் வழியில் தவறாகப் புரிந்துகொள்கிறோம். காக்கி உடை அணிந்து இருப்பதால் முனிசிபல் சிப்பந்தியை போலீஸ்காரர் என்று நினைப்பது தவறு என்பதுபோல் நாம் தவறு செய்கிறோம்.

Pride and Prejudiceஇல் கதை முடியும்பொழுது டார்சிக்கு எலிசபெத் மீது பிரியம் என அறிகிறோம். பரந்த நோக்கம் உள்ள ஞானத்தை அக்கதையின் ஆரம்பத்திலேயே அறியமுடியுமா? எலிசபெத்திற்கு அது தெரிந்து இருக்கமுடியுமா? என்பதைக் கருதாது நிகழ்ச்சிகளுள் இக்கருத்து ஒளிந்துள்ளதை நாம் காணமுடியும்.

. பிங்கிலி டார்சியை டான்ஸ் ஆடச் சொல்கிறான். இது வழக்கம் இல்லை. இக்கதையில் இருமுறை அதுபோல் கேட்பது எலிசபெத்திற்காகவே. காரணம் இல்லாமல் பிங்கிலி கேட்கவில்லை, முடிவில் புரிகிறது.

. ஷார்லட் எலிசபெத்தை டான்ஸ் ஆடச் சொல்கிறாள்.

. "பரவாயில்லை'' என்று டார்சி சொல்லியபொழுது குரலைக் கவனித்து இருந்தால் அபிப்பிராயம் தெரியும்.

. சர் லூக்காஸ் டார்சியை டான்ஸ் ஆட அழைக்கிறார்.

. மிஸ் பிங்கிலியின் போட்டி.

.டார்சி மறுத்தபின் எலிசபெத் கவலைப்படவில்லை.

. டார்சி அவளை ஆட அழைக்கிறான்.

. விக்காம் டார்பிஷயரிலிருந்து வருவது அதற்குமுன் அங்கிருந்து வந்த டார்சிக்கு முக்கியத்துவம் தருகிறது.

. பிங்கிலி வீட்டில் எலிசபெத் தங்குகிறாள்.

இவைகளும் வேறு சில சிறிய விஷயங்களும் அவற்றின் முக்கியத்துவத்தை முடிவில் தெரிவிக்கின்றன. இவற்றை எல்லாம் அவள் கருதி இருந்தால் கதையின் போக்கு மாறி இருக்கும். ஆரம்பத்திலேயே அவளுக்கு டார்சியின் காதல் தெரிந்து இருக்கும்.அறிவிற்குப் பின்னால் உள்ள ஆன்மீகத் தொடர்புகள் அவை. இந்த அறிவுரைகளைத் தவறாமல் கவனிப்பவர் பிரம்மத்திற்கும் வாழ்விற்கும் உள்ள தொடர்பைக் கவனிப்பார். மேற்கூறியவற்றை அர்த்தமற்றவை, கர்வம், வீண்பெருமை, போட்டி, தற்செயல் என நாம் அறிந்துகொள்கிறோம். அப்படியானால் விஷயம் விட்டுப்போகும். எதுவும் காரணமின்றி நடக்காது. அப்படிப் பார்ப்பது உயர்ந்த அறிவு. விக்காம் அழகில் மயங்கி அவன் கூறியதை நம்பினாள். கடிதத்தைப் படித்தபின் எப்படி முதல்முறை சந்திக்கும்போது முன்பின் தெரியாதவர்மீது விக்காம் சொல்லிய புகாரைத் தான் நம்பினேன் என்று வியந்தாள். ஒரு நிமிஷம் தயங்கி இருந்தால் உண்மை வெளிப்பட்டு இருக்கும். தெரியாது என்பது இல்லை. அறிவிற்கு முதலில் தெரிவது கடினம். ஞானத்திற்கு முதலேயே தெரியும். அறிவிற்குப் புலப்படாது என்பது இல்லை. அறிவு அவை வேண்டாம் என நினைக்கின்றது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றிச் சக்திகள் உலவுகின்றன. அவற்றுள் சில முடிந்த முடிவுகள், மற்றவை நடக்கக்கூடியவை. நாம் முடிவைக் காண்கிறோம். சக்திகளின் நடமாட்டத்தைக் காண்பது இல்லை. நடக்கலாம் என்பவையும், நடந்துமுடிந்தவை பெரிய முடிவை நாடுவதையும் நாம் காண்பது இல்லை. ஒரு கதையில் இவை தெளிவாகத் தெரியும். பிங்கியும், டார்சியும், நெதர்பீல்ட் வந்து லாங்பர்ன் குடும்பத்தைப் பார்த்து, ஜேன் மீது பிரியப்பட்டு, டார்சியால் அது ரத்தாகி லண்டன் திரும்புகின்றனர். தற்செயலாக டார்சி அவளை மீண்டும் சந்தித்து மணக்க விரும்பி திட்டு வாங்குகிறான்.லிடியா ஓடிப்போனதால் மீண்டும் அவர்கள் சந்தித்து மணக்கின்றனர் என்பது கதை. எலிசபெத்தின் வாழ்வுப் பாதையில் டார்சி குறுக்கிட்டது தற்செயலாய் நடந்தது இல்லை. நாட்டில் புரட்சி அலைகள் டார்சியை எலிசபெத்தை நாடும்படிச் செய்கிறது. அவள் புரட்சி மலர் என்பதால் அவன் அவளை நாடுகிறான். சக்தி என்ற அத்தியாயத்தை ஸ்ரீ அரவிந்தர் ஆரம்பிக்க உலகம் இயங்குவது சக்தியால் எனக் கொள்வது சரி என்கிறார். ஆயுதம் தாங்கிய புரட்சி அன்பால் மலர ஆன்ம விழிப்பு உள்ளவனைத் தேடும்படி புரட்சி டார்சியை வற்புறுத்துகிறது. இவர்களை இணைக்கும் பாலமாகப் பணமுள்ள பிங்கிலி இடையே வருகிறான்.

தொடரும்....

****


 



book | by Dr. Radut