Skip to Content

03.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னைக்கு!

அடியேனின் வணக்கங்கள் பல, தங்களுக்கு உரித்தாகட்டும். அடியேனின் மனதில் 10 ஆண்டுகளாக அன்னை இருந்து என்னை வழிநடத்தி அருள்புரிகின்றார். சொசைட்டியின் மலர்ந்த ஜீவியமும் எனக்குப் புத்துணர்வு அளித்து வருகின்றது.

கடந்த 25.8.03 அன்று காலை எனக்கு உடல் ஜில்லிட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். வயிற்றிலுள்ள ஒரு இரத்தக்குழாய் வெடித்துவிட்டதால் உடனே அறுவை சிகிச்சை செய்தால்தான் நல்லது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை. உறவினர்களுக்குச் சொல்லிஅனுப்புங்கள் என கையெழுத்து பெற்றுக்கொண்டனர். என்னால் பேசவோ, அசையவோ, கண் திறக்கவோ இயலவில்லை எனினும் அவர்கள் பேசுவதைக் கேட்க முடிந்தது. எனக்கு எந்தவிதமான கலக்கமோ, மரண பயமோ ஏற்படவில்லை. அன்னை விருப்பம் எதுவோ அவ்வாறே நடக்கட்டும் எனச் சுயநினைவு இருந்தவரை பிரார்த்தித்தேன்.

ஐந்து மணி நேர அறுவை சிகிச்சையின்பின், உறுதியாக உயிருக்கு உத்தரவாதம் கூற இயலாத நிலையில் ICUவில் என்னை அன்று வைத்திருந்தார்கள். மறுநாள் இரவு நான் தூங்கிக்கொண்டு இருந்தபொழுது ஒரு வெண்ணிற, வயதான கை ஒன்று என் வயிற்றைத் தடவிவிடும் ஸ்பரிச வெப்பத்தை உணர்ந்தேன். மென்மையாக இதமாக இருந்தது. நர்ஸ் யாராவது தடவுகிறார்களோ என எண்ணிக் கண்ணைத் திறந்து பார்த்தேன். கை மட்டும்தான் தெரிந்தது. ஆபரேஷன் பண்ணிய இடத்தைப் போய்த் தொடுகிறீர்களே எனத் தன்னிச்சையாகக் கூற முயன்றேன். உடனே அந்தக் கை மறைந்துவிட்டது. அதன்பிறகு எனக்கு நல்ல நினைவு ஏற்பட்டும்கூட, அந்தக் கையின் வெப்பமும், ஸ்பரிச உணர்வும் அன்று முழுவதும் உணர்ந்தேன்.

என்னால் கனவா, நினைவா, என நம்பமுடியாமல் இருந்தது. யாரிடமும் கூறவுமில்லை. எனக்கு முழு உருவம் தெரியாததனால், என்னைக் காப்பாற்றிய தெய்வம் யாராக இருந்தாலும் நன்றி என மனதளவில் கூறினேன்.

மறுநாள் என் பெண் வந்து, "அம்மா! உனக்கு மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டியில் இருந்து blessingமலர் வந்துள்ளது'' என்று கூறினாள். அதன் பிறகுதான் அன்னையின் கை அது என்பதை அறிந்தேன். இரு நாட்களுக்குப் பிறகு மலர்ந்த ஜீவியம் புத்தகம் வந்தது. தற்செயலாக பிரித்த பக்கத்தில், "அன்னையின் அன்பர்களுக்கு ஜாதகத்தில் இருப்பதைவிட ஆயுள் கூடும்'' என்ற செய்தி வந்திருந்தது ஆச்சரியம்!

அறுவை சிகிச்சை செய்த எல்லா டாக்டர்களும் வந்து, "நீங்கள் பிழைத்தது miracleதான், God's Graceதான், எந்தக் கடவுளை பிரார்த்தித்தீர்களோ, நேர்த்திக்கடன் செய்துவிடுங்கள். மேலும் எங்களுக்கு அறுவை சிகிச்சையில் வெற்றி தந்ததும், நீங்கள் prayசெய்த கடவுள்தான்'' என்றனர். என் மனம் நன்றியால் நிறைந்து அன்னையைப் பிரார்த்தித்தது.

என்னைப் பலவாறாகக் காத்துவரும் அன்னைக்கு எவ்வாறு கைம்மாறு செய்யப்போகிறேன்? அன்னையே! என் வாழ்நாளிலும், பிறகும் எனக்குத் துணை நீயே அம்மா! உன் தாள் பணிகின்றேன்! என் குடும்பத்தை ஆசீர்வதி, தாயே!


 

****


 


 


 



book | by Dr. Radut