Skip to Content

10.இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

"அன்னை இலக்கியம்''

இதுவோ உம் ரௌத்திரக் கருணை!

                                                                              (சென்ற இதழின் தொடர்ச்சி....)             இல. சுந்தரி

"ப்ரீத்தி! நேற்று மாலை உன்னிடம் அன்னை ஏதோ சொல்லப் போகிறார் என்றாயே? உன்னை அழைத்தாரா?'' என்று ஆவலுடன் கேட்டாள் உமா.

இவளுக்குத்தான் எத்தனையார்வம்? என்னைப் பார்த்தவுடன் அன்னையைப் பற்றிப் பேசாதிருக்கமுடியாது இவளால். ஒருவேளை, அன்னை குறிப்பிட்ட தோழி இவளாக இருக்குமோ என எண்ணமிட,

"என்ன ப்ரீத்தி! நான் கேட்பது உன் காதில் விழவில்லையா?'' என்றாள் உமா.

"ஆமாம் உமா. அதைப் பற்றித்தான் சிந்திக்கிறேன். நேற்றிரவு அன்னை என்னை அழைத்தார்கள். ஒரு செய்தி எழுதப்பட்ட அட்டையை என்னிடம் தந்து "இதை உன் தோழியிடம் கொடுத்துவிடு '' என்று பொதுவாகச் சொன்னார்கள். தோழியின் பெயரைக் கேட்க மறந்துவிட்டேன். வீட்டிற்கு வந்தபிறகுதான் அந்த, என் தவறு புரிந்தது. இந்த என் அரைகுறைச் செயல் அன்னைக்குப் பிடிக்காதது. இதை யாரிடம் கொடுப்பது என்று குழப்பமாகவுள்ளது'' என்று கூறியபடி புத்தகத்தைப் பிரிக்க அழகான பார்டர் கட்டப்பட்டு பூக்கள் வரையப்பட்ட அட்டை செய்தியுடன் காணப்பட்டதை உமா பார்த்தாள்.

"ப்ரீத்தி! தோழி என்று அன்னை கூறியவுடன், உனக்கு என் நினைவு வரவில்லையா?'' என்றாள் ஏக்கத்துடன்.

"வந்தது உமா. ஆனால் அங்கு ஆஸ்ரமத்தில் உள்ள என் தோழிகளை அவருக்கு நன்றாகத் தெரியும். உன்னை ஒரு முறைதான் அழைத்துப்போனேன். அதுவும் அறிமுகப்படுத்த முடியவில்லை. எனவேதான் குழப்பம்'' என்றாள் ப்ரீத்தி.

"அந்தச் செய்தியையாவது காட்டேன். கண் குளிர ஒரு முறை பார்க்கிறேன்'' என்று ஆர்வம் பொங்கக் கேட்டாள் உமா.

ஒருவருக்குத் தரச் சொன்னதை மற்றவரிடம் காண்பிப்பது சரியா? என்ற குழப்பத்துடன், அந்தச் செய்தி அட்டையை எடுத்து உமாவிடம் கொடுத்தாள்.

வாங்கிப் பார்த்தவுடன், கண்கள் விரிய, கண்ணீர் தளும்ப, முகம் பிரகாசிக்க, "ப்ரீத்தி! இதை அன்னை என்னிடம் தரச் சொல்லித்தான் கொடுத்திருப்பார்'' என்றாள் உமா.

"எப்படி இத்தனை உறுதியாய்ச் சொல்கிறாய்?'' என்றாள் ப்ரீத்தி.

"என் வினாவிற்கு இதில் விடையிருக்கிறது ப்ரீத்தி'' என்றாள் பரவசமாய்.

"என்ன சொல்கிறாய் உமா? ஒன்றும் புரியவில்லை''.

"ஆமாம் ப்ரீத்தி. அன்று நான் உன்னுடன் அன்னையைத் தரிசிக்க வந்தேனல்லவா? அன்று நான் என் பிரெஞ்சுப் புத்தகத்தில், அவரைப் பற்றி என் மனதில் தோன்றிய செய்தியை ஒரு தாளில் எழுதி வைத்திருந்தேன். அதுவும் இதேபோல், ஓரங்களில் பார்டர் கட்டி, நடுவே பூ வரைந்து, அதில் அச்செய்தியைக் குறிப்பிட்டு இருந்தேன். இதைப்போலவே அந்தத் தாளும் இருக்கும். அன்று உண்மையில் உன்னுடன் தரிசனத்திற்கு வருவேன் என்றோ,அவரைத் தரிசிப்பேன் என்றோ, அந்தச் செய்தியை அவரிடம் சமர்ப்பிப்பேன் என்றோ எதிர்பார்க்கவேயில்லை. அந்தச் செய்திக்குப் பதில்போல் இந்தச் செய்தி அமைந்துள்ளது'' என்று வியப்புடன் கூறினாள்.

"அப்படியா?'' என்று ப்ரீத்தியும் வியப்புடன் கூறிவிட்டு, "அப்படி என்ன செய்திதான் எழுதியிருந்தாய்'' என்று கேட்டாள்.

தன்னுள்ளத்தில் பதிந்துபோன அந்தச் செய்தியை உடனே ஒரு தாளில் எழுதி ப்ரீத்தியிடம் காட்டினாள்.

எண்ணத்தில் இனிக்கின்றாய், எக்கணமும் காக்கின்றாய்,

திண்ணமில்லை என்னிடத்தில் தீவிரமாய் உனையணுக

கண்ணிமையாய்க் காக்கின்றாய், காண்பதற்கு ஏங்குகிறேன்

நண்ணிவந்து நாயேனை நயமுடனே ஏற்றிடுவாய்

என்ற பொருளில் தானெழுதியதைக் காட்டினாள் உமா.

அன்னையின் செய்தியை மீண்டும் உமா படித்துப் பார்க்கிறாள்.

வந்துவிட்டேன் உணராயோ, வாராமல் இருப்பேனோ,

திண்ணமின்றி என்னிடத்தில் நண்ணிடவும் ஏங்குகிறாய்

தீவிரமாய் எண்ணிவிட்டால் ஆவலுடன் வந்திடுவேன்

உன்னகத்தே உற்றுப்பார் உறைகின்றேன் நானங்கே

என்றிருந்தது. ப்ரீத்தியும் படித்துப் பார்த்தாள். "நீ சொல்வது உண்மைதான் உமா. உன் அன்பிற்கு அன்னையின் அழைப்பைப் பார்த்தாயா?'' என்றாள்.

அன்று இருவரும் கனத்த மகிழ்வால் பெருத்த மௌனம் சாதித்தது ஒருவருக்கும் புரியவில்லை.

வீட்டிற்கு வந்ததும் உமா அந்தச் செய்தியை மிகப் பத்திரமாய் வைத்துக்கொண்டாள். அவள் ஆர்வம் மேன்மேலும் வளர்ந்தது. தனக்குள் ஆழ்ந்து அந்த இன்பத்தை அனுபவிக்கும் பணியே பெரும் பணியாயிற்று.

அன்று திடீரென்று சென்னையிலிருந்து உமாவைப் பார்க்க அவள் பெற்றோர் வந்திருந்தனர்.

"உமா!'' என்று ஆர்வத்துடன் அழைத்துக்கொண்டே வந்த அவள் அம்மா அவளை அணைத்துக்கொண்டாள்.

மிகுந்த அமைதியுடன், "வாம்மா!'' என்றாள் உமா.

அம்மாவிற்கு ஒரே வியப்பு. இரண்டு மாதங்களாகியும் தன்னைப் பார்க்கவேண்டும் என்று எண்ணாமல் இவளால் எப்படியிருக்க முடிகிறது? தன்னால் இவளைப் பாராது இருக்க முடியவில்லையே. நான் பரபரப்புடன் ஓடிவருகிறேன். இவள் முற்றும் துறந்த முனிவரைப்போல் அமைதியாக "வா' என்கிறாளே என்று யோசிக்கிறாள் உமாவின் அம்மா.

தன் சகோதரியையும், அவள் கணவரையும் பார்த்த இவள் மாமா, "வாங்க, வாங்க'' என்று அன்புடன் வரவேற்கிறார். "என்னம்மா உன் மகளை நாங்கள் கவனித்துக்கொள்கிறோமா என்று பார்க்கிறாயா?'' என்று மலைத்து நிற்கும் தன் சகோதரியை இவள் மாமா விளையாட்டாகக் கேட்கிறார்.

"நன்றாகத்தான் பார்த்துக்கொள்கிறீர்கள் என்பது அவள் முகப்பொலி விலேயே தெரிகிறதே. அதுவன்று என் ஆச்சர்யம். என்னைப் பிரிந்து இரண்டு மாதங்களாகியும் இவள் ஊருக்குத் திரும்பவில்லை.தேடிவந்த என்னையும்ஓடிவந்துவரவேற்கவில்லை''என்றுகூறிக்கொண்டிருக்கும்போதே, இவள் குரல் கேட்டு மாமியும் கூடத்திற்கு வந்தாள். இவர்களைப் பார்த்துவிட்டு, "வாங்க, வாங்க'' என்று அன்புடன் வரவேற்றாள்.

"நான் வருவது இருக்கட்டும். என்னை மறக்கும் அளவு என் மகளை மயக்கிவைக்க என்ன மந்திரம் போட்டாய், அதைச் சொல்'' என்று உரிமையுடன் கேலி பேசினாள் உமாவின் தாய்.

"சரிதான் மைதிலி. உன் பெண்ணை என்னிடம் அனுப்பிவிட்டு அவள் இதயத்தை உன்னிடம் வைத்துக்கொண்ட உன்னையல்லவா நான் கேட்கவேண்டும்?'' என்று பதிலுக்கு மாமியும் கேலி செய்தாள்.

"இது என்ன புதுக்கதை கோமதி?'' என்றாள் மைதிலி .

"அதையேன் கேட்கிறாய். அம்மாவைப் பார்க்கவேண்டுமா? என்று கேட்டால், இதயத்தில்எப்போதும் இருக்கும் அம்மாவைப் பார்த்துக் கொண்டுதானேயிருக்கிறேன் என்று உன் பெண் பதில் சொல்கிறாள்''.

அவ்வளவுதான், இதைக் கேட்டதும் மைதிலி தன் மகள் தன்னை மறக்கவில்லை என்ற நிம்மதியில், "அப்படியா சொன்னாய் உமா?'' என்று கேட்கிறாள்.

அவளோ, "உன்னகத்தே உற்றுப்பார் உரைகின்றேன் நானங்கே'' என்ற அன்னையின் செய்தியால் அகமகிழ்ந்து "ஆம்' என்று தலையாட்டினாள்.

"ஏன் உமா? ஊருக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகியும் உன் கைப்பட ஒரு கடிதம்கூட எழுதவில்லையே என்று உன்னைப் பார்க்க ஓடிவந்தேன். இருந்தது போதும், என்னுடன் புறப்படு போகலாம்'' என்றாள் அம்மா.

"அம்மா! அம்மா! இன்னும் சிறிது நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் அம்மா. இப்போதுதான் நல்ல கவனத்தில் வந்திருக்கிறேன். தேறும்போது நிறுத்திவிடாதேம்மா'' என்று கெஞ்சும் பாவனையில் கூறினாள் உமா.

"என்ன கவனம்? என்ன தேர்வு? நீ என்ன சொல்கிறாய்?'' என்றாள் அம்மா ஒன்றும் புரியாமல்.

"அது ஒன்றுமில்லை மைதிலி. குழந்தை பிரெஞ்சு கிளாஸ் போகிறாள். நம் தமிழர்தான் ஒருவர் கற்றுக்கொடுக்கிறார். ஆசைப்பட்டாளே என்று சேர்த்தோம். அதைச் சொல்கிறாள்'' என்றாள் தயங்கித் தயங்கி மாமி.

"சரிதான் போ. ஏதோ சில நாட்களுக்கு அழைத்துவந்தாய். இப்போ எதற்கு பிரெஞ்சும், இன்னொன்றும்?'' என்றாள் அம்மா.

"அப்படியில்லையம்மா. இங்கிலீஷுடன், இன்னொரு மொழியும் தெரிந்திருந்தால் நல்லதுதானே?'' என்றாள் உமா.

"ஆமாம். மிகவும் நல்லது. நேரே பிரான்ஸுக்குத்தான் போகப் போகிறாய்'' என்று அலுத்துக்கொண்டாள் அம்மா.

"பிரெஞ்சுப் படித்தால், பிரான்ஸ் போகவேண்டாம் அம்மா. பாண்டிச்சேரியிலும் பயன்படும்'' என்றாள் உமா.

"நீ கல்யாணம் செய்துகொண்டு, மாமியார் வீட்டிற்குப் போகிறவள். உனக்கெதற்கு இதெல்லாம்?'' என்றாள் அம்மா.

"பாண்டிச்சேரியில் உன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பார் உன் சகோதரன்'' என்றார் உமாவின் அப்பா.

தான், அவர்கள் அனுமதி பெறாமல், உமாவை பிரெஞ்சு வகுப்பில் சேர்த்தது இவர்களுக்குப் பிடிக்கவில்லையோ என்று கவலைப்பட்ட மாமா, "அதெல்லாம் வரன் ஒன்றும் பார்க்கவில்லை. ஏதோ, குழந்தை ஆசைப்பட்டாளே என்று சேர்த்தேன். ஒரு மணி நேர வகுப்புதான்'' என்று மன்னிப்புக் கேட்பதுபோல் பேசினார் மாமா.

"நீ, என்னுடன் வரப்போகிறாயா? இல்லையா?'' என்றாள் அம்மா, உமாவிடம்.

"வந்ததும், வராததுமாய் எதற்கு ஊருக்கு, ஊருக்கு என்கிறாய்? ஏதோ குழந்தை படிக்க ஆசைப்பட்டாள். எங்களுக்கும் குழந்தை இல்லாக் குறை'' என்று மாமி இதமாய்ப் பேசி உமாவின் அம்மாவை ஆறுதல்படுத்த, ஒருவாறு மனம்மாறி அம்மா, உமாவை விட்டு விட்டு ஊருக்குப் போனாள்.

உமாவிற்குப் படிப்பில் ஆர்வம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உள்ளூர அவளுள் "ஆன்மீக விதை' விழுந்து, வேர்ப்பிடிப்பது யாருக்கும் தெரியாது. அவள் புறத்தே போலியாகவும், உள்ளே ஆர்வமாயும் வாழ்கிறாள்.

இது எப்படி?

****

முதன் முதலில் பிரெஞ்சு வகுப்பில் இவள் சேர்ந்ததும் ப்ரீத்தியின் பக்கத்தில் உட்கார இவளுக்கு இடம் கிடைத்தது. பக்கத்து சீட் பெண் என்ற முறையில் அவளை நட்புடன் பார்த்துச் சிரித்தாள். அவளும் இவளைச் சுமுகமாய்ப் பார்த்துச் சிரித்தாள். வகுப்புத் தொடங்கியது.

"இப்பொழுது, முதலில் நான் கூறும் பிரெஞ்சு வாக்கியத்தை நீங்கள் திருப்பிச் சொல்லவேண்டும்'' என்று கூறி ஆசிரியர் ஒரு பிரெஞ்சு வாக்கியத்தைக் கூற அனைவரும் அதைத் திருப்பிச் சொன்னார்கள். "பொருள் புரியவில்லையே' என்று எல்லோரும்

குழம்பியபோது, ஆசிரியரே தமிழாக்கமும் கூறினார்.

"இறைவன் இல்லாத வாழ்க்கை ஒரு துக்கமான மாயை. இறைவனுடன் எல்லாமே ஆனந்தம்'' என்றார்.

பிறகு எழுத்துப் பயிற்சி ஆரம்பமாயிற்று. 1 மணி நேரம் பயிற்சிக்குப்பிறகு வகுப்பு முடிந்து மாணவர்கள் வீடு திரும்பினர்.

ஏனோ முதல் சந்திப்பிலேயே ப்ரீத்திக்கும், உமாவிற்கும் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.

இருவரும் தத்தம் பெயர்களை அறிமுகம் செய்துகொண்டார்கள்.

"உமா! நீங்கள் இதே ஊரைச் சேர்ந்தவரா?'' என்றாள் ப்ரீத்தி.

"இல்லை, ப்ரீத்தி. என் சொந்த ஊர் சென்னை. இங்கே என் தாய்மாமன் வீட்டில் தங்கிப் படிக்கிறேன். நீங்கள் இதே ஊரைச் சேர்ந்தவரா? உங்கள் பேச்சு வித்தியாசமாய் இருக்கிறதே? நீங்கள் ஏன் பிரெஞ்சு படிக்கிறீர்கள்?'' என்று உமா ப்ரீத்தியை விசாரித்தாள்.

"நான் வங்காளத்திலுள்ள ஃபேணியைச் சேர்ந்தவள். அப்பா, பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பக்தர். அப்பாவின்மூலம் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் பெருமைகளை, தெய்வீகத்தை அறிந்ததுமுதல் அவர்களைத் தரிசிக்க ஆவல் எழுந்தது. அன்னையின் கருணையால் இங்கு, ஆஸ்ரமத்தில் தங்கவும் வாய்ப்புக் கிடைத்தது. அவரேதான் என்னை பிரெஞ்சு கற்க அனுப்பிவைத்தார்'' என்றாள் ப்ரீத்தி.

அவள் சொல்லச் சொல்ல, உமா ஆர்வமானாள். "ப்ரீத்தி! நீ எனக்கும் ப்ரீத்தியானவள்தான். அன்னை உன்னை இங்கு பிரெஞ்சு கற்க மட்டும் அனுப்பவில்லை. எனக்காகவும் அனுப்பியிருப்பதாய் உணர்கிறேன்'' என்றாள் உமா.

"என்ன சொல்கிறாய் உமா? ஒன்றும் புரியவில்லையே'' என்றாள் ப்ரீத்தி.

"நான் சென்னையில் வாழும் ஒரு இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவள். தற்செயலாகத்தான் மாமா வீட்டிற்கு வந்தேன். இவர்களுக்கு இங்குள்ள ஆசிரமம் பற்றி ஆர்வமோ, நல்ல நம்பிக்கையோ கிடையாது''.

தொடரும்.....

 ****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு காரியத்தை ஆராய்ந்து முடியாது என முடிவு செய்கிறோம்.அது முடியாமற் போகிறது. அது மனத்தின் கணிப்பு.

முடியாது என முடிவு செய்தால் முடியாது.

முடிவு நிர்ணயிக்கும்.

****


 


 


 

 

 



book | by Dr. Radut