Skip to Content

08.அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

பணம் என்பது நம்பிக்கை. நம்பிக்கை என்றால் என்ன? தெரிந்ததை நம்புவது அனுபவம். நம் நம்பிக்கை என்பது அதன்று. கொலம்பஸ் எதையோ ஒன்றை நம்பி அதை நாடினான். அதுவரை எவரும் காணாதது அது. தெரியாததை அறிவால் புரிந்து நம்புவது நம்பிக்கை. அதற்குத் தேவையானது சூட்சும ஞானம்.

நம்பிக்கை சூட்சும ஞானம்.

செக்கை மறுக்கும் கிராமத்தானுக்குப் பணத்தைப் பற்றிய ஞானமில்லை. செக்கை ஏற்கும் நகரவாசி பணமிருந்தால் நல்லது என்பதும் செக் என்பது பணம் என்றும் சூட்சுமமாகப் புரியவில்லை. ஒரு முக்கிய விஷயம் பேச போனில் பேசுவதைவிட நேரில் பேசலாம் என்பது போன் என்பதை முழுவதும் அறியாதவர் செய்வதாகும். எந்த டாக்டருக்கு கைராசி என்று கேட்பவனுடைய நம்பிக்கை சரி. அது மூடநம்பிக்கை. ஹாலண்டில் பணத்தை வீட்டினுள் உள்ள குப்பைத் தொட்டியின் அடியில் வைப்பார்கள், சாவியைத் தலையணையின் கீழ் வைப்பதைப்போல். திருடன் பணத்தை பெட்டியில் தேடுவான். குப்பைத் தொட்டியில் தேடமாட்டான் என்பது கருத்து. 21ஆம் நூற்றாண்டு பிறந்த பின் ஹாலண்டில் பணத்தை பாங்கில் போடாமல் குப்பைத் தொட்டியில் வைப்பது மூடநம்பிக்கை. குப்பைத் தொட்டியில் ஒளிந்துள்ள பணம் திருடு போகாது என்றாலும் இவை மூடநம்பிக்கை மூலம் ஏற்பட்ட சூட்சும ஞானம். கைராசியை நம்பாத படித்த மனிதன் பெரிய பட்டம் பெற்ற டாக்டரிடம் போவது சூட்சும ஞானமில்லாதது.

நாம் கட்டுப்பட்டி, இக்காலத்து புதிய மனிதர் என்பவர் யார்? இவற்றுள் இருபக்கமும் உண்டு. புதியதை ஏற்பது முன்னேற்றம். புதியது, பேஷன் என்பதற்காக ஏற்பது சரியில்லை. கடந்தது கைவிடப்பட வேண்டும் என்றாலும் கடந்ததில் நல்லவை, உயர்ந்தவை கைவிடப்படக் கூடாது. நல்லதன்று என்று தெரிந்தும் விட முடியாதது மூடநம்பிக்கை. மனம், உணர்வு, உடல் மூன்றும் இத்தகையன. "இது சரி என நான் அறிவேன். நான் நினைப்பது தவறு. என்னால் மாற முடியவில்லை'' என்று கூறினால் பகுத்தறிவை ஏற்க முடியவில்லை என்று தெரிகிறது. இது மனத்தின் குறை. "தியானத்திற்கும், ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கும் எந்தத் தொடர்புமில்லை என நான் அறிவேன். தரிசனத்தன்று ஆழ்ந்த தியானம் கலைந்த பின், ஐஸ்கிரீம் சாப்பிட மனம் ஒப்பவில்லை''. தன்னால் மாற முடியவில்லை, மாறாமலிருப்பது நல்லது என்ற மனப்பான்மையிது. இது உயர்ந்த நம்பிக்கையில்லை. மூடநம்பிக்கை எனவும் கூறலாம். அடுத்த நிலையிலுள்ளவர் பேசுவதில்லை. அவரிஷ்டப்படி நடப்பார்கள். புத்தூரில் எலும்பு கட்டுகிறார்கள். அது பெயர் போன இடம். நான் அங்கே போகிறேன் என்பவர் விவரம் தெரியாதவர். உடைந்த எலும்பை ஆப்பரேஷன் செய்யாமல் நேரடியாகக் கட்ட முடியாது என்பது அவர் அறியாதது. புத்தூர் போய் எலும்பை கோணலாக செட் செய்து கொண்டு வருகிறார். யோசனையில்லாமல், விவரம் அறியாமல் செய்யும் காரியம் இது. புத்தூரை நம்பும் சூட்சும ஞானமுண்டு. ஆப்பரேஷனை நம்பும் சூட்சும ஞானமில்லை.

நாகரீகம், கல்வி, நகரவாழ்வு, புதிய வாழ்வு, உயர்ந்த வாழ்வு, யோகம் ஆகியவை மனிதன் அறியாமையிலிருந்து விலக உதவுபவை. பணம், அதுவும் தானே பெருகும் பணம் எதிர்காலத்திற்குரியது. அதைப் பெற, பெற்றுப் பலன் பெற, எதிர்காலத்தை நம்ப வேண்டும்,  கடந்த காலக் கட்டுப்பெட்டியாக இருக்கக் கூடாது. பணத்தை சமூகத்தின் வழியாகவும், சக்தி எனவும், நம்பிக்கை எனவும், ஸ்தாபனம் எனவும் பல கோணங்களில் அறிய முயல்கிறோம்.

இதன்பின் ஒரு பெரிய தத்துவம் மறைந்துள்ளது. நாம் உலகத்தை அறிகிறோம். வாழ்வை அறிய முயல்கிறோம். ஞானம் என்றால் என்ன, சக்தி என்பது என்ன என்று அறிகிறோம். இவையெல்லாம் முழுமையானவை. முழுமையான சிறப்பை எய்தக் கூடியவை. எந்த விஷயத்தை எல்லாக் கோணங்களிலிருந்தும் அறிய முடியுமோ, அந்த விஷயம் பலன் தரும். பணத்தைப் பல கோணங்களிலும் - எல்லாக் கோணங்களிலும், எல்லா அம்சங்களிலும் - அறிந்தால் அந்த அறிவு பணமாகும். பணம் என்ற பலனை அவ்வறிவு தரும்.

அறிவு பூரணமானால், பலனாக மாறும்.
 

  • பணத்திற்கு ஒரு வரலாறுண்டு.
  • பணம் பொருளாதாரத்திற்கு முக்கியமானது.
  • இதன் திறன் ஒரு சூட்சும ஸ்தாபனத் திறன்.
  • நாட்டு மக்கள் வாழ்வில் எல்லாத் துறைகளிலும் - இராணுவம், அரசியல், கல்வி, போக்குவரத்து, விளையாட்டு, செய்தித்துறை - பணம் முக்கியச் சேவையைச் செய்கிறது.
  • புதிய டெக்னாலஜி வந்தவுடன் அதற்குச் சேவை செய்கிறது.
  • சமூக லட்சியங்களை அரசியல் முதல் பல துறைகளிலும் அடைய உதவுகிறது.
  • பொருளாதார சக்தியாக ஆரம்பித்து சமூக சக்தியாகிவிட்டது.

பணத்தின் அம்சங்கள் அநேகம். அதனால் நம் ஆராய்ச்சியும் அநேக வகையானது. நாம் எல்லா அம்சங்களையும் ஆராய்ச்சி செய்யுமுன் நம் முயற்சி முடிவடைகிறது. நம் ஆராய்ச்சித் திறன் முடியுமிடத்தில் ஆராய்ச்சி முடிகிறது. வேலை முடிந்தாலும், முடியாவிட்டாலும், நம் முயற்சி முடிவடைகிறது.

மனிதன் முடியுமிடத்தில், அன்னை ஆரம்பிக்கிறார்.

நம் முயற்சி முடியுமிடத்தில் வேலை தானே தொடர்ந்து நடந்து தன்னை முடித்துக் கொள்ளும். எந்த அளவு பலன் வரும் என்பது நம் மனத்தின் அளவைப் (personality) பொருத்தது. இதையடையும் நம்பிக்கைக்குச் சரணாகதி எனப் பெயர்.


 

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சிந்திக்க முடியாத மனமும், சிந்தனையை மௌனத்தால் இழந்த மனமும் எதிரெதிரானவை. இடைவிடாத அழைப்பு சிந்திக்க முடியாத மனத்தை, சிந்தனை இழந்த மனமாக்க முடியும்.

ஒரு கோடியை மறு கோடியாக்கும் இடைவிடாத பிரார்த்தனை   

Comments

 08.அபரிமிதமான செல்வம்  

 08.அபரிமிதமான செல்வம்
 
 
Para 4 Para 5           -    இரண்டு Paragraph-களையும்   இணைக்கவும்



book | by Dr. Radut