Skip to Content

09.வாழ்க்கையின் முக்கியமான இடங்களைப் பற்றி அன்னை அன்பர்கள் அறிய வேண்டிய கருத்துகள்

வாழ்க்கையின் முக்கியமான இடங்களைப் பற்றி அன்னை அன்பர்கள் அறிய வேண்டிய கருத்துகள்

(4.11.2001 அன்று கடலூர் தியான மையத்தின் ஏழாமாண்டு தொடக்க விழாவில் திரு. p.v. சங்கர் நிகழ்த்திய உரை.)

       இதுவரை அன்பர்கள் கேள்விப்பட்டவை பல. கேள்விப்பட்டவற்றுள் பல வாழ்வில் நடந்துள்ளன. சில அனுபவத்தில் பார்க்க முடியவில்லை. சமீபக் காலத்தில் சென்னையிலிருந்து ஒருவர் தம் உறவினர் வீட்டு விசேஷத்திற்காகப் பாண்டிக்கு வந்திருந்தார். குழந்தைக்குப் பிறந்த நாள் கொண்டாடினர். அக்குழந்தையை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்குப் போனபொழுது 3 பவுன் நகையை குழந்தை தொலைத்து விட்டதைக் கண்டு தேடி அலுத்துவிட்டுத் திரும்பினர். அவருக்குப் பாண்டி புதிய இடம். தாம் வந்தபொழுது அண்ணன் வீட்டில் தவறு நடந்தது அவருக்குத் தாங்கவில்லை. மனம் பதறியது. பல யோசனைகள் தோன்றின. திடீரென இந்த ஊரில் அன்னை என்பவர் உண்டு என்கிறார்களே அவர்களாவது காப்பாற்றமாட்டார்களா என மனம் ஏங்கி, பிரார்த்தனை செய்து தூங்கிவிட்டார்.

       கனவு, வயதான பெண்மணி இவரை எழுப்பி கனவில் கடைத் தெருவுக்கு அழைத்துப் போகிறார். அங்கு ஒரு ஹோட்டலில் போர்ட் உள்ளது. எதிரில் ஒரு கூல்டிரிங் பார் இருக்கிறது. அவர் அதனருகில் சென்று ஒரு சிறு குப்பை மேட்டைக் காட்டி அதைச் கிளரச் சொல்கிறார். தொலைந்த நகை அதனுள் இருக்கிறது. கனவு கலைந்து எழுந்தார். இது கனவல்லவா எனத் தூங்கினார். காலையில் எழுந்தவுடன் கனவில் கண்டது கண்முன் நின்றது. அண்ணனை அழைத்துக் கொண்டு கடைவீதிக்குப் போனார். ஹோட்டலைக் கண்டார். கூல்டிரிங்ஸ் பார் இருந்தது. அதனருகில் குப்பை மேடும் இருந்தது. கிளறிப் பார்த்தார். நகை இருந்தது!

பிரார்த்தனை பலித்தது, தொலைந்த பொருள் கிடைத்தது, மிக சந்தோஷம்.

இங்கு அது மிகச் சிறு விஷயம். பெரிய விஷயம் அருள் செயல்பட்டது.

நாம் நகையை அறிவோம். அருளை அறிய முடிவதில்லை.

அருள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

விசேஷம் என்ன?

மனித இதயம் கசங்கியபொழுது தெய்வ அருள் குரல் கொடுக்கிறது.

இக்கருத்தை இந்த அன்பர் பெற முடியுமானால், மனம் அன்று போல் என்றும் இருக்க முடியுமானால், இவர் வாழ்வில் அனுதினமும் அருள் செயல்படும்.

தொடர்ந்து அருள் செயல்படும் வாழ்வு உயர்ந்தது, அன்னைக்குரியது.

இதை அவ்வன்பர் ஏற்றுக் கொள்வாரா?

நமக்கு இக்கருத்து ஏற்குமா?

அதன் குறைந்தபட்சம் வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்பட்டு நிலைத்துவிடும்.

அருளின் இந்த அம்சம் நாம் அறியக் கூடியது. பொதுவாக நாம் அறிவதில்லை.

இதுவே கருவான இடம்.

பலித்தது பிரார்த்தனையன்று, பலித்தது அன்னை.

நமக்கு வாழ்வில் முக்கியமான கட்டங்கள்,

1. வேலை

2. வருமானம்

3. செலவு

4. படிப்பு

5. உடல் நலம்

6. திருமணம்

7. உறவு, நட்பு (human relations)

8. குழந்தை வளர்ப்பு

9. அரசியல்

10. மதவழிபாடு, ஆன்மீகம்.

வாழ்வில் பல பெரிய உண்மைகள் நமக்குத் தெரிந்தும், நடைமுறையில் தெரியாமல் போகின்றன.

ஓட்டுரிமை என்பது வாக்குரிமை மட்டும் அன்று. நாமே வேட்பாளராகும் உரிமை.

ஒரு பொருளை - பிளாஸ்க், வேஷ்டி, பூச்செண்டு - நாம் கடையிலிருந்து வாங்கினால், பயன்படுத்துகிறோம். அத்துடன் நம் கற்பனை நிற்கிறது. இப்பொருளை விற்க, வினியோகம் செய்ய, உற்பத்தி செய்ய நமக்குள்ள உரிமையை நாம் அறிந்தாலும், மனதில் அது படுவதில்லை.

நாம் காண்பது குறைவு, கண்ணுக்குப் பின்னாலிருப்பது கடல் போன்றது.

பிரார்த்தனையை நாம் நம் தேவை என அறிகிறோம். அதில் மேலும் அறிய வேண்டியது உண்டு. வேலையைத் தேடும் நேரம்,

எல்லாத் தகுதிகளுமிருந்தும், நாட்டில் ஏராளமாக வேலை வாய்ப்பிருந்தும்,   ரூ.18,000 சம்பளம் பெறும் தகுதியுள்ளவர்க்கு 8000ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. 18,000ரூபாய் வேலைக்குப் பலமுறை முயன்றாலும் 10 பேர் எடுக்கும் இடத்தில் 28 பேர், 42 பேர் வருகிறார்கள். நமக்குக் கிடைக்காமற் போகிறது.

தகுதியுள்ளவர்க்கே வேலை கிடைக்காத நேரம், தகுதியில்லாத நாம் அவ்வேலைக்கு ஆசைப்படுகிறோம்.

நம்போல் பட்டம் உள்ளவர் கிடைக்கவில்லை என்பதால், இந்தப் பட்டத்தில் சேர்ந்து, பட்டத்துடன் வந்தபொழுது நிலைமை மாறி, வேலை கிடைப்பதில்லை.

தகுதியிருந்து அனுபவமில்லாததால் கிடைப்பதில்லை.

பெற்றோர் உள்ளூரிலேயே வேலை வேண்டும் என்பதால் வேலையில்லை.

எத்தனையோ தகுதிகள் அபரிமிதமாக இருந்தும் உயர்ந்த ஜாதியால் கிடைப்பதில்லை.

தகுதியுண்டு. நேர்முகத் தேர்வில் வாய் தெற்றுவதால் வேலை கிடைப்பதில்லை.

தகுதியில்லை, திறமையில்லை, சந்தர்ப்பம் சரியில்லை, ஆனால் வேலை மீது ஆர்வம் உண்டு.

       பிரார்த்தனையைப் பற்றிப் பேசுமுன், வேலை தேடுபவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளைப் பற்றிப் பேசுவோம். அவற்றை இரு பாகங்களாகப் பிரிப்போம். ஒன்று புறத்தகுதிகள், அடுத்தது அகத்திற்குரிய பக்குவங்கள்.

                புறம்

         அகம்

1. வயது, நல்ல உடல் நலம்

1. சுறுசுறுப்பான சுபாவம்

2. வேலைக்குரிய படிப்பு, பயிற்சி

2. வேலையில் ஆர்வமுள்ள சுபாவம்

3. அனுபவம்

3. வேலையில் அனுபவத்தால் பயன்பெறும் பாங்கு

4. குடும்பப் பொறுப்பு

4. வேலை எங்குக் கிடைத்தாலும் போகும் மனநிலை

5. குடும்பத்தின் நல்லெண்ணம்

5. குடும்பத்திற்கு உதவும் பொறுப்புணர்ச்சி

6. தகுதியின் சிறப்புகள்

6. தகுதியைப் பெறும் முயற்சி ஆர்வம்

       IAS வேலையானாலும், கம்பனி மேனேஜர் வேலையானாலும், நாட்டில் - நமது வட்டாரத்தில் - அதுபோல் 70 வேலைகள் காலியானால் மேற்சொன்ன தகுதிகள் உள்ளவர் 700 பேர் வேலைக்குக் காத்துள்ளனர். வேலை உயர்ந்ததானால் 7000 பேரும், 70,000 பேரும் போட்டியிடுவர். தகுதிகள் குறைவற அன்பருக்கிருந்தால், போட்டியைப் புறக்கணித்து அன்பர் பிரார்த்தனையால் தேர்ந்தெடுக்கப்படுவார். அப்படி வேலை கிடைத்ததற்கு அருள் விளக்கமுண்டு. இதுவரை இந்த வேலையில் இலாக்காவின் தலைமையை எட்ட 25, அல்லது 30 ஆண்டுகளாகும். ஆனாலும் அங்கும் ஒரு பதவிக்கு பலர் காத்திருப்பார் என்பதே உண்மையானால், அன்பருக்கு வேலை கிடைத்ததின் அருள் விளக்கம்: வேலையில் முழுத் தகுதியிருந்தால் அது முன்னரே கிடைக்கும். 15 ஆண்டிலும் கிடைக்கும், அதற்கு முன்னும் கிடைக்கும், அருள் சட்டத்திற்குக் கட்டுப்படாது.

       இருக்க வேண்டிய தகுதிகளில் ஒன்று குறைவாக இருந்தால், அதை நிறைவு செய்யும்படியான முயற்சியை வேறொரு முறையில் செய்ய வேண்டும். அனுபவமில்லை எனில் நேர்முகத் தேர்வில் சிறப்பாகப் பதில் கூற வேண்டும். பெற்றோர் உள்ளூரிலேயே வேலை வேண்டும் என அர்த்தமற்று ஆசைப்பட்டால், அவர்கள் மனம் மாறுவது முறை. அவர்கள் வேலையைப் பெற அக்குறையை ஏற்படுத்தினால் அன்னை நெஞ்சை விட்டு அகலாதவண்ணம் அக்குறையை நினைவால் பூர்த்தி செய்தால், அக்குறையை மீறி வேலை கிடைக்கும்.

       குறை என்பது இருந்தால், அதை முறையாக நிறைவு செய்வது சரி. சில சமயங்களில் அது முடியாது. பிறந்த ஜாதியை மாற்ற முடியாது. நம் படிப்பு உயர்ந்ததானாலும், நாம் படித்த கல்லூரிக்குக் கெட்ட பெயரிருந்தால், அதை எப்படி மாற்றுவது? உயர்ந்த ஜாதிக்குரிய உயர்ந்த தருணங்களை நாம் மேற்கொண்டால், தடை விலகும். கல்லூரிக்குக் கெட்ட பெயரிருந்தால் நாம் அக்கல்லூரியை பெருமையாகக் கருதாவிட்டால், அது நம்மைப் பாதிக்காது.

தகுதியிருந்தால் பலிக்கும்.

தகுதியின் குறைவை நிறைவு செய்தால் பலிக்கும்.

பக்தி பூரணமானால், எந்தக் குறையை மீறியும் பலித்ததுண்டு.

எதுவுமேயில்லாமல், அருள் பலித்ததுண்டு.

       வருமானம் எப்படி வருகிறது? அன்னையை அறிவதால் அது எப்படி மாறும்? அன்னை என்பது சக்தி. சக்தியுள்ளே வருவதால் எதுவும் வளரும், பெருகும். மரங்களுக்கு எரு விடும் பழக்கமோ, நீர் பாய்ச்சும் பழக்கமோ இல்லை. சில சமயங்களில் பயிரிடும் நிலத்தின் எல்லையில் மரங்களிருப்பதுண்டு. கிணற்றங்கரையில் மரம் நடுவதுண்டு. மரத்திற்கு என எருவும் நீரும் பாய்ச்சாவிட்டாலும், பயிருக்கு இடும் எருவை மரம் பெற்றுக் கொள்கிறது. நீரையும் பெறுகிறது. அம்மரம் அதிக வளமாக இருக்கிறது. அதிகமாகக் காய்க்கிறது. மரமானாலும், மனிதனானாலும், சவரட்சணை, போஷாக்கு, தீவனம், பெற்றால் யாரும் வளருவர். அது போன்றது அன்னை அருள் சக்தி. அது எதனுள் நுழைந்தாலும் அது வளரும். அன்னை சம்பந்தமான ஸ்தாபனங்களுடன் கடைகள், சர்வீஸ் ஸ்தாபனங்கள் வேலை விஷயமாகத் தொடர்பு கொள்கின்றன. இவை, இவை போன்ற மற்ற ஸ்தாபனங்களை விட செழிப்பாக இருப்பதைக் காணலாம்.

       அன்பர்கள் பல்வேறு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மளிகைக்கடை, ஷாப், டெய்லர், லாண்டரி, பெட்டிக்கடை, எலக்ட்ரீஷியன், புத்தகக்கடை, லைப்ரரி, ஐஸ்கிரீம் ஸ்டால், தினசரிப் பத்திரிகை, காஸ் கம்பெனி, பெயிண்ட் கடை என 50 வகைகளில் நாம் மார்க்கெட்டில் தொடர்பு கொள்கிறோம். அவர்கட்கு அன்னையைத் தெரியாது. இவர்களை எல்லாம், நம் தொடர்புக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இதரக் கடைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அன்னையின் அருளும், சக்தியும், சுபீட்சமாக இவர்கள் வாழ்வில் செயல்பட்டிருப்பதைக் காணலாம்.

வருமானம் இதற்கு விலக்கன்று.

       அன்னையருள் பட்டவுடன் வருமானம் வளரும். அதற்கு மேற்பட்ட உண்மையை வேலையைப் பற்றிக் கூறியதுபோல் கவனித்தால், வருமானம் அதற்குரிய முறையோடு இருந்தால், அளவுகடந்து பெருகும். அதற்குரிய முறை என்ன?

1. வருமானம் வரும் துறை முறையான துறையாக இருக்க வேண்டும்.

2. நமக்கு வரும் வருமானத்திற்கு நாம் பிரதிபலனாகத் தரும் உழைப்பு அல்லது பொருள் சிறப்பாகவும், போதுமான அளவுள்ளதாகவுமிருக்க வேண்டும்.

3. பொதுவாக சுத்தம், பேச்சு, கணக்கு, ரிக்கார்ட் போன்றவை சரிவர இருப்பது அவசியம்.

       அன்னை சக்தி வருமானத்தைப் பெருக்கும், முறையான வருமானத்தை அதிகமாகப் பெருக்கும். அரிசி கடையும், சைக்கிளும் கையுமாக இருந்தவர் 72 இல் அன்னையை அறிந்தார். 76இல் அவர் 20 லட்சம் சம்பாதித்ததாகக் கூறினார். உழைப்பாளிக்கு வருமானம் அபரிமிதமாகப் பெருகும்.

செலவு முறையானால், செய்யும் செலவைவிட வருமானம் பெருகும் என்பது அன்பர்களுடைய நீண்ட நாளைய, தொடர்ந்த அனுபவம். “வருமானம் பெருக வேண்டுமானால், செலவு செய்ய வேண்டும்” என்று சொல்லத் தோன்றுகின்றது என்றார் ஓர் அன்பர்.

உடல் நலம் : நாடித் துடிப்பு 72, டெம்பரேச்சர் 98.6°, சர்க்கரை 110, .. 90/110, எடை உயரத்திற்குத் தகுந்தாற்போருக்க வேண்டும் என்பதை இன்று பலரும் அறிவர். டெம்பரேச்சர் 1°உயர்ந்தாலும் அது காய்ச்சல், 72 முறை அடிக்க வேண்டிய இதயம் 82 முறை அடிப்பது என்றால் படபடப்பு வந்துவிடும். டாக்டரிடம் போனவுடன் அவர் வியாதிக்கேற்ப பல டெஸ்ட் செய்து நம் உடலை நிதானமாக்க முயல்கிறார். உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியின் செயலுக்கும், இருக்க வேண்டிய அளவை நிர்ணயித்துள்ளனர்.

இவை எல்லாம் சரி.

இவற்றிற்கு மேற்பட்ட உண்மையும் உண்டு.

அது நிதானம் (inner balance).

அந்த நிதானமிருந்தால் 5 அடி உயரமுள்ள பெண் 270 பவுண்டு எடையுடன் 87 வயது வாழ்வதும் உண்மையாக இருக்கும். இதுவும் அன்னை வாழ்வில் நடந்ததேயாகும்.

அதையும் கடந்த உண்மையும் உண்டு.

எந்தச் சட்டம் மாறினாலும் அருள் செயல்

படுவதால் நிதானம் ஏற்பட்டு சட்டத்தைப்

புறக்கணித்து உடல் நலம் பெறும் என்பது

உண்மையானாலும் சட்டத்தை அவசியமாகப்

பின்பற்ற வேண்டும்.

அன்னையின் ஆன்மீக அருள் தரும் நிதானத்தின் முழுப் பலன் பெற நாம் மருத்துவத் துறைக்குரிய (norms) சட்டத்தை மயிரிழை வழுவாமல் பின்பற்றுதல் அன்னைக்குகந்தது.

இந்த நிதானமிருப்பதற்கு அடையாளம் சந்தோஷம்.

சந்தோஷம் தானே உள்ளிருந்து எழுந்து வருமானால், மருத்துவத் துறையின் சட்டங்களைக் கடந்த ஆரோக்கியம் மனிதனுக்குண்டு.

       சுமார் 10 வகையான வாழ்க்கை அம்சங்களை நாம் முதலில் குறிப்பிட்டோம். கடைசியாக வழிபாடு, ஆன்மீகத்தையும் கூறினோம். ஒரு குடும்பத்தில் ரூ. 10,000 வருமானம் வரும்பொழுது, அதனால் 7பேர் பயன் பெற வேண்டுமானால், பொறுப்பாக, கருத்தாக பணத்தைச் செலவு செய்தால், எவருக்கும் பணத்தட்டுப்பாடிருக்காது. குடும்ப வருமானம் 50,000ரூபாய் எனில் 7 பேர் சௌகரியமாக வாழ மாதம் ரூ. 10,000த்திற்கு மேல் தேவையில்லை எனில் அத்தொகையை மட்டும் செலவு செய்யும் நிதானமுள்ள குடும்பத்தில் 50,000ரூபாய் தானே உபரியாகும். பெருகிக் கொண்டேயிருக்கும். செலவு குறைவா, அதிகமா என்பதைவிட செலவு சரியா, இல்லையா என்பதே முக்கியம்.

முக்கியமான செலவு அதிகமானாலும், வருமானம் பெருகும்.

முக்கியமில்லாத செலவு சிறிதளவு மிகைப்பட்டாலும் வருமானம் சுருங்கும்.

அன்னை என்பது நம் நிலைக்கு 8 நிலை உயர்ந்துள்ள ஆன்மீக சக்தியான அருள்.

அன்னையை சக்தி எனக் கூறுவதைவிட ஒரு ஸ்தாபனம் எனக் கூறுவது பொருந்தும்.

அன்னை சூட்சும ஸ்தாபனம், உலகெங்கும், பிரபஞ்சமெங்கும் பரவியுள்ள ஸ்தாபனம்.

உலகின் உரிமை, வசதிகளை, நாம் தேடிப் போக வேண்டும்.

அருளின் சௌகரியம் அன்னை மூலம் நம்மை நாடி வருகிறது.

எந்த நேரமும் இந்த சக்தி தவறாமல் செயல்பட்டு பலன்தர, நாம் செய்ய வேண்டியவை இரண்டு.

1. அதை அழைக்க வேண்டும்.

2. நாம் பாஸிட்டிவாக இருக்க வேண்டும்.

நம் நிலை எதுவானாலும், சக்தி சாதகமாகச் செயல்படும் என்றாலும், நாம் பாஸிட்டிவாகவும், முறையாகவுமிருப்பது அவசியம்.

மதவழிபாடு வெட்டிவிட்ட வாய்க்கால், ஆன்மீகம் பரந்து விரியும் கடல் போன்றது.

அரசியல் மிக விரைவாக உயரும் வாய்ப்புள்ள துறையாதலால், அங்கு அன்னை செயல்படுவதை எளிதில் காணலாம்.

திருமணத்தில் அருளின் இன்மை வெளிப்படும்.

செலவில் அன்னை வழக்குக்கு எதிராகச் செயல்படுவது எளிதில் தெரியும்.

படிப்பில் பாஸ் செய்ய முடியாதவன், முதல் மார்க்கு வாங்குவதைக் காணலாம்.

உடல் நலம் எந்த ஆதரவுமின்றி, எல்லா போஷாக்குகளும் இருப்பதைப்போல் வளர்வதை உடல்நலத்தின் விஷயத்தில் காணலாம்.

• 95 வயதான சாதகருக்கு இதயத் துடிப்பு அடிக்கடி தவறுகிறது, லிவர் சரியில்லை, பொதுவாக எந்த உறுப்பும் இருக்க வேண்டியது போலில்லை ஆனால் இவர் எப்படி உயிருடன் இந்த நிலையில் மாதக்கணக்காக இருக்கிறார் என டாக்டர்கட்குப் புரியாத விதம் உடல் நலம் பெறுவது அருளின் சிறப்பு.

அன்னையை இரு தம்பதிகளும் ஏற்றுக் கொண்டால் அடுத்தவர் திருமணமான 10 ஆண்டுக்குப் பின் அவர்கள் நெருக்கத்தைக் கண்டு ஆச்சரியமும், பொறாமையும் படும்படி வாழ்வு அமையும்
 

  • எதுவுமேயில்லாவிட்டாலும், எல்லா அம்சங்களும் இல்லாவிட்டாலும், எல்லாம் இருப்பதைப்போல் எந்தக் காரியமும் அருளால் நடைபெறும் என்பது உண்மை ஆனாலும், எந்தச் சட்டமும், நிபந்தனையும் இழை தவறாமல் பூர்த்தி செய்யப்பட்டு, இடைவிடாமல் நாம் அன்னை நினைவில் வாழ்வது அன்பருக்குள்ள கடமை.
  •                                                                 ****

 book | by Dr. Radut