Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

               ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய

           ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே

       பகவான் ஸ்ரீ அரவிந்தர் மஹாசக்தி அன்னை மலர்ப்பாதங்களே சரணம்.

      அன்புக்கடல் அன்னையின் பேரருளால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளைக் குறிப்பிடும் முன் பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீஅன்னை ஆகியோரை நான் வணங்கிட வழிவகுத்த எனது மைத்துனர் அவர்களுக்கும், அவர் தம் துணைவியாருக்கும் எனது நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிர் காத்த அன்னை :

       பாண்டி சென்று என் அலுவல்களை முடித்துக் கொண்டு சமாதித் தரிசனம் முடித்து ஊர் திரும்பும்போது இயற்கை உபாதை கழிக்க அம்பத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் சென்ற போது நீர் நிறைந்திருந்த 10 அடி ஆழம் உள்ள கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்துவிட்டேன். ஒரு கையில் சூட்கேஸுடன் அன்னை அருளால் யார் உதவியும் இன்றி மேலே வந்து உயிர் பிழைத்தேன். சத்தம் கேட்டு ஓடி வந்த ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் திகைத்து நின்று விட்டார்கள். ரெண்டு நாட்களுக்கு முன் வேறு ஒருவர் விழுந்து கயிறு கட்டி நாங்கள் தூக்கிக் காப்பாற்றினோம். நீங்கள் எப்படி எந்தப் பிடிப்பும் இல்லாத தொட்டியினுள்ளிருந்து சூட்கேஸுடன் மேலே வந்தீர்கள் என்பதை நினைக்கவே இயலவில்லை எனக் கூறினார்கள். உயிர் காத்த அன்னைக்கு நன்றி.

மகள் கல்வியில் அன்னை :

       பத்தாம் வகுப்பில் எங்கள் மகள் படித்துக் கொண்டிருக்கும் போது பொதுத் தேர்வுக்கு முன்பாக நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது ஆசிரியைகள் என் மனைவியிடம் உங்கள் பெண் இதுவரை நடந்த தேர்வுகளில் எதிலும் மதிப்பெண்களே பெறவில்லை. ஆகவே அவள் பொதுத் தேர்வில் தேறுவது மிகவும் கடினம் எனக் கூறிவிட்டார்கள். அதற்கு என் மனைவி நான் வணங்கும் அன்னை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவள் நிச்சயம் நல்லமுறையில் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெறுவாள், +1 உங்கள் பள்ளியிலேயே சேர்ப்பேன் எனக் கூறி வந்தார். அவ்வாறே பொதுத்தேர்வில் 65% மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றாள். +2 தேர்வு சமயத்தில் வணிகவியல், கணித இயல், பொருளாதாரத்தில் அனைத்துத் தேர்வுகளிலும் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருந்ததால் அந்த ஆசிரியைகள் பள்ளி முதல்வரிடம் இவளைத் தேர்வுக்கு அனுப்ப வேண்டாம் எனக் கூறியபோது மஹா சரஸ்வதி அன்னையின் அருள் முதல்வர் மூலம் செயல்பட்டு, அவள் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவாள். கவலை வேண்டாம் எனக் கூறிவிட்டார். மஹாசரஸ்வதி ஸ்ரீ அன்னை அருளால் +2 தேர்வில் 77% மதிப்பெண்கள் பெற்று மகள் தேர்வு அடைந்தாள். எதிர்வரும் காலங்களிலும் அன்னை அருள் பூரணமாய் கிடைக்க அன்னையிடம் வேண்டுகிறோம்.

வீடு கொடுத்த அன்னை :

       என் மனைவியின் அலுவலகக் கடன் பெற்று வீடு வாங்கலாம் என முயன்று பல இடங்களில் பார்த்தும் எங்கள் திருப்திக்கேற்றவாறு அமையவில்லை. மனதிருப்திக்கேற்றவாறு கிடைத்த வீடு இந்தியன் வங்கியில் அடமானத்திலிருந்தது. மேலும் பல பிரச்சனைகளும் இருந்தன. மஹாசக்தி அன்னையிடம் கேட்டபொழுது வாங்கலாம் என உத்திரவு கிடைத்தது. அதன் பிறகு தைரியமாக அன்னையின் அருளைத் துணை கொண்டு ரூ. 5.10 லட்சத்திற்கு பேசி முடித்தோம். பத்திரப்பதிவு மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து ரூ.6 லட்சங்கள் தேவைப்பட்டது. அலுவலகக் கடன் ரூ. 3.5 லட்சம் மட்டுமே. கையில் இருந்த பணம், நகை போன்றவற்றை விற்றால் கூட ரூ. 75 ஆயிரம் மட்டுமே கிடைத்தது. மீதம் பணத்திற்கு ஏற்பாடு செய்கின்ற பொறுப்பையும் மஹாசக்தி அன்னையிடமே விட்டுவிட்டோம். அதன் பிறகு என் மனைவியின் உயர் அதிகாரி அவர்கள் ரூ. 50,000உம், என் மைத்துனர் ரூ. 50,000உம், என் அலுவலகத்தில் பணி புரியும் சகோதரி ரூ. 45000உம் கொடுத்து உதவ பத்திரப்பதிவு செய்து முடித்தோம். பிறகு ஒரு நன்னாளில் புஷ்பாஞ்சலி செய்தோம். மஹாசக்தி அன்னைக்கும் தக்க சமயத்தில் பண உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

காணாமல் போன சூட்கேஸ் :

       கடந்த 18.05.2001 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற என் தமக்கையின் மகள் திருமணத்திற்குச் சென்று விட்டு திருவாரூர் திரும்பும்போது பேருந்திலேயே ஒரு சூட்கேஸை தவறவிட்டுவிட்டோம். ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தித்து அதை அவர்களுக்கே சமர்ப்பணம் செய்திட 17 நாட்களுக்கு பிறகு அனைத்துப் பொருட்களுடனும் சூட்கேஸ் திரும்பக் கிடைத்தது. இனிய அன்னையின் மலர்ப் பாதங்களுக்கு மனமார்ந்த நன்றி.

       இமைப்பொழுதும் எங்களை விட்டு அகலாது வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அருள் வழங்கி அரவணைத்துக் காத்து நிற்கும் பகவான் ஸ்ரீ அரவிந்தர், மஹாகாளி அன்னை இவர்களின் பாதாரவிந்தங்களில் எங்கள் வாழ்வைச் சமர்ப்பணம் செய்து, அவர்கள் விரும்பும் வகையில் எங்களை வழி நடத்திட அனுதினமும் பிரார்த்திக்கின்றோம்.

சரணம் சரணம் சரணம் அம்மா.

****

 

 

 book | by Dr. Radut