Skip to Content

12.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

 பிரார்த்தனை பலிக்க வேண்டும்

அண்ணன் - நீ அவர் மனநிலையை உலகத்து மனநிலை என ஏற்று, அதுவே உன் மனநிலை எனவும் ஏற்று சமர்ப்பணம் செய்தால் பலனிருக்கும். நாமெல்லாம் அன்னைக்கு அவர் போலவே. வாழ்நாள் முழுவதும் பகவானும், அன்னையும் அதைச் செய்தனர். நீ அப்படிச் செய்தால் அன்னை செய்வது போலாகும். யோக வாழ்வை ஏற்பது என்றால் பிறர் வாழ்வை நம் பொறுப்பாக ஏற்பதாகும். It is to accept consciousness responsibility செய்வது பெரிது. செய்வதானால், அவரிடம் சொல்லாமல் செய்ய வேண்டும்.

தம்பி - என் நண்பனிடம் இதை முயன்றேன். 1½ வருஷம் பெரும் பலனிருந்தது.

அண்ணன் - தொடர்ந்து செய்தால், அளவு கடந்தால், அவரால் தொந்தரவு வரும்.

தம்பி - அவர் அதற்குள் ஊரை விட்டுப் போய்விட்டார்.

அண்ணன் - தத்துவத்தைப் புரிந்து கொள்ளவும், நடைமுறை நம்மைப் பாதிக்காத அளவிலும் பயில்வது சரியாகும். Service must be impersonal, never personal. சேவை என்பதைப் பொதுவாகச் செய்ய வேண்டும். குறிப்பிட்டவருக்குச் செய்யக் கூடாது. அது நமக்குப் பொறுப்புள்ள இடத்தில் மட்டும் செய்யலாம். நாடு சுபீட்சமடைய நினைத்தால், அப்பலன் தெரியும்.

தம்பி - அது எல்லா விஷயங்களிலும் தவறாமல் நடக்கிறது.

அண்ணன் - எல்லா அன்பர் மனத்தில் எழும் நல்ல எண்ணங்களை அன்னை உலகில் பொதுவாகப் பூர்த்தி செய்கிறார். நாம் அதைக் கவனிப்பதில்லை.

தம்பி - ஏன் பல பேர் அப்படிச் சொல்கிறார்களே?

அண்ணன் - நல்ல எண்ணம் தவறாது பலிக்கும். நாம் செய்கிறோம், நாம் செய்ய வேண்டும் என்ற நினைவு வரக்கூடாது. அதுதான் தவறு. பக்கத்து வீட்டுக்காரர் வம்பு பேசுபவர்.

தம்பி - அவர் வம்புக்காரர் என்பதால்தான் எனக்கு அவர் முக்கியம். ஏன் இவர் நம்மைச் சந்திக்கும்படி அமைந்தது? இவரை மாற்றக் கூடாதா? என நினைக்கிறேன்.

அண்ணன் - உனக்கும் அவர் குணம் கொஞ்சம் உண்டு. அதனால் தான் அவர் வருகிறார்.

தம்பி - அப்படியானால் அவரை மாற்ற முயல்வதைவிட, என் குணத்தை மாற்றினால், அவர் வரமாட்டார் அல்லது மாறிவிடுவார்.

அண்ணன் - நல்ல எண்ணம் அரிது. நல்ல எண்ணமுள்ள இடத்திலும் அது குடும்பம் முழுவதும் இருக்காது. நல்லெண்ணத்திற்கு எதிராக நம்மிடம் உள்ள குணத்தை நம்மால் அறிய முடியாது. அன்பரொருவர் அதை அறிய முற்பட்டால், அவருடைய முன்னேற்றத்திற்கு அளவில்லை.

தம்பி - அது பல ரூபங்களில் பல காரணங்கட்காக எழுகிறது. நல்லவர் எனப் பலராலும் கருதப்படுபவரிடமே அக்குறை எழுகிறது. நல்லவர்கட்கு தங்கள் முக்கியத்துவம் - பெருமை - சில விஷயங்களில் எழுந்து கெட்டவராக்கி விடும்.

அழியா இலக்கியம் :

அண்ணன் - அழியா இலக்கியம் எப்படி ஏற்படுகிறது, ஷேக்ஸ்பியர் எப்படி உயர்ந்த நாடகங்களை இயற்றினார் என ஸ்ரீ அரவிந்தர் எழுதியுள்ளார். இறந்தவருடைய ஆவி ஏன் உலவுகிறது என அக்கருத்தை முடிக்கிறார். கவி, பாத்திரங்களை ஏற்படுத்துகிறான். தற்கொலை செய்பவன் ஆவி உருவத்தை ஏற்படுத்துகிறான். பாத்திரம் அறிவுக்குப் புரியும். ஆவிகள் புலனுக்குத் தெரியும். மனிதனால் ஜட உலகத்தில் உற்பத்தி செய்யும் திறனைப் பெற முடியவில்லை என உபநிஷதம் கூறுகிறது. அதாவது மனிதனுடைய கற்பனை ஓர் நாற்காலியைப் போன்ற ஜடப்பொருளை உற்பத்தி செய்ய முடியாது. இப்பகுதியிலுள்ள கருத்தைப் பயன்படுத்தி நான், “மனிதனுடைய கற்பனை அறிவு அவனுக்குரிய எதிர்காலத்தை ஏற்படுத்த வல்லது” எனக் கூறப் பிரியப்படுகிறேன்.

தம்பி - Vol.12 Centenary set இல் பக்கம் 33 முதல் 43 வரையுள்ள பகுதியைத் தானே குறிப்பிடுகிறீர்கள்.

அண்ணன் - ஆம்.

தம்பி - என்ன கூறுகிறார் எனச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?

அண்ணன் - நான் ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பேசாமல், அன்பருக்குரிய கருத்தை மட்டும் கூறுகிறேன். மூலத்தைப் படித்தால் ஷேக்ஸ்பியர் விளங்கும்.

தம்பி - நான் அமரகாவியமாக முயலவில்லை. உயர்ந்த அன்னை வாழ்வை மட்டும் அறிய விரும்புகிறேன்.

அண்ணன் - நம் உடல் ஜடம், எண்ணம் சூட்சுமம், சத்திய ஜீவியம் காரண தேகம் (causal body). கையால் செய்யும் வேலை அழியக் கூடியது. எண்ணம் நீண்ட நாள் நிலைக்கும். காரண தேகத்தால் செய்வது அழியாது.

தம்பி - எண்ணம் எப்படி?

அண்ணன் - எண்ணத்தில் இரு பகுதிகளுண்டு. தாழ்ந்தது ஜடம் (gross thoughts). உயர்ந்தவை சூட்சும எண்ணங்கள் (subtle thoughts). வீடு, நிலம், கடை, பொருள்களைப் பற்றி நினைப்பவை தாழ்ந்தவை. பண்பு, இலக்கியம், ஆன்மா பற்றி நினைப்பவை உயர்ந்தது.

                    எண்ணம் உயர்ந்து சூட்சுமமாகிவிட்டால் அது அழியாது.

                    உயர்ந்த எண்ணம் காரண தேகத்தை எட்டினால் அது  அமரத்துவம் பெறும்.

கவியின் எண்ணம் உயர்ந்து சூட்சுமமானால், அது அமரகாவியமாகும். ஷேக்ஸ்பியர் அப்படி எழுதினார்.

தம்பி - அமரகாவியத்திற்கும், அன்பர் வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? நாமெல்லாம் ஷேக்ஸ்பியர் ஆக முடியுமா?

அண்ணன் - ஷேக்ஸ்பியர் உலகுக்கு அமரகாவியம் எழுதினார். நாம் அன்னையின் அருளால் நம் வாழ்வை அமர காவியமாக்க முடியும்.

தம்பி - நம்ப முடியவில்லையே.

அண்ணன் - இது அன்பர் வாழ்வில் அடிக்கடி நடக்கிறது. நாம் புரிந்து கொள்வதில்லை. அமர காவியம் என்றால் என்ன? இதுவரை உலகில் இல்லாத ஒன்றை நாம் நம்மைக் கடந்தது என்கிறோம். மனிதனைக் கடந்தது அமரத்துவம் வாய்ந்தது. காரியங்கள் கூடி வரும் பொழுது சட்டம் நமக்காக மாறுகிறது. ஓர் அன்பருக்காக சட்டத்தையே மாற்றும் அருள் அமரத்துவம் வாய்ந்ததல்லவா?

தம்பி - ஆம். அமரத்துவமில்லாமல் நடைமுறையை மாற்ற முடியாது. அன்பர்கட்கு காரியம் கூடி வரும்பொழுது நடைமுறையில்லாத வழியாகவே வருகிறது. நான் இப்படிப் புரிந்து கொள்ளவில்லை.

அண்ணன் - அருள் அமரத்துவம் வாய்ந்தது. நம் வாழ்வில் அப்படிச் செயல்படுகிறது. நாம் பலனை மட்டும் கருதுவதால், அதன் தன்மையைக் காண்பதில்லை.

தம்பி - சரி, அமரத்துவம் நமக்கு என்ன செய்யும்?

அண்ணன் - நம் எதிர்காலத்தை நாம் மனதில் உருவாக்கும் பொழுது, வீடு கட்டுவோம், பணம் சம்பாதிக்க வேண்டும், பதவி வேண்டும் என்று நினைத்தால் வீடு ஜடமானது, பணமும், பதவியும் ஆசைக்குரியன. இவை தாழ்ந்த எண்ணங்கள், ஜடமானவை. அழியக் கூடியவை. மனிதன் உயர்வாக, இனிமையாக, சுத்தமாக, வசதியாக வாழ வேண்டும். அதற்குரிய பணவசதி வேண்டும் என்பது இலட்சியமான எண்ணம். இலட்சியம் ஜடமன்று, சூட்சுமம், காரணமுமாகக் கூடியது. நாம் நம்மை உடலாகக் கருதினால் அது ஜடமான அறிவு. ஆன்மாவாகக் கருதினால் சூட்சுமமான அறிவு. சைத்தியப் புருஷனாகக் கருதினால் காரண லோகத்திற்குரிய அறிவு. எண்ணம் உயர்ந்தால் அதன் சூட்சுமம் உயர்ந்து சத்திய ஜீவியக் கருத்தாகும். பொதுவாகச் சொந்த வசதியை நாடுவது ஜடமான அறிவு. அனைவரும் உயர்ந்த வாழ்வை அடைய விரும்புவது சூட்சுமமான அறிவு. அது நாட்டுக்கும், மனித குலத்திற்கும் உரிய அறிவானால் தொடர்ந்து உயருகிறது.

தம்பி - ஆசையாக இல்லாமல், லட்சியமாக, அனைவருக்கும், உலகத்திற்குமாக நினைத்தால் கற்பனை ஜடமாகயிருந்து சூட்சுமமாகி விடுகிறது.

அண்ணன் - சூட்சுமத்தில் உண்மையிருந்தால், நம்மைப் பொருத்த வரையில், அந்த எண்ணம் பலிக்கும் திறன் பெறுகிறது. அன்னை மீது நம்பிக்கையிருந்தால் எண்ணம் அமரத்துவம் பெறுகிறது. அதாவது எதிர்காலத்தில் பலித்துவிடும்.

தம்பி - என் எதிர்காலத்திட்டத்தை நான் இலட்சியமாக, ஆசையின்றி, தீட்டினால், அருள் அதனை நிறைவேற்றுகிறது என்கிறீர்களா?

அண்ணன் - ஆம். ஷேக்ஸ்பியர் உலகுக்கு அமரகாவியம் வழங்கினார். நாம் நமக்கு எதிர்காலத்தில் உயர்ந்த வாழ்வைத் தரமுடியும்.

தம்பி - நம் எண்ணம் இலட்சியமானதால், நமக்குப் பலிப்பது மற்ற அனைவருக்கும் பலிக்கிறது.

அண்ணன் - நாம் செய்ய வேண்டியது என்ன? Create a realistic plan. நம் சந்தர்ப்பம், திறமை ஆகியவற்றைக் கருதி நடக்கக்கூடிய திட்டத்தை மனதால் தீட்டினால், அருள் அதை நிறைவேற்றும்.

தம்பி - நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவேண்டும். நடக்கக் கூடியதாக இருக்க வேண்டும், ஆசையால் செயல்படக் கூடாது, திறமையின் அடிப்படையில் திட்டம் இருக்க வேண்டும்.

அண்ணன் - அது பூர்த்தியாகும்பொழுது நாம் தீட்டிய அளவிலிருக்காது. எந்த அதிகபட்ச அளவில் பூர்த்தியாக வேண்டுமோ, அந்நிலையில் பூர்த்தியாகும். அதுபோல் திட்டங்கள் 15 மடங்கு, 24 மடங்கு, 365 மடங்கு உபரிப் பலனைத் தந்துள்ளன.

தம்பி - சூட்சுமம் நிபந்தனையிலிருக்கிறது.

அண்ணன் - நிபந்தனைகள் முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் தெளிவாக, சுருக்கமாகக் கூறினால், ஓர் அன்பர் இலட்சிய மனப்பான்மையுடன், திறமையின் அடிப்படையில் எதிர்காலத் திட்டத்தை கற்பனை செய்து சமர்ப்பணம் செய்தால், அத்திட்டம் அபரிமிதமாகப் பூர்த்தியாகும்.

தம்பி - ‘தான்’ என்பது எழக்கூடாது, போட்டி, பொறாமை, கர்வம், அதிகாரம் வரக்கூடாது என்பது முக்கியம்.

கற்பனை :

அண்ணன் - அதெல்லாம் நாம் சொல்ல வேண்டியதில்லை. அது உள்ளவரிடம் எனக்கு வேலையில்லை. ஒரு பொய் சொன்னால் அத்தனையும் மறைந்துவிடும். பொய் சொல்லக்கூடாது என்று சொல்லும் கடமை என்னுடையதன்று. கற்பனை செய்தால் போதுமா, நாம் எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் என்றும் நினைப்பார்கள்! அவர்களை நாம் கருத வேண்டாம். விஞ்ஞானி அன்பரானால், 5th dimension சூத்திரம் தெரியும் என்றேன். அது ஐன்ஸ்டீன் நிலை. குடும்பம் நடத்துபவர் தூய்மையானவரானால், வளமான எதிர்கால வாழ்வு அமையும் என்பதும், கவியான அன்பர் அமரகவியாகலாம் என்பதும் ஒரே மாதிரியான கருத்துகள்.

மனித வாழ்வில் நம்மை 10 நிலைகளிலும், ஷேக்ஸ்பியர், ஐன்ஸ்டீனை 100ஆம் நிலையிலும் வைத்து கணக்கிட்டால், அருள் தூய்மையான அன்பரை 100ஆம் நிலைக்கு உயர்த்தும்.

தொடரும்...

****

சொசைட்டியின் வெளியீடுகள்

                                        கர்மயோகியின் நூல்கள் :

1. பிரார்த்தனையும் சமர்ப்பணமும்                                                            ரூ. 20

2. மனம் - ஜீவனின் முக்கிய கரணம்                                                      ரூ. 20

3. சமூகம் அதிர்ஷ்ட சாகரம்                                                                       ரூ. 20

4. சிறியதும் பெரியதும்                                                                                ரூ. 20

5. கணவன் மனைவி                                                                                  ரூ. 20

6. இரத்தினச் சுருக்கம்                                                                                ரூ. 20

7. ஸ்ரீ அரவிந்தம் - தத்துவம்                                                                    ரூ. 40

8. ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம்                                                ரூ.100

9. அதிர்ஷ்டம்                                                                                             ரூ.100

10. பேரொளியாகும் உள்ளொளி                                                            ரூ.100

பாலில் பெற புத்தக விலையுடன் பதிவு தபால் கட்டணம் ரூ. 15/-சேர்த்து M.Oசெய்யவும்.

 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சொல்வதற்கு ஒன்றுமில்லை;

செய்வதற்கு ஏராளமானவை உண்டு.

 

 

 

 

 book | by Dr. Radut