Skip to Content

லைப் டிவைன் - கருத்து

P.6. Matter, Life, Mind, Supermind, Spirit are a graded system

ஜடம், வாழ்வு, மனம், சத்தியஜீவியம், ஆன்மா ஆகியவை அடுக்கடுக்கானவை 

நாம் ஜடமும், ஆன்மாவும் ஒன்று என்ற அடிப்படையை மனதில் கொண்டுள்ளோம். இது உண்மையானால், இரண்டிற்கும் பொதுவாக ஒன்றிருக்க வேண்டும். தலைவர்களைத் தொண்டர்கள் தெய்வீகப் பிறவியாக நினைப்பதுண்டு. அப்படி ஒரு முடிவுக்கு வருமுன் மக்கள் தலைவர்களைக் கவனிப்பார்கள். நெருக்கடியான நேரத்தில் நெருக்கமாகக் கவனிப்பார்கள். நம்மைப்போலவே தலைவர் நடந்தால் தலைவரும் நம்மில் ஒருவர் என நினைப்பார்கள். தலைவர் நம்மைப் போலில்லாமலிருந்தால், அவரை உயர்வாக, அதாவது தங்களிட மிருந்து பிரித்துப் பார்ப்பார்கள்.

பணக்காரனுக்கு ஊரில் மரியாதை இருக்கும். அவனை உயர்வாக நினைக்க வைப்பது பணம். நெருக்கடியான சமயத்தில் அவனுக்குக் கடன் தேவைப்பட்டால், அவன் கடன் வாங்க தயங்குவான். அவன் கடன் வாங்கிவிட்டால் அவனுக்குள்ள மரியாதை போய்விடும். பணக்காரன் உயர்ந்த பிறவி என்று நினைப்பவர்கள் "அவனும் கடன் வாங்குகிறான்" என்றவுடன் அவன் உயர்ந்த பிறவியில்லை என முடிவு செய்வார்கள்.

எல்லோரும் கடன் வாங்குவதுபோல் பணக்காரன் கடன் வாங்கினால் அவன் எல்லோரையும் போன்றவன் என்று ஆகும். பணக்காரனும் மனிதன்தான், அவனும் நம்மைப்போன்றவனே என நிரூபிக்க நாம் செய்வதை அவனும் செய்கிறான் என்று காட்டுவதுபோல், ஜடமும், ஆன்மாவும் ஒன்று என்று நிரூபிக்க இரண்டிற்குமிடையே மூன்று நிலைகள் உள்ளன என்று கூறினால், அடுத்த கட்டத்தில் இரண்டும் ஒன்று எனக் கூறலாம். 

பின்வரும் அத்தியாயங்களில் சத், சித்தான முறையையும், சித்திலிருந்து சத் வந்ததையும், அடுத்தாற்போல் சத்தியஜீவியமும், அதன் பகுதியாக மனம் எழுந்ததையும், மனம் வாழ்வாகி, ஜடமானதையும் விவரிக்கிறார். சத் என்பது ஆன்மா, சிருஷ்டியின் முடிவில் ஜடமாயிற்று என்பது 24,25ஆம் அத்தியாயங்களில் தெüவாகிறது.

பின்வருவனவற்றை முன்னே கூற முடியாது என்பதால் பகவான் பல விளக்கங்களை இங்கு தருகிறார். அவற்றுள் மேற்சொன்னதும் ஒன்று.

  • மகனுக்குத் தகப்பனார் குணமிருக்கும். ஏனெனில் இருவரும் ஒன்றே.
  • வேர், அடிமரம், பட்டை, கிளை, இலை, துளிர், பூ, காய், பழம் ஆகிய அனைத்தும் ஒன்றே என்று தாவரஇயல் படித்தவர்கள் அறிவார்கள்.
  • மண்ணிலிருந்து உற்பத்தியாகும் மரமும், மனிதனும், ஒன்றே.
  • மண்ணான மலையும், அதன் சிறப்பம்சமான மனிதனும் ஒன்றே எனவும் கூறலாம்.
  • Life and disease and death are the same. வாழ்வும், மரணமும் ஒன்றே என்ற கொள்கையையுடையவர் உண்டு. மரணம் வாழ்வின் மாறிய நிலை என அவர்கள் கூறுகின்றனர். 

ஆசைகளைப் பூர்த்திசெய்வது அருளின் முதல்நிலை. ஆசைகளை நிறைவேற்றாது ஆன்மாவை வளர்ப்பது அருளின் இரண்டாம் நிலை.

மனித வளர்ச்சியில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலை முதல்நிலை. அதற்கு ஆசைப்படுவது அடுத்த நிலை. புரிந்து கொள்ள முயல்வது மூன்றாம் நிலையான அறிவு நிலை. ஆன்மாவின் நிலை அதற்கடுத்தது. அது தீவிரமான ஆசையையும், புரிந்துகொள்ளும் புத்தியையும் கடந்த மௌனமான பொறுமையின் நிதானம். ஜீவன் நிலை இவற்றையும் கடந்தது. அது வேலையும் செய்யும், ஆசையும் படும், அறிவாலும் செயல்படும், பொறுமையாகவுமிருக்கும். ஆனால் எதையும் விலக்காது. எதையும் கோட்டுக்கு மேலேயிருந்து செய்யும். உடலால் உழைப்பவன் உழைப்பாளி. ஆசைப்படுபவன் அர்த்தமற்றவன். புரிய முனைபவன் அறிவாளி. பொறுமையானவன் சாது, சன்னியாசி. இவற்றைக் கடந்தவன் உழைப்பை உயிருடன் செய்பவன், ஆசையை விட்டொழித்து அதையே கடமையாக நிறைவேற்றுபவன், வாழ்வை ஏற்று நிதானமாக நடப்பவன், அவனது வாழ்வின் மையம் ஜீவன். அவன் நிலை ஜீவன் முக்தனின் நிலையைக் கடந்தது. வாழ்வனைத்தும் யோகம் என்ற பகவான் சொல்லை ஏற்று, வாழ்வை யோக வாழ்வாக வாழும் அன்னை பக்தன். அவனுக்கு ஆசையும் உண்டு, ஆன்ம வளர்ச்சியும் உண்டு.

அன்னையிடம் அவன் வந்தவுடன் ஆசை முதல்நிலையில் கட்டுக்கடங்காமலிருந்தால், அவனுடைய பெருமுயற்சியாலும் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அன்னை அவனை ஆசையைக் கட்டுப்படுத்து என்று சொல்வதில்லை. அது சிறு குழந்தையை விளையாடாதே என்பதுபோல், பசி எடுத்தால் சாப்பிடாதே என்பதை ஒக்கும். குழந்தை விளையாடினால் தவறில்லை. விளையாடவேண்டும். வயதானால் விளையாட்டை விட்டுவிடும். நாம் குழந்தைக்குப் பொம்மை, விளையாட்டுப் பொருள்களை வாங்கிக் கொடுத்து விளையாடச் சொல்கிறோம். குழந்தை விளையாடுவதைக் கண்டு மகிழ்கிறோம். அதேபோல் அன்னை, ஆசையைக் கடந்து வரமுடியாத மனிதனை, ஆசையைக் கட்டுப்படுத்தச் சொல்லாமல், அவனது ஆசைகளைப் பூர்த்தி செய்கிறார்கள். அது முதல் நிலை. சுந்தரரைத் திருமணம் செய்யச் சொன்னதும், சங்கரர் தாயார் ஈமச்சடங்குகளைச் செய்ததும், இராமலிங்க சுவாமிகள் இச்சையால் தவறியபோது பெருமான் அவர் முன் தோன்றி ‘உன் இச்சை இன்னும் பூர்த்தியாகவில்லை. முழுவதும் பூர்த்தி செய்து கொள்' எனச் சொல்லி அதற்குத் துணை நின்றதும் இவ்வகையைச் சார்ந்தவையே.

ஆன்மா பக்குவப்பட்டு ஆசையை விட முடியும் என்று அறிந்த பின்னும் ஆசையை மனம் நாடுவது இயற்கை. இந்த இரண்டாம் நிலையில் அன்னை ஆசையை நிறைவேற்றமாட்டார். ஆன்மா பக்குவப்பட வேண்டியவற்றைச் செய்வார். மகான்கள் முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலைக்கு வரும்பொழுது படும் இன்னல்களை இறைவன் சோதனை செய்கிறார் என்பார்கள்.

கண்ணகிக்குத் தெய்வம் கணவனை மீட்டுக் கொடுக்கவில்லை. அவள் ஆன்மா பக்குவப்பட அவள் கணவனை இழக்க வேண்டும் போலும். பீஷ்மர் ஆசையை விட வேண்டி வந்தது. பாண்டுவின் ஆசை பூர்த்தியாகவில்லை. காந்தாரியின் ஆசை அழிந்தது. இராமபிரானை இறைவன் ஆசைப்பட அனுமதிக்கவில்லை. பகவான் ஸ்ரீ அரவிந்தர் மனம் யோகத்தை நாடவில்லை. புதுவை வந்த பிறகும் அரசியலையே நாடியது. இறைவன் அவரை அலிப்பூருக்கு அனுப்பியபொழுது, "என்னால் விட முடியாத பற்றை அழிக்க நீ என்னைச் சிறைக்கனுப்பினாய்" என்று பகவான் இறைவனிடம் கூறுகிறார். அவருடைய ஆசை அரசியலில் நிறைவேறும். ஆன்மா பக்குவப்பட அந்த ஆசை நிறைவேறக்கூடாது.

குழந்தைபோல் தானே ஆசையாக உருவெடுத்தவர் ஆசையை அன்னை அதே நிமிஷம் பூர்த்தி செய்கிறார். மனதில் ஓர் ஆசையும், வாயால் மற்றதையும் சொல்பவர் மனதிலுள்ள ஆசையை - அவர் கேட்க வெட்கப்படும் ஆசையைப் - பூர்த்தி செய்கிறார். அவசியமான தேவையும், ஆடம்பரமான ஆசையும் உள்ளவர் தேவைக்காகப் பிரார்த்தனை செய்தால் தேவையைப் பூர்த்தி செய்யும்பொழுதே, அந்த ஆடம்பரமான ஆசையையும் பூர்த்தி செய்கிறார். ஆசையைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டபின், மனம் ஆசையை விடாதபொழுது எனக்கு அந்த ஆசையில்லை என்று தெரிந்து அதை மறந்தவர் ஆழ்மனம் மறக்காத ஆசையை, அவர் எந்த ரூபத்தில் தன்னிடம் வந்தாலும், அவரே மறந்த ஆசையை அன்னை பூர்த்தி செய்கிறார்.

வெண்டைக்காய் இளசாகக் கிடைக்க வேண்டும், கூட்டத்தில் இடிபடாமல் போகவேண்டும், பஸ்ஸில் சுலபமாக இடம் கிடைக்க வேண்டும், நான் தயார் செய்த கேள்வியே பரீட்சையில் வரவேண்டும், யாரைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கடன் தரவேண்டும், தான் பெண்களால் சூழப்படவேண்டும், குழந்தைகள் நிறைந்த இடத்தில் வேலை வேண்டும், பார்த்தவர்களை எல்லாம் அதிகாரம் செய்ய வேண்டும், வேலையே செய்யாமல் சம்பளம் வரவேண்டும், பாஸ் மார்க்குக்கு வழியில்லை என்ற பொழுது I class வரவேண்டும், ஒரு நாள் கூட வேலை செய்யாமல், வருஷம் பூராவும் வசதியாக, சுவையாக, அதிகாரத்துடன் சாப்பிடவேண்டும், தனக்கு உதவி செய்பவர்களைத் திட்டிக்கொண்டே உதவியைப் பெறவேண்டும், காவல் போடாவிட்டாலும் திருட்டுப் போகக் கூடாது, எப்படியாவது 17 வருஷமாக சேர்ந்த கடன் உடனே ஒரேயடியாகத் தீர வேண்டும், யார் அழிய நான் விரும்பினாலும் அவர் அழிய வேண்டும், விலாசமே இல்லாவிட்டாலும் எனக்கு விருது வரவேண்டும், படிப்பே இல்லாவிட்டாலும் பெரிய பட்டம் பெறவேண்டும், எந்தத் தகுதியும் இல்லாவிட்டாலும் என்னை ஆயிரம் பேர் வந்து வணங்க வேண்டும், வீட்டில் சாப்பாட்டிற்கே வழியில்லாவிட்டாலும் 3 திருமணம் நடக்க வேண்டும், எந்தத் தகுதியும் இல்லாவிட்டாலும், பெரிய ஊரில், புதியதாக மூன்றாம் போஸ்ட் உற்பத்தி செய்து அதை எனக்கே தரவேண்டும், திருட்டுப் பயலை தேடிப் போய் அவனை நம்பி அறிவில்லாமல் நான் கொடுத்த பணம் நான் கோர்ட்டுக்குப் போகாமல் என்னைத் தேடி வரவேண்டும், என் வருமானத்தைப்போல் 40 மடங்கு கடன் வாங்கி நான் வேட்டைவிட்ட பணம் தானாக அடையவேண்டும், என்ற ஆசைகளை அன்னையிடம் கேட்டபொழுதும், கேட்க வெட்கப்பட்டபொழுதும், கேட்காமலும், கேட்கக்கூடாது என்று விட்டுவிட்டபொழுதும் இவர்கள் நிலை கருதி அன்னை இவற்றைப் பூர்த்தி செய்துள்ளார்.

பகவானுடைய அரசியல் ஆர்வத்தை மறுத்த இறைவன் சுவட்டைப்பின்பற்றி, அன்னை பக்தர்கள் ஆன்ம நலம் கருதி, முதல் நிலை ஆசையை முழுவதும் மறுத்ததைத் தங்கள் வாழ்வில் பல முறை அன்பர்கள் கண்டுள்ளார்கள். தன் வருமானமெல்லாம் தன் உறவினர்கட்கும், நண்பர்கட்கும் தடையின்றிச் செலவாக வேண்டும் என்று விரும்பிய பக்தரின் உறவினர்களையும், நண்பர்களையும் அன்னை அவரை விட்டு நிரந்தரமாக விலக்கி விட்டார். குடும்பமே உலகம், மனைவியே குடும்பம் என்ற பரம்பரையில் வந்தவர் மனைவியுடன் அன்னையை வந்தடைந்தபொழுது, மனைவியை இனிப் பார்த்துப் பேசக் கூடாது, பேச முடியாது என்ற நிலையை இருவரும் ஒரே இடத்திலிருந்தபொழுதும் அன்னை அவருக்கு உற்பத்தி செய்துவிட்டார். எனக்குப் பணத்தின் மீது ஆசையில்லை, எனக்குப் பணம் வேண்டாம், நான் பணத்தை நாடவில்லை என ஒப்புக்குத் தினமும் பேசியவர்களைவிட்டு அன்னை பணத்தை அறவே விலக்கியபொழுது கண்ணால் பார்க்கவும் முடியவில்லை என்ற நிலையை அவர்கட்குப் பணத்தில் செய்துவிட்டார் அன்னை.

எந்தச் சிரமுமில்லாமல் தானே பிரவாகமாக பணம் வந்தபொழுது கொடுப்பவரை "நான் உங்களைக் கேட்கவில்லையே", "உங்கள் பலனுக்காக எனக்கு நீங்கள் கொடுக்கின்றீர்கள்", "பணம் துச்சம்" "நான் பணத்திற்கு அடிமையாக மாட்டேன்" என்றெல்லாம் பேசியவர்கள், ஆன்மாவில் பக்குவமும், அறிவில் சூன்யமும் உடையவர்களாகவும், சேவையால் சிறந்து அறியாமையால் தாழ்ந்தவர்களாகவும், சூழலால் உயர்ந்து குணத்தால் தாழ்ந்தவர்களாகவும் இருந்தபொழுது, அன்னை பிரவாகமாக வந்த பொருளை நிறுத்தாமல், "இதுவரை உன்னை நாடி வந்ததை இனி நீ தேடிப் போக வேண்டும்" என்றாக்கியபொழுது, கல்லில் நார் உரிப்பதைப்போலவும், கருமியின் கையைத் தேடி நிற்பதைபோலவும், எழுத்தறிவில்லாதவனுக்கு இலக்கியம் பயிற்றுவிப்பது போலவும் முனைந்து, உழைத்து, பைசா பைசாவாகத் தேடிப் பழைய வருமானத்தைப் பெறும் நிலையை அளித்துவிட்டார். அவர்கள் ஆன்மா, சேவை, சூழல் அருளுக்குரியது. இருந்தாலும் ஆணவம், கயமை, மடமை, அறியாமை, திமிர், தாழ்ந்த பிறப்பு, கீழானவளர்ப்பு, கேவலமான எண்ணம், அருளைக் கேலி செய்தது அருளைத் தாங்கி வருபவர்களை அதிகாரம் செய்தது, கிராக்கி செய்தது, இனாமாகப் பெற்றுக் கொள்ள இல்லாத கிராக்கி செய்யச் சொல்லிற்று. ஒரு பட்டுப்புடவை வாங்க இருபது வருஷம் காத்திருந்தவருக்கு இருபது பட்டுப்புடவை இனாமாக வந்தபொழுது அவர் செய்த கிராக்கி, பட்டுப்புடவை கட்டும் சந்தர்ப்பமேயில்லாமல் போய்விட்டது.

  • ஆசையைப் பூர்த்தி செய்து ஆன்மாவை அடையலாம்.
  • ஆசையை மறுத்து ஆன்ம விளக்கம் பெறலாம்.
  • ஆசையை அடக்கி விரதம் இருக்கலாம்.
  • ஆசையைப் புறக்கணித்து முன்னேறலாம்.
  • ஆசையை மறந்து ஆன்ம நலனை நாடலாம்.
  • ஆசையை அனுபவித்து ஆனந்தம் பெறலாம்.
  • ஆசையை உயர்வாக அனுபவித்து அமிர்தமாக்கலாம்.
  • ஆசையின் வித்தே தெய்வ ஜோதி என அறியலாம்.
  • ஆசையே ஆண்டவனின் உருவம் எனப் போற்றலாம்.
  • நம் ஆசையை மறுத்துப் பிறர் ஆசையைப் பூர்த்தி செய்யலாம்.
  • ஆசைக்குரியவன் சிறியவன் என உணர்ந்து பெரியவனாகலாம்.
  • ஆசையைப் பூர்த்தி செய்யப் பிரார்த்திக்கலாம்.
  • ஆசையை மறக்கவும் பிரார்த்தனை செய்யலாம்.
  • ஆசையை அழிக்க முனையலாம்.
  • ஆசையை அன்பாகத் திருவுருமாற்றலாம்.
  • ஆசையின் ஆதியுருவம் ஆன்மா என அறியலாம்.
  • அந்த ஆதியுருவமாக ஆசையைத் திருவுருமாற்றலாம்.
  • ஆசையே ஆன்மா என்ற நிலையும் உண்டென அறியலாம்.

ஆசையை அழித்தோ, அனுபவித்தோ, பூர்த்தி செய்தோ, திருவுருமாற்றியோ அன்னையை அடைவது வாழ்வு. எல்லாப் பாதைகளும் முடியுமிடம் அன்னையேயாகும்.

*********



book | by Dr. Radut