Skip to Content

கன்சல்டன்சி

சுத்தம் - ஒழுங்கு

யோகவாழ்க்கை விளக்கம் முதல் 600க்கு எழுதினேன். அவை 3 பாகங்களாக வெளியிடப்பட்டன. அவை 1990 முதல் 1994 வரை எழுதப்பட்டவை. அதன் பிறகு 600 முதல் 700 வரை விளக்கம் எழுதினேன். 1994இல் 700 முதல் 800 வரை விளக்கம் எழுத ஆரம்பித்து 764இல் நிறுத்தியுள்ளேன். பல ஆண்டுகளாக அவை வெளியிடப்படவில்லை. இப்பொழுது 600 முதல் 700 வரை மலர்ந்த ஜீவியத்தில் வெளியிட வேண்டி அதைத் தேடினால் கிடைக்கவில்லை. பொதுவாக, எழுதுவதின் பிரதிகளே வெளியில் போகும். எல்லா original பிரதிகளும் என்னிடமேயிருக்கும். இவ்விளக்கங்கள் ஓர் அன்பருக்காக எழுதப்பட்டவை என்பதால் அவரிடம் மட்டும் ஒரிஜினல் போவதுண்டு. 600 முதல் 700வரை ஒரிஜினல் அவரிடம் கொடுத்ததாக நினைவு. இந்த ஆண்டு 700 முதல் 800வரை எழுதிப் பிரசுரத்திற்குக் கொடுத்தபொழுது 600 முதல் 700வரை பிரதியில்லை என்று ஆபீஸ் தகவல் கொடுத்தது.

தமிழ் தெரியாதவர்கள் என் பேப்பர்களைப் பாதுகாப்பது மேலும் பிரச்சினைக்கு வழி. சுமார் 3 ஆண்டுகட்கு முன் எனது MSS கையெழுத்துப் பிரதிகளைப் பிரித்துத் தேதிப்படி பைல் செய்து அட்டவணையிட்டு வைத்தாயிற்று. இந்த 3 ஆண்டுகளாக எழுதியவை, அவற்றின் ஆங்கிலப்பிரதிகள், அதற்கு வந்த பதில்கள் ஆகியவை சில ஆயிரம் பேப்பர்கள். அவற்றுள் ஆங்கிலக் கட்டுரைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்க் கட்டுரைகள் உள்ள இடங்கள் 5. அதை நானே செய்ய வேண்டும்.

மலர்ந்த ஜீவியத்திற்கு இவை தேவை என்பதால் என்னுடைய இடம், ஆபீஸ், அன்பர் வீடு ஆகிய இடங்களில் 2,3 முறை தேடியாயிற்று. கிடைக்கவில்லை. 700 முதல் 800வரை பிரசுரிக்கலாம் என 700லிருந்து அச்சுக்கு கொடுத்தாயிற்று. 

இந்த நிலையை ஏற்கக் கூடாது. இதற்குத் தீர்வு வேண்டும். எழுதியது தொலைவது தவறு என மீண்டும் ஒரு முறை எல்லா இடங்களிலும் பல பேர் தேடினர். அன்பர் வீட்டிலுள்ள பேப்பர்கள் ஏராளம். அவர் தாயார் படுக்கையாக இருப்பதால் அவரால் தீவிரமாகத் தேட முடியவில்லை. இது கிடைக்கும்வரை தேட வேண்டும். கிடைக்காதது சரியில்லை என அனைவரும் எல்லா முறைகளையும் பின்பற்ற முடிவு செய்தோம்.

ஆபீஸில் புத்தகம், கடிதங்கள், பைல்கள் எல்லாம் வெகு அழகாக சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலும், பரணையைச் சுத்தம் செய்ய முடிவதில்லை. 3 அன்பர்கள் ஒரு ஞாயிறு அன்று பரணையை சுத்தம் செய்தனர். அதற்கு ஒரு நாள் முழுவதும் ஆயிற்று, அன்று மாலை அன்பர் தம் தாயார் சற்று சுகமாக இருப்பதால் 4ஆம் முறையாகத் தேடினார்கள். கிடைக்கவில்லை. இது ஒரிஜினல் என்பதால் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பத்திரமாக மற்ற பேப்பர்களுடன் சேராமல் தனியே எடுத்து வைத்திருந்திருக்கிறார். சுத்தம் முடிந்தவுடன் அன்பர் வீட்டிலிருந்து 600 முதல் 700வரை ஒரிஜினல் கிடைத்ததாகச் செய்தி.

என் பைல்களை அடுக்கி வைக்க முயன்றபொழுது 700 முதல் 764வரை 1994இல் விளக்கம் எழுதியது ஆங்கில ஒரிஜினலுடன் கலந்திருந்தது கிடைத்தது.

  • சுத்தம் மறைந்துள்ளதை வெளிக் கொணரும் என்பது இந்த அனுபவம்.
  • சுத்தமும், ஒழுங்கும் orderliness எவ்வளவு முயன்றாலும் கடைப் பிடிப்பது சிரமம் என்பதை மீண்டும் ஒரு முறை அறிய முடிந்தது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அழைப்பு ஆழ்மனத்துள் சென்றால் அது நிலைக்கும். ஆழ்மனமே அழைத்தாலும் அது நடக்கும்.



book | by Dr. Radut