Skip to Content

பகவானுடைய இதர நூல்கள்

மாலை நேர உரையாடல் (Evening talks)

1926இல் ஸ்ரீ அரவிந்தர் தனிமையை நாடும்வரை மாலை நேரங்களில் ஓரிரு சாதகர்களைச் சந்திப்பார். சில சமயங்கள் அதிகம் பேரிருப்பார்கள். 1926இல் பகவான் தனிமையை நாடியபொழுது இவ்வுரையாடல்கள் நின்றுவிட்டன. 1938இல் பகவான் எலும்பு முறிந்தபொழுது டாக்டர்களும், சாதகர்களுமாக 12 பேர் அவருக்கு உதவி செய்ய நேரிட்டபொழுது, மீண்டும் இவ்வுரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றை நினைவிலிருந்து புராணி எழுதியவை வெளியிடப்பட்டுள்ளன. அன்னை இந்நூலை அரிய பொக்கிஷம் என்கிறார்.

பகவான் கேம்பிரிட்ஜில் பயின்றவர். இன்று ஆங்கில இலக்கிய மேதைகள் என நாம் அறியும் பலர் அன்று உயிரோடு வாழ்ந்தனர். Oscar Wilde பகவானுடைய அண்ணனுக்கு நெருங்கிய நண்பர். பெர்னார்ட் ஷா, ஹெச்.ஜி. வெல்ஸ் ஆகியவர்களை இந்நூற்றாண்டின் மேதைகள் (genius) என்பார்கள். பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பெரிய மேதை. அவர் தத்துவம் எழுதியவர். அவர் பாட்டனார் இங்கிலாந்தில் Prime Minister முதன் மந்திரியாக இருந்தவர். தத்துவத்திற்கு நோபல் பரிசில்லை. ஆனால் ரஸ்ஸலுக்கு நோபல் பரிசு தராமலிருக்க முடியாது என, அவர் எழுதிய புத்தகங்களின் எழுத்தின் உயர்வுக்காகப் பரிசு கொடுத்தனர். ஸ்ரீ அரவிந்தருக்கு இப்படிப்பட்டவர்கள் சம காலத்தவர்கள். அவருடைய யோக நூல்கள் கட்டுரைகளிலிருந்து இவர்களைப் பற்றிய பகவானின் அபிப்பிராயங்களைத் தெரிந்துகொள்ள முடியாது. இந்நூல் அக்குறையைப் போக்குகிறது.

பெரிய மகான்கள் பிறந்தால், அவர்களைச் சுற்றி ஒரு இயக்கம், ஸ்தாபனம் உருவாவது வழக்கம். அதைப்பற்றிய தம் கருத்தை இந்நூலில் பகவான் தெளிவாகக் கூறியுள்ளார். 

  • அப்படிப்பட்ட ஸ்தாபனங்கள் ஸ்தாபகர் உள்ளவரை இருக்கலாம்.
  • ஸ்தாபகருக்கு நிகராக அடுத்து ஒருவரிருந்தால் அவர் காலம்வரையும் அந்த ஸ்தாபனம் இருக்கலாம்.

இந்த நூலில் மட்டுமே பகவானுடைய இக்கருத்து காணப்படுகிறது. நாம் ஸ்தாபனத்தைப் போற்றுகிறோம். பகவான் வாழ்ந்த இடங்களையும், அடக்கம் செய்யப்பட்ட இடங்களையும், அவருடனிருந்தவர்களையும் புனிதமாகப் போற்றி வழிபடுகிறோம். அவர்கள் உயிரோடுள்ளவரைதான் இந்த ஸ்தாபனங்களுக்கு உயிருண்டு என்று பகவான் கூறிவிட்டார்.

மகாத்மா காந்தியின் ‘ சத்திய சோதனையைப் படித்துவிட்டு இன்று ஓர் இளைஞன் காங்கிரஸில் சேர்ந்தால் அவன் காண்பது சத்தியமா, அஹிம்சையா?

  • ஸ்தாபனம் வேறு, இலட்சியம் வேறு.
  • ஸ்தாபனம் இலட்சியத்திற்கு எதிரி என்பது உலகம் அறிந்த கொள்கை.

கடை அவசியம். நிலைமை மாறி, கிரெடிட் கார்ட் மூலமும், போன் மூலமும், வீட்டிற்குச் சாமான்கள் டெலிவரி செய்யப்பட்டால், கடைத்தெரு இருக்குமா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அன்னையை அழைத்தால் - எவர் அழைத்தாலும் - அன்னை நிதர்சனமாக வருகிறார். பிரார்த்தனை பலிக்கிறது. எங்கிருந்து அழைத்தாலும் பலிக்கிறது என்றாலும் நமக்கு பகவான், அன்னை வாழ்ந்த இடங்களைத் தரிசிக்க ஆவல் அதிகம். ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் சாதகர்கள் கட்டுப்பாடான வாழ்வை அவர்கள் காலடியில் பவித்திரமாக நடத்தினார்கள். அந்தச் சூழல் ஆத்ம விளக்கம் தரும். அதுவுள்ளவரை அதற்குயிருண்டு. அவர்கள் வாழ்ந்த இடங்களும், அடக்கம் செய்யப்பட்ட சமாதியும் என்றும் புனிதமானவை. அப்புனிதச் சூழல் மட்டும் நாம் பெறமுடியுமானால் அது அன்றுபோல் என்றும் ஆத்ம விளக்கம் தரும்.

********



book | by Dr. Radut