Skip to Content

அஜெண்டா

P.115, Volume I

இயற்கையின் சோதனையைக் கடக்கப் பயமின்மையும், கலகலப்பான குணமும் தேவை. ஆன்மீக சோதனையில் வெற்றிபெறத் தேவையானவை ஆர்வம், நம்பிக்கை, இலட்சியம், உற்சாகம், உதாரகுணம், அர்ப்பணமாகும். தீயசக்திகளினின்று தப்பத் தேவையானவை, உஷார், உண்மை, அடக்கம். எந்த முன்னேற்றத்திலும் ஒரு சோதனையுண்டு. சில சமயங்களில் நாம் பரீட்சிக்கப்படுகிறோம், சில சமயம் நாம் பரீட்சை வைக்கிறோம்.

அன்னை சோதனை செய்வதில்லை. நாம் எப்படியிருக்கின்றோமோ அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். அந்த நிலையில் முடிந்த அளவு உதவி செய்வார்கள். ஆன்மீகம் உட்பட உலகில் அனைத்தும் மனிதனைச் சோதனை செய்தபடியிருப்பதை அன்னை மேற்கண்டவாறு விளக்குகிறார். சைனாவில் I ching ஐ சிங் என்றொரு புத்தகம் உண்டு. இதை 64 பாகமாகப் பிரித்துள்ளனர். இது ஒரு வகை ஜோஸ்யம். இந்தப் புத்தகம் நம் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நாடி ஜோஸ்யம்போல் கூறவல்லது. இதை எடுத்துப் பார்க்க ஒரு பெரிய முறையை - பூஜை - கூறுகின்றனர். அடிக்கடி அந்தப் புத்தகத்தில் வரும் சொல்,

"நியாய மனப்பான்மையை வலியுறுத்தினால் வாழ்வு பரிசு தரும்"

என்பதாகும். நாம் எங்கு இருக்கிறோமோ அங்கு நம் கடமையைத் தவறாது செய்தால் பலன் தவறாமல் வரும் என்பது கருத்து. காணிக்கை என்பது இந்தியப் பரம்பரைக்குரிய முக்கிய கருத்து. 

எண்ணெய் தவறாமல் தேய்த்துக் கொண்டால் உடல் நலம் குன்றாது, ஆசிரியருக்குச் சேர வேண்டியதைத் தவறாமல் கொடுத்துவிட்டால் படிப்பு வரும் என்ற கருத்தை வலியுறுத்த, "வாணியனுக்கும், வாத்தியாருக்கும் சேரவேண்டியதைப் பாக்கி வைக்கக் கூடாது" என்பர்.

இயற்கை, ஆன்மீகம், தீயசக்திகளைப்பற்றி அன்னை நம்மை எச்சரித்து அறிவுறுத்துகிறார். இயற்கை பயங்கரமானது. அதன் சக்தி பெரியது. பயப்படுபவர்களை அது பாதிக்கும். குதூகலமான குணமுடையவர்க்கு பயம் வராது. அதனால் இயற்கையின் சோதனையைக் கடக்க பயமின்மையும், கலகலப்பான குணமும் தேவை என்கிறார் அன்னை.

ஆன்மா அழியாதது. அசையாதது. தானே நம்மை நாடி வராதது. மனிதன் ஆர்வம்கொண்டு ஆன்மாவை அடைய விரும்பினால், நம்பிக்கையிருந்தால், ஆன்மாவை அடையும் இலட்சியம் அவனுக்கிருந்தால், அதற்குத் தேவையான சக்தி உற்சாகமாக எழுந்தால் அவை உதாரணகுணத்தாலும், அர்ப்பணத்தாலும் எழும். எனவே ஆன்மாவின் பரிசைப் பெற இவை தேவை. இவற்றுள் ஏதாவது குறைந்தால் ஆன்மா நம்மைத் திரும்பிப் பார்க்காது.

பிரம்மம் சிருஷ்டித்தபொழுது முதலில் எழுந்தவை சிருஷ்டிக்கு உதவவில்லை. எதிராக மாறின. சத்தியம் பொய்யாக மாறியது. ஆனந்தம் வலியாக மாறியது. ஜீவியம் ஜடமாக மாறியது என்ற ஆன்மீக மரபுண்டு. அவை தீய சக்திகளாக மாறிவிட்டன. பிரம்மம் என்ற ஆண்டவனை எவரும் அணுகாதவாறு அவை தடுக்கின்றன என்பது வழக்கு. நம்மிடம் உண்மையிருந்தால் தீயசக்திகள் நம்மைப் பொய்யால் பாதிக்க முடியாது. உஷாராக இருப்பவனை ஜடம் பாதிக்காது. அடக்கமான மனிதனை, அதாவது அகந்தையற்றவனை, எந்த வகையான தீயசக்தியும் தீண்ட முடியாது என்று அன்னை அடித்துக் கூறுகிறார். அன்னை போற்றும் குணம் அடக்கம். இறைவன் முன் நாம் தூசு என்பதே அடக்கம் எனவும் விவரிக்கிறார். அவர் அடக்கத்தை ஸ்ரீ அரவிந்தரிடம் கண்டார். அவரிடம் மட்டுமே கண்டதாகக் கூறுகிறார்.

***********



book | by Dr. Radut