Skip to Content

"சிறு குறிப்புகள்"

சுயநலம்

(ஓர் அனுபவம்)

அன்னையை நெடுநாளாக அறிந்து, என் வாழ்வை அன்னைக்கே முழுவதும் அர்ப்பணம் செய்ததாக நான் நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது, நண்பர்கள் தங்கள் சுயநலத்தைப் பற்றிப் பேசும்பொழுது நான் அவர்களை விட அதிக சுயநலமி என்றுணர்ந்தேன். சுயநலத்தைப்பற்றிய பேச்சில் எழுந்த கருத்துகளை என் மனதில் கொண்டுவந்தேன்.

  • பிறர் சௌகரியத்தை மறந்து நம் சௌகரியத்திற்காக மட்டும் செயல்படும் சுயநலம்.
  • பிறருக்கு ஏற்படும் நஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் நம் சௌகரியத்தைப் பூர்த்தி செய்வது.
  • அடுத்தவருக்கு உயிர் போய்விட்டது என்றறிந்தாலும், மனத்தைத் தொடாத சுயநலம்.
  • ஒரு காரியத்தில் வரும் பலனில் ஒரு சிறிது அடுத்தவருக்குப் போகும் என்றாலும் மனம் பொறுக்காத சுயநலம்.

இந்த நான்காம் நிலை என் மன நிலை என நான் அறிந்தேன். அதற்காக மனம் வெட்கப்படவில்லை. வருத்தமும் எழவில்லை. ஆனால் இந்நிலையை மாற்ற வேண்டும் என நினைத்தேன். எந்த வேலையானாலும் அடுத்தவர் பங்கு முக்கால் பாகமானாலும், பலனில் அவருக்குக் கால்பாகம் போவது எனக்கு ஒத்துக்கொள்ளாது. இதை மாற்ற நான் முடிவு செய்தேன். ஆனால் அந்த முடிவு மறந்துவிடுகிறது. சுமார் 2 வருஷமாக இந்த முடிவைச் செயல்படுத்த முயல்கிறேன். நண்பர்கள் பேசும்பொழுது சுயநலம் விலகினால் மனம் விசாலமாகி சந்தோஷம் எழுகிறது என்றனர். அதை நான் நெடுநாள் உணரவில்லை. சுயநலம் போவது நல்லது என அறிகிறேன். சமீபத்தில் அந்த சந்தோஷம் சிறிது தெரிந்தது. ஆனால் மனம் அதைப் பொருட்படுத்தவில்லை. 

நான் எங்கு போனாலும் tips கொடுக்க நிர்ப்பந்தமில்லாத இடத்தில் கொடுப்பதில்லை. அது நினைவுக்கே வருவதில்லை. என் கண்ணெதிரே பலர் கொடுத்தாலும் எனக்குக் கொடுக்கத் தோன்றுவதில்லை. நான் அடிக்கடி வெளியூர்கட்குப் போவதுண்டு. ஹோட்டல்களிலும், உறவினர் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் தங்குவதுண்டு, கடந்த பல ஆண்டுகளாக நான் tips ஐப்பற்றி நினைத்ததேயில்லை. சில ஆண்டுகளாகக் கொடுத்தேன். நான் ஏராளமாகக் கொடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது அடுத்தவர் ஒருவர் கொடுப்பதைக் கண்டவுடன் நான் 1 மாதம் தங்கியபொழுது கொடுத்த தொகையை அவர் 1 நாள் தங்கியதற்குக் கொடுத்ததைக் கண்டேன். "இவர் புதுப் பணக்காரர். பெருமைக்காகக் கொடுக்கிறார்'' என்று நினைத்தேன். நான் செய்வதே சரி எனப்பட்டது. எது சரி என எப்படி அறிந்து கொள்வது?

ஸ்ரீ அரவிந்தர் Law of Life வாழ்வின் சட்டம் என்று குறிப்பிடுவதை நான் படித்திருக்கிறேன். அதில் எனக்கு நம்பிக்கையுண்டு. Life Response என்ற கருத்தையும் நான் நம்புபவன். மேலும் ஸ்ரீ அரவிந்தர் ஒரு நிகழ்ச்சியில் நியாயம் தேடமுடியாது. செயல் என்பது பல நிகழ்ச்சிகளாலானது. நியாயம் செயலுக்குரியது. அதன் பகுதிகளிலான நிகழ்ச்சிகளின் பின்னாலுள்ள அநியாயம், நியாயம் சேர்ந்து பூரணநியாயத்தைத் தரவல்லது என்று கூறுகிறார். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு என் நியாயத்தை வாழ்வும், செயலும் காட்டுவதை நான் ஏற்பதாக முடிவு செய்தேன்.

அடுத்த முறை வெளியூர் போய் உறவினருடன் தங்கிவிட்டு வரும்பொழுது நான் வழக்கமாகத் தரும் tips ஐப்போல் 5 மடங்கு கொடுத்தேன். அதைக் கொடுக்கும்பொழுது எனக்குத் தெரிந்த மற்றொருவர் என்ன கொடுப்பார் என நினைத்தேன். என்னைப் போல் சுமார் 10 மடங்கு கொடுப்பார் என நினைவு வந்தது. அதை நான் பொருட்படுத்தாமல் நாம் 5 மடங்கு மனத்தால் உயர்ந்துவிட்டோம் என சந்தோஷப்பட்டேன். அன்று மாலை வியாபார விஷயமாக நான் வாங்கிய பொருளுக்குப் பணம் கட்ட அவர்கள் ஆபீசுக்குப் போனேன். பில் மொத்தம் 25 லட்சம் செலவு. இந்த ஆபீசில் தர வேண்டிய பணம் 15 லட்சம். எந்தப் பொருளையும் குறைந்த விலையில் நான் வாங்குவது வழக்கம். எனக்கு அதில் திறமையுண்டு. இந்த 15 லட்சம் தொகையை இவர்களுடைய ஏஜெண்ட் மூலம் வாங்கினால் குறையும் என்பதால், நான் அந்த ஏஜெண்ட் மூலம் ஏற்பாடு செய்திருந்தேன். அதனால் பெருந்தொகை சலுகை வந்ததால் எனக்கு சந்தோஷம். நான் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபடி 15 லட்சத்தைக் கொடுத்துவிட்டு அவ்வூரை விட்டுப் புறப்படு முன் வேறு வேலையாக அந்த ஏஜெண்டைச் சந்தித்தேன். தற்செயலாக அவர் சொன்ன செய்தி எனக்கு அதிர்ச்சியாயிற்று. அவர் கணக்குப்படி நான் கொடுக்க வேண்டிய தொகை 13 லட்சம், 15 அன்று. நான் இரண்டு லட்சம் அதிகமாக கொடுத்துவிட்டு 1 லட்சம் குறைத்துக் கொடுத்ததாக சந்தோஷப்பட்டிருக்கிறேன். சுமார் 4 ஆயிரம் tips கொடுக்க மனம் வாராததால் 2 லட்சத்தை வாழ்க்கை எடுத்துக் கொண்டது என அறிந்தேன். சுயநலத்தை விடுவது சிரமம். செயல் மாறினாலும், உணர்வு மாற வேண்டும். உணர்வு மாறினாலும் செயல் மாற வேண்டும், உணர்வும் செயலும் மாறுவதே உண்மையான மாற்றம்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர் 

அருளை, அடையாளம் காண்பது நன்றியறிதல்.

*******



book | by Dr. Radut