Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

Conversation

அண்ணன் - நம் காம்பவுண்டு ஓர் அடி ரோட்டினுளிருப்பதால் அதை இடிக்கச் சொல்லி நோட்டீஸ் வந்திருக்கிறது.

தம்பி - சட்டப்படி எதுவுண்டோ அதை செய்வது சரிதானே.

அண்ணன் - காம்பவுண்டு கட்டும்பொழுது இது தெரியாமல் நடந்துவிட்டதா? தெரிந்து நடந்ததா?

தம்பி - நாம் அன்னை பக்தர்கள். நமக்கு இடிப்பதும் பிரச்சினை யில்லை. இடிக்காமலிருப்பதும் பிரச்சினையில்லை. எது வேண்டும் என நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

அண்ணன் - இடித்துவிடுவது சரி, இடிக்காமல் பிரார்த்தனை செய்தால், இடிக்க வேண்டும் என அடுத்த உத்தரவு வரும். அது தவறாமல் நடக்கும்.

தம்பி - இது என் அனுபவமும் கூட. ஆனால் அது எப்படி நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

அண்ணன் - உடலில் தெம்பிருந்தால் ஊரில் பரவும் வியாதி நம்மைத் தீண்டுவதில்லை. ஊரில் அந்தஸ்திருந்தால், நம் வீட்டார் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை. உபரி வருமானமிருந்தால், வீண் செலவு வீட்டைப் பாதிப்பதில்லை என்பதுபோல், அன்னை மீது நம்பிக்கை உபரியாக ஆரோக்கியத்தையும், அந்தஸ்தையும், வருமானத்தையும் இவற்றையெல்லாம் தரும் ஜீவியத்தையும் தருகிறது. ஜீவியம் உயர்ந்திருந்தால், நம் குறைகள் நம்மை பாதிப்பதில்லை. சட்டம், நியாயம், உத்தரவு எல்லாம் நாம் கேட்காமல் நமக்கு சாதகமாகும்.

தம்பி - நம்மவர்கள் காலமும் நேரமும் சரியாயிருந்தால் எல்லாம் சரியாகும். எதுவும் பாதிக்காது என்கிறார்கள்.

அண்ணன் - அன்னையைப் பொருத்தவரை அதுவும் உண்மை. நாம் இன்று எப்படி நடந்து கொள்கிறோமோ அதுபோல் நம் எதிர்காலம் அமையும். அதனால் நமக்கு வேண்டியதை - சரியோ, தப்போ - செய்துவிட்டு அது பலிக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதைவிட, அன்னைக்கு எது பிடிக்குமோ அதை செய்வதே மேல்.  இந்தக் கோணத்தில் நமக்குத் தெரிந்த விஷயங்களை நினைத்துப் பார்த்தால் அங்கு அன்னையின் விசேஷம் தெரியும்.

தம்பி - பரீட்சை எழுதாமல் M.A. பட்டம் பெற்றவர் நினைவு வருகிறது. இதுபோல்தான் அவருக்கு M.A. பட்டம் கிடைத்தது. அதையே சௌகரியமாக நினைத்ததால் Ph.D. முடித்தும் thesis எழுத முடியாமற் போய் விட்டதல்லவா?

அண்ணன் - 60 பக்கம் எழுத வேண்டிய பரீட்சைகளில் 7, 8 பக்கம் எழுதிவிட்டு வந்து september பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கும்பொழுது அவருக்கு II கிளாஸ் பாஸ் வந்து கல்லூரி ஆசிரியரானார் என்று தெரியும்.அவர் என்ன செய்திருக்க முடியும் என்று நினைக்கிறாய்?

தம்பி - அவர் SSLC, இன்டர்மீடியட், B.A.யில் இங்கிலீஷில் பெயிலானவர். M.A. சேர பயப்பட்டார். தகப்பனாரால் சேர்ந்தார். ஒரு பக்தருடைய ஆதரவால் அவருக்கு கல்லூரியில் மிகப்பெரிய புத்திசாலி எனப் பெயர் வந்தது!

அண்ணன் - அவர் நண்பர் ஒரு பக்தர்.எந்த திறமையுமில்லாத இவருக்கு பிறரை அறியும் திறமையிருந்தது. அதன் மூலம் இவர் பிரபலமானார். இவருக்கு படிப்பு கசப்பு, எழுத வராது. கல்லூரியில் பிரபலமானபின் பக்தரைக் கலந்து ஆலோசித்தார். இவர் மக்கு. பக்தர் எழுதும் பயிற்சியை மேற்கொள்ளும்படிச் சொன்னார். இவர் செய்யவில்லை. பக்தருடைய ஆதரவால் II class பாஸ் வந்து கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியரானார். அதன் பின்னும் எழுதும் பயிற்சியைப் பெறவில்லை. அத்துடன் பக்தரிடம் பொறாமையாகவும் நடந்து கொண்டார். பக்தரோடுள்ள தொடர்பையும் துண்டித்துவிட்டார். அமெரிக்கா போய் Ph.D படித்தார். Thesis எழுத முடியவில்லை. 

தம்பி - விசேஷம் தெரிகிறதா? எழுத்துப்பயிற்சி பெறாமல் அன்னை பாஸ் கொடுத்தார். அது பாக்கியாக இருந்தது. Ph.D.இல் எழுத முடியவில்லை. நாம் எது செய்யத் தவறினாலும் அன்னை ஜீவியம் அபரிமிதமான ஆதரவு தருவதால் முதலில் காரியம் நடந்துவிடுகிறது. இவர் எழுதப் பயின்றிருக்க வேண்டும். அல்லது பக்தரோடு தொடர்பை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பக்தர் மீது நல்லெண்ணமாவது இருந்திருக்க வேண்டும். இவருக்கும் அன்னைக்கும் சம்பந்தமில்லை. எதுவுமில்லாமல் இந்த அளவு உயர்ந்ததை அவர் வீட்டார் யாரும் நம்பவில்லை.

அண்ணன் - அவரே தம் நிலையை நம்ப முடியவில்லை என்று சொன்னாரே. இவர் பக்தரில்லை. நமக்கு பக்தர்களைப் பற்றி மட்டுமே கவலை. பக்தர்கள் அன்னை சொல்வது போல் தொடர்ந்த முன்னேற்றம் பெற முயல்வது சரி. செய்யாமலிருப்பது சரியில்லை. நமக்கு நோட்டீஸ் ஏன் வந்தது? நாம் செட்டியாரிடம் வீடு வாங்கினோம், அவர் காம்பவுண்டை இப்படிக் கட்டியிருக்கிறார். தெரிந்துதான் கட்டினாரா?

தம்பி - இப்பொழுது நாம் ஒன்று செய்யலாம். நமக்கு நோட்டீஸ் வந்த காரணத்தைக் கண்டுபிடிக்கலாம். அது தெரிந்தால், அதை அகற்றலாம்.

அண்ணன் - உடனே அதைச் செய்வது நல்லது. எதற்கும் கவனம் வேண்டும். கவனம் குறைந்த உடன் பிரச்சினை வரும்.

தம்பி - நெடுநாளாக நமக்கு எல்லாக் காரியங்களும் நல்லபடியாக முடிவதால், பல விஷயங்களில் அலட்சியம் வந்துவிடுகிறது. ஒரு ஆபீசில் லீவு போட்டுவிட்டு வந்து ஆசிரமம் போன்ற இடத்தில் வேலை செய்வது என்றால் அது சாமானியமானதா? உங்கள் எதிர் வீட்டுக்காரருக்கு 4 வருஷமாக இந்த லீவு சாங்ஷனானது அந்த ஆபீசில் அனைவருக்கும் ஆச்சரியம். 3மாதத்திற்கொரு முறை extension வேண்டும். இதுவரை இவர் ஒரு முறைகூடப் போகாமல்12 முறை லீவு சாங்ஷனானது அந்த ஆபீசிலேயே நம்ப முடியவில்லை. இவர் அலட்சியம் செய்ய ஆரம்பித்தார். உடனே ஒருவர் பிரச்சினையை கிளப்பி உடனே வேலையில் சேரும்படி தந்தி வந்தது. பிரச்சினை வந்ததும் மீண்டும் உஷாரானார். நேரடியாகப் போனார். தலைமை ஆபீசரைப் பார்த்தார். "உங்களைப் போல் நானிருந்தால், நானும் இதைத்தான் செய்வேன். நீங்கள் அதிர்ஷ்டம் செய்ததால் இது போன்ற இடத்திலிருக்கிறீர்கள்,'' என்றார். அத்துடன் நிலைமை மாறியது. இதுவரை அந்த ஆபீசில் எவருக்கும் கிடைக்காத சலுகையை இவருக்குக் கொடுத்து அந்த ஆர்டர் இவர் கேட்டபடியே போட்டுக் கொடுத்தார்.

அண்ணன் - நமக்கு மட்டும் அன்னை முதன்மையாகிவிட்டால், நடப்பதே வேறு. நாம் அங்கு குறை வைத்து விடுகிறோம். அல்லது கவனத்தை வேலையில் குறைத்து விடுகிறோம். அந்தக் குறைகள் வந்தபின் எதுவும் சரிவர நடப்பதில்லை.

தம்பி - அந்தக் குறைகள் வராதவரை விஷயம் நன்றாக நடக்கும். நாம் அனைத்தையும் மறந்து விடுகிறோம். இந்த நோட்டீஸ் வந்தால் அதற்குரிய காரணத்தைக் கண்டு, அதை வாய்ப்பாக மாற்ற முடியாதா?

அண்ணன் - முடியும். நமக்கு தெரியாது என்பதில்லை. செய்வதில்லை. அப்படி செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தம்பி - எனக்கு நினைவிருக்கிறது. நமக்கு உரிமையில்லாததை நம்மைத் தேடிவந்து கொடுத்தார்களே, புறம்போக்கு நிலம், நன்றாக நினைவிருக்கிறது.

தொடரும்...

 

**********

 

அற்புதம் அன்றாடம் நடக்குமா?

போன் என்பதை முதலில் பார்க்கும்பொழுது அது அற்புதமாக இருக்கிறது. ரேடியோ, TV, மோட்டார், கார், கம்ப்யூட்டர் ஆகிய அனைத்து விஞ்ஞானச் சாதனங்களும் புதிதில் அற்புதமாக இருக்கின்றன. அவை எப்படி இயங்குகின்றன என அறிந்தபின், அவற்றை அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்ததாலும் அவை சகஜமாகின்றன. "அன்றாடம் அவற்றை எங்கும் காண்கிறோம்''.

தொலைந்த பர்ஸைத் தேடுவது, வந்த வியாதியைக் குணப்படுத்துவது, தீராது என நாமறிந்து கொண்ட வியாதியை அனுபவிப்பது, பற்றாக்குறை வருமானத்தில் குடும்பம் நடத்துவது, கொடுமையான boss முதலாளியிடம் வேலை செய்வது, நம் நிலைக்கு மேலுள்ள ஆசை மனதில் எழுந்தபின் ஏக்கமடைவது ஆகியவை அன்றாட அனுபவம்.

பர்ஸ் உடனே கிடைப்பது, வியாதி ஒரே நாளில் மறைவது, தீராதவியாதி தீருவது, சிறுவருமானம் பெருகுவது, கடுமையான முதலாளி இனிமையாக நடப்பது, நிலைக்கு மேற்பட்ட ஆசை பூர்த்தியாவது அற்புதம்.

நாமுள்ள வாழ்வு நிலைக்கு ஒரு சட்டம் உண்டு. அதற்கு, பொருள் தொலைவது, வியாதி வருவது, பற்றாக்குறை, கொடுமை, தீராத ஆசை ஆகியவை இயல்பு. நமக்கு மேற்பட்ட வாழ்வுண்டு. அதற்குரிய சட்டம் உயர்ந்தது. அதற்கு, பொருள் தொலையாது, வியாதி வாராது, கடுமை எழாது.அந்தச் சட்டம் செயல்பட்டால் இன்று அற்புதம் என்பது அன்று அற்புதமில்லாமல் சகஜ நிகழ்ச்சியாகும். நாம் அந்தச் சட்டத்தை அறியும்வரை அச்சட்டத்தின் சக்தியை, அன்னையை, அழைத்தால் அற்புதம் அன்றாட நிகழ்ச்சியாகும்.

விஷயத்தை நினைத்தால் நம் சட்டம் செயல்படும். அன்னையை விஷயம் மனதில் எழுமுன் நினைத்தால், அன்னை சட்டம் செயல்படும். பல வருஷமாக இதைக் கேட்டவருக்குச் சலிப்பு ஏற்பட்டதே தவிர அற்புதம் நடக்கவில்லை. மனம் விஷயத்திலிருந்து அன்னைக்கு மாறியவுடன் அற்புதம் நடந்தது. அதைப் பெற்றவர்கள் சிலர்.

650ருபாய் சம்பளத்திலிருந்து 2000 ருபாய் சம்பளத்திற்கு போனார் ஒருவர்.

1000 ருபாய் சம்பாதிக்கும் பெண்ணை அமெரிக்காவில் வசிக்கும் பிள்ளை மணந்தார். 

M.Phil-இல் இடம் கிடைக்காதவருக்கு Ph.D எடுத்தபின் கிடைக்கும் விருது வந்தது. 

 

********

பாக்கியை வசூல் செய்யும் கணக்கு

காண்ட்ராக்டர் கணவன், ஆபீசில் வேலை செய்யும் மனைவி, கணவன் உழைப்பாளி. மனைவி பொறுப்பானவர். பொதுவான நல்ல வசதியுள்ள குடும்பம். அன்னையை அறிந்து, விரும்பி ஏற்றுக் கொண்டனர். வாழ்க்கையில் பெரியதாகப் பிரச்சினை என்பவையில்லை.

அடிக்கடி தியானமையம் வருவதும், தியானம் செய்வதும், அன்னையைப்பற்றி அதிகமாக அறிய முனைவதும் நடைமுறைச் செயல்களாகின. காண்ட்ராக்ட் தொழில் நல்ல முறையில் நடக்கிறது. எந்தக் குறையுமில்லை என்றாலும், பணம் நேரத்தில் வசூலாவதில்லை. ஒரு சமயம் பாக்கி அதிகமாக நின்று விட்டது. என்ன செய்வது, அன்னையை எப்படிப் பிரார்த்திப்பது என்ற கேள்வி எழுந்தது.

கணக்கு, பணத்திற்குக் கவனம் தரும். பணத்தை வசூல் செய்ய பல அன்னை முறைகள் உள. அவற்றுள் கணக்கு எழுதுவது ஒன்று. ஒரு 10 நாள் வரவு செலவை எழுதிப் பாருங்கள். அதன்பின் பார்க்கலாம் என மையத்தில் கூறினார்கள்.

கணக்கு எழுதுவது நல்லது என மனம் ஏற்றுக் கொண்டது. முறையாக எழுதினார். முதல் நாள் மனம் அடங்கியது. இரண்டாம் நாள் மனம் இனித்தது. பணம் வருவதைவிட கணக்கு எழுதுவதால் ஏற்படும் அமைதியும், இனிமையும் மனத்தைத் தொட்டன. மூன்றாம் நாள் இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் பணம் வந்தது.

  • கணக்கு எழுதினால் பணம் வசூலாகும் என எழுதுவது முறை.
  • கணக்கு அன்னை விரும்புவது என எழுதுவது சிறந்தது.

********



book | by Dr. Radut