Skip to Content

"அன்பர் உரை''

அருளின் வேகத்திற்கு மனிதன் ஈடு கொடுத்தால்

  - இறைவனின் தருணம் நம் வாழ்வில் பலிக்கும்

நம் தாமதத்திற்கு அன்னையை ஆட்படுத்தினால்

  - பெருமழை சிறு தூறலாகும்

 

(சென்னை - பெரம்பூர் ரிஷி இல்ல தியான மையத்தில் 31.10.98 அன்று திருமதி ரேவதி சங்கரன் நிகழ்த்திய உரை)

கிராமத்திலிருந்து ஓடி வந்தவன் சென்னையில் ஷெரீப் ஆனதும், சினிமாவில் துக்கடா இடம் கிடைக்காதவர் நாட்டில் பெரிய நடிகரானதும், கிராமத்து இளைஞன் பிரதமரானதும், தண்டோரா போட்டவர் தலைவரானதும் உலகம் அறிந்தவை. இதுபோன்ற செய்திகள் ஏராளம்.அன்னையை ஏற்று, அருளையும் விலக்காமல் ஏற்கும் அனைவருக்கும் வாழ்க்கை தவறாமல் இதுபோன்ற பரிசுகளை உடனே அளிக்கவல்லது, பல சமயங்களில் அளித்துள்ளது என்பது உலகம் அறியாதது. அன்பர்களே தெளிவாக அறியாதவர்கள்.

மனிதன் நடைபாதையில் நடந்து போகிறான். ரோட்டில் பஸ்ஸும், காரும் போகின்றன. அடுத்தாற்போல் ரயில் போகிறது. பஸ்ஸும், காரும், ரயிலும் நடந்துபோகும் மனிதனை ஏற்றிப் போக முன் வருதல் போல் அருள் செயல்படுகிறது. விமானம்போலும் செயல்படுகிறது. மனிதன் பல சமயங்களில் நம்புவதில்லை. சில சமயங்களில் ஏற பயப்படுகிறான். மற்ற நேரங்களில் தயங்குகிறான். ஏன் நாம் ரயிலை ஏற்க வேண்டும் என நினைத்து நடந்து போகிறான். அன்பனை நெருங்கி வரும் அன்னையையும், அருளையும் மனிதன் விலக்குவது இது போன்றதே. 

ரயிலில் ஏற வேண்டுமானால் ரயில்வே ஸ்டேஷனில் போய் ஏறவேண்டும். பஸ் நின்று ஏறவேண்டுமானால் அது பஸ் ஸ்டாப்பாக இருக்க வேண்டும். நாமுள்ள இடத்திற்கு ரயிலும், பஸ்ஸும் வாராது.

IAS தேறியவர்கள் சிறப்பானவர்களானால் அவர்கள் மத்திய சர்க்கார் செக்ரடரி ஆவார்கள். அதுவும், மாநில சர்க்கார் கவர்னர் பதவியும் சமமானவை. V.P.மேனன் மத்திய செக்ரடரியாக ஓய்வுபெற்று ஒரிசா கவர்னரானார். P.C.. அலெக்ஸாண்டர் அதுபோல் கவர்னரானார். பிரபலமான பல்கலைக்கழகப் பேராசிரியர் மகன் ஆண்டுதோறும் முதல் மாணவனாக வருவான். அவன் SSLC படிக்கும்பொழுது ஊரில் ஓர் கட்டுரைப் போட்டி நடந்தது. பையன் கலந்துகொண்டான். முதலாக வந்தான். அவன் எழுதியதைப் படித்த நடுவர்கள் பையன் சொந்தமாக எழுதவில்லை. மனப்பாடம் செய்து எழுதிவிட்டான் என அடுத்தவனுக்குப் பரிசு அளித்தனர். தகப்பனாருக்குப் பையன் போட்டியில் கலந்து கொண்டதே தெரியாது. பையன் அபாரபுத்திசாலி. தகப்பனாருக்குப் பையனை IAS அனுப்பத் தோன்றவில்லை. IAS விவரம் முழுவதும் தெரிந்தவர். அவரை IASக்கு அந்தநாளில் எழுதச் சொன்னார்கள். கேட்கவில்லை. மகன் IAS எழுதினால் இந்தியாவில் முதன்மையாக வருவான் அல்லது இரண்டு, மூன்றாம் ராங்க்கில் வருவான். பையனை மெடிகல் கல்லூரியில் சேர்த்தார். அப்பொழுது பையனை IASக்கு அனுப்பவேண்டும் என அவரை நாடி வந்து சொன்னவர்கள் அருளைத் தாங்கியவர்கள் என அவர் அறியவில்லை. தொடர்ந்து தாம் தரிசனத்திற்கு வருவதால் தமக்குத் தோன்றாவிட்டாலும் அருள் அடுத்தவர் மூலம் வந்து வலியுறுத்துவதை அன்பர் அறியவில்லை.

வேறோர் அன்பர் எல்லாத் தரிசனங்களுக்கும் வருவார். இன்ஜினீயர். புகழ் வாய்ந்தவர். பையன் பிரபலமான பள்ளியில் முதலாவதாகத் தேறியவன். தகப்பனாரைப்போல் இன்ஜினீயராக வேண்டும் என ஆசைப்பட்டான். அவரும் மகனை IAS படிக்க வைக்க வேண்டும் என்பதை ஏற்கவில்லை. 

அருளை நம் பிரியத்திற்கு உட்படுத்தினால், அருள் விலகும்.

போன், fax, email, telex. உள்ள இடத்திலுள்ள கிராமத்து மனிதன் "இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. நான் நேரே போய்ப் பேசிக் கொள்கிறேன்'' என்பதை அனைவரும் கண்டிருக்க முடியாது. கண்டவர்கள் நம்புவது கடினம்.

ஒரு 100 பேரை சந்தித்து survey  எடுத்து, உங்களுக்கு வாழ்வில் வந்த வாய்ப்புகள் எவை எனக் கேட்டால், "வாய்ப்பா, எனக்கேன் வரும்'' என்பார்கள். "நீங்கள் மந்திரியாக வேண்டும், அல்லது பெரிய மனிதராக வேண்டும்'' என்று உங்களிடம் எவராவது பேசியதுண்டா என்று survey  செய்தால், "அப்படி எல்லாம் வாய் தவறியும், இந்த ஊரில் எவரும் பேசிவிட மாட்டார்கள்'' எனப் பதில் வரும்.

வாழ்வில் சொல்லாகக் கேள்விப்பட முடியாததும் அன்னை வாழ்வில் உண்மை வாய்ப்பாக வரும்.

அன்பர்களிடம் சொல்லாக வந்தவையும், அன்பர் அருள் என ஏற்றால் அதற்கேற்ப நடந்துகொண்டால், தவறாது பலித்துள்ளது அனுபவம். குடிக்கத் தண்ணீரில்லாத இடத்தில் கூலிக்காரன் இங்கு 3 போகம் பயிராகப் போகிறது என்று கனவு கண்டேன் என்றான். கனவு அபரிமிதமாகப் பலித்தது.

பள்ளியில் படிக்கும்பொழுது பையனைப் பார்த்து ஓர் அன்பர் "நீ தொழிலதிபராக வர வேண்டும்'' என அடிக்கடிக் கூறுவார். பையனுடைய நிலைமைக்கும் அவர் சொல்லும் சொல்லுக்கும் சம்பந்தம் தெரியவில்லை. பெரிய தொழிலதிபரானான் பையன். பையன் அன்னையை ஏற்றதால் அவன் கேட்ட சொல் பலித்தது.

பொதுவாக அன்பர்களைப் பார்த்து,

"நீங்கள் பிரபலமாக வேண்டும்'' 

"நோபல் பரிசு பெற வேண்டும்''

"துணைவேந்தராக வேண்டும்'' என்று பிறர் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். மேற்கூறியவற்றிற்குப் பதிலாக வந்தவை,

"அது ஒன்றுதான் பாக்கி''

"எனக்கு நோபல் பரிசு வேண்டாம். நீங்கள் தயவு செய்து பேசாதீர்கள்.''

"துணைவேந்தராக அந்தஸ்து வேண்டாமா?''

இப்படிப் பதில் பேசுவதால் அருளை மறுக்கிறார்கள் என அன்பர்கள் அறிவதில்லை. யாரோ ஒருவர் நல்ல சொல் சொல்கிறார். நம் வாழ்வில் இதுவரை இல்லாதது. சொல்லியவரை ஏன் நாம் மறுத்துப் பேச வேண்டும் என்றில்லாமல் துடுக்காகப் பேசுபவர்கள் வருவதை இழுந்துவிடுவார்கள்.

SSLC படித்து ஆசிரியராக இருப்பவரைப் பார்த்து "நீங்கள் BA பட்டம் பெற வேண்டும்'' என ஒரு பக்தர் சொல்லியது கேட்பவருக்கு திகைப்பாக இருந்தது.10 ஆண்டு கழித்து அவர் B.A யும், M.Aயும் எடுத்தார். அன்னை சூழலில் இருப்பவருக்கு பக்தர் சொல் பலித்து விட்டது.

பள்ளியில் முதல் மாணவனாக வந்தவனுக்கு வாழ்க்கையைத் தொடங்கிய பின் படிக்கும் வாய்ப்பு ஏராளமாக இருந்தது. படிக்கத் தூண்டினர், "எனக்கேன் இதெல்லாம். இதையெல்லாம் நான் நினைக்கவேயில்லை'' என சுள் என விழுந்து, வந்த உதவியைக் காரமாக பையன் மறுத்துவிட்டான். அவன் தம்பிக்கு எந்த வாய்ப்புமில்லை. அவனுக்கு ஆர்வமிருந்தது. பெற்றான். ஏதாவது ஒரு வகையில் சிறு அளவிலாவது அன்னை தொடர்புள்ளவர்க்கு இதுபோல் தவறாது நடப்பதைக் காணலாம்.

தென்னிந்தியாவை சுற்றிப்பார்க்க பம்பாயிலிருந்து வந்த குழுவினர் ஆசிரமம், ஸ்ரீ அரவிந்தர் என்பதை அறியாதவர் அன்னை தரிசனத்திற்கு வந்தனர். அன்னை அவர்களில் ஒரு பெண்ணைப் பார்த்து, கைகளைப்பற்றி "எவ்வளவு நாளாக நான் உனக்காகக் காத்திருக்கிறேன் தெரியுமா?'' எனச் சொல்லி அங்கேயே தங்கும்படிக் கூறினார். வெளியில் வந்த பெண்ணிடம் ஸ்ரீ அரவிந்தர் படத்தைக் கொடுத்தனர். அப்பெண், "எனக்குத் திருமணமாயிற்று. நான் ஒருத்தருக்காக காத்திருக்கிறேன். அவர் என் கணவரில்லை என அறிந்து நான் கணவரை விட்டு வந்துவிட்டேன். இந்தப் போட்டோவில் உள்ளவருக்காகவே நான் இத்தனை நாள் காத்திருந்தேன்'' என்றார்.

ஸ்ரீ அரவிந்தருக்காகக் காத்திருக்கும் ஆத்மாவுக்கு அன்னை அளித்த வரவேற்பு இது. இப்பெண்மணிக்கு தன் ஆன்ம நிலை தெரிகிறது. அன்னை அதை அவரிடம் சொல்லிவிட்டார்.

  • அன்னையை நாடிவரும் அன்பர் அனைவருடைய நிலையும் அதுவே.
  • அன்பர்கள் உணராவிட்டாலும், அருள் அதிர்ஷ்டமாக அவர்களைத் தேடி வருகிறது.
  • காலமெல்லாம் ஆத்மா காத்திருந்தது வரும்பொழுது நம் "புத்தி'' குறுக்கிட்டுப் பேசுவது தடையாகிறது.
  • அறிந்து பெறும் அருள் ஆன்மீக வரம்.
  • அறியாமல் பெறுவது வாழ்வில் அதிர்ஷ்டம்.
  • அறியாமலிருக்கும்பொழுது வருவதை, "அறிவை''ப் பயன்படுத்தித் தடை செய்வது துர் அதிர்ஷ்டம்.
  • வரும் அருளை வருவதுபோல் ஏற்றால் அருள் பேரருளாகும்.

*******



book | by Dr. Radut