Skip to Content

மனித சுபாவம் III

கர்மயோகி 

ஒருவருடன் பழகும்பொழுது அவருடைய செயல்களில் முக்கியமானவற்றைக் கவனிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

********

ஸ்தாபனத்தில் மானேஜர் முதலாளியாகவே இருந்த இடத்தில் ஆதரவு தேடி ஒரு வயதானவர் வந்தார். முதலாளி அவரைச் சேர்த்துக் கொண்டார். சுமார் 4 வருஷம் கிழவர் முதலாளியைப் பார்த்ததில்லை. மானேஜர்தான் அவருக்கு முதலாளி. அங்கிருப்பவர், வருபவர் அனைவரும் வயதானவரிடம் அன்பாகப் பேசுவார்கள். போகும் பொழுது நல்ல மனிதன் என்பார்கள். கிழவர் மானேஜர் பெயரை எவரிடமும் சொல்லியதுகூட இல்லை. மானேஜரிடம் அளவு கடந்த மரியாதை.

மானேஜர் வேறு தொழில் செய்ய ஸ்தாபனத்தைவிட்டுப் போய் விட்டார். போன மூன்றாம் நாள் போன் செய்தார். கிழவர் எடுத்துப் பேசினார். யார் பேசுவது என்று கேட்டார். 4 வருஷமாக மானேஜர் எப்பொழுது போனில் பேசினாலும் உடனே புரிந்து பதில் சொல்பவர், இன்று "யாரது'' என்று கேட்டார். "ஏன் என் குரல் புரியவில்லையா'' என்று மானேஜர் கேட்டபொழுது மானேஜர் பெயரைச் சொல்லி "ராஜன்தானே'' என்றார். ஒரு நிமிஷம் அனைவரும் திடுக்கிட்டனர். பின்னர் மறந்து விட்டனர்.

அடுத்த நான்கு வருஷத்திற்குப் பின் அதே காரியத்தைப் பெரிய அளவில், துரோகமாக, ஆதாயத்திற்காக முதலாளியிடம் இவரே செய்தபொழுது அனைவரும் இந்தக் கிழவரா இப்படி எல்லாம் செய்கிறார் என்று ஆச்சரியப்பட்டனர். முதலாளி, "மானேஜர் விஷயத்தில் கிழவர் போக்கை நான் புரிந்து கொண்டேன். அதனால் முன்னேற்பாடாக இருக்கிறேன்'' என்றார்.

முடிவு என்று எடுத்தபின், இச்செயலில் நமக்குள்ள ஆர்வம் அளவு மீறியதா என, சற்றுச் சிந்திப்பது நல்லது.

பொது வாழ்வில் சமூகம் தனிமனிதனுக்கு எப்படிச் சேவை செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். உன் சொந்த வாழ்வில் அதுபோல் ஏதாவது செய்ய முடியுமா எனக் கவனி.

********

ஜப்பான் போன் பூத்களில் ஒரு நோட்டும் பென்சிலும் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லி, எவ்வளவு முன் யோசனையுடன் சேவை செய்ய அவர்கள் முயல்கிறார்கள் என்று ஓர் ஆங்கிலேயர் சொன்னார். அவசரமாகப் போனில், பூத்திலிருந்து பேசும்பொழுது முக்கியமான டெலிபோன் நம்பர், அட்ரஸ் எழுத முயல்பவர்கள் இந்த உதவியைப் போற்றுவார்கள். இது பெரிய சேவை. சேவா உணர்வில்லாமல் இந்த எண்ணம் தோன்றாது.

கல்லூரிகளில் பரீட்சை முடிவு அங்கு நோட்டீஸ் போர்டிலிருக்கும். பெரிய கல்லூரிகளில் மாணவர்கள் மாநிலமெங்குமிருந்து வந்திருப்பார்கள். அடுத்த மாநிலத்திலிருந்தும் வருவார்கள். இந்த ரிஸல்ட் தெரிய அவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும். எத்தனையோ சிறிய பள்ளிக்கூடங்களில் self addressed card சுயவிலாசமிட்ட கார்ட் வாங்கி, ரிஸல்ட் அனுப்பும்பொழுது கல்லூரிகளில் அன்று இதைச் செய்வதில்லை. இதைப் போல் என் அனுபவத்தில் கண்டன பல.  

இந்த நோக்கத்தில் சிந்தித்தால் மனம் விசாலமடையும், புதிய எண்ணங்கள் தோன்றும், பிறர் நோக்கில் விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும். "உன் வாழ்வு முடிந்தபிறகு உலகுக்கு நீ என்ன செய்திருக்கிறாய் என்பதே உன் கணக்கில் மிச்சமாக நிற்கும்'' என்று பகவான் கூறுகிறார்.

நிர்ப்பந்தம் ஏற்பட்டபொழுது ஆழ்ந்த நீண்ட நாள் பழக்கங்களை நாம் விட்டுவிடுகிறோம். அவற்றை நாமே முனைந்து விடுதல் நல்லது.

********

மதுவிலக்கு வந்தபொழுது குடிப்பழக்கம் தானாக விட்டுப் போயிற்று. எலக்க்ஷனில் நின்றபொழுது, இதுவரை வாய் ஓயாமல் திட்டியவர்களை மேடையிலிருந்து திட்ட முடிவதில்லை. பரீட்சை வந்தால் இரவு பகலாய்ப் படிக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் செல்லமாக வளர்ந்த மகள், கெடுபிடியான வீட்டில் மருமகளாகி, கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. பெண்கள் பின்னால் போகும் பழக்கமுள்ளவனை, நாலுபேர்கள் சேர்ந்து நையப்புடைத்த பின் அப்பழக்கம் நின்று விடுகிறது.

10 மணி நேரம் கரண்ட் இல்லாவிட்டால், நிறுத்தாமல், எவருக்கும் பயன்படாமல் ஓடிக்கொண்டிருந்த பேன்கள் நின்று விடுகின்றன. கரண்ட் இருக்கும்பொழுது நிதானமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.

நிர்ப்பந்தத்தால் நாம் செய்வது பெரும்பலன் தருகிறது. (our minimum self control) குறைந்தபட்சக் கட்டுப்பாட்டால் கிடைப்பது. நிர்ப்பந்தமில்லாத பொழுது நாமே முன் வந்து செய்வது max. self discipline அதிகபட்ச சுயக்கட்டுப்பாடாகும். குறைந்தபட்சக் கட்டுப்பாட்டிற்குப் பெரும்பலன் வந்தால், அதிகபட்சக் கட்டுப்பாடு என்ன அளிக்கும் என்று கற்பனை செய்யலாம்.  

பழக்கம்

பலமுறை செய்தது, மீண்டும் தானே வந்தால் அதைப் பழக்கம் என்கிறோம். பழக்கம் ஏற்பட நாளாகும். ஏற்பட்டால் எளிதில் போகாது. மனத்திற்குரிய பழக்கம், உணர்வுக்குரிய பழக்கம், செயலுக்குரிய பழக்கம் (mental habit, vital habit , physical habit) என இவை பிரியும். கையால் சாப்பிடுவது, ஸ்பூனால் சாப்பிடுவது போன்றவை செயலுக்குரிய பழக்கம். படிக்கும்பொழுது மனப்பாடம் செய்வது, குறிப்பெடுத்துப் படிப்பது, புரிந்து கொண்டு படிப்பது போன்றவை மனத்தின் பழக்கம். பழகும்பொழுது இனிமையாகப் பழகுவது, பிறர் பேசும்பொழுது குறுக்கே பேசாமலிருப்பது உணர்வுக்குரிய பழக்கம். சமூகத்தில் நல்ல பழக்கம், கெட்ட பழக்கம் என்றுண்டு. மனிதனைப் பொருத்தவரை அது இல்லை.எந்தப் பழக்கத்தைப் பழகினாலும், மனிதன் ஏற்பான். நல்லதை ஏற்பான், கெட்டதை விலக்குவான் என்பதில்லை. பழகினால் பழக்கம், பழகாவிட்டால் இல்லை.

பரம்பரையாக வந்தது ஆழ்மனப் பழக்கம் (subconscious habit). நாம் கற்றுக் கொண்டது தெளிவான பழக்கம் (conscious habit). ஒருவர் வீட்டு விசேஷத்திற்கு அனைவரும் போவது சமூகப்பழக்கம் (social habit). இவற்றின் தன்மைகளை அறிவது பயன் தரும்.

பழக்கங்கள் ஒன்றொடு ஒன்று பின்னிவரும்பொழுது மாறும். தினமும் 8 1/2  மணிக்கு வேலைக்கு வந்தால், ஜன்னலை மூடுவது, நியூஸ் பேப்பர் கொண்டு வருவது என 10 கடமைகளுள்ளவர் தினமும் தவறாது செய்து வரும்பொழுது ஒரு நாள் 71/2 மணிக்கு வர வேண்டியதாயிற்று. அன்று ஜன்னலை மூடவில்லை. அடுத்தாற் போல் பத்துக் கடமைகளில் ஒன்று விட்டுவிட்டது. 81/2மணிக்கு வருவதை மாற்றினால், நேற்றைய பழக்கம் இன்று தவறுகிறது. அதாவது பழக்கங்கள் சில சமயங்களில் ஓர் அமைப்புக்குள் (set up) செயல்படுகின்றன. அமைப்பை மாற்றினால் பழக்கம் செயல்படுவது மாறும். 

This once என்று ஆங்கிலத்தில் சொல்வதை நாம் "இந்த முறைமட்டும் செய்து விடுகிறேன்'' என்கிறோம். இதனடியில் ஒரு பழக்கம் இருப்பதால், ஒரு முறை என்பது, ஒவ்வொரு முறையும் வந்து, நிலையாகிவிடும். எதிரியிடமிருந்து தப்பியது, ஊரார் எதிர்ப்பிலிருந்து பிழைத்தது, போன்ற விஷயங்களில் ஒரு முறை கட்டுப்பாட்டைத் தளர்த்தினால், அத்தனையும் அழிந்து போகும்.

நம்மைக் காப்பாற்றிக் கொள்ள, இதுவரை செய்யாததை "This once'' ஒரு முறை என்ற தலைப்பில் செய்யலாம்.

ஒரு வேலைக்காரப் பெண் பொய் சொல்லுவாள், திருடுவாள், எல்லாக் கெட்ட பழக்கங்களும் உடையவள். ஒரு பிரெஞ்சுக் குடும்பத்தில் வேலை செய்தாள். அவர்கள் அவளைத் தங்களுடன் சமமாகக் கருதி பாரிஸுக்கு அழைத்துப் போனார்கள்.18 வருஷம் இருந்தாள். எல்லாக் கெட்ட பழக்கங்களும் இருந்த இடம் தெரியாமற் போயின. அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். திரும்பி வந்தாள்.ஆறு மாதத்தில் பழைய பழக்கங்கள் திரும்பி வர ஆரம்பித்தன. ஓரிரு வருஷத்தில் எல்லாப் பழைய பழக்கங்களும் வந்து விட்டன.

புது நல்ல பழக்கம் பழைய பழக்கத்தை மீறும்.

பழைய நிலை பழைய பழக்கத்தை எழுப்பும்.

அரை கோடி ரூபாய் பிதிராஜ்யத்தை பிரமேயமில்லாமல் அண்ணனை எடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, சேவையை நோக்கிப் போனவர், சேவையில் ஒரு ரூபாய், 5 ரூபாய் செலவு செய்ய, அதைப் பல முறை கணக்கிடுகிறார். அவரிடம் எவரும் 10 பைசா வாங்க முடியாது. எதைச் சொன்னாலும் ரூபாய்க் கணக்குப் பேசுவார். பெரிய சொத்தைத் தியாகம் செய்தவரால் (money value) ரூபாய்க்குள்ள மரியாதையை விடமுடியவில்லை. உணர்வு சொத்தை விட்டுக் கொடுத்து விட்டது. மனம் "சொத்தின் மதிப்பை'' விட்டுக் கொடுக்க முடியவில்லை. பழக்கங்கள் பல நிலைகளில் உள்ளன. ஒரு நிலையில் மாறினால் அடுத்த நிலையில் மாறும் என்று உறுதியாய்ச் சொல்ல முடியாது.

உனக்கு உயர்ந்தவர்களைப் (superior) பார்த்து அவர்களிடமிருந்து ஒரு நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள். எந்தக் கெட்ட பழக்கத்திற்கு, அவர்கள் பேர் போனவர்களோ, அதை விலக்க வேண்டும்.

*******

முதலாளியின் பழக்கம், மேலதிகாரியின் பழக்கம், அப்பாவுடைய பழக்கம், தொழிலாளி, சிப்பந்தி, குழந்தைகளுக்குத் தானே வருவதைப் பார்க்கிறோம். நான் சொல்வது முனைந்து ஒரு நல்ல பழக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது. திறமைசாலியான ஒருவர் இது போல் ஒரு நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொண்டால், உடனே அனைவரும் அவர் வெகுவாக உயர்ந்ததாகக் கருதுவார்கள். உயர்ந்தது உண்மை. வெகுவாக உயர்ந்தது தோற்றம். எவரும் இதைக் கடைப்பிடிக்கலாம். நல்ல பலன் உண்டு.

என் தலைவர், என் பேராசிரியர் (unpunctual) எதையும் லேட்டாகவே செய்வார், அதனால் அந்தப் பழக்கம் எனக்கு வந்து விட்டது என்பதுண்டு. இதை முயன்று விலக்க வேண்டும். நாம் பெரியவர்களிடமிருந்தால் எல்லாப் பழக்கங்களும் வரும். நல்லவற்றில் ஒன்றாவது ஏற்று, கெட்டவை அனைத்தையுமே விலக்குதல் நல்லது. நல்லதை ஏற்கத் தேவையான திறன் கெட்டதை விலக்கவும் வேண்டும். இது தன் நிலையை உயர்த்தும் முயற்சி.நல்லதையும் ஏற்று, கெட்டதையும் விலக்கப் பெருமுயற்சி தேவைப்படுவதால் பெரும் பலன் வரும். 

உனக்குத் தெரிந்து கெட்ட பழக்கம் தொடர்ந்து உன் வாழ்வைப் பாழ் செய்து கொண்டிருந்தால், சூறாவளி  வேகத்தில் அதை அகற்று.

*******

இதை ஏன் சொல்ல வேண்டும்? அனைவரும் அறிந்தது தானே என முதலில் தோன்றலாம். இதுபோன்ற பழக்கமுள்ளவர் கடைசிக் காலம்வரை அதை அகற்றுவதில்லை. அகற்ற முயல்வதில்லை. நம் நினைவுக்கு வந்ததை எல்லாம் எண்ணிப் பார்த்தால் 15, 20 பழக்கங்கள் பிறர் வாழ்வில் தெரியும். அவற்றை அகற்ற அவர்கள் நினைப்பதில்லை. மேலும் இதுபோல் பிரச்சினையை உற்பத்தி செய்து கொண்டேயிருப்பார்கள். கேட்டால் "என் சுபாவத்திற்கு அது தேவை'' என்பார்கள்.

பழக்கம் என்பது 100 தலைப்புகளிலிருக்கும். தேவையில்லாத பழக்கம், தவறான பழக்கம் என்பதே 100 வரை இருப்பதுண்டு. கொத்துக் கொத்தாக இவற்றை விலக்க வேண்டும்.

இவையெல்லாம் முடியுமா? என்ற கேள்வி, வீட்டில் கொட்டம் அடித்துக் கொண்டிருந்த பையன் ஹாஸ்டலில் சேர்ந்த மூன்றாம் மாதம் அவன் வீட்டார் வந்து பார்த்தால், எங்கே போயிற்று அவன் கொட்டமெல்லாம், இவன் நம் வீட்டுப் பையன்தானா, எப்படி இந்த அளவு மாறமுடியும் என்று கேட்பதைப் பார்க்கிறோம். கிராமத்து நபர் நகரத்திற்கு வந்து மாறுவது, அநாகரீகமான ஊரிலிருந்து நாகரீகமான குடும்பத்தில் சம்பந்தம் செய்து தான் மாறுவது, மட்டமான இளைஞன் நல்ல கம்பனி ஆபீசராகி மாறுவது ஆகியவை மாற முடியும் என்பதைக் காட்டுகிறது. மாற முடியுமானால், நாமே முன் வந்து மாறுவது உயர்வு.  

வயது 25க்கு மேலாகிவிட்டால் எது நல்லது, எது கெட்டது என்று புரியும். அது புரியாதவருக்கு நாம் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை. கெட்டது, தேவையில்லாதது, மட்டமானது என்பதை விட மனம் வாராது. அதுவே நம் பங்கு. கெட்டது என்று தெரிந்தபின் அதை கைவிட முன் வருபவர் முன்னுக்கு வரக் கூடியவர். அது தெரிந்தும் விட மனமில்லாதவர் முன்னுக்கு வரக்கூடியவரில்லை. இவற்றை புள்ளி போடுவதுபோல் எழுத வேண்டும். ஒரே பழக்கம் பல இடங்களில் வந்தால் அவை ஒரே கொத்தைச் (bunch) சேரும். அவற்றுள் ஒன்றை விட்டால் அத்தனையும் போய் விடும். லேட்டாக வருவது 20 இடங்களில் இருக்கும், சோம்பேறித்தனம் 50 இடங்களிலிருக்கும், எதையும் அரைகுறையாகச் செய்வது எல்லா இடங்களிலுமிருக்கும். எடுத்ததை மீண்டும் அங்கேயே வைக்காதது பல இடங்களிலும் வரும். எதிர்த்துப் பேசுவது 10 இடங்களில் வரும், குறுக்கே பேசுவது இல்லாத இடமே இருக்காது. தவறான வார்த்தை, தகாத வார்த்தை, மட்டமான சொல் பயன்படுத்துவது எங்கோ ஓர் இடத்திலிருக்கும். இவற்றை எல்லாம் விட்டுவிட வேண்டும் என விரும்புவது நல்லது.உடனே செய்வது உயர்ந்தது.

ஒரு கஷ்டம் விலக்கப்பட்டு, புது வாழ்வு ஏற்பட்டபின், இந்தக் கஷ்டத்திற்குரிய அஸ்திவாரத்தை மீண்டும் ஏற்படுத்தக் கூடாது.

*******

நிலமும், வீடும் ஏலத்திற்கு வந்து, மூன்று முறை ஏலம் ஒத்திப் போடப்பட்டு, எதிர்பாராத உதவியால் கடனெல்லாம் கொடுக்கப்பட்டு, சொத்து தப்பித்தது. சொத்தை இழந்தது பழைய தவறான பழக்கத்தால், இருக்கும் சொத்தை முழுமையாக நல்ல முறையில் பயன்படுத்தாமல், பிறர் உதவி, எதிர்பாராத சந்தர்ப்பம் ஆகியவற்றை எதிர்பார்த்து, சொத்தை இழந்தார்கள். சொத்துக் காப்பாற்றப்பட்ட  பின், அந்தப் பழக்கத்தை மாற்றாமல், மீண்டும் அதையே பின்பற்றி, அதே கஷ்டம் மீண்டும் வந்தது. இதைச் செய்யாதவர் குறைவு. இதையே செய்யாமலிருக்கலாம், முடியும்.

பெண்களால் மானபங்கம் ஏற்பட்டபின், அதை விட அவர்கள் முன் வருவது குறைவு. இளம் பெண்கள் பின்னால் சென்று, அவர்கள் பெற்றோரால் அவமானப்பட்டு, நையப் புடைக்கப்பட்ட பின் அவர்களுள் மூவர் அப்பழக்கத்தைக் கைவிட்டனர். ஒருவர் ஆயுள்  முடியும்வரை அதைக் கைவிடவில்லை. அவமானத்தை "அனுபவிக்க''ப் பிறந்த ஆத்மா இது என்பது யோகவிளக்கம். மானத்தோடும், நாணயத்தோடும் ஒரு ஜன்மத்தில் வாழ்ந்த ஆத்மா, அடுத்த ஜன்மத்தில் "அவமானம்'' எப்படியிருக்கும் என அறியப் பிரியப்படும். மனிதனுக்கு மானம் உயர்ந்தது. அவமானம் தாழ்ந்தது. ஆன்மாவுக்கு அவையிரண்டும் இரு அனுபவங்கள். ஆன்மாவின் யாத்திரையில் அத்தனை அனுபவங்களையும் பெறுதல் அவசியம் என்பதால், ஆன்மா "அவமானத்தை'' அனுபவிக்க ஜன்மம் எடுக்கும். அப்படி வந்தவர்கள் "ஆன்மீக அனுபவம்'' பெற்றால் அவர்களுக்கு உலக அனுபவம் (wisdom) பயன்படாது. அவர்களுடைய ஆன்மீக யாத்திரையில் பிறர் தலையிட முடியாது. சாதாரண மனிதன் அவமானத்தை விலக்கி மானத்தோடு வாழப் பிரியப்படுவான். அவனுக்கே இது பயன்படும்.

மனைவிக்குச் சித்தப்பிரமை வந்து, ஜோஸ்யம், வைத்தியம், மந்திரம் ஆகியவை 8 வருஷங்களாகப் பலிக்கவில்லை. எட்டாம் ஆண்டு அவளுக்குச் செய்த வைத்தியம் பூரண குணத்தை அளித்தது. இன்று அவளைப் பார்த்து சித்தப்பிரமையிலிருந்து தெளிந்தவள் எனச் சொல்ல முடியாதபடி குணம் அடைந்தாள். ஆரம்பத்திலேயே மனைவிக்குச் சிரமம் வந்தது கணவனின் நடத்தையால்.பல பெண்களைக் கணவன் நாடுவதை அவளால் தடுக்க முடியாமல் மனம் உடைந்து சுவாதீனம் இழந்தாள். அவனுடைய ஸ்பர்சம் அவளுக்கு ஒத்து வரவில்லை. இதையறிந்தும் கணவன் மாறவில்லை. மனைவி குணமானவுடன் முதற்காரியமாக அவன் செய்தது அவளுக்குப் பிடிக்காதது. அவளைத் தீண்டினான். அன்றே சுவாதீனமிழந்தாள், அடுத்த 10, 12 வருஷமும் குணமாகாமல் இறந்து விட்டாள்.

இன்டர்மீடியட் இருந்த காலத்தில் ஒரு புண்ணிய ஆத்மா 17 முறை பரீட்சை எழுதினார். மக்கு என்பதால் பெயிலாகவில்லை. படிக்காமல் பெயிலானார். முடிவாகப் பாஸ் செய்து B.A. சேர்ந்து அதே காரியத்தைச் செய்து 19 முறை பெயிலானார். மனித சுபாவம் நாய் வால் போன்றது. உடலைத் திருவுருமாற்றம் செய்ய அன்னை முயன்றபொழுது நாய் வாலை நிமிர்த்துவது சுலபம். உடலை மாற்றுவது கடினம் என்றார்கள். அன்னையின் அருளை மனிதன் விரும்பி ஏற்றால் உடலும் மாறும், சுபாவமும் மாறும். உடன் திருவுருமாற்றத்தை ஸ்ரீ அரவிந்தர் முயலவில்லை. அன்னை தாம் ஏற்றுக் கொண்டார். அவர் ஒருவரே உலகில் செய்த யோகம் உடலின் திருவுருமாற்றம்.

தேவைக்கு மேற்பட்ட ஓய்வு தற்கொலையாகும்.

அதைக்கண்டு வெட்கப்படுதல் நல்லது.

*******

பத்து நிமிஷம் வேலை செய்யாமலிருக்க மேல் நாட்டார் கூச்சப்படுவார்கள். நம் நாட்டில் வேலை செய்யாமலிருக்கப் பிரியப்படுவார்கள். ஓரளவு செல்வம் வந்தவுடன் முதற்காரியமாகச் செய்வது "ஓய்வு'' பெறுவது. இனி நான் உழைக்கத் தேவையில்லை எனப் பெருமையாகச் சொல்வது நம் வழக்கம். ஓடும் நீர் சுத்தமாக இருக்கும். நிலையான நீரில் பாசி பிடிக்கும். பாட்டரி வேலை செய்வது நல்லது. தினமும் பயன்படும் சாவி பளபளப்பாக இருக்கும். பயன் படுத்தாத சாவி துருப் பிடிக்கும். கை பழகியபடி இருந்தால் சித்திரம் சிறக்கும். நா பேசியபடியிருந்தால் தமிழ் செந்தமிழாகும். உடல் வேலை செய்தபடி இருக்க வேண்டும். ஓய்வை நாடுவது உடலன்று. மனம் ஓய்வை நாடினால் உடலுக்கு வியாதி வரும். வந்த வியாதி குணமாகாது. சுறுசுறுப்பான வேலை உடலின் பகுதிகளை இயக்குவதால் அவை தெளிவாக ஆரோக்கியமாக இருக்கின்றன. ஓய்வை மனம் நாடுவது, மரணத்தை உயிர் நாடுவதாகும்.

இன்ஜீனீயரிங் கல்லூரியில் சேர மாணவர்களும், பெற்றோர்களும் படும்பாடு பெரியது. அப்படிப் பெற்ற இடத்தைப் போற்ற வேண்டும். ஒரு கல்லூரியில் மாணவர்கள் வகுப்புக்குப் போகாமல், "ஓய்வை''ப் பெரிதும் நாடினர். முதல் ஆண்டு முதல் பரீட்சை வந்தது. திடீரென ஹாஸ்டல் காலியாயிற்று. பரீட்சை எழுத எவரும் வரவில்லை! ஓய்வை நாடி பரீட்சை வந்தபொழுது மாணவர்கள் ஓட்டம் எடுத்தனர். இது தற்கொலைக்கொப்பாகும்.

ஓய்வு அவசியம். போதுமான அளவு வேலை செய்த பின் ஓய்வு. 25 வயதில் "ரிடையர்'' ஆக முயலும் இளைஞர் வயதால் இளைஞர், மனத்தால் முதியவர். அவர் தொழில் அவருக்குப் பிறர் பெறுவதில் எட்டில் ஒரு பங்கு பலன் தருவது ஆச்சரியமில்லை.

தொடரும்.

********

ஜீவிய மணி

 

ஒளியின்றி நிழலில்லை.

நிழலின்றி ஒளியுண்டு.

 

********

Comments

மனித சுபாவம் IIIPara 10 Line

Para 10 Line 4 - கடுபிடியான - கெடுபிடியான
Para 21 Line 8 - நிலைகüல் - நிலைகளில்
Para 23 Line 1 - அவர்களி டமிருந்து - அவர்களிடமிருந்து
Para 24 Line 2 - தொழிலாளி , - தொழிலாளி,
Para 25 Line 3 - பெரியவர்களி டமிருந்தால் - பெரியவர்களிடமிருந்தால்
Para 27 Line 1 - முதலி ல் - முதலில்
Para 33 Line 4 - டியும்வரை - முடியும்வரை
Para 34 Line 4 - தெüந்தவள் - தெளிந்தவள்
Para 35 Line 1 - 17 றை - 17 முறை
Para 35 Line 3 - இ.ஆ. - B.A.
Para 35 Line 7 - உட-ன் - உடன்

Nataraj



book | by Dr. Radut