Skip to Content

12. அன்னை இலக்கியம் - சுமுகமே அன்னையின் வெளிப்பாடு

அன்னை இலக்கியம்

சுமுகமே அன்னையின் வெளிப்பாடு

(சென்ற இதழின் தொடர்ச்சி)

இல. சுந்தரி

அந்தப் பெரிய கடலுக்குப் பாண்டிச்சேரியில ஒரு கரையிருக்கு, சென்னையில ஒரு கரையிருக்கு. ஆனா எந்தக் கரையும் ஒரே கடலோடதுதான். அது போல எல்லாப் பேர்ல இருக்கிற சாமியும் ஒரே கடவுள்தான்.

அப்படீன்னா ஏன் டீச்சர் வேற வேற பேர் வெச்சுக் கூப்பிடறாங்க?

அது அவங்க அவங்க விருப்பம். இப்ப ஒங்க வீட்ல உங்க அப்பா உன்னை எப்படிக் கூப்பிடுவாங்க?

அப்பா கோதைன்னுதான் கூப்பிடுவார்.

சின்னக்குட்டின்னு கூப்பிடுவாங்க.

பள்ளிக்கூட அட்டண்டென்ஸ்ல?

அம்மாதான் பூங்கோதைன்னு பேர் கூப்பிடுவாங்க.

உமா உன்னை எப்படி கூப்பிடுவா?

அவ கோதைன்னுதான் சொல்வா.

மற்றபடி உங்க சொந்தக்காரங்கள்ளாம் எப்படிக் கூப்பிடுவாங்க?

எங்க சித்தி சித்தப்பா, அத்தை மாமா எல்லாருமே சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே வான்னு செல்லமா கொஞ்சுவாங்க.

ஓம் பேரு பூங்கோதைதானே? ஏன் எல்லோரும் விதவிதமா கூப்பிடறாங்க?

அதுபோலத்தான் கடவுளையும் நாம விதவிதமா கூப்பிடறோம். எத்தனை விதமா கூப்பிட்டாலும் அது ஒரே கடவுளத்தான்.

திடீர்னு கோதையும், உமாவும் மௌனமாகி ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு ஏதோ வாட்டமாகக் காணப்படுகின்றனர்.

என்னாயிற்று? ஏன் என்னவோ போலாயிட்டீங்க?

இல்ல டீச்சர் எங்க ரெண்டு பேரோட அப்பாக்களும் எப்பவும் ஒண்ணாயிருக்க மாட்டேங்கிறாங்க. நீங்க சொன்னதெல்லாம் அவங்களுக்கு எப்படிப் புரிய வைக்கிறது என்றனர் குழந்தைகள்.

அதற்கு ஒரு வழியிருக்கு. இந்த மாதம் என்ன பள்ளிக்கூட விழா சொல்லுங்க?

நவம்பர் 14 குழந்தைகள் தினம். நேரு மாமா பிறந்த நாள்.

அன்றைய தினம் உங்களையெல்லாம் வைத்து என் அன்னை சொன்ன கதையை நாடகமா போடப் போகிறோம்.

சரி டீச்சர் என்று சிறுமிகள் உற்சாகமாகமாயினர்.

அன்று நவம்பர் 14 குழந்தைகள் தினத்தைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு மாணவர்கள் தத்தம் திறமைகளை வெளியிட வாய்ப்பளித்து விழா நடத்தினர். இசை, பேச்சு, நடிப்பு என்று பல போட்டிகள் நடத்தப் பெற்று முதல் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு மேடையில் வாய்ப்பளித்தனர். வழக்கம்போல் நம் கதாநாயகிகள் முதல் பரிசு பெற்று மேடையில் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றனர். குறிப்பாக சரண்யா பயிற்றிய நாடகம், “உண்மையை அறிய ஆர்வம் கொள்ளுங்கள்” என்பது அனைவர் பாராட்டையும் பெற்றதுடன் மதப்பற்றால் மனம் குறுகிய கோதை, உமாவின் தந்தையர் மனம் மாறி மதம் என்ற குறுகிய வட்டத்தினின்றும் வெளியேறி, ஆன்மிகம் என்னும் அனந்தத்திற்குக் குடியேறிவிட்டார்கள்.

அந்த நாடகம்.

ஓரரசனுக்கு நால்வர் புதல்வர். அக்காலத்தில் சிறப்பாகப் பேசப்பட்ட ஒரு மரம் (கிம்சுகா) பற்றி அறிய ஆவல் கொண்டனர். அதை நேரில் காண விரும்பினர். தம் தந்தையின் தேர்ப் பாகனிடம் தனித்தனியே அம்மரத்தைத் தமக்குக் காட்ட வேண்டினர். பாகனும் அவர்களைத் தனித்தனியே அவர்கள் கேட்டபோது கேட்ட போது அழைத்துச்சென்று காட்டினான்.

மூத்தவன் கண்ட பருவத்தில் அம்மரம் அந்த மரத்தில் இலைகளோ, மொக்குகளோ, மலர்களோ இல்லாததால் கறுத்த அடிமரத்தை மட்டுமே பார்க்க நேர்ந்தது. இரண்டாவது இராஜகுமாரன் பார்த்த பருவத்திலோ நிறைய இலைகளுடன் மரம் காட்சியளித்தது. அதே பருவ காலத்தில் சில நாட்கள் கழித்து மூன்றாவது இராஜகுமாரன் காணச் சென்றபோது, இலைகளோடு மலர்களும் தோன்றி இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. அடுத்த பருவத்தில் நான்காவது இராஜகுமாரனை அழைத்துச் சென்றபோது மரம் பழுத்துக் குலுங்கியது.

ஒரு சமயம் நால்வரும் சேர்ந்திருந்தபோது ஒருவர் வந்து கிம்சுகா மரம் எவ்வாறு இருக்கும்? எனக் கேட்டார். அரசிளங்-கு மாரர்கள் வேறு வேறு பருவங்களில் தனித்தனியே சென்று அம்மரத்தைக் கண்டதால் அவரவர்கள் தாம்தாம் கண்டவாறு அம்மரத்தை வர்ணித்தனர். இதில் எது உண்மை எனத் தெரியாமல் குழப்பம் வந்தது. நால்வரும் அரசனிடம் சென்று எது உண்மை எனக் கேட்டனர். அவர்கள் நால்வர் கூறியதும் உண்மையே. தனித்தனியே அவர்கள் கண்ட அந்தந்தப் பருவத்திற்குரிய காட்சியே அவர்கள் விவரித்தது எனத் தெளிவுபடுத்தினார் அரசன்.

இந்த நாடகம் முடிவுற்றதும் இந்நாடகத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்பதை உமாவும், கோதையும், மாறி மாறி விளக்கமளித்தனர். அது பின்வருமாறு:

இப்படித்தான் பெரும்பாலும் மனிதர்கள் உண்மையின் ஒரு சிறு பகுதியை மட்டும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உண்மை முழுவதும் தங்களுக்குத் தெரிந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள் - உமா.

ஓர் உண்மையைக் காண விரும்புவர்கள் தான் கண்டதே உண்மை என அதனை வரையரைசெய்து நிலை நாட்டி விடுவார்கள்.

பிறகு மேலே தேட வேண்டியது எதுவுமே இல்லை இதோ இதுதான் உண்மை எனச் சட்டம் செய்து வைத்து விடுவார்கள் - கோதை.

சாதாரண விஷயங்களில் மட்டும் இல்லாமல் வரம்பற்ற பரம்பொருளுக்கே தாம் கண்டதையே ஒரு கோட்பாடாக்கி மதம் ஏற்படுத்தி விடுவார்கள் - உமா.

தாம் கண்ட உண்மையை நம்பவும், அதற்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் மனிதனுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் தனக்கு மட்டுமே பொருந்தக் கூடிய ஒன்றைப் பிறர் மீது திணிக்கக் கூடாது என்பதை மனிதன் உணர வேண்டும் - கோதை.

(விழாக் காண வந்த உமாவின் தந்தை தாம் ஒரு நாள் கோதையைத் திருநீறு அணிந்து கொள்ளச் செய்ததை நினைத்து வெட்கப்படுகிறார். கோதையின் திருநீறணிந்த நெற்றியைக் கண்டு “இதென்ன வேஷம்” என்ற தன் வார்த்தையை நினைத்து வெட்கப்படுகிறார் கோதையின் தந்தை)

கடவுள் தன் படைப்பு முழுவதற்குமாய்த் தன்னை அளிக்கிறார். எந்த ஒரு மதமும் அவரது அருளுக்குத் தனியுரிமை கொண்டாட முடியாது - உமா.

மதங்களெல்லாம் தனித்தனியாகப் பிரிந்து நிற்காமல் அனைத்து மதங்களும் ஒன்றாய் இணைந்து ஒன்றை ஒன்று இட்டு நிரப்ப வேண்டும் - கோதை.

ஒரு விஷயம் உண்மையான மதிப்புள்ளதாக வாஸ்த்தவமானதாக எப்போது இருக்கும்? நீயே சுதந்தரமாக அதனைத் தேர்ந்தெடுத்துப் பரிசீலித்துப் பயின்று பார்த்து முடிவெடுக்கும் போதுதான் அது உனக்கு வாஸ்த்தவமானதாக பயனுள்ளதாக ஆகும். பிறர் உன்மீது அதைத் திணிக்கும்போது அதற்கு அந்த மதிப்பிராது - உமா நீ தற்சமயம் வாழ்ந்து கொண்டிருக்கும் பரம்பரைச் சம்பிரதாய வாழ்க்கையை நீ தேர்ந்தெடுக்கவில்லை. அது சூழலால் அல்லது பொதுவான மனப் போக்கினால் அல்லது பிறரால் உன்மீது திணிக்கப்பட்டுள்ளது - கோதை.

இத்தகைய திணிப்பு ஏதும் நீ இறைவனோடு கொள்ளும் தொடர்பில் இருக்க முடியாது. அது சொந்த மனத்தின் தேர்வாக, இதயத்தின் இச்சையாக ஊக்கத்துடனும், உவகையுடனும் மேற்கொள்ளும் முயற்சியாகவே இருக்கும் - உமா.

மதத்தின் புறச்சடங்குகளுக்குக் கட்டுண்டு அதற்கு அடிமையாக ஆனோமானால் மதம் ஓர் இடையூறாவது நிச்சயம். அதனுள் அடங்கியுள்ள சாரம் என்னவென்று தெரிந்து கொண்டோமானால் மதமே நமது ஆன்மிகப் பயணத்திற்கு ஒரு விரைவு ஊர்தி ஆகிவிடும் - கோதை.

அறியாமையில் பக்தன் கடவுளுக்குத் தன் விருப்பம்போல் ஒரு வடிவமும், குணமும் ஏற்படுத்தி வழிபட்டாலும் அவனது நம்பிக்கையும் அன்பும் உறுதியாயிருக்கும் பட்சத்தில் கடவுள் அவனை ஆட்கொள்ளத் தவறுவதில்லை - உமா.

இவ்வாறு இவர்கள் மாறிமாறி ஒலிபெருக்கியில் கூற, அவர்களுக்கிடையே ஒரு மாணவன் வருகிறான். அவன், இது குழந்தைகள் தினமா? மதவாதிகள் தினமா? எனக் கேள்வி எழுப்புகிறான். சபையில் பலத்த கைத்தட்டல் எழுகிறது.

இது குழந்தைகள் தினமே. இந்தியாவின் ஒப்பற்ற தலைவரான நேருபிரானின் பிறந்த நாள் என்பதை நாம் மறக்க வேண்டாம் என்று உமா கூற அவளைத் தொடர்ந்து, ஒருமைப்பாட்டிற்குப் பாடுபட்ட அத்தலைவர் பிறந்த நன்னாளில் மதங்களின் காரணமாக எழும் சண்டைகள் தவிர்ந்து இந்தியா தன்னியல்பான தெய்வீக உணர்வால் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும் என்பது கருதியே, பிரிவினைகளுக்குக் காரணமான அறியாமையை விலக்க ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் ஆகிய புனிதர்களின் கருத்துகள் இங்குப் பேசப்பட்டன. இது பொருத்தமா இல்லையா என்பதை இவ்விழாக் காண வந்திருக்கும் பெற்றோர்கள், மற்றும் பொது மக்கள் கூற வேண்டும் என உமா கூற கூட்டம் பலத்த கைத்தட்டல், பாராட்டு மொழிகள் மூலம் ஆமோதித்தது.

தலைமை தாங்க வந்த சான்றோர் குழந்தைகளின் திறமைகள் நல்லுறவுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது. அதுமட்டுமல்லாது, உள்ளூரிலேயே இன்னமும் குதிரை வண்டியில் பயணம் செய்யும் நிலையை விண்வெளிப் பயணமாக மாற்றிய ஆன்மிகப் பெரியோர்களாகிய மானுடம் கடந்த அதிமானுடம் அறிவித்த ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் கருத்துகளை எடுத்துக்கூறிய புரட்சி மேலும் பாராட்டிற்குரியது. இன்று தார்மீகத் தலைமை என்று உலகிலிருந்தால் அது இந்தியாவுக்கே. நம் நோக்கம் இறைவனை வாழ்வில் வெளிப்படுத்துவது. உலகம் இதுவரை நினைத்துப் பார்த்திராத அக்கருத்தை இந்தியா 2000 ஆண்டுகட்கு முன்பே எட்டிவிட்டது. இவை வளரும் பயிர்களாகிய நம் குழந்தைகள் அறிந்திருப்பது மிக இன்றியமையாதது. இக்குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் பாராட்டிற்குரியவர். (வேலாயுதம்பிள்ளையும், இராமானுஜ ஐயங்காரும் முதன் முதலாக சிநேக பாவத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது இங்குக் குறிப்பிடத்-தக்கது) ‘அவையத்து முந்தியிருப்பச் செயல், தந்தை மகற்காற்றும் நன்றி’ என்ற வள்ளுவர் வாக்கை நிறைவேற்றிய பெற்றோர். “எந்நோற்றான் கொல்” என்ற பெருமையைப் பெற்றுத் தந்த குழந்தைகள் என யாவரும் பாராட்டுக்குரியவர்கள். இக்குழந்தைகள் மூலம் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வழிகாட்டி ஆசிரியர், அவர்களை விரும்பிப் பெற்ற பள்ளிக்கூடம் என்று யாவரும், யாவும் பாராட்டிற்குரியவரே. மேன்மேலும் பள்ளியும் இதன் ஒருமைப்பாட்டுணர்வும் வளர்ந்து நம்நாடு ஒற்றுமைக்களமாக விளங்க வாழ்த்துகிறேன் என்று பாராட்டுரை வழங்கினார்.

தலைமையாசிரியை பெருமகிழ்வுற்றார். குழந்தைகளிடைய அவள் (சரண்யா) ஒற்றுமையை சத்தியத்தை வளர்க்க மேற்கொள்ளும் முயற்சிகள் பள்ளிக்கு நல்ல பெயர் பெற்றுத் தருவதை மிகவும் வரவேற்றார்.

விழா முடிவுற்றதும் பெற்றோர்கள் தத்தம் குழந்தைகளை அழைத்துச் செல்கின்றனர். உமாவின் தந்தையும், கோதையின் தந்தையும் சரண்யாவிடம் வந்து “நல்லா தயாரிச்சு நல்லா நடத்தியிருக்கீங்க, எங்க மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றனர். வேஷத்தைக் கலைத்து தத்தம் இயல்பான ஆடைகளை அணிந்து சரண்யாவிடம் விடைபெற வந்த உமாவும், கோதையும் தங்கள் தந்தையர் இருவரும் சேர்ந்து வந்து டீச்சரைப் பாராட்டியது கண்டு மகிழ்ந்தனர். அது மட்டுமா? கோதையை வேலாயுதம் பிள்ளை பாராட்டுகிறார். உமாவை இராமானுஜம் பாராட்டுகிறார். குழந்தைகள் சரண்யாவை நன்றியுடன் பார்க்கின்றனர். அது மட்டுமா? வாங்க பிள்ளை சேர்ந்தே போவோம் என்று கோதையின் தந்தை உமாவின் தந்தையைக் கூப்பிட சரண்யா அன்னைக்கு நன்றி சொல்கிறாள்.

நவம்பர் 17 தியான மைய சிறப்புக்கூடலில் இதுவரை எதிரும்புதிருமாயிருந்த கோதையின் தந்தையும் உமாவின் தந்தையும் சரண்யாவுடன் சேர்ந்து சேவை செய்யும் ஆர்வத்தைப் பார்த்து உமாவும், கோதையும் கைகோத்த வண்ணம் மகிழ்வுடன் அன்னையை நோக்கிப் புன்னகையுடன் நன்றி சொல்கின்றனர்.

சுமுகமே அன்னையின் வெளிப்பாடு.

(முற்றும்)

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

பூரண யோகம் ஆத்மாவின் கர்மத்தை ஏற்கவில்லை. கடவுள் உலகைப் படைத்தார் என்பதை கடவுளே உலகமானார் எனக் கூறுகிறது. ஆத்மாவை மனிதனின் சிறந்த பகுதியாக பூரண யோகம் நினைக்கவில்லை. பிரம்மம் சிருஷ்டியுள் வந்தவுடன் பெற்ற நிலை ஆத்மா என்பது. அவ்வாத்மா சிருஷ்டியுள் தன்னை மறைத்து பரிணாமத்தால் வளர்ந்து முடிவான கட்டத்தில் சத்திய ஜீவியமாகிறது. மோட்சம் பெறுவது ஒரு ஆத்மா. அது பெற்ற ஆனந்தம் ஒரு ஆத்மா பெற்ற ஆனந்தம். சத்திய ஜீவியம் ஆன்மிகப் பரிணாமத்தால் அனைத்து ஆத்மாக்களையும் தன்னுட்கொண்டு சிருஷ்டியில் உள்ள அனைத்து ஆனந்தமும் ஒவ்வொரு ஆத்மாவும் அனுபவிக்கும் நிலைக்கு வருகிறது. உலகிலுள்ள எல்லாச் செல்வமும் எல்லா ஞானமும் எல்லா இன்பமும் ஒவ்வொரு ஆத்மாவும் முழுமையாகப் பெறும் நிலை இது.

***********



book | by Dr. Radut